என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

வீழ்வே னென்று நினைத் தாயோ?

சி.மகேந்திரன்ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

##~##

ன அழிப்பு அரசாங்கம், கொடிய மனம்கொண்டு தன் மக்களை அழிப்பதையே தொழிலாகக்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம், மெனிக் ஃபார்ம் முகாம்!

ஹிட்லரின் இன அழிப்புச் சித்ரவதை முகாம்களுக்கும் ராஜபக்ஷேவின் சித்ரவதை முகாம்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. ஹிட்லரின் கொடுமைகளை அறிந்துகொள்ள, அன்றைய சித்ரவதைக் கூடத்தில் வதைபட்ட கதை ஒன்றை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.

சித்ரவதை அடக்குமுறைத் தாக்குதலால், அந்தப் போராளியின் நாடித் துடிப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், சித்ரவதைக்குத் தலைமை ஏற்று இருந்த அதிகாரி, ''அவன் சாகக் கூடாது. செத்துவிட்டால், அவனிடம் உள்ள ரகசியங்களும் செத்துவிடும்!'' என்று பதற்றப்படுகிறான். அவன்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைப்பதன் மூலம், ரகசியங்கள் அனைத்தையும் சேகரிக்க முயற்சிக்கிறார்கள். அவன் மனைவி அகுஸ்தினாவும் ஒரு தலைமறைவு இயக்கப் போராளி தான். கணவன் கைது செய்யப்பட்ட சில நாட்களில், அவளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். ஹிட்லரின் தோல்விக்குப் பிறகு விடுதலை அடைந்த அகுஸ்தினா, பரபரப்புடன் கணவனைத் தேடி ஓடுகிறாள்.

பெரும் போராட்டத்துக்குப் பின், நாசிக் களின் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டு, அவளுடைய கணவன் தூக்கில் இடப்பட்டான் என்ற தகவல் கிடைக்கிறது. கணவனின் நினைவுகளில் இருந்து விடுபட முடியாத அவள், சித்ரவதை முகாமிலும் சிறைச்சாலையிலும் கணவனைப்பற்றிய தகவல்களுக்காக அலைந்து திரிகிறாள். அங்கு அவளுக்குச் சிறைக் காவலனிடம் ஒரு ரகசியத் தகவல் கிடைக்கிறது.

அகுஸ்தினாவின் கணவன் சிறைக் காவலன் ஒருவனின் உதவியோடு, தனது சிறைக் குறிப்புகளைப் பதிவுசெய்து வைத்திருக்கிறான். ஐந்து இடங்களில் பிரித்து மிகவும் ரகசியத்துடன் அந்தக் குறிப்புகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்தக் குறிப்புகள் அனைத்தையும் ஒன்றுதிரட்ட அகுஸ்தினாவுக்கு இரண்டு முழு ஆண்டுகள் தேவைப்பட்டன. சிறையின் ரகசியக் கண் களுக்குத் தெரியாமல் வெற்றிகரமாக எழுதப்பட்ட இந்தக் குறிப்புகளுக்கு 'From gallow’ என்று பெயரிட்டாள் அகுஸ்தினா. இதன் ஆங்கில நூல் 1949-ம் ஆண்டிலேயே தோழர் இஸ்மத் பாட்சா அவர்களால் 'தூக்குமேடைக் குறிப்புகள்’ என்னும் பெயரில், தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. சிறையில் அடைபட்டு, பின்னர் தூக்கில் இடப்பட்ட இந்த நூலை எழுதிய இவளுடைய கணவன்தான், செக்கோஸ் லோவேகிய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ் மிக்க தலைவன் ஜூலியஸ் பூசிக்.

வீழ்வே னென்று நினைத் தாயோ?

''மருந்து ஊற்றிய பெண் கேட்கிறாள். 'எங்கு வலி அதிகம்?’ என்று. 'எல்லா வலி யும் இதயத்தில்தான்’ என்கிறேன். ராணுவ முரடன் திமிர்கொண்டு கேட்கிறான், 'உனக்குத்தான் இதயமே கிடையாதே’ என்று. என் பதிலில் உறுதி கூடுகிறது. நான் அழுத்தமாகச் சொல்கிறேன். 'இதயம் எங்க ளுக்கு நிச்சயமாக இருக்கிறது’ என்று. அவன் மௌனமாகிவிடுகிறான்!'' - என்று அவருடைய குறிப்பில் ஒரு செய்தி உண்டு.

ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மர நிழலைப் போலவே, சித்ரவதை முகாம் ஒன்றின் கடிதமும் நமக்குக் கிடைக்கிறது. மனதைப் பதற்றம் அடையவைக்கும் சித்ரவதை முகாம் கடிதம், 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி எழுதப்பட்டு உள்ளது. கடிதம் எழுதி 16 மாதங்கள் கழிந்துவிட்டன. கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு யோசித்தால், இதை எழுதியவர் இன்னமும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே.  

எழுதியவரின் பெயர் ராஜசுதன். வயது 21 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மண்ணுக்காகப் போராடிய இளமைக் கால அறிமுகத்துடன் தொடங்குகிறது கடிதம்.  

வீழ்வே னென்று நினைத் தாயோ?

''போராட்டத்தில் களம் இறங்கிய நாங்கள், பல்லாயிரக்கணக்கில், சக போராளிகளின் உயிரை இழந்து இருக்கிறோம். எல்லாவற் றையும் இழந்த நாங்கள், எங்கள் உறுதியை மட்டும் இழக்கவில்லை. மரணத்தையே ஒரு சவாலாகக்கொண்டு எதிரிகளின் நெஞ்சாங் கூட்டுக்குள் சென்று அச்சமின்றித் திரும்பியவர்கள் நாங்கள். கடைசி நிமிடத்தில் நாங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டோம்.

ஆனால், இன்று நாங்கள் இருப்பது மனித நடமாட்டமே இல்லாத, காட்டுக்குள் அமைந்த ஒரு சித்ரவதைக் கூடத்தில். இது மனிதர்கள் வாழும் தகுதிகொண்ட பூமிதானா? அல்லது புராணக் கதைகளில் சொல்லப்படும் நரகமா என்பது எனக்குத் தெரியவில்லை. நாங்கள் தனித் தனியாக அடைத்துவைக்கப்பட்டு உள்ளோம். எல்லா இடங்களிலும் ஒரே ரத்த வாடைதான். கதறி அழும் குரல், விம்மலை மட்டும் வெளிப்படுத்தும் குரல், இறுதி வரை வைராக்கியத்தை இழந்துவிடாத உறுதி மிக்க குரல்... என்று எத்தனைவிதமான குரல்கள் எங்களைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி, எத்தனை சித்ரவதை உண்டோ, எல்லாம் செய்து முடிக்கிறார்கள். என் நகங்களில் ஊசி ஏற்றப்பட்டு, நகத்தில் ரத்தம் கசிந்து காய்ந்துகிடக்கிறது. நகங்கள், சிலருக்குப் பிடுங்கப்பட்டுவிட்டதாகவே அறிகிறேன். பெண் புலிகளாக இருந்த என் அன்புச் சகோதரிகளின் கதறல் கேட்கிறது. இவர்களின் மானம் காக்கத்தான் நாங்கள் முதலில் ஆயுதம் ஏந்தினோம். இன்று எங்க ளால் எதுவுமே செய்ய முடிய வில்லை. இரவு நேரங்களில் ஆதரவற்ற அந்தக் குரல்கள், விடிய விடியக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

இரவில் மனப் போராட்டத்தை நடத்தி முடித்த எங்களுக்கு, அதி காலையில் புதிய வேலை ஒன்று காத்திருக்கும். இறந்துபோனவர்களின் உடலை எரித்துச் சாம்பலாக்கும் வேலை. அந்தப் பணியை, எங்கள் சக போராளிகளுக்குச் செலுத்தும் கௌரவமாகக் கருதுகிறோம். ஆனால், ஒன்று மட்டும் எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் கௌரவத்துடன் எரித்து முடித்த அந்த உடல் யாருக்குச் சொந்தம்? அது ஆண் புலியின் உடலா? பெண் புலியின் உடலா? எங்களில் யார்? புரிந்துகொள்ள முடியவில்லை. துணி ஒன்றால் முழுவதும் மறைத்துவைக்கப்பட்ட அந்த உடல் யாருடை யது என்று எங்களால் அறிந்து கொள்ள இயலவில்லை!'' என்கிறது அந்தக் கடிதம்.

வன்னிக் காடுகளின் மறைவிடச் சித்ரவதைக் கூடாரங்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ள இளைஞர்கள் இவர்கள். முள்ளி வாய்க்காலில் இறுதி நேரத்தில் இலங்கை ராணுவத் தால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களுடைய பெயர் எந்தக் கணக்கிலும் இருக்காது. அரசாங்கத் தின் பட்டியலிலோ அல்லது ஐக்கிய நாடுகளின் பெயர்ப் பட்டியலிலோ இடம் பெறாது. எச்சரிக்கை நடவடிக்கை முன்னரே எடுக்கப்பட்டு இருக்கும். இவர்கள் புலிகளின் ராணுவத்தில் முன்னணிப் பொறுப்பில் இருந்திருக்க வேண்டும். ஹிட்லரின் சித்ரவதை முகாம்போலவே இவர்களுக்கும் புலிகளின் ரகசியங்கள் தேவைப்படுகின்றன. உடனே கொன்றுவிடாமல், சித்ரவதை செய்வதற்கு இதுதான் காரணம். இவர்களின் நிலை இதுவெனில், முள்ளி வாய்க்கால் பெரு நெருப்புக்கு இடையே வெளியேறிய மக்கள் கூட்டத்தில் புலிகள் என்ற பெயரில் பிரித்து எடுக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 11,696. இது அரசாங்கத்தின் பதிவுகளில் இடம்பெற்று உள்ளது. இவர்களின் நிலை என்ன? இந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சித்ரவதைகள், ஓராயிரம் கதைகளைக் கூறி நம் நெஞ்சில் ஏறி மிதித்துக்கொண்டே செல்கின்றன!

- விதைப்போம்...