என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

ஏணி, பாம்புகளுக்கு நடுவில் மனிதர்கள்!

##~##

'என் தொட்டில் ஆடியது காரைக்குடி யில். நான் நடைவண்டி தள்ளி நடந்து பழகித் திரும்பிப் பார்க்கும்போது காரைக்குடி பின்னால் போயிருந்தது. எங்கள் குடும்பம் சென்னை வந்திருந்தது. என் தந்தையார் கவிஞர் சாமி பழனியப்பன் காரைக்குடியில் 'வாரச் செய்தி’ என்கிற பத்திரிகையின் ஆசிரியர். தனது 'தென்றல்’ பத்திரிகையில் பணியாற்று வதற்காக அவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் கவியரசு கண்ணதாசன். பட்டணம் என் தந்தையைப் படாதபாடு படுத்தியது.

'பெரிய இடத்துப் பெண்’ படத்துக்குப் பாடல் எழுதச் செல்லும் வழியில் காரை நிறுத்தி, என் தந்தையை நலம் விசாரித்து விட்டுச் சென்ற பிறகு கவியரசு எழுதியபாடல் தான்:

'பாரப்பா பழனியப்பா
 பட்டணமாம் பட்டணமாம்
 ஊரப்பா பெரியதப்பா
உள்ளந்தான் சிறியதப்பா!’

என் ஊர்!

ஒரு காலத்தில் கோடம்பாக்கம் மாம்பழத் தித்திப்பிலும் மல்லிகை வாசத்திலும் மிதந்துஇருக்கிறது. 'கோடம்பாக்கம் ருமானி மாம்பழங்கள்’ பேர் பெற்றவை. டிரஸ்ட்புரத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கும் மாம்பழங் களைப் பறித்துத் தின்றபடி, படப்பிடிப்புக்குப்போன அந்த நினைவுகளைத் தயாரிப்பா ளர் சங்கிலி முருகன் என்னிடம் சொல்லியிருக்கிறார். அப்போது கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டப்படவில்லை. ரயில்வே கேட்தான். படப்பிடிப்புக்குச் செல்லும் நடிகர், நடிகைகளைப் பார்க்க அங்கே ஒரு கூட்டம் எப்போ தும் காத்திருக்குமாம். வடபழனி வரைதான் பேருந்து. அதற்குப் பிறகு குதிரை வண்டிப் பயணம்தான்.

கோடம்பாக்கத்தில் இப்போது நான் குடியிருக்கும் வீடு மல்லிகைத் தோட்டமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்குப் பின்னால் நான் படித்த மாநகராட்சித் தொடக்கப் பள்ளி. பெரிய மைதானத்தோடு கூடியது. நான் படிக்கும்போது இது மூன்று பரிமாணங்களைக்கொண்டு இருந்தது. சுற்றி உள்ள குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இது மாலையில் விளையாட்டுத் திடல். இரவில் பெண்களுக்கு அது வெட்டவெளிக் கழிவறை. விடியற்காலை ஆண்களுக்கும் சிறுவர்களுக்குமானது.  

என் ஊர்!

பள்ளி தொடங்கும் சில மணி நேரத்துக்கு முன் துப்புரவுத் தொழிலாளர்கள் வந்து சுத்தம் செய் வார்கள். பிறகு பிரார்த்தனைக் கூட்டம். 'எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே’ என்று தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது நாற்றம் எல்லாம் மறந்துபோகும். இன்று இந்த நிலை மாறி சுத்தத்தோடு 'சென்னை நடுநிலைப் பள்ளி’யாக உயர்ந்து இருக்கிறது. ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை டிரஸ்ட்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். இப்போது 'பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி’ என்று பெயர் மாறியிருக்கிறது. இதன் வெளிவாசலில் சாவகாசமாக அரட்டை அடித்து நின்று இருக்கிறோம். இன்று வாகனங்களின்இரைச் சலும் புகையும் உறுமல்களும் பயமுறுத்துகின்றன.

கோடம்பாக்கத்தில் 'பேசும் படம்’ சினிமா பத்திரிகை அலுவலகம் பிரபலம். பவர் ஹவுஸுக்கு 'பேசும் படம் ஸ்டாப்’ என்றே டிக்கெட் கேட்பார் கள். இப்போது பத்திரிகை, அலுவலகம் இரண்டும் மறந்துபோய்விட்டது. இங்கேதான் இரவு 7 மணி அளவில் நடமாடும் அஞ்சலக வாகனம் ஒன்று வந்து நிற்கும். அங்கேயே வரிசையில் நின்று நிறைய பேர் கடிதம் வாங்கி, எழுதி, அஞ்சல் செய்வார்கள். சிறு வயதில் வண்ண வண்ணமாக விதவிதமாக பொங்கல் வாழ்த்து அனுப்பிய நினைவுகள்  இப்போதும் இனிக்கிறது.

அதற்கு எதிரே கட்டப்பட்டு இருக்கும் மாநகராட்சி வணிகக் கட்டடம் தொடங்கி பவர் ஹவுஸ் அம்பேத்கர் சிலை வரை மணல் கொட்டிய வெற்றுத் திடல். இங்கே பெரியார், எம்.ஜி.ஆர்., கலைஞர் பேசிய கூட்டங்களை மழலை வயதில்என் தந்தையோடு அமர்ந்து கேட்டு இருக்கிறேன்.

இன்று பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரில் இருக் கும் காவேரித் தெரு, லோகய்யா நாயுடு காலனிகள் எல்லாம் வயல்களாக இருந்த காலம் இன்னும் என் நினைவலைகளில் இருக்கிறது. கலசா ஒலிப் பதிவுக் கூடத்துக்கும் இசையமைப்பாளர் சிற்பி வீட்டுக்கும் போகிறபோது எல்லாம் அன்றுபார்த்த பச்சை வயல் இன்றும் என்னைப் பின்தொடர்வது போல ஒரு பின்னணியை உணர்கிறேன். என் வீட்டுக்கு எதிரே ஓர் அழகான குடும்பம் இருந்த வீடு, ஓர் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவ மனையாக மாறிவிட்டது. அந்த வரிசையில், மருந் துக் கடை, பள்ளிக்கூடம், ஒலிப்பதிவுக் கூடம் என ஒவ்வொரு வீடும் வேறுவேறு பரிமாணம்எடுத்து இருக்கின்றன. இங்கு இருந்து போன மனிதர்கள் எங்கே, எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை.

என் ஊர்!

ஆனால், கோடம்பாக்கம் ஒரு பரமபத சோபன படம்போல இருக்கிறது. ஏணிகளுக்கும் பாம்புகளுக்கும் நடுவில் மனிதர்கள் தாயக் கட்டைகளை உருட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கோடம்பாக்கம் பவர் ஹவுசில் இருந்து வடபழனிக்கு 10 காசுதான் பேருந்துக் கட்டணம். இப்போது மூன்று ரூபாய். ஸ்பெஷல் பஸ் என்றால் ஐந்து ரூபாய். கட்டணம் மட்டுமல்ல; பட்டணமும் நிறைய மாறியிருக்கிறது!''

படங்கள்: பொன்.காசிராஜன்