என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

தேவிகா சுப்ரமணியம்

தேவிகா சுப்ரமணியத்தைத்
தெரியாதவர்கள் குறைவு எங்களூரில்
தெரிந்தவர்களில் பலருக்கும்
தெரியாத ஒன்று

சொல்வனம்!

அவரின் பெயர்க் காரணம்
'ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தை
அறுபத்தேழு முறை பார்த்ததினால்
ஆகி வந்த பெயராம்
சுப்ரமணி என்னும் அழைப்புக்கு
செவி சாய்க்க  மறக்கும் காதுகள்
தேவிகா என்னும் அழைப்புக்குத்
திரும்பாமல் இருக்க மாட்டா.
தேவிகாவைப் பற்றிய பேச்சுக்களைத்
தெரிந்த சிலருடன் மட்டுமே பேசுவார்.
எத்தனை படங்கள் நடித்தார் தேவிகா
யார் யாருடன் எத்தனை அதில்
எல்லாமே எப்போதும்
அவர் விரல் நுனியில்.
சிவாஜியை எப்போதும் கணேசன்
என்றே அழைப்பார்
என்பது ஒரு கூடுதல் தகவல்.
நரை கூடி கிழப் பருவம் எய்தி
எல்லோரையும்போலவே
தேவிகா சுப்ரமணியமும்
இறந்துபோன நாளன்றில்
இத்தனையும் அசை போட்டுக்கிடந்த
ஊரார் நடுவே
அடுத்த ஊரிலிருந்து வந்து
அழுது புலம்பிப் போன
தெய்வானைப் பாட்டிக்கு  
தேவிகா என்றொரு பெயருண்டு
என்பது எவருக்கும்
அங்கு தெரிந்திருக்கவில்லை!

- செல்வராஜ் ஜெகதீசன்

ஈரமில்லா மழை

இந்தப் பெரு நகரத்தின்
வெயில்களைப்போலவே
வெறுப்புற்றுப் பார்க்கிறேன்
இந்த மழைகளையும்
அலுவலகம் முடியும் நேரம்
அறிவிப்பில்லாமல் வரும்

சொல்வனம்!

உன் கோபம்போல
கொஞ்சல்போல
வேகமாக நடந்து வாகனம் அமர்வதற்குள்
நனைக்கத் தொடங்கும்
நிதானமறியாத உன் தீண்டல்போல்
ஷேர் ஆட்டோக்களின்
நெரிசலான இடங்களில்
தொங்கும் படுதாக்களில்
சொட்டத் தொடங்கும் பிடிவாதமாய்
நசநசவென்று உன் ஊடல்போல்
நிறுத்தம் வந்ததும் செம்புலப்பெயல் என
எவனோ எண்ணியதை
நினைத்துச் சிரிப்பூட்டும் சிவப்புத் தரை.
வீடு சேர்ந்ததும் உலர்த்தப்படும் குடையென
உதறிவிட்டுப்போன ஒரு வாழ்க்கையை
நினைவூட்டிக் கொல்கிறது மழை
உள்நொறுங்குதலின் உச்சத்தில்
உடலைத் தழுவியது குளிர்
இந்தப் பெரு நகரத்தின் குளிரை
இன்னொரு முறை
வெறுக்கத் தொடங்குகிறது மனம்
உன் அருகாமையை
இழந்த நாள் முதலாய்!

- சந்தியா

முள்வேலி முகாம்கள்

ன்றாக வளரத் தோதானது
தங்களின் நிழல் என்றார்கள்
தனித்து வளரத் துடித்தால்
களை என்றார்கள்
களை பிடுங்கும் வேகத்தில் செடிகளும்
கையோடு வந்துவிட்டதென்றார்கள்
பிடுங்கப்பட்ட இடத்தில் மீண்டும்

சொல்வனம்!

நடப்படும் என்றார்கள்
நடப்படும் வரை
தன் பிடிக்குள்
தற்காலிகமாய் இருக்குமென்றார்கள்
பிடுங்கப்பட்ட இடங்களை
மெல்லப் பிடுங்கிக்கொண்டார்கள்
மீண்டும் நடப்பட்டாலும்
வளர முடியாதவாறு
நாள் கடத்தினார்கள்
இப்பொழுது
பிடுங்கி நடுதல் என்றால்
எங்கள் மொழியில் அர்த்தம்
பிடுங்கி எறிதல் என்கிறார்கள்!

- க.ஆனந்த்

நம்பிக்கைகள்

தொட்டிலை
ஊஞ்சலாக மாற்றிவிடவும்

தன் காலுக்குப் பொருத்தமற்ற
செருப்பை அணிந்துகொள்ளவும்

நீண்ட கைக்குட்டையை
தாவணியைப்போல நினைத்து
உடுத்திக்கொள்ளவும்

சொல்வனம்!

பிரியமானவர்களின்
கொஞ்சல்களைத் தவிர்த்துவிட்டு
பொம்மைகளோடு பேசித் திரியவும்
முடிகிறது குழந்தைகளால்

எதிர் முனையில்
அழைப்பவர்களின்
பதிலுக்குக் காத்திராமல்
தன் விருப்பங்களைப்
பேசிவிடுகின்றன
அலைபேசியில் குழந்தைகள்

ஆதாம் ஏவாள் காலத்தில்
நேசிக்கப்பட்ட நிர்வாணத்தை
குழந்தைகள் மீண்டும்
கௌரவிக்கின்றன

விலக்கப்பட்ட கனியாய் இருக்கும்
உலகின் நடைமுறைகள்
குழந்தைகளை வெட்கமுறச்
செய்கின்றன

குழந்தைகளின் தலையில்
குண்டு வீசிச் செல்லும்
போர் விமானங்கள் பறக்கிற வரை
உலகம்
நாகரிகம் அடைந்துவிட்டதாக
நம்புகிறவர்கள் காட்டுமிராண்டிகள்!

- அமீர் அப்பாஸ்

சொல்வனம்!