வாய்ஸ் ஆஃப் சேலம்
##~## |
சேலத்தில் பட்டித்தொட்டி எங்கும் பட்டிமன்றங்களில் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள் கல்லூரி மாணவிகளான இந்துஜா, ஐஸ்வர்யா!
அவர்களை பேட்டி எடுக்கலாம் என்றுசந்தித் தால், ''எங்களுக்கு மேடை போட்டு மைக் கொடுத்து, ஜூஸ் கொடுத்தாத்தான் பேசவே வரும்!'' என்று என்னிடமே டபாய்த்தார்கள். ஆளுக்கு ஒரு ரோஸ் கலர் கோலி சோடா (

1.50) வாங்கிக்கொடுத்ததும் கடகடவென குற்றால அருவியாகத் தட தடக்கத் தொடங்கிவிட்டனர்.
தாயம் போட்டு தொடங்கினார் இந்துஜா. ''நான் ஜெய்ராம் கல்லூரியில் ஆங்கில இலக் கியம் படிக்கிறேன். சொந்த ஊர் ஓமலூர். ஊரில், 'சமூகத்துக்குத் தேவை பணமா... குணமா?’னு பட்டிமன்றம் நடத்துனாங்க. அதில் பேச வேண்டிய ஒருத்தர் வரலை.வேடிக் கைப் பார்க்கப் போன என்னை மேடை ஏத்திட்டாங்க. ஏதோ பேசி ஒப்பேத்தினேன். கடைசியில் எங்க அணிக்குத்தான் வெற்றி. இப்படித்தான் என் கலை உலக சேவைதுவங் கியது. இப்போ சேலம் சுற்றுவட்டாரத்தில் மாரியம்மன் பண்டிகையில் ஆரம்பிச்சு கல்லூரி விழாக்கள் வரை நிறைய பட்டி மன்றத்தில் கலந்துக்குறேன்.


'விட்டுக்கொடுப்பது கணவனா... மனைவியா?’னு ஆரம்பிச்சு, 'அரசு அலுவலகங் களில் வேலை நடக்க லஞ்சம் கொடுப்பது சரியா... தவறா?’ என்பது வரைக்கும் விதவிதமான தலைப்புகளில் பேசியாச்சு. இப்ப நடுவரா இருக்கச் சொல்லியும் அழைக்கிறாங்க. ஆத்தூர் பக்கத்தில் ஒரு பட்டிமன்றத்தில் பேசப் போயிருந்தேன். நடுவர் செந்தில் ஐயா எப்பவும் பேச்சாளர்கள் தூய தமிழில் பேசணும்னு சொல்லிட்டே இருப்பாரு. அதனால் நானும் அந்த மேடையில் தூய தமிழில் பேசலாம்னு முடிவு எடுத்து பேசினேன். பார்வையாளர்கள் கடுