என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

பார்க்காமல் முடியும்!

ஓவியர்களுக்கு நாம் விட்ட சவால்

##~##

ண்ணைக் கட்டிவிட்டு ஒரு பெண்ணின் படத்தை வரையச் சொன்னால்...

 சில ஓவியர்களிடம் இந்த யோசனையை முன்வைத்தபோது... சற்றுக் கலவரமானாலும் உடனடியாக ஒப்புக்கொண்டார்கள்.

முதலில் ஓவியர் மணியம் செல்வன்!

ம.செ-வின் கண்ணை அவர் மனைவி ஜனனி டைட்டாகக் கட்டிவிட்டார். அப்புறம் சும்மா இல்லாமல், ''இப்போ நீங்க பஞ்சாப் தீவிரவாதி மாதிரி இருக்கீங்க!'' என்றார். மனைவியைப் பயமுறுத்தும் தினுசாக ம.செ. ஒரு தீவிரவாதி சிரிப்புச் சிரித்துவிட்டு வரையத்துவங்கினார்.

வரையவிருக்கும் பேப்பரை ஒரு முறை தடவிக்கொடுத்தார்.

''ஜனா... அந்த ஸ்கெட்ச் எடு!'' என்றார். ஒரு துண்டு பேப்பர் எடுத்து, அதில் கிறுக்கிப் பார்த்து, ''ஜனா... நல்லா 'திக்’கா இருக்கா... பாரு!'' என்று கேட்க, மனைவி 'உம்’ கொட்டினார்.

பார்க்காமல் முடியும்!

முதலில் மூக்கு! பிறகு, வாய், தாடை, கழுத்து என்று கோடு இறங்க... இறங்க... ஓர் அழகிய பெண்ணின் பக்கவாட்டு முகம் பளிச்சிட்டது. பேனாவை பேப்பரில் இருந்து எடுக்காமல் ஒரே கோட்டில் சென்றுகொண்டு இருந்தவரையில் பிரச்னை இல்லை. மீண்டும் நெற்றிக்கு மேலே தலை போடும்போதுதான் சற்றுக் கீழே வரைந்து விட்டார்.

தன் சித்திரப் பெண்ணுக்குக் குத்துமதிப்பாகக் காது வரைந்து ஒரு ஜிமிக்கியும் மாட்டிவிட்டவர், ''இனிமேல் முடியாதுங்க'' என்று சொல்லிக் கையெழுத்திட, மறுகணமே மனைவி ஜனனி கணவரின் கட்டை அவிழ்த்தார். தான் வரைந்து இருந்த பெண்ணைப் பார்த்த ம.செ-வின் முகத்தில் 'அட... பாஸாயிட்டேனே!’ என்கிற குதூகலம். வரைவதற்கு ம.செ. எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே!

டுத்து அரஸ்!

ஐடியா சொன்னதுமே மனைவி பாவையை அழைத்தார். கணவரின் கண்ணைக் கட்டிய பாவை, விரலை முன்னால் நீட்டி, ''எதுவும் தெரியலையே'' என்று செக் செய்துகொண்டார்.

அரஸின் இரண்டு வயது மகன் சற்றே திகிலாகி, ''அப்பா... அப்பா...’ என்று அழைத்துக் கொண்டே இருக்க...

பார்க்காமல் முடியும்!

அரஸ் அவனைச் சமாதா னப் படுத்திவிட்டு வரையத் துவங்கினார். ம.செ. வரைந்ததைப் போன்றே பக்கவாட்டு முகம்தான் இவர் வரைந்ததும்! ஆனால், கண்கள் மட்டும் மாடர்ன் ஆர்ட் பாணியில் வாய்க்கு அருகே!

கண்ணைத் திறந்ததும் அரஸ் சொன்ன வார்த்தை: ''அடடா!''

அரஸ் எடுத்துக்கொண்டது ஒரு நிமிடம் மட்டுமே!

ஜெயராஜின் மனைவி ரெஜினா, 'ஜெ’யின் கண்ணைக் கட்டியதுமே பேப்பரில் இடதுகையின் நாலு விரல்களையும் குறிப்பிட்ட இடத்தில் வைத்து அழுத்திக்கொண்டார் 'ஜெ’. ஸ்கெட்ச் பேனாவை சர்வசாதாரணமாகக் கீழ்நோக்கிக் கொண்டுபோனார். கூடவே விரல்களையும் அதே திக்கில் நகர்த்திக்கொண்டுபோனார். அவருக்கு வழிகாட்டி மாதிரி விரல்கள் உதவி செய்தன.

''இவர் காலாலயேகூட வரைஞ்சிருக்கார். ஒரு முறை எங்க மகள் இவரை அப்படி வரையவெச்சி இருக்கா. அது தவிர, ஒரு முறை விபத்துல இவர் வலது கைல அடி பட்டப்போ, இவர் நண்பர் ஒருத்தர் கொடுத்த உற்சாகத்துல இடது கையாலயே வரையத் துவங்கினார். அதனால இடது கையாலயும் இவரால அற்புதமா வரைய முடியும்!'' என்றார் ரெஜினா.

பார்க்காமல் முடியும்!

பரபரவென்று ஒன்றரை நிமிடங்களுக்குள் 'ஜெ’ வரைந்து முடிந்தார். வழக்கமாக அவர் படங்களில் தெரியும் 'இளமைக் குறும்பு’ அப்படியே அச்சாக இந்தப் படத்திலும்! கண் கட்டைஅவிழ்த்ததுமே 'ஜெ’ சொன்னது: ''அடடே... மாராப்பு வரைய மறந்துட்டேனே!''

''அதனாலென்ன சார்... உங்க சித்திரப் பெண்கள் அநேகமா பனியன்தானே போடுவாங்க!'' என்று நாம் சொல்ல, 'ஜெ’ அமர்க்களமாகச் சிரித்தார்.

பேப்பரை எடுத்துக்கொண்டார் கரோ. எடுத்த எடுப்பில் வரையத் துவங்குவதில் எல்லாம் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

சரியாக ஒன்றரை நிமிடங்களுக்கு பேப்பரின் நீள - அகல விஸ்தீரணத்தை அளப்பதுபோல் கைகளால் தடவிக்கொண்டே இருந்தார்.

பார்க்காமல் முடியும்!

''நீங்க யாரும் பக்கத்துல இருக்காதீங்க... நான் சீக்கிரம் போட்டுடுவேன்!'' என்று அவர் சொன்னதும் நாம் நாலடி தள்ளிப்போனோம்.

பிறகு 'ஜெ’ மாதிரி இடதுகை விரல்களை ஓர் இடத்தில் பிடித்து அழுத்திக்கொண்டு சரசரவென ஒன்றரை நிமிடங்களில் வரைந்து முடித்தார். கரோவின் மனைவி கலா, ''கண்ணுகிட்டதான் கொஞ்சம் மிஸ் பண்ணிட்டீங்க! மத்தபடி நல்லாத்தான் வந்திருக்கு!'' என்றார்.

''கண்ணைத்தானே கட்டுவீங்க... கையை இல்லையே! அப்போ சமாளிக்கலாம்!'' என்றார் மாருதி. மாருதியின் மனைவி விமலா அப்போதுதான் ஆபீஸில் இருந்து திரும்பியிருந்தார்.

''கொஞ்சம் முகத்தைச் சரிபண்ணிக்கிட்டு வரட்டுமா?'' என்று கேட்க, ''ஃப்ரெஷ்ஷா... நல்லாத்தான் இருக்கே!'' என்று மாருதி சிரிக்க... மறுபேச்சின்றி கண்ணைக் கட்டினார் மனைவி!

''க்ரையான் பென்சில்ல போடறேன்!'' என்று சொல்லிவிட்டு பென்சிலால் ஒரு கோடு இழுத்தார். 'பட்’டென்று உடைந்தது முனை.

பார்க்காமல் முடியும்!

பிறகு, நம்மிடம் இருந்த பால்பாயின்ட் பேனாவைக் கேட்டார். மூத்த மகள் சுபாஷிணியிடம் இருந்து வேறு பேப்பர் வாங்கிக்கொண்டார்.

இரண்டு நிமிடங்களுக்குள் மாருதி வரைந்து முடித்தார். படத்தில், அவரது வழக்கமான... விரியும் கண்ணழகியைப் பார்க்க முடியாவிடினும் படம் நன்றாகவே வந்திருந்தது.

''என்னை மாதிரி பத்திரிகை ஓவியர்களுக்குப் பார்வை எவ்ளோ முக்கியம்னு தெரியுது!'' என்றார் மாருதி படத்தைப் பார்த்து!

- எஸ்.சுபா, படங்கள்: மேப்ஸ்