மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ’ 200

மலைக்கவைத்த 'அப்ரோச்’!

ஸ்பத்திரியில் இருந்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய சொந்தக்காரப் பெண்ணைப் பார்க்கப் போயிருந்தேன். அந்த சமயம், அவளோடு பணிபுரியும் சிநேகிதியின் அம்மா வந்திருந்தார். ”வேலைக்குப் போன பொண்ணு அநியாயமா அடிபட்டு, கட்டு போட்டுக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு. எல்லாம் போதாத காலம்தான்' என்றார் அவர், வருத்தத்தோடு.

உடனே என் சொந்தக்காரப் பெண் என்ன பதில் சொன்னாள் தெரியுமா?

அனுபவங்கள் பேசுகின்றன!

”எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவ்வா பார்க்கறதுதான் நல்லது. இப்ப என்னையே எடுத்துக்குங்க... நான் ஸ்கூட்டர்ல அடிபட்டாலும், ரோட்டுல அநாதை மாதிரி விழுந்து கிடக்காம, என் ஃப்ரெண்டு உடனடியா என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டாள். ஊருக்குப் போயிருந்த என் கணவர் அன்னிக்கு சாயந்திரமே அவரோட அம்மாவுடன் வந்துவிட்டார். கையில் பணமும் இருந்தது. எனக்கு சுகரோ... பி.பியோ கிடையாது. நல்ல காலம்... தலையில் அடிபடாமல் காலிலும், கையிலும்தான் அடிபட்டது. ஆடிட் சமயமா இருந்தாலும் ஆபீஸ்ல லீவு கொடுத்துட்டாங்க.

எனக்கு ஷுகர், பி.பி இருந்தாலோ, உடனடி வைத்தியம் செய்துகொள்ளாமல் இருந்தாலோ, சமயத்துக்கு மாமியார் வந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளாமல் இருந் தாலோ, கையில் பணம் இல்லாமல் இருந்திருந்தாலோ, என் நிலைமை எப்படி இருந்திருக்கும்?! எதிலும் ப்ளஸ் பாயின்ட்டுகளைப் பார்த்தா... பிரச்னைகள் குறைந்து, தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்'' என்றாள்.அவள் பேச்சில் உள்ள உண்மை என் உள்ளத்தைத் தொட்டது.

- டி.ஜானகி, கரூர்

உழைப்பு... நியாயம்... சந்தோஷம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

ங்கள் வீட்டுத்தோட்டத்தில் எலுமிச்சைப் பழம் நிறைய காய்த்திருந்தது, அவற்றைப் பறித்து மார்க்கெட்டில் கொடுக்கச் சென்றேன். அப்போது ஒரு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு மூன்று எலுமிச்சைப் பழம் கேட்டார். ஆனால், அவர் கடையில் எலுமிச்சைப் பழத்தின் விலை ஒன்று ஐந்து ரூபாய்! பழங்களைத் திருப்பி எடுத்து வந்து எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடாக சென்று வெட்கப்படாமல் வியாபாரம் செய்தேன்... ஒரு பழம் ஒரு ரூபாய்க்கு! இதனால் விற்ற எனக்கு, வாங்கியவர்களுக்கு என இரு தரப்புக்குமே லாபம்தான்! ஒரு வியாபாரிடம் பெற்ற அனுபவத்தால், நான் வியாபாரி ஆகி, நியாயமான விலைக்கு ஒரு பொருளை விற்றது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

- பி.கவிதா, கோவிலாம்பூண்டி

இப்படிப் போடு போடு...

அனுபவங்கள் பேசுகின்றன!

சேலம் டு சென்னை செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்தேன். அந்தப் பேருந்தில் ’சர்க்கரையை வெல்வோம்’ என்னும் தலைப்பிலான செய்திப்பட சி.டி. ஒளிபரப்பானது. அதில் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கையாளும் முறைகள், சர்க்கரை நோய் இருந்தால் அதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் முறைகள், உண்ணக்கூடிய உணவுகள், தவிர்க்கக் கூடிய உணவுகள் என பல பயனுள்ள விஷயங்கள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலும் பேருந்துகளில் திரைப்படம், திரைப்படப் பாடல்களைத்தான்  போடுவார்கள். அதற்கு மாறான இந்த ஒளிபரப்பு பாராட்டும்படியாகவும், வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது. இதை மற்ற பேருந்துகளும் பின்பற்றலாமே?!

- பி.லாவண்யா, சேலம்

'அந்த நாளும்’ நல்ல நாளே!

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் தோழி மேற்படிப்பு, வேலை என அக்கறை காட்டி வந்ததால்,  திருமணம் தாமதமாகிக்கொண்டே போய், சமீபத்தில்தான் முடிவானது. கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமண நாளன்று, வழக்கத்துக்கு மாறாக மணப்பெண் வீட்டு விலக்காகிவிட, கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய தீர்மானித்து, மண்டபத்திலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர். ஆனால், அதற்குள் தோழி பட்டபாடு சொல்லி மாளாது. இதை அபசகுனமாக எல்லோரும் இடித்துரைத்து பேச... வெட்கத்திலும், துக்கத்திலும் அன்று முழுக்க அவள் கல்யாணக் களையே இல்லாமல் அழுதபடியே இருந்தாள். எத்தனை ஆறுதல் சொல்லியும் எடுபடவே இல்லை.

ஒரு பெண் விலக்காவதென்பது இயற்கையானது. வம்ச விருத்திக்கும் அவசியமானது. அதை ஏன் அபசகுனமாக பார்த்து, மனதைக் காயப்படுத்த வேண்டும்?

- செ.மீனா, தர்மபுரி

ஓவியங்கள்: சேகர்