மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

குடிமகன் மீட்பு வாகனம்?!

##~##

ஏ.கே.நாசர், திருப்பட்டினம்.

ஓசிப் புத்தகம் கேட்கிறவர்களை விரட்டிஅடிக்க என்ன வழி?

எந்தப் புத்தகமாக இருந்தாலும் 'பாதி படித்துக்கொண்டு இருக்கிறேன்’ என்று 'ஓசி’ மனிதரிடம் சொல்லிவிடுவது என் வழக்கம். சாத்வீகமான வழி இதுவே!

என்.பாபு அருள் ஜோஷி, களக்காடு.

பொதுவாக, சில நிகழ்வுகளை இது வெறும் நாடகம் என்று சொல்கிறார்களே... வெறும் சினிமா என்று ஏன் சொல்வது இல்லை?

நாடகம் - லைவ். சினிமா 2D. தவிர, சினிமாவுக்கு முன்பே நாடகம் வந்துவிட்டது (சங்க காலத்திலேயே!) ஷேக்ஸ்பியர்கூட 'வாழ்க்கை ஒரு நாடகம்!’ என்றார். அப்போதும்  சினிமா வரவில்லை. 'பைசாகூடப் பிரயோஜனம் இல்லை!’ என்கிறோம். பைசா இன்று இருக்கிறதா?!

மு.ரா.பாலாஜி, கோலார் தங்க வயல்.

நம் அரசியல்வாதிகள் இப்படிப் பெரிய பெரிய ஊழல் செய்கிறார்களே ரூம் போட்டு யோசிப்பாங்களா?

அதெல்லாம் அவசியமே இல்லை. ஜஸ்ட் லைக் தட் ஐடியாக்களும் வாய்ப்புக்களும் அவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும். நான் கார்ட்டூன் வரைய ரூம் போட்டா யோசிக்கிறேன்? எக்ஸ்பீரியன்ஸ்!

நா.பாலசுப்பிரமணியன், சென்னை-40.

குடிமக்களால் பூர்த்திசெய்துகொள்ள முடியாத பிரச்னைகளை அரசுதானே செய்துவைக்க வேண்டும்?

அதாவது, 'டாஸ்மாக்’ வெளியே, நடக்கக்கூட முடியாமல் பிளாட்ஃபாரத்தில் மயக்கமாக விழுந்துகிடப்பவர்களை அரசு வண்டியில் பத்திரமாகத் தூக்கிச் சென்று, வீட்டில் கொண்டுவிடவேண்டும் என்கிறீர்களா?!

பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

இப்போது எல்லாம் பெற்றோருக்கு வயது வந்த பிள்ளைகள் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது இல்லையே, அது ஏன்?

பொத்தாம் பொதுவாக இப்படி எல்லாம் சொல்லாதீர்கள். பலர் பெற்றோரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அப்பா - அம்மா உங்களை 'டேய், இங்க வாடா...’ என்று உரிமையோடு கூப்பிடும் அளவுக்கு அவர்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளைப் பார்த்து அவர்கள் பயப்படக் கூடாது. நம்மைப் பார்த்துச் 'சுருக்’கென்று ஏதாவது சொல்லிவிடுவார்களா, நம்மை எப்போதாவது முதியோர் இல்லத்துக்குப் போகச் சொல்லிவிடுவார்களா என்று வயிற்றுக்குள் கலவரம் அவர்களுக்கு ஏற்பட்டால், பிள்ளைகளின் வாழ்க்கை பிற்பாடு நிம்மதியாக அமையாது என்று நான் நினைக்கிறேன்!

ரா.பிரசன்னா, மதுரை-11.

நம்பர் (Number) என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கத்தை 'NU’ என்றுதானே குறிப்பிட வேண்டும். ஏன் 'NO’ என்று குறிப்பிடுகிறோம்? 'நோ’ என்றால் 'இல்லை’ என்றும் ஓர் அர்த்தம் உள்ளதே?

நியூமரோ (Numero) என்பதில் முதல் - கடைசி எழுத்து அது. ஸ்பானிஷ் மொழியில் 'நம்பர்’ என்று அர்த்தம் ஆங்கிலத்துக்கு வந்துவிட்டது. NO என்றால் நைட்ரஜன் ஆக்ஸைடு என்றும் பொருள். ஜப்பானில் ஒருவகை ஹீரோயிச நாடகத்துக்கும் NO என்று பெயர் உண்டு!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

கயிறு, தாயத்து, எந்திரம் எல்லாம் ஆன்மிகரீதியில் பலன் அளிக்குமா?

