மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 20

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

ன்னல் வழியாக இருண்ட வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்தபடி லேப்டாப் முன்னர் உட்கார்ந்திருந்தான் நசிகேதன். பிலாசபி மாணவன். 'மரணத்துக்குப் பிறகான வாழ்க்கை’ - இதுதான் அவன் பிஹெச்.டி., சப்ஜெக்ட். 

இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த, வழிகாட்டியும் பேராசிரியருமான டாக்டர் தர்மராஜனின் திடீர் மரணம், அவனை நிலைதடுமாறச் செய்துவிட்டது. வயோதிகத்தால் நடந்த இயல்பான மரணம்தான். ஆனாலும் நசிகேதனுக்கு அது பேரிழப்பு.

மெசபட்டோமியாவின் மரணத்தின் கடவுளான எரெஷிகள் முதல் கடோபனிஷத் வரை ஆராய்ந்துவிட்டான். தீஸிஸில் இன்னும் சில கேள்விகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. கடைசியாக, பேராசிரியருக்கு அனுப்பிய மெயில் ஞாபகம் வந்தது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 20

'வாழ்க்கை ஒரு வாக்கியம் என்றால், அதன் முடிவில் இருக்கும் மரணம் முற்றுப்புள்ளியா... கமாவா?’ என அந்த மெயிலில் தான் கேட்டதை நினைத்துக்கொண்டே மெயிலைத் திறந்தான்.

சற்று முன் பேராசிரியரிடம் இருந்து பதில் வந்திருப்பதைப் பார்த்து, சில நொடிகள் சிலை ஆனான் நசிகேதன். பதில் வாக்கியத்தின் முடிவில் கமாவோ, முற்றுப்புள்ளியோ இல்லை. அங்கே இருந்தது ஒரு 'ஸ்மைலி’!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 20

''இன்றைய தலைமுறையின் முக்கியமான பிரச்னை என்ன தெரியுமா?'' எனக் கொதித்தார் அரசியல்வாதி.

''தெரியும்... ஸ்மார்ட்போன்ல சார்ஜ் நிக்கிறது இல்லை...'' எனச் சிரித்தான் கார்ப்பரேட் சித்தன்.

பொய்

'பொய் என்பது, ஓர் உளவியல் பாதுகாப்பு நடவடிக்கை. அது இல்லை என்றால் மனித இனம் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்காது’ - சிக்மண்ட் ஃப்ராய்டு.

'ஏமாறுவது எப்படி?’ என யாராவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா? தெரியவில்லை. ஆனால், இதெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டியதா என்ன? அது, நம் ரத்தத்திலேயே ஊறிப்போனது.

தலைவர்கள் ஓட்டு வாங்கிக்கொண்டு கஜானாவில் ஆட்டையைப்போடுவது முதல், சீட்டு போட்ட கம்பெனி நாட்டைவிட்டு தலைமறைவு ஆவது வரை நாம் ஏமாறாத நாட்களே இல்லை. ஏப்ரல் ஃபூல் என்பது, பிற நாட்டவர்களுக்கு வேண்டுமானால் ஒரு தினமாக இருக்கலாம்; நமக்கு அது அனுதினம்.

இந்த நேரத்தில் பொய் பற்றிய ஒரு நுனிப்புல் ஆராய்ச்சி.

'பொய் என்பது, ஏமாற்றுவதற்காக தவறான ஒரு தகவலைத் தருதல்’ என ஸ்டான்ஃபோர்டு டிக்‌ஷனரி ஆஃப் பிலாசபி விளக்கம் அளிக்கிறது. 'பிள்ளையார் பால் குடிக்கிறார்’ என்றோ, 'மேரி மாதா சிலை கண் சிமிட்டுகிறது’ என்றோ ஒருவன் மற்றொருவனிடம் சொல்லும்போது, அவன் அதை உண்மை என நம்பியே சொல்கிறான். இதில் ஏமாற்றும் நோக்கம் இருக்க வாய்ப்பு இல்லை என்பது போன்ற உதாரணங்களைச் சொல்லி, இந்த விளக்கத்தைக் குழப்புகிறது இன்னொரு குரூப்.

அப்படியென்றால், 'பொய்யை எப்படி வகைப்படுத்துவது?’ நிபுணர்கள்(!) பொய்களை, பல வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 20

1. Error  - தவறுதலாகச் சொல்லும் பொய். சொல்பவரே அது பொய் எனத் தெரியாமல் அடித்துவிடுவது. பெரும்பாலான வதந்திகள் இப்படிப் பரவுபவைதான். (மாத்தூர் பக்கம் ஒரு மாமரத்துல ரத்தம் வடியுதாம்!)

2. White lies - வெள்ளைப் பொய்கள். குட்டியாகச் சொல்லும் பொய்கள். 'ஐ’ம் நாட் வெல்’ என பாஸுக்கு மெசேஜ் தட்டிவிட்டு போத்திக்கொண்டு ஜாலியாகத் தூங்குவது... இந்த வகையறா.

3.  Restructuring - கொஞ்சம் உண்மையும் கலந்த பொய். ஆனால், கொஞ்சம் புளிப்பு, காரம் கலந்து பரிமாறுதல். உதாரணம்... நம்மூர் எழுத்தாளர்களின் பயண அனுபவங்கள்.

