`மெட்ராஸ்' மாநிலத்துக்கு `தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம், இன்று.
தற்போது நாம் பெற்றிருக்கும் அனைத்து உரிமைகளும், நமக்கான அங்கீகாரங்களும் அவ்வளவு எளிதில் நமக்குக் கிடைத்தவை அல்ல; நம் முன்னோர்கள் பலரால் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு வென்றெடுக்கப்பட்டனவே. அவர்களுள் சங்கரலிங்கனார், தனித்துவமிக்கப் போராளி. இந்தி திணிப்பு தொடங்கி தற்போது `கீழடி' வரை தமிழர்களின் அடையாளமும் தமிழின் தொன்மமும் மறைக்கப்படுவதும், அதை நம்மவர்கள் போராடி மீட்டெடுப்பதும் தொடர்கதைதான்.
1957-ம் ஆண்டில் மொழிவாரி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டப் பிறகு, 1966-ம் ஆண்டு வரை நம் நிலப்பரப்பு `மெட்ராஸ் மாகாணம்' என்றே அழைக்கப்பட்டது. அதன் பிறகு 1967-ம் ஆண்டில் ஏப்ரல் 14-ம் தேதி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசுச் செயலகமாகப் பெயர் மாறியது. 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சென்னை மாநிலத்தை `தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பரில் பெயர் மாற்று மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறவும் செய்தது. இதற்குப் பின்னால் இருக்கும் சங்கரலிங்கனாரின் தியாகம் அசாத்தியமானது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரலிங்கனார், சிறுவயது முதலே தமிழ்மொழிமீது தீராப்பற்றுகொண்டவர். கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திவந்த இவர், காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் பங்குபெற்றார். ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு, இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் ம.பொ.சி-யின் `தமிழரசுக் கழகம்' தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியது. இந்த இரண்டு சம்பவங்களும் ஏற்படுத்திய தாக்கத்தால் சங்கரலிங்கமும் போராட்டம் செய்ய முடிவெடுத்தார்.
`சென்னை மாகாணத்துக்கு `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சாதாரண மக்களைப்போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழிற்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு, மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது, நீதிமன்ற நிர்வாக மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவர வேண்டும்...' உள்ளிட்ட பன்னிரண்டு கோரிக்கைகளுடன் 1956-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சூலக்கரை மேட்டில் தனி ஆளாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். உண்ணாவிரதம் நடக்கும் இடம் ஆள் நடமாட்டமற்றப் பகுதியாக இருந்தால் மக்களின் வரவேற்பு கிடைக்காது என்பதை உணர்ந்து, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
மா.பொ.சி., அண்ணாதுரை, ஜீவானந்தம் உள்பட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கைவிடுத்தனர். இருந்தாலும் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்ட சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமாகி, மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப்போலவே மரணமும் தான்கொண்ட முடிவில் உறுதியாக இருந்தது. விளைவு, 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி சங்கரலிங்கனாரின் உயிர் பிரிந்தது. அவருடைய விருப்பப்படி, இறந்த பிறகு அவரது உடல் `பொதுவுடைமைக் கட்சி'யினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு தமிழக அரசு சார்பில் விருதுநகரில் உள்ள கல்லூரிச் சாலையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள காந்திமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் சங்கரலிங்கனாருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் மாதம் நெல்லையில் நடைபெற்ற தென்மண்டல தமிழர் உரிமை மாநாட்டில் `தியாகி' சங்கரலிங்கனாருக்கு மரியாதை செலுத்தும்விதமாக `சங்கரலிங்கனார் நினைவு ஜோதிச்சுடர்' விருதுநகரில் இருந்து நெல்லைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி `தியாகி' சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கிய அதே நாளில், மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
சங்கரலிங்கனார்போல நம் மொழிக்காக, உரிமைக்காக இறுதிவரையில் போராடியவர்களைப் பற்றி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்வதே, அந்தத் தன்னலமற்றத் தியாகிகளுக்கு நாம் செய்யும் மரியாதை!