மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நானும் விகடனும்! - 31

நானும் விகடனும்
பிரீமியம் ஸ்டோரி
News
நானும் விகடனும் ( விகடன் டீம் )

இந்த வாரம் : நா.முத்துக்குமார்படம் : கே.ராஜசேகரன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் பக்கம்!

##~##

ல்லோருடைய வீட்டிலும் வாராவாரம் ஒரு விகடன் வாங்குவார்கள். அதை யார் முதலில் படிப்பது என்று ஆளுக்கு ஆள் செல்லமான சண்டைகள் நடக்கும். அந்த சண்டை எங்கள் வீட்டில் நடந்ததே இல்லை. ஏனென்றால், எங்கள் வீட்டில் நாங்கள் வாரா வாரம் 50 விகடன்கள் வாங்குவோம். அத்தனை பேர் உள்ள குடும்பமா என்று ஆச்சர்யப்படாதீர்கள். என் அப்பா நாகராசன் ஒரு தமிழ் ஆசிரியர். ஆசிரியர் பணி போக ஓய்வு நேரத்தில், தான் சேகரித்துவைத்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக்கொண்டு 'அன்னை நூலகம்’ என்று காஞ்சிபுரத்தில் ஒரு நூலகத்தை நடத்தி வந்தார்.

சனி, ஞாயிறுகளில் 'ஹோம் டெலிவரி’ அல்லது 'டோர் டெலிவரி’ என்ற பெயரில், நூலக உறுப்பினர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, வார, மாத இதழ்களைப் படிக்கக் கொடுப்பது வழக்கம். அதற்காக வாங்குவதுதான் 50 விகடன்கள்.

நானும் விகடனும்! - 31

ஆகவே, ஒவ்வொரு வாரமும் ஒரே நேரத்தில், 50 விகடன்களைப் பார்த்தும் படித்தும் வளர்ந்தவன் நான். பெரிய அத்தை பெரிது பெரிதாகப் பூ வேலைப்பாடு செய்தும்; நடுநடுவே சிறிய கோலிக் குண்டுகளை வைத்தும் பின்னிய வயர் கூடைகளில் விகடன்களை அடுக்கி, சைக்கிளின் முன் ஹேண்டில் பாரில் மாட்டி, அப்பா கிளம்பும்போது கேரியரில் நானும் தொற்றிக்கொள்வேன். ஆஹா! அந்த நாட்கள் மீண்டும் வராதவை!

அதிகாலையில் புத்தகக் கட்டு பிரித்து, பேப்பர் வாசனை முகர்ந்து, மை விழிப் பெண்களால் தெருவடைத்துப் போடப்பட்ட மார்கழியின் மாக்கோலங்கள் சுமந்த, தெற்கு மாட வீதி வழியாகவும், எதோத்தகாரி சன்னதித் தெரு வழியாகவும், உலகளந்த பெருமாள் கோயில் தெரு வழியாகவும் தன் தகப்பனின் பின் அமர்ந்து ஒரு சிறுவன் மிதி வண்டியில் பயணித்தபடியே முன் அட்டையில் இருந்து பின் அட்டை வரை விகடனுடன் பயணித்த நாட்கள் அவை.

அந்தப் பயணம் அவனைப் பல்வேறு உலகங்களுக்குக் கூட்டிச் சென்றது. அந்த உலகத்தில் கம்பீரமான மீசையுடன் ஜெயகாந் தன் இருந்தார். குதிரைகளின் குளம்பொலியுடன் கல்கி வந்தார். தில்லானா மோகனாம்பாளின் ஜதி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. துப்பறியும் சாம்புவில் தொடங்கி, தேவன், சுஜாதா, பாலகுமாரன் என அவன் பல இடங்களுக்குப் பயணித்தான். மாலி, கோபுலு, மருது, மதன் என வாழ்வின் கோடுகளில் வளைந்து சென்றான். காலம் இன்று அவனை வேறு இடத்தில் அமரவைத்து இருந்தாலும், மிதிவண்டியை விட்டும் விகடனை விட்டும் இறங்க மறுக்கிறான்.

இப்படித்தான் நானும் விகடனுடன் வளர்ந்தேன் நண்பர்களே! அப்பாவுடன் புத்தகம் போடுவதற்காக ஒவ்வொரு வீட்டுக்குச் செல்லும்போதும், அந்த வீட்டில் இருக்கும் கண்களும் கைகளும் விகடனுக்காக அலைபாயும். அந்தக் கைகளில்தான் எத்தனை வயது வித்தியாசம். மருதாணி வரைந்து கண்ணாடி வளையல்கள் குலுங்கும் இளம் கைகள்; கிரிக்கெட் மட்டையுடன் குதிக்கும் குறுங்கைகள்; முடி வளர்ந்து முரட்டுத்தனம் காட்டும் ஆண் கைகள்; மூப்பின் முகவரி எழுதிய முதிர் கைகள் என அத்தனை கைகளும் விகடனுக்காகப் பரபரத்தன. அன்று முதல் இன்று வரை அதுதான் விகடனின் வெற்றி.

இரவு முழுவதும் கண் விழித்து அப்பா பழைய விகடன்களின் தொடர்கதைகளைக் கத்தரித்து பைண்டிங் செய்வார். அப்படி நிறைய விகடன் பொக்கிஷங்கள் இன்றும் எங்கள் வீட்டில் உள்ளன. அந்தத்தொடர் கதைகளின் பைண்டிங்குகளில் இருப்பவை தொடர்கதை மட்டும்தானா? கதைகளுக்கு வரைந்த ஓவியங்கள். வாசிப்பின் இடையில் குறுக்கிடும் கட்டம் கட்டி வெளியிடப்பட்ட நகைச்சுவை ஜோக்குகள். செய்தித் துணுக்குகள் என அது வேறு ஒரு உலகம்.

சென்னைக்கு வந்ததும் நான் முதன்முதலில் படி ஏறி வேலை கேட்டதும் விகடன் வாசலில்தான். அந்தக் கனவு உதிர்ந்து, நக்கீரன் வெளியீடான சிறுகதைக் கதிரில் செய்தியாளன் ஆனேன். பல வருடங்கள் கழித்து அன்று உதிர்ந்த கனவு என் தம்பியின் வழியாக மலர்ந்தது. பின்னாட்களில் என் தம்பி நா.ரமேஷ்குமார் விகடனில் நிருபர் ஆனான். அவன் பிஞ்சு விரல் பிடித்து பத்திரிகை அரிச்சுவடியின் 'அ’னா 'ஆ’வனா கற்றுக் கொடுத்த விகடனுக்கு  நன்றி என்னும் வார்த்தையைத் தவிர, இந்தக் கவிஞனால் வேறு என்ன தந்துவிட முடியும்?

விகடனுக்கும் என் படைப்புக்குமான உறவு ஒரு நண்பனைப்போன்றது. மொழியின் உயரங்களைத் தாண்ட ஒவ்வொரு முறை நான் முயலும்போதும், விகடன் என்னைக் கைப்பிடித்துத் தூக்கி அடையாளம் காட்டி இருக்கிறது. 16 ஆண்டுகளுக்கு முன்பு விகடன் பொன் விழா வின்போது நடந்த கவிதைப் போட்டி யில் வந்திருந்த லட்சக்கணக்கான கவிதைகளில் இருந்து ஐந்தைத் தேர்ந்து எடுத்தது விகடன். அந்த ஐந்து கவிஞர் களில் நானும் ஒருவன். அன்று முதன் முறையாக விகடனிடம் இருந்து மோதிரக் கை குட்டு வாங்கினேன். அதற்குப் பிறகு, எத்தனையோ கவிதைகள் விகடனில் எழுதிவிட்டேன். இன்னும் சொல்லப் போனால், இன்று வரை இரண்டே இரண்டு சிறுகதைகள்தான் எழுதியுள்ளேன். 'ஆறாம் வேற்றுமை’, 'பல்லாங்குழி’ என அந்த இரு கதைகளும் விகடனில் பிரசுரம் ஆனவை. இன்றும் அந்தக் கதைகளை ஞாபகம்வைத்துப் பேசும் நபர்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதுதான் விகடனின் வீச்சு.  

'கற்றதும் பெற்றதும்’ பகுதியில் எழுத்தாளர் சுஜாதா தொடர்ந்து மூன்று முறை அங்கீகரித்த சிறந்த பாடலாசிரியர் விருது, விகடன் விருது, நீண்ட இடைவெளிக்குப் பின் விகடன் நிறுவனம் தயாரித்த 'சிவா மனசுல சக்தி’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியது, 'என் விகடன்’ விளம்பரப் பாடல் எழுதியது என எத்தனை ஆச்சர்யங்களை இந்த மிதிவண்டிப் பையனுக்கு விகடன் தந்திருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக 'அணிலாடும் முன்றில்’! என் தம்பி விகடனில் பணியாற்றிய காலங்களில், விகடனில் நான் எதுவும் எழுதக் கூடாது, யாராவது ஏதாவது சொல்லிவிட்டால், தவறாகிவிடும் என்று ஒதுங்கியே இருந்தேன். என் தம்பி விகடனில் இருந்து வெளியே வந்ததும் கிட்டத்தட்ட என்னை ஆள்வைத்துக் கடத்தாத குறையாக அன்புக் கட்டளை போட்டு 'அணிலாடும் முன்றில்’ எழுதவைத்தார் அண்ணன் ரா.கண்ணன். இதுவரை நான் 2,000 திரைப் பாடல்கள் எழுதி இருக்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக அதிகப் பாடல்கள் எழுதும் பாடலாசிரியனாக இருந்து வருகிறேன். இவை எல்லாம் கொண்டுசெல்லாத உயரங்களுக்கும் உள்ளங்களுக்கும் என்னை  'அணிலாடும் முன்றில்’கொண்டு சென்றது.

எழுதத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே வண்ணதாசனிடம் இருந்து கடிதம் வந்தது. அப்பாவைப்பற்றி படித்து அழுதுவிட்டேன் என்றார் எஸ்.ராமகிருஷ்ணன். உரைநடையாக புது வாழ்க்கை, புது யுக்தி என்றது கவிஞர், கதை விமர்சகர் இந்திரனின் அழைப்பு. பட்டிமன்றம்தோறும் இந்தத் தொடரைப்பற்றித்தான் பேசுகிறேன் என்றார் பேராசிரியர் ராமச்சந்திரன். 'இனி, நான்தான் உனக்கு அக்கா’ என்று கண்ணீர் விடுகிறது நாகப்பட்டினம் வாசகியின் குரல். 'நான் எட்டயபுரத்துப் பாரதிக்குப் பக்கத்து வீட்டுக்காரன். தொ.மு.சி.ரகுநாதனின் மருமகன். அண்ணியைப் படித்துவிட்டு, என் அண்ணியின் மடியில் படுத்து அழுதேன்’ என்றார் மதுரையில் இருந்து பேராசிரியர் கருணாகரப் பாண்டியன். 'உங்கள் அப்பா

நானும் விகடனும்! - 31

உங்களுக்குப் பனை ஓலை விசிறியில் விசிறுவதைப்போலவே என் அப்பாவும் விசிறுவார். காற்றின் மகத்துவத்தை எனக்குப் புரியவைத்தீர்கள்’ என்று பழைய பனை ஓலை விசிறியுடன் நள்ளிரவில் வந்து கதவைத் தட்டுகிறார் சென்னை வாசகர். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல... நியூஜெர்சி தென்னிந்திய உணவகத்தின் உரிமையாளப் பெண்மணி 'அணிலாடும் முன்றிலை’ப்பற்றிப் பேசிக்கொண்டே தன் கையால் எனக்குப் பரிமாறுகிறார்.

இலக்கியத் துறை மட்டும் அல்லாது, திரைத் துறையிலும் இயக்குநர்கள் அகத்தியன், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சந்தானபாரதி, ஈ.ராமதாஸ், கவிஞர் அறிவுமதி என எத்தனை அழைப்புகள். இந்த அணில் ஆடியது முன்றிலில் அல்ல... மிகப் பெரிய மேடையில் எனப் புரியவைத்த விகடனுக்கு வாழ்க்கை முழுக்க வணக்கங்கள்!

இறுதியாக, விகடனுக்காக நான் எழுதிய பாடலின் வரிகளைக்கொண்டு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

டான் டான் ஆனந்த விகடன்
இது என் விகடன்
என்றும் நம் விகடன்
மை மை இது இளமையடா
இந்த மை எழுதும் என்றும் புதுமையடா
மை மை
நடுநிலை மையடா
இந்த மை முழுவதும்
மெய் உண்மையடா!''