அனுபவங்கள் பேசுகின்றன!
ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து!
சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு என் மகனுடன் பயிலும் சக மாணவன் ஒருவன் வந்திருந்தான். பேச்சுவாக்கில், இவன் தினமும் புதுசு புதுசா பேனா, பென்சில், ரப்பர் கொண்டு வருவான்மா!'' என்று என் மகன் என்னிடம் சொன்னான். ”ஏம்பா! உன் பேரன்ட்ஸ் தினமுமா பேனா, பென்சில் வாங்கித் தர்றாங்க?'' என்று அந்தப் பையனிடம் நான் கேட்டேன். அவன், ”என் அப்பாவும் அம்மாவும் ஆபீஸ்லருந்து இதையெல்லாம் கொண்டு வருவாங்க'' என்று சொன்னதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

அலுவலகத்திலிருந்து பொருட்களை எடுத்து வருவதும் ஒருவித திருட்டுதானே? இது, பிள்ளைகள் மனதிலும் தனக்குச் சொந்தமில்லாத பொருளை எடுத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பை மறைமுகமாக விதைக்குமே! ’பேனா, பென்சிலை எடுத்து வருவது பெரிய குற்றமா?’ என சிலர் கருதலாம். ஆனால், அதுவே பெரிய தவறுகளையும் செய்யத் தூண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
- எஸ்.சுப்புலெட்சுமி, புதுக்கோட்டை
தெய்வங்கள் சொல்லவில்லை!
நான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய்பாபாவுக்கு விரதம் இருப்பேன். ஒரு வியாழக்கிழமை இப்படி விரதம் இருந்தபோது, மறுநாள் காலை வாந்தி, பேதி ஆகி... எழுந்திருக்க முடியவில்லை. மருத்துவமனையில் அட்மிட் ஆகி குளூக்கோஸ் ஏற்றிய பிறகு எழுந்து உட்கார்ந்தேன்.

”ஒருவேளை விரதம் உடல்நலத்துக்கு நல்லது. 3 வேளையாகும்போது அது தீங்கா கிறது. ஏற்கெனவே அல்சர் இருப்பவர்கள், விரதமிருக்கும்போது ஜூஸ் குடிப்பதால் அல்சர் அதிகமாகி... அதன் விளைவே வாந்தி, பேதி'' என எடுத்துக் கூறிய மருத்துவர், ”எந்தக் கடவுளும், ஆன்மிக பெரியவரும்... உங்கள் உடலை வருத்திக்கொண்டு, விரதம் இருக்கச் சொல்லவில்லை. 'நலமுடன் வாழுங்கள், பிறருக்கு உதவுங்கள், அன்பு காட்டுங்கள்’ என்றுதான் கூறியுள்ளனர்'' என்று அறிவுரையும் அளித்தார்.
அவருடைய விளக்கத்தால் உண்மையை உணர்ந்த நான், ’இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மருத்துவரா!’ என மனதுக்குள் வியந்து பாராட்டிக் கொண்டேன்!
- அ.பூங்கோதை, செங்கல்பட்டு
குளிரவைக்கும் குறுஞ்செய்தி!

என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவள் மும்முரமாக தன் அலைபேசியில் சில குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தாள். முடித்துவிட்டு நிமிர்ந்தவளிடம் என்னவென்று கேட்டேன். ”நான்கு நாட்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்குப் போயிருந்தேன். அப்போது சில உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தேன். அவர்கள் செய்த உபசரிப்புக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்து இப்போது குறுஞ்செய்திகள் அனுப்பினேன். இந்த அவசர உலகில் உறவினர்களுடன் நேரம் செலவிடுவது குறைந்து கொண்டு வருகிறது. தங்கள் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு எங்களுக்காக நேரம் செலவழித்து கவனித்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்வது மிகவும் அவசியம்! இது, அவர்களுடனான நெருக்கத்தையும் அன்பையும் மேலும் அதிகரிக்கும்'’ என்றாள்.
நாலு வரிக் குறுஞ்செய்தி சொல்லும் நல்ல பாடத்தைப் பின்பற்ற நானும் முடிவு செய்துவிட்டேன்.
- விஜயலட்சுமி ரவீந்திரன், ஈரோடு
ஓவியங்கள்: சேகர்