ஆன்மிகத்துக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அதை எல்லாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தால், 'பாதுகாப்பாக’ இருக்கும் என்றும் நினைப்பவர்கள் பயந்தாங்கொள்ளிகளே. வருஷக்கணக்கில் கயிற்றைக் கையில் மாட்டிக்கொண்டு இருந்தால், அதில் பல்லாயிரக்கணக்கில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு, உடம்புக்குக் கெடுதல். மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் தெரியும்!

எம்.சேவியர்பால், கோயம்புத்தூர்.

'கப்பல், விமானம் இரண்டில் ஒன்றைப் பரிசாகப் பெறுங்கள்’ என்று சொன்னால் எதனைப் பெறுவீர்கள்?

கப்பல். அதிலே வசிக்கவும் முடியும்!

என்.சீத்தாலட்சுமி, சென்னை-95.

'கறுப்புப் பண முதலைகள்’ என்று முதலையை உவமை காட்டிப் பேசுவது ஏன்? திமிங்கிலம் என்று கூறக் கூடாதா?

முதலைகள் நீர் - நிலம் இரண்டிலும் வாழும். இரைக்காகப் பொறுமையாகக் காத்திருக்கும். பெரிய சைஸ் வரிக் குதிரை, மாடுகளைக்கூட கவ்விப் பிடித்துப் பிய்த்து மொத்த மாக விழுங்கும். பிறக்கும் பிள்ளைகளை அன்போடு கவனமாகப் பார்த்துக்கொள்ளும். திடீர் என்று ரெய்டு... ஸாரி, ஆபத்து ஏதேனும் வந்தால், முதலையால் இரண்டு கால் களால் நிலத்தில் வேகமாக ஓடக்கூட முடியும்.

பாவம், திமிங்கலத்துக்குப் பெரிய பற்கள் கிடையாது. பற்களுக்குப் பதில் 'பாலீன்’ (Baleen) என்கிற மெல்லிய 'தகடு வலை’தான் உண்டு. திமிங்கலம் சில்லறைகளைச் சேகரிப்பதுபோல் தக்குனுண்டு உயிரினங்களை மட்டுமே - நாம் மொத்தமாகப் பொரியை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்வதைப்போல - விழுங்கும். வாரிசுகளைப்பற்றி எல்லாம் முதலை அளவு கவலை எல்லாம் படாது. நீங்களே ஒப்பிட்டு முடிவுக்கு வரவும்!

மா.இராசன், காட்டுப்பாக்கம்.

இது உண்மையிலேயே நான் தெரியாமல் கேட்கும் கேள்வி. மத்திய அரசில் பணியாற்றும் மூத்த அமைச்சர்களின் லட்சியம் என்னவாக இருக்கும்?

ரகசியமாக அவர்களைச் சந்தித்து, மனம் திறந்து உண்மையைச் சொல்லச் சொன்னால் அநேகமாக

ஹாய் மதன் கேள்வி - பதில்

அவர்கள் எல்லோருமே இதைத்தான் குமுறியவாறு சொல்வார்கள். 'இந்த நாட்டுக்குப் பிரதமராக ஆகும் எல்லாத் தகுதிகளும் திறமை யும் மன்மோகன் சிங்கைவிட எனக்கு உண்டு. என்றைக்காவது, அரசியல் திருப்பம் ஏதாவது ஏற்பட்டு, அந்தப் பதவிக்கு நான் வருவேனோ என்கிற நம்பிக்கையில்தான் நான் மெனக்கெட்டு பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன்...’  

எஸ்.எஸ்.மணி, திருவனந்தபுரம்.

உங்களுக்கு முட்டையை ஆம்லெட் போட்டுச் சாப்பிடுவது பிடிக்குமா, அவிச்ச முட்டையாகச் சாப்பிடுவது பிடிக்குமா?

ஆம்லெட்தான். அந்த வார்த்தையில் பிரணவ மந்திரமான OM இருக்கிறதே!