4. Denial  - மறுத்தல். உண்மை எனத் தெரிந்தும் அதை மறுத்து, தான் சொல்வதுதான் சரி எனச் சாதிக்க நினைத்துப் பொய் சொல்வது. பெரும்பாலான அரசியல்வாதிகள் சொல்லும் பொய் இந்த வகைதான்.

5. Minimization - சுருக்கிக் கூறுதல். பின்விளைவுகளை, பிரச்னைகளைக் குறைத்துச் சொல்லுதல். மரபணு மாற்று விதைகள் முதல் மருத்துவப் பின்விளைவுகள் வரை அதன் தீவிரத்தை, உண்மையான அபாயங்களைக் குறைத்துச் சொல்வது. இது அதிகாரவர்க்கம் சொல்லும் பொய்.

6. Exaggeration- எதையும் ஊதிப் பெருக்கிச் சொல்வது. 'ஈரைப் பேனாக்கி பேனைப் பெருச்சாளியாக்குவது...’ என ஊரில் சொல்வார்கள். 'உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக...’ என ரிலீஸுக்கு முன்னரே பில்ட்அப் ஏற்றி ஓப்பனிங் வசூல் தேற்றுவது இந்த வகை.

7.Fabrication - பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு பொய்யை உருவாக்குதல். காதலர்களுக்கு இடையிலான மெசேஜ்கள் முதல் கார்ப்பரேட் சாமியார்களின் அருளுரைகள் வரை எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை.

இந்த வகையறாக்களில் ஒரு பொய்யாவது நாம் சொல்லாமல் இருக்கச் சாத்தியம் இல்லை. சில நேரங்களில் பொய் சொல்வதில் ஒரு குஷி இருக்கத்தான் செய்கிறது. உதாரணம், கட்டுரையின் முதல் வாக்கியமாக நான் கொடுத்திருக்கும் சிக்மண்ட் ஃப்ராய்டின் வாசகம் அவருடையது அல்ல. அது என் கைச்சரக்கு! ;)

ஸ்காட்லாண்டு என்றால், 'ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ்’தான் ஞாபகத்துக்கு வரும். அந்த போலீஸுக்கே ஒரு சிற்பி தண்ணி காட்டியிருக்கிறார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 20

சில வருடங்களுக்கு முன் ஸ்காட்லாண்டின் எடின்பர்க் நகரின் முக்கியமான நூலகங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை, பல்வேறு இடங்களில் தினமும் சில சிற்பங்கள் தோன்றி மக்களை ஆச்சர்யப்படவைத்தன. பழைய புத்தகங்களின் பக்கங்களையே சிற்பங்களாகச் செய்து, காண்பவர்களை அசத்திய அந்தச் சிற்பி யார் என்பது இன்று வரை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ரகசியமாகவே இருக்கிறது. 'காலையில பாத்தோமா... அழகான புத்தகச் சிற்பம் இருந்துச்சா! அப்படியே அசந்துட்டோமா... அப்புறம் என்னாச்சு?’ என இன்று வரை ஸ்காட்லாண்டு அரசும் மக்களும் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.

சில சிற்பங்களில் இருந்த குறிப்பின் வழியே அதைச் செய்பவர் ஒரு பெண் சிற்பி என அறிந்ததில்,  பார்வையாளர்களுக்குச் சற்று ஆசுவாசம். இந்த வகையான புத்தகச் சிற்பங்களை 'ஆல்டெர்டு புக்ஸ்’ (கிறீtமீக்ஷீமீபீ தீஷீஷீளீs) என்கிறது ஆங்கிலக் கலைச்சொல் அகராதி.

பெரும்பாலும் பழையப் புத்தகங்களை வாங்கி அதைப் பக்கவாட்டில் கொத்தாக மொத்தப் பக்கங்களையும் செதுக்குவது வழியாகவோ, விரித்த புத்தகத்தை வெட்டி தாள்களை கொலாஜாக ஒன்றுசேர்ப்பது மூலமோ உருவங்களை உண்டாக்குவதுதான் 'ஆல்டெர்டு புக்’ எனும் கலை.

ரகசியச் சிற்பி!

ஸ்காட்லாண்டின் 'ரகசியச் சிற்பி’ உருவாக்கியது இந்த வகையான புத்தகச் சிற்பங்களைத்தான். ஒருகட்டத்தில் ஸ்காட்லாண்டு அரசே இந்தச் சிற்பங்களைச் சேகரித்து தாங்கள் பார்லிமென்ட்டில் காட்சிக்கும் வைத்தது. எடின்பர்க் புத்தகக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு இடையே ஐந்து புத்தகச் சிற்பங்களை ஒளித்துவைத்து வாசகர்களைத் தேடச் சொல்லி அல்லோல கல்லோலப்படுத்தினார் அந்த ரகசியச் சிற்பி.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 20

கடந்த ஜனவரியில் பி.பி.சி-க்கு ரகசியமாக அளித்த பேட்டியில் தன் அட்டகாசங்கள் தொடரும் எனச் சொல்லி புத்தகச் சிற்ப ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரகசியச் சிற்பி, வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டவும், புத்தகங்களின் மீது காதலை உருவாக்கவுமே தான் இப்படிச் செய்வதாகவும் சொல்கிறார்.

நம்ம ஊர் பக்கம் வந்தால், என்னிடம் படிக்க முடியாமல் கிடக்கும் தமிழ் நாவல்கள் சிலவற்றைத் தள்ளிவிடலாம் எனப் பார்க்கிறேன். தலையணை சைஸில் சிற்பங்கள் செதுக்கலாமே!