
முகில்
'உலகின் நம்பர் ஒன் பாட்மின்டன் வீரருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?’ - சாய்னா நேவால், இந்தக் கேள்வியை தன் அம்மாவிடம் கேட்டபோது, அவர் 12 வயதுச் சிறுமி!
அப்போதுதான் மாவட்ட அளவில் இருந்து மாநில அளவிலான போட்டிகளுக்கு முன்னேறி இருந்தாள் அந்தச் சிறுமி. சாய்னாவின் அம்மா உஷாராணி, ஹரியானாவுக்காக பாட்மின்டன் விளையாடியவர். சாய்னாவின் கண்களைப் பார்த்து, மிகப் பொறுமையாக விளக்கினார். 'உலகின் நம்பர் ஒன் வீரர்’ என்ற அந்தஸ்தைப் பிடிக்க எத்தனை படிநிலைகளைக் கடக்க வேண்டும், அந்த இடத்துக்குச் செல்ல என்ன மாதிரியான முயற்சி, உழைப்பு, அர்ப்பணிப்பு தேவை என, மனதில் பதியும்படி சொன்னார். அது சாய்னாவின் வாழ்க்கையில் தங்கத் தருணம்!
''அன்று அம்மாவின் வார்த்தைகள் எனக்குள் மிகப் பெரிய கனவுகளை விதைத்தன. நான் அதை நோக்கி ஓடத் தொடங்கினேன். நம்பர் ஒன் என்பது, எத்தனை உயரம், எவ்வளவு தூரம், அதை நோக்கி நகர என் வாழ்க்கையை அதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. என் முன் பாதை விரிந்திருக்கிறது. நான் அதனுள் நம்பிக்கையுடன் என் முதல் காலடியை எடுத்துவைத்தேன். அம்மாவுக்கு நன்றி!''
எப்போதும் சீன டிராகன்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகத் தர வரிசையில், முதன்முறையாக ஓர் இந்தியப் பெண் புலி. 20 ஙீ 44 அடி அளவுள்ள களத்தில் வென்று ஒட்டுமொத்தத் தேசத்தின் பெருமையாக உயர்ந்து நிற்கிறார் சாய்னா. 17 வருட உழைப்பு.

சாய்னாவின் அப்பா ஹர்விர் சிங், வேளாண்மை விஞ்ஞானி. ஹரியானாவின் ஹிசார் நகரத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை. அங்கேதான் சாய்னாவின் பால்ய காலம். மாலை வேளைகளில் அவரது பெற்றோர் பாட்மின்டன் விளையாடுவார்கள். சாய்னாவின் ஏழு வயது சகோதரி அபு, தனியே விளையாடிக்கொண்டிருக்க, ஆறு மாதக் குழந்தையான சாய்னா, இறகுப் பந்து பறக்கும் திசையை நோக்கி அங்கும் இங்கும் தவழ்ந்துகொண்டிருப்பாள் சிரித்தபடியே. பாட்மின்டன் பேட் உயரம்கூட வளராதபோதே அதை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு தத்தக்கா பித்தக்கா சர்வீஸ் போடத் தயாரானாள் சாய்னா.
உலகின் நம்பர் ஒன் பாட்மின்டன் வீராங்கனை ஆக்க வேண்டும் என்ற வெறியுடன் சாய்னாவை வளர்க்கவில்லை. அப்பாவுக்கு சாய்னாவை டாக்டர் ஆக்க வேண்டும் என்பது ஆசை. சாய்னாவுக்கும் அதே கனவு. ஆனால், பாட்மின்டன் சாய்னாவின் வாழ்வோடு வெகு இயல்பாக இணைந்து, பிணைந்துகொண்டது.

சாய்னாவின் எட்டு வயதில் ஹர்விர் சிங்குக்கு வேலை இடமாற்றம். ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். கோடை விடுமுறையில், பாட்மின்டன் கேம்ப்பில் சேர்க்க சாய்னாவை அழைத்துப் போனார்கள். ஆனால், முகாமில் சேர்க்க இடம் இல்லை. 'ஒரே ஒருமுறை என் மகள் விளையாடுவதைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று நம்பிக்கையுடன் வாய்ப்பு கேட்டார் ஹர்விர் சிங். அதுவரை சாய்னா எந்தப் பயிற்சியும் எடுத்தது இல்லை. ஏதோ பொழுதுபோக்குக்காக விளையாடியது மட்டும்தான். தேர்வாளர்கள் சாய்னாவின் கையில் பாட்மின்டன் ராக்கெட்டைக் கொடுத்தனர். அவள் ராக்கெட்டை சரியாகக் கையாண்ட விதம், இறகுப்பந்தை லாகவமாகப் பிடித்து அடித்த முதல் ஸ்ட்ரோக், எதிராளியிடம் இருந்து வரும் இறகுப்பந்து விழும் இடத்தைச் சரியாகக் கணித்து சீறிப் பாய்ந்தது... சாய்னாவுக்கு அந்த முகாமில் வாய்ப்பு கிடைத்தது. முதல் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
முகாமின் முடிவில், அடுத்த கட்டப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாலையில் ஆரம்பித்தது பயிற்சி. வீட்டுக்கும் ஸ்டேடியத்துக்கும் இடையில் 25 கி.மீ பயண தூரம். ஹர்விர் சிங்கின் ஸ்கூட்டர் சளைக்காமல் ஓடியது. காலையில் பயிற்சி, பிறகு பள்ளி, மாலையில் மீண்டும் பயிற்சி. இரவில் ஸ்கூட்டரில் தந்தையுடன் திரும்பும்போது சாய்னா அதிலேயே தூங்கிவிடுவார். கனவில் இறகுப் பந்துகள் பறந்துகொண்டிருக்கும்!

பாட்மின்டன் பயிற்சிக்கு முன்பாக, சாய்னாவின் பெற்றோர் அவரை கராத்தே வகுப்புக்கு அனுப்பினர். பிரவுன் பெல்ட் வாங்கினார். அடுத்த கட்டமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு கிடக்க வேண்டும், வயிற்றில் 90 கிலோ உள்ள ஒருவர் ஏறி நிற்பார். அந்த நபர் ஏறி நின்றபோது, சாய்னாவுக்குத் தாங்க முடியாத வலி. அதோடு கராத்தேவுக்கு முற்றுப்புள்ளி. எட்டு வயதில் அந்தச் சுமையைத் தாங்க முடியாத சாய்னா, 100 கிராம்கூட இல்லாத பாட்மின்டன் ராக்கெட்தான் தன் வாழ்க்கை என முடிவெடுத்த பின், அது கொடுத்த சுமைகள் ஏராளம். அவரது பெற்றோர் சுமந்த சுமைகள், அதற்கும் மேலே!
நல்ல பாட்மின்டன் ராக்கெட்டின் விலை 14 ஆயிரம் ரூபாய். அதையும் அடிக்கடி மாற்ற வேண்டியது இருக்கும். தரமான இறகுப் பந்து பேரல் ஒன்றின் விலை சுமார் 1,000. ஒரு நாளைக்கு இரண்டு பேரல்கூட தேவைப்படலாம். பயணச் செலவுகள், தங்குவதற்கான செலவுகள், இதர செலவுகள்... என ஹர்விர் சிங் தன் நிதி நெருக்கடியை ஒருபோதும் சாய்னாவிடம் காண்பித்ததே இல்லை. இத்தனைக்கும் சாய்னா ஜெயித்தால் கிடைக்கும் பரிசுத் தொகை சில ஆயிரங்களே. 'இதற்காகத்தானா இவ்வளவும்?’ என அந்தப் பெற்றோர் சலித்துக்கொள்ளவில்லை. மகளோடு சேர்ந்து பெரிதாகக் கனவு கண்டனர்.
எட்டாவது படிக்கும்போது, ஜூனியர் லெவல் சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார் சாய்னா. பத்தாவது படிக்கும்போது, கிட்டத்தட்ட 40 வாரங்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவுக்கு வெளிநாட்டுப் போட்டிகளில் பிஸி. பொதுத்தேர்வுக்கு முந்தைய 25 நாட்களில் பத்தாம் வகுப்பின் மொத்தப் பாடங்களையும் மூளையில் ஏற்றவேண்டிய நிர்பந்தம். தேர்வு அறைகளில் கேள்வித்தாள்கள் கழுத்தை நெரிப்பதாகத் தோன்றின. இருந்தாலும், 65 சதவிகித மதிப்பெண்களோடு பத்தாம் வகுப்பை வென்றார். 14 வயதில் தேசிய சாம்பியன்!
சாய்னாவுக்கு, பெங்களூரு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. 'பேட்மின்டனில் உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?’ என்ற கேள்விக்கு சாய்னாவிடம் இருந்து வேகமும் ஆர்வமுமாகப் பதில் வந்தது. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் பற்றிய கேள்விகளுக்கு அவர் முகத்தில் ஆயில் வழிந்தது. ஆனாலும் நல்ல சம்பளத்தில் வேலை உறுதியானது. தந்தையின் நிதிச்சுமை குறைந்தது. பயிற்சித் தரம் மேம்பட்டது.
2010-ம் ஆண்டு, புதுடெல்லியில் காமன்வெல்த் இறுதிப் போட்டி. வி.வி.ஐ.பி-க்கள் நிரம்பியக் கூட்டம். இந்தியாவின் சார்பில் சாய்னா, எதிரில் மலேசிய வீராங்கனை வோங் மியு சூ. இரண்டு செட்களை வென்றால்தான் பதக்கம்.
முதல் செட்டில், வோங்கின் கை ஓங்கியது (19-21). அடுத்த செட்டில் வோங் 21, சாய்னா 20. மேட்ச் பாயின்ட். வோங் இன்னும் இரண்டு புள்ளிகள் எடுத்தால் வெற்றி அவர் வசம். சாய்னா சற்று பிசகினாலும் தங்கம் தவறிவிடும். 'பாரத் மாதா கீ ஜே!’ என அரங்கம் எங்கும் சாய்னாவுக்கு ஆதரவாகக் குரல்கள். 'இன்று இல்லாவிட்டால்... வேறென்று!?’ என, அதிதீவிரத்தோடு தாக்குதல் தொடுத்தார் சாய்னா. சிறு தவறும் இழைக்காமல், எதிராளிக்கும் சின்ன வாய்ப்பு அளிக்காமல் 23-21 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார். மூன்றாவது செட்டுக்கு புது உற்சாகத்துடன் சாய்னா தயாராகி வந்தபோது, வோங்கிடம் சின்ன களைப்பு. சாய்னாவின் புயல்வேக ஷாட்களுக்கு வோங் தடுமாற, செட் 21-13 என்ற கணக்கில் வெற்றி சாய்னாவசமானது. 'ஜன கண மன...’ முழங்க சாய்னாவின் கழுத்தில் ஏறிய அந்தத் தங்கப் பதக்கம்தான் இந்தியா, பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம்பிடிக்க உதவியது. தேசம் முழுக்க சாய்னாவின் புகழ் பரவியது.
சாய்னாவின் விளையாட்டு உத்தி, ஆரம்ப காலத்தில் மிக வேகமான தாக்குதல் உத்தியாகத்தான் இருந்தது. மொத்த சக்தியையும் இறக்கி, நேர் செட்களில் எதிரியை வெல்ல வேண்டும் என வியர்வை சிந்துவார். 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சாய்னா, கால் இறுதியில் மலேசியாவின் மரியா கிறிஸ்டினோடு மோதினார். அதிரடி வேகம் காட்டி முதல் செட்டை 28-26 எனப் போராடி வென்றார். ஆனால், அடுத்த இரண்டு சுற்றுகளில் சாய்னா சோர்ந்துபோனார். ஆட்டத்தை ஜெயிக்க போதுமான விவேகம் இருந்தும், உடல் சோர்ந்துபோனது; வெற்றி நழுவியது. அதிரடியாக ஆடுவது முக்கியம் அல்ல, ஆட்டத்தின் முதல் நொடி தொடங்கி மூன்றாவது சுற்றின் இறுதி நொடி வரை சோர்வின்றி நிலைத்து ஆடுவதே வெற்றிக்கான வழி என சாய்னா புரிந்துகொண்ட தருணம் அது. அதன்பிறகு களத்தில் தவறுகளைக் குறைக்கவும், கவனத்தைக் குவிக்கவும் சாய்னா தேர்ந்தெடுத்த வழி, யோகா.

ஒவ்வோர் ஆட்டக்காரருக்கும் 'சிக்னேச்சர் ஸ்ட்ரோக்’ என ஒன்று உண்டு. உயரத்தில் பறந்து வரும் இறகுப் பந்தை, எகிறிக் குதித்து எதிர் களத்தில் தரையோடு தரையாக வேகமாக அடித்து எதிரியை நிலைகுலையச் செய்யும் 'ஸ்மாஷ் ஸ்ட்ரோக்’ அடிப்பதில் சாய்னா கில்லாடி. இதன் எதிர் துருவமாக எதிரியின் வலையை ஒட்டி இறகுப் பந்தை விழச் செய்யும் 'டிராப் ஷாட்’ அடிப்பதிலும் சாய்னா கில்லி.
2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா வெண்கலம் வென்று, தேசத்தின் பெருமிதச் சின்னங்களுள் ஒருவராக உயர்ந்தார். இந்தோனேசியா சூப்பர் சீரிஸ், சுவிஸ் ஓப்பன், சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ், டென்மார்க் சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலியாவின் சூப்பர் சீரிஸ் எனப் பல சர்வதேசப் பட்டங்கள், பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா எனப் பல விருதுகள், இவற்றுக்கு மத்தியில் தொடர் தோல்விகள், காயங்கள், எதிர்மறை விமர்சனங்கள் என சாய்னா தன் விளையாட்டு வாழ்க்கையில் சந்தித்தச் சறுக்கல் அத்தியாயங்களும் ஏராளம். ஒருகட்டத்தில் தோல்விமேல் தோல்வி துரத்த, தன் பாட்மின்டன் வாழ்க்கையின் மிக முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார் சாய்னா. அதுதான், ஆரம்ப காலம் முதல் சாய்னாவின் திறமையைக் கூர்தீட்டிப் பயிற்சியளித்த ஆஸ்தானப் பயிற்சியாளரான கோபிசந்தின் அகாடமியில் இருந்து விலகி, பிரகாஷ் படுகோனேவின் அகாடமிக்கு மாறுவது என்பது. அந்த முடிவுக்காக, 'நன்றி மறந்துவிட்டார்’ என்றெல்லாம் சாய்னாவைக் குத்திக் கிழித்தன விமர்சனங்கள். அமைதியாக இருந்தார் சாய்னா. 'என் தொடர் தோல்விகள், பாட்மின்டன் விளையாட்டின் மீதே எனக்கு வெறுப்பை உண்டாக்கியது. 'இதற்குப் பிறகும் இன்னும் ஏன் இந்த விளையாட்டை விளையாட வேண்டும்?’ என்றெல்லாம் மனதில் சஞ்சலங்கள் வந்துபோனது. ஆனால், மனதை சற்றே சாந்தமாக்கி தோல்விக்கான காரணங்களை அலசியபோது, பயிற்சி முறையில் மாற்றம் தேவை என உணர்ந்தேன். சரியோ தவறோ எனக்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அதனால் என் பயிற்சி அகாடமியை மாற்றுவது என முடிவெடுத்தேன். அது ஒரு சூசைட் மிஷன் போன்றதுதான். ஆனால், என்னை எனக்கே நிரூபிக்க, அது அப்போது அவசியமான மாற்றமாக இருந்தது!’ என, பின்னர் கூறினார் சாய்னா.
அது உண்மைதான். பயிற்சியாளரை மாற்றிய அந்த உறுதியான முடிவுதான் சாய்னாவின் பாட்மின்டன் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம். அதற்கு முன் வரை போட்டித் தொடர்களில் ரேங்கிங்கில் கீழே இருக்கும் வீராங்கனைகளை எளிதில் வீழ்த்தி அரை இறுதி வரை முன்னேறிவிடுவார் சாய்னா. அங்கு அவரைக் காட்டிலும் உயர்ந்த ரேங்கிங்கில் இருக்கும் வீராங்கனைகளிடம் சட்டென தோல்வியைத் தழுவுவார். எதிராளியை விரட்டி வீழ்த்திவிட்டு, புள்ளிகளைக் குவித்தால் மட்டும் போதாது... தன் தரப்பில் இருந்து சின்ன தவறும் ஏற்படாமல் விளையாடுவதே அந்தக் கட்டத்தில் ஒரு வீரர் கைக்கொள்ளவேண்டிய திறமை. அந்தத் திறமையைக் கைக்கொள்வதற்காக பயிற்சி முறையையும் பயிற்சி அகாடமியையும் மாற்றினார் சாய்னா. அதன் பிறகே, படா படா சாம்பியன்களை போகிறபோக்கில் வீழ்த்தத் தொடங்கினார். இந்திய ஓப்பன் சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் பட்டம் வென்று, உலகத் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் எட்டிப் பிடித்தார். அந்த வெற்றிக்குப் பின் சாய்னா சொன்ன வார்த்தைகள், 'பெரிய சுமை இறங்கியதுபோல உணர்கிறேன்.’ அந்த அளவுக்கு கடந்த ஒரு வருடமாக மன இறுக்கத்துடன் இருந்தார் சாய்னா.

'பாட்மின்டன் மைதானத்துக்குள் ஒவ்வொரு முறை நுழையும்போதும் என் இதயம் அதிகம் படபடக்கும். கைகளில் ராக்கெட்டை எடுக்கும்போது நடுக்கம் இருக்கும். அப்போது மைக்கில் 'சாய்னா நேவால்... ஃப்ரம் இந்தியா’ என, என் பெயரை உச்சரிக்கும்போது... உடல் சிலிர்க்கும். இந்தியத் தேசத்தின் பிரதிநிதியாக நான் இங்கே நிற்கிறேன். நான் என்பது என் தேசம். எனக்காக, என் பெற்றோருக்காக, என் பயிற்சியாளர்களுக்காக, ஒவ்வோர் இந்தியருக்காக இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் பற்றிக்கொள்ளும். அது மட்டுமேதான் என்னைக் கொண்டு செலுத்தும்!’ என்கிற சாய்னாவுக்கு வெற்றியை ஆரவாரமாகக் கொண்டாடக்கூடத் தெரியாது!
சிறு வயதில் ஒரு பேட்மிட்டன் போட்டியில் முதன்முறையாக ஜெயித்தபோது, சாய்னாவுக்கு 300 ரூபாய் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என சாய்னாவுக்குத் தெரியவில்லை. அவரது பெற்றோர் அந்தப் பணத்தில் நிறைய ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தார்கள். இப்போதும் பெரிய போட்டியில் பட்டமோ, பதக்கமோ ஜெயித்தால், அதிகபட்சக் கொண்டாட்டமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பது சாய்னா தனக்குத்தானே வகுத்துக்கொண்ட விதி.
வருங்காலத்திலும் சாய்னாவுக்காக நிறைய ஐஸ்கிரீம்கள் காத்திருக்கின்றன!
அந்த ஒரே பாய் ஃப்ரெண்ட்!
* 'மிக ஆக்ரோஷமான எதிராளியை நீங்கள் எப்படி ஜெயித்தீர்கள்? உங்கள் எதிரிக்கு இன்றைக்கு நாள் சரியில்லையா?’ என, சாய்னாவிடம் மீடியா கேள்விகள் எழுப்பினால், அதற்கு அவரது பதில், 'இல்லை, நான் நன்றாக விளையாடியதால் மட்டுமே ஜெயித்தேன்!’ என்பதுதான் எப்போதும்.
* பாலிவுட் சினிமாக்களைப் பார்ப்பதில் அலாதி விருப்பம். ஓவியங்கள் வரைவதில் ஆர்வம். பிடித்த கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரி. பிடித்த விளையாட்டு ஃப்ரூட் நிஞ்ஜா, ஆங்ரி பேர்ட்ஸ். வெளியில் அதிகம் பேசாவிட்டாலும், தன் ஐபாடில் 'டாக்கிங் டாம்’ உடன் பேசுவது பிடித்த பொழுதுபோக்கு. அந்த 'டாம்’ மட்டும்தான் அநேகமாக சாய்னாவின் ஒரே பாய் ஃப்ரெண்ட்!
* 'குழந்தைகள் விளையாட்டுத் துறையில் ஈடுபட முழுமையாக ஆதரவு கொடுக்கும் பெற்றோர்கள், அவர்களை நன்றாகப் படிக்கவும் அறிவுறுத்த வேண்டும். ஏனென்றால், ஒருவருடைய விளையாட்டு வாழ்க்கை என்பது மிகக் குறுகியதே. அதற்குப் பின் வாழ்க்கையை நடத்த வேலை அவசியம். அதற்குக் கல்வி அவசியம்!’ என்கிறார் சாய்னா.
* 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் அடிப்பதே சாய்னாவின் அடுத்த இலக்கு!
மிஸ் சின்சியர்!
கிசுகிசுக்கள், சர்ச்சைகள்... சாய்னாவை அண்டியதே கிடையாது. வெற்றிகளை, பார்ட்டி வைத்துக் கொண்டாட மாட்டார். மீடியாக்களிடம் அதிகம் வாய் திறக்க மாட்டார். அதே சமயம், 'ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்ற தன் பெயரை ஏன் பத்ம பூஷணுக்குப் பரிந்துரைக்கவில்லை’ என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பும் தைரியசாலி. சர்வதேச பேட்மின்டனில் சீனர்களின் ஆதிக்கம் அபாயகரமான வலிமைகொண்டது. அதைத் தகர்த்தெறிய தன் அனுபவ ஆட்டத்தின் மூலமாக சாய்னா வகுத்துக்கொண்ட புதிய வியூகம், தோல்விகள் குறித்து எழும் மீடியா விமர்சனங்களுக்கான பதிலை தனது அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் சொல்வது என சாய்னா சம்பந்தப்பட்ட ஒவ்வொரு செய்தியிலும் நாம் கற்றுக்கொள்வதற்கான பாடங்கள் நிறையவே இருக்கின்றன!
சூப்பர் கேர்ள்!
* சாய்னாவுக்குப் பிடித்த ஊர் சிங்கப்பூர். ஷாப்பிங் ரொம்பவும் பிடிக்கும். சிங்கப்பூர் ஷாப்பிங் மால்களில் சாய்னாவை அடிக்கடி பார்க்கலாம்!
* பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர், இன்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் துணை மேலாளர்!
* நல்ல தூக்கமும் யோகாவும்தான் சாய்னாவின் இஷ்டமான பொழுதுபோக்குகள். பார்ட்டிகளுக்கு எப்போதுமே நோ.
* அடிக்கடி செல்போன் மாற்றுவது சாய்னா பழக்கம். இப்போது ஐபோன்6 உள்பட மூன்று போன்களை பயன்படுத்திவருகிறார்!
* ஆரம்ப கால வெற்றிகளின்போது வந்த சின்னச் சின்ன மாடலிங் வாய்ப்புகளை சாய்னா கண்டுகொள்ளவில்லை. ஆனால், 2011ம் ஆண்டு மட்டும் 11 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார் சாய்னா. 'ஆனால், அதெல்லாம் நான் பயிற்சிக்குச் செல்லாத விடுமுறை நாட்களில் நடித்தவை. விளம்பர வாய்ப்புகள் ஆட்டத்தில் இருந்து எப்போதும் என் கவனத்தைக் கலைத்தது இல்லை!’ என்பார்.
* நண்பர்கள் சாய்னாவுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்... 'சூப்பர் சாய்னா!’