நாங்க கலைக் குடும்பங்ணா!
##~## |
குடும்பத்தில் யாராவது ஒருவர் சீரியல், சினிமா என்று தலைகாட்டினாலே மொத்தக் குடும்பமும் புகழ் வெளிச்சத்தில் திளைக்கும். ஆனால், ஒரு குடும்பத்தில் அத்தனை பேரும் ஆர்ட்டிஸ்ட்களாக இருந்தால்?
கோவை, குனியமுத்தூரில் இருக்கும் யு.எம்.டி.ராஜாவின் குடும்பம், ஒரு நட்சத்திரக் குடும்பம். 'யு.எம்.டி.’ என்றால் 'உன்னால் முடியும் தம்பி’ என்பதன் சுருக்கமாம்!
ராஜா, அவருடைய மனைவி ராதிகா, மகள்கள்- காவ்யா, அபிநயா என்று அத்தனை பேருமே சினிமா, சீரியல்களில் தலை காட்டி ஏரியா பிரபலங்களாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் கள். காய்கறி வாங்க கடைக்குப் போனால்கூட 'முந்தாநாள் எபிசோட்ல உன் நடிப்பு சூப்பர்!’ என்று குவியும் பாராட்டுக் களால் பர்ச்சேஸ் முடிக்கவே ராதிகாவுக்கு அரை நாள் ஆகிவிடுகிறதாம். பள்ளியில் காவ்யா, அபிநயாவிடம் சீரியலின் சஸ்பென்ஸ் ரகசியம் கேட்டு நச்சரிக்கிறார்களாம் தோழியர்கள்!

''அத்தனை பேரும் ஆர்ட்டிஸ்ட் ஆனது எப்படி பாஸ்?'' என்று கேட்டோம் ராஜாவிடம். ''சின்ன வயசுல இருந்தே நடிகன் ஆகுறது என் கனவு. அதுக்கேற்ப சிலம்பம், மிமிக்ரி, பைக் ஸ்டன்ட், குதிரை ஏற்றம், நீச்சல்லாம் கத்துக்கிட்டேன். ஆனாலும், சினிமாத் துறையில் கால் பதிக்க முடியலை. வீட்லயும் எதிர்ப்பு. அப்படியே கல் யாணம், குழந்தைகள்னு ஆச்சு. ரெண்டு பொண் ணுங்களும் வளர்ந்துட்டாங்க. அப்பத்தான் எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைச்சது. இப்ப நடிக்க வாய்ப்பு தேடலாமேன்னு யோசிச்சப்ப, சுயநலமா எனக்கு மட்டும் வாய்ப்பு தேடாம மொத்தக் குடும்பத்துக்கும் வாய்ப்பு தேடலாமேன்னு தோணுச்சு. பொண்ணுங்களுக்கு பரதம், வெஸ்டர்ன் டான்ஸ், கராத்தே பயிற்சிலாம் கொடுத்தேன்.

ரெண்டாவது பொண்ணு அபிநயா டி.ராஜேந்தர்ல ஆரம்பிச்சு குறைஞ்சது 15 நடிகர்களின் குரலை இமிடேட் பண்ணி, நடிச்சும் காட்டுவா. விஜய் டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகிட்டு 'தமிழகத்தின் முதல் பெண் மிமிக்ரி ஆர்டிஸ்ட்’ பட்டம் ஜெயிச்சுருக்கா. ஒருமுறை இயக்குநர் திருமுருகன், தன் சீரியலுக்காகப் புதுமுகம் தேர்வு நடத்தினார். நாங்க குடும்பத்தோட போய் நின்ன தைப் பார்த்து ஜெர்க் ஆகிட்டார். 'யாராச்சும் ஒருத்தர்தான்... அதுவும் டெஸ்ட்ல பாஸ் ஆனா மட்டும்தான் சேர்த்துக்க முடியும்’னு சொன்னார். அதுக்குலாமா நாங்க அசருவோம். ஆளுக்கு ஒரு வசனம், பாட்டு, மிமிக்ரி, ஆக்டிங்னு மிரட்டுனதுல அவரே அசந்துட்டார். எங்க நாலு பேரையுமே செலெக்ட் செஞ்சுட்டார்.
இதுக்கு நடுவில் சினிமாவிலும் நடிக்க ஆரம்பிச் சுட்டேன். நான் 'மௌன மொழி’ படத்திலும், அபிநயா 'யாத்தீ’ படத்திலும் நடிச்சிருக்கோம். ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகப் போகிற ஒரு சீரியலில் நடிக்க நானும், ராதிகாவும் தேர்வாகி இருக்கோம். இன்னொரு விஷயம், இப்போ எங்க அம்மா ஜோதிமணியும் நடிகை ஆகிட்டாங்க!'' என்கிறார் பெருமிதத்துடன்.
ஸ்டார் குடும்பத்தினரின் லட்சியம் சின்னத் திரை மட்டும் இல்லாமல், சினிமாவிலும் கொடிகட்டிப் பறக்க வேண்டுமாம். நடிப்பு மட்டும் இல்லாமல் ராஜா ஒரு சாதனை கலைஞரும்கூட. பல மணி நேரம் தண்ணீரில் யோகாசனம் செய்வது, 60 நொடிகளில் 60 முறை பம்பரங்களைச் சுழலவிடுவது என ஏகப்பட்ட சாதனைகளை ஜஸ்ட் லைக் தட் செய்கிறார்.
அசத்துங்க!
- எஸ்.ஷக்தி, படங்கள்: கே.ஆர்.வெங்கடேஸ்வரன்