
வாலிஓவியம் : மணி, படம் : கே.ராஜசேகரன்
'அவனொரு நிலவோ?’
##~## |
ஒரு பங்களா! அதனுள் ஒரு பள்ளியறை!
திரைச்சீலைகளைத் தென்றல் விலக்கி வழிவிட -
பலகணி வழியே, பால் நிலா பளிங்குத் தரையில் குதிக்கிறது; குதித்த நிலா குமரியருத்திக்குக் கொதித்த நிலா ஆகிறது.
வண்டார் குழல் மீது - விரகம் அமர்ந்து கரகம் ஆடுகிறது.
அவள்தான் கதாநாயகி. கனகமணிக் கட்டிலில் கலர்ப் பூக்கள் கொட்டிய மெத்தையின் மேல் -
ஒரு நேரம் ஒருக்களித்தும்; மறுநேரம் மல்லாந்தும் -

படுத்தும் புரண்டும் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் -
கதாநாயகி காதலனை நினைத்துப் பாடுகிறாள்; பல்லவி -
'அவனொரு நிலவோ?’
இந்தப் பாட்டுதான் - திருமதி. பி.சுசீலா பாட, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வாஹினி ஒலிப்பதிவுக் கூடத்தில் 'எங்க வீட்டுப் பிள்ளை’ பட பூஜை நாளன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
'சுத்த தன்யாசி’ ராகத்தில், சுகமோ சுகம் எனும்படி, மெல்லிசை மன்னர் விஸ்வநாத அண்ணன், மெட்டுக் கட்டிய பாட்டு அது.
'சுத்த தன்யாசி’ கேட்டால், சுத்த சன்யாசி கூட, காவி கமண்டலத்தை விட்டெறிந்து காமசூத்திரத்தைக் கற்கவேண்டி - வாத்சா யனர் வீட்டு வாசலில் போய் நிற்பான்!
அந்த ராகம் - அனங்கனின் ஆறாம் அம்பு!
வந்த சங்கதி வராமல் - 'சுத்த தன்யாசி’யைச் சுரண்டிச் சுரண்டி மிச்சம் மீதி இல்லாமல் வழித்து எடுத்து, என் வார்த்தை களின் மேல் அப்பியிருந்தார் அண்ணன் விஸ்வநாதன்.
பாட்டைக் கேட்டு - எம்.ஜி.ஆர். பரவசப்பட்டார். அவருக்கு அனேக கர்த்தா ராகங்களும்; ஜன்ய ராகங்களும் அத்துப்படி. நாடகக் கம்பெனி சாம்பார் சாப்பிட்டவராயிற்றே!
அவருடைய படங்களில் - கர்னாடக சங்கீதத்தின் அடிப்படையில்தான், பாடல்கள் அமைவதைப் பெரிதும் விரும்புவார்.
'தாய் மகளுக்குக் கட்டிய தாலி’யில் - அண்ணன் திரு. டி.ஆர்.பாப்பா இசைஅமைத்த திரு. கே.டி.சந்தானம் அவர்கள் இயற்றிய பாட்டு ஒன்று -
ராகமாலிகையாக வரும். எம்.ஜி.ஆர். ரசித்து நடித்த பாட்டு அது. திரு. சீர்காழி கோவிந்தராஜன் பாடியது.
அதேபோல் -
'நாடோடி மன்ன’னில் ஒரு பாட்டு. கவி. லட்சுமண தாஸ் அவர்கள் இயற்றி, திரு. எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் இசைஅமைத்த ராகமாலிகை.
இதுவும் திரு. சீர்காழி அவர்கள் பாடியதுதான்.
எதற்குச் சொல்கிறேன் என்றால் - அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் தொல்லிசையின்பால் அளப்பரும் காதல் கொண்டவர்.
பாட்டு மட்டுமா? பரதமும் முறையாகப் பயின்றவர் எம்.ஜி.ஆர்.
ஜூபிடர் பிக்சர்ஸ் எடுத்த 'ஸ்ரீமுருகன்’ படத்தில் -
எம்.ஜி.ஆர். சிவபெருமானாக வந்து ருத்ரதாண்டவம் அற்புதமாக ஆடுவார், நடிகை மாலதியுடன்!
'அவனொரு நிலவோ’ பாடல் ஒலிப் பதிவின்போது, உடனிருந்து உருகி உருகிக் கேட்ட எம்.ஜி.ஆரைப்போல்
நாகிரெட்டியும் 'பாக உந்தி; EXCELLENT MELODY’ என்று - தெலுங்கும் ஆங்கிலமும் கலந்து இடது கையால் என் முதுகைத் தட்டித் தட்டிப் பாராட்டிக்கொண்டு இருந்தார். அவரது வலது கையில் - நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே செருகப்பெற்று, கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாம்பலாகிக்கொண்டு இருந்தது - TRIPLE FIVE! உதட்டில் உட்கார்ந்து வழக்கமாக அவருக்கு உற்சாகமூட்டும் அதைக்கூட அலட்சியப்படுத்திவிட்டு -
'சுத்த தன்யாசி’யில் சுருண்டுபோனார் நாகிரெட்டியார்.
பாடலின் இடையில் - விரக உணர்வை வெளிப்படுத்த வேண்டி - ராமமூர்த்தி அண்ணனின் SOLO VIOLIN, செவிமடுப்போரின் ஈரக்குலையைப் பிசைந்த வண்ணம் இருந்தது.
விஸ்வநாதன், மெல்லிசை மன்னர் என்றால் - ராமமூர்த்தி, வில்லிசை மன்னர்!
வயலின் தந்திகளின் மேல், வில்லை - அவர் வைப்பதும் எடுப்பதும் ஓசையின்றி நிகழும்.

விஸ்வநாதனோடும் ராமமூர்த்தியோடும் கண்ணதாசன் சேரும்போது -
மெல்லிசை மன்னரும்;
வில்லிசை மன்னரும்;
சொல்லிசை மன்னரும்;
- சேர சோழ பாண்டியனாகச் செந்தமிழ் நாட்டில் உலா வந்தாற் போலிருக்கும்.
என்ன வேடிக்கை பாருங்கள்; உவமை கருதி நான் சொன்னா லும் உண்மை இதுதான்!
விஸ்வநாதன் - சேர நாட்டைச் சேர்ந்தவர்;
ராமமூர்த்தி - சோழ நாட்டைச் சேர்ந்தவர்;
கண்ணதாசன் - பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்!
இந்த மூவரின் இணைப்பில் - 'கர்ணன்’ படத்தில் வந்த ஒரு பாட்டு, 'சுத்த தன்யாசி’யில் தோய்த்தெடுக்கப் பெற்றது.
அதுதான் -
'கண்கள் எங்கே?
நெஞ்சமும் எங்கே?
கண்ட போதே -
சென்றன அங்கே!’
- எனும் பாடல்.
இசைஞானி இளையராஜா மட்டும் - 'சுத்த தன்யாசி’யை விட்டுவைப்பாரா என்ன?
'சத்ரியன்’ படத்தில் - நான் எழுதிய ஒரு பாட்டு.
'மாலையில் யாரோ -
மனதோடு பேச -
மார்கழி வாடை -
மெதுவாக வீச -
ராகம் வந்ததோ? ஓ!
மோகம் வந்ததோ?
மோகம் வந்ததும் - ஓ!
மௌனம் வந்ததோ?
நெஞ்சமே! பாட்டெழுது! - அதில்
நாயகன் பேரெழுது!’
- இன்றளவும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், இளையராஜாவின் இசைஆளுமை என்னை நினைவிழக்கச் செய்யும்; அதே நேரம் -
ஓராயிரம் குயில்கள் ஒரே ஸ்ருதியில் ஒருசேரக் கூவினாற்போல் - இந்தப் பாட்டை இசைத்த செல்வி ஸ்வர்ணலதாவை எண்ணி -
என், விழி மேகங்கள் வெகுண்டு திரண்டு - வெந்நீர் மழையைப் பெய்யும்!
ஸ்வர்ணலதா என்னும் - ஸ்வர ராக தேவதைக்குப், புற்றுவைத்ததே முற்று!
அந்தகன், அந்தகன்தான்; ஆயினும் கண்ணற்றவனுக்குக் காதுகளுமா அற்றுப் போனது?
'சுத்த தன்யாசி’ ராகத்தைச் சுற்றிச் சுற்றி - என்னுள் இத்துணை சிந்தனைகள் எழுகின்றன.
'எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் பாட்டுஎழுதும்போது - என் வயது முப்பத்து மூன்று; அண்ணன் விஸ்வநாதனின் வயது, முப்பத்து ஆறு!
அந்த இளம் வயதில்கூட - விஸ்வநாத அண்ணனின் தாடையில் ஓரிரு நரை முடிகள் தோன்றலாயின.
அதற்குக் காரணம் -
அவர், தித்திக்கத் தித்திக்க வர்ண மெட்டமைத்துப் பாடுகையில் -

அவர் வாய்வழி வழியும் நறை; அந்த நறைபட்டு, அவருக்கு மோவாயில் வந்தது நரை!
நறை - என்றால் தேன் என்று பொருள்!
எம்.ஜி.ஆராலும்; நாகிரெட்டியாராலும்; இயக்குநர் சாணக்யாவாலும்; ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டாலும்; வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமியாலும் -
ஆஹா ஓஹோ என்று பாராட்டப் பெற்ற - 'அவனொரு நிலவோ?’ பாட்டு -
ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணாராவ் அவர்களால் மிகுந்த பொருட் செலவில் ஒரு பங்களாவும்; அதனுள் ஒரு பள்ளியறையும் எழுப்பப் பெற்று -
திருமதி. சரோஜாதேவி நடிக்கப் படமாக இருந்த நிலையில் -
அந்தப் பாட்டு, 'வேண்டாம்’ என்று தீர்மானிக்கப்பட்டது!
காரணம் - வேறொன்றுமல்ல; கதாநாயகி மட்டும் - அதாவது சரோஜாதேவி மட்டும் பாடுவது அவ்வளவு உசிதமல்ல, உடன் எம்.ஜி.ஆர். இல்லாமல் - என்பதுதான்!
'அவனொரு நிலவோ’ எனும் பாடலோ - கதாநாயகி விரகதாபத்தில் பாடுவதாக, அந்த உணர்வையே முன்னிலைப்படுத்தி எழுதப்பெற்றது. அதை - ஒரு DUET - ஆக மாற்ற வாய்ப்பில்லை; வரிகளும் பொருந்தாது!
எனவே - வேறு பாடல், எம்.ஜி.ஆரும்; சரோஜாதேவியும் சேர்ந்து பாடுவதாக - சக்தி கிருஷ்ணசாமி காட்சியை மாற்றி எழுத - அந்தச் சூழலை ஒட்டி நான் எழுத நேர்ந்தது; அண்ணன் விஸ்வநாதன் அந்தப் பாடலுக்கும் - தன் வித்தக விரல் களை ஆர்மோனியத்தில் விளையாடவிட்டு - ஓர் அற்புதமான வர்ண மெட்ட மைத்து - அதை, இன்றளவும் இறவாப் பாடலாக ஆக்கிவைத்தார்.
அதுதான் -
'குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வர வேண்டும்;
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தர வேண்டும்?’
- எனும் DUET பாடல்!
'அவனொரு நிலவோ’ பாடல், படத்தில் இடம் பெறவில்லையே என்று விஸ்வநாத அண்ணனுக்கு வருத்தம் இருந்ததோ இல்லையோ - நானறியேன்!
எனக்கு அந்த வருத்தம் இருந்தது. ஆனால், 'ஒரு ஜன்னல் சாத்தப்படுவது, இன்னொரு சாளரத்தைத் திறந்துவைக்கத்தான்!’ எனும் இயற்கை நியதி, அப்போது எனக்குப் பிடிபட வில்லை.
பின்னாளில் புரிந்து, உவகையின் உச்சம் போனேன்; காரணமின்றிக் காரியமில்லை!
'எங்க வீட்டுப் பிள்ளை’ படம் வெளியாகி நாட்டையே கலக்கிக்கொண்டிருந்தது!
'நான் ஆணையிட்டால்’ என்று நான் எழுதிய பாட்டை பேரறிஞர் அண்ணாவே சிலாகித்துப் பாராட்டினார். அந்தப் பாடல் அந்த அளவு காங்கிரஸ் கட்சியின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது!
இருப்பினும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடமிருந்து என்னைப் பாராட்டி நாளும் ஒரு கடிதம் வந்துகொண்டுஇருந்தது. கழகத் தொண்டர்கள் என்னைக் கட்சிக் கவிஞராகவே கருதலாயினர்; அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க-வில் இருந்தார்!
'நான் ஆணையிட்டா’லைப் பாராட்டி நாளும் வந்து கொண்டிருந்த கடிதங்களிடையே -
'குமரிப் பெண்ணின் உள்ளத்திலே’ பாட்டைப் பாராட்டி -
ஒரு பெண், மைலாப்பூரிலிருந்து விடாமல் எனக்குக் கடிதம் எழுதித் தன்னை எனது தீவிர ரசிகை என்றும், என்னைப் பார்க்க ஏங்குவதாகவும் எழுதிக்கொண்டிருந்தாள்!
அந்தப் பெண்ணின் இடையறாத கடிதத் தொடர்பைத் தாக்குப் பிடிக்க மாட்டாமல், ஒரு நாள் என் வீட்டுக்கு வரச் சொல்லி ஒரு POST CARD போட்டேன்!
வந்தாள்; பழகினாள்; நாட்பட நாட்பட பழக்கம் காதலாகி -
அவள் என் மனைவியானாள்! இதன்பிறகு நான் -
'அவனொரு நிலவோ?’ பாட்டைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை!
ஆனால் -
அந்தப் பாடல்பற்றி -
ஒரு நாள் விஸ்வநாத அண்ணன் என்னைக் கேட்டார்.
''ஏன், வாலியண்ணே! 'அவனொரு நிலவோ?’ன்னு - நிலவை ஆண்பாலா சொல்லக் கூடாதாமே? அது தப்புன்னு சொல்றாரே?!''
''யாருண்ணே - நிலவை ஆண்பாலா சொல்லக் கூடாதூன்னு சொன்னது?'' என்று நான் வினவ -
''கண்ணதாசன்!'' என்றார் விஸ்வநாதன்; சொல்லிவிட்டு -
''இரவு, சித்ராலயா ஆபீஸ் வாங்களேன்... கவிஞர் அங்க வருவாரு... உங்க ரெண்டு பேர் சண்டையப் பாக்க ஆசையாயிருக்கேன்!'' என்று விஸ்வநாத அண்ணன், பிள்ளையைக் கிள்ளித் தொட்டிலை ஆட்டினார்.
அன்றிரவு -
சித்ராலயா அலுவலகத்தில் கண்ணதாசனைச் சந்தித்தேன்!
- சுழலும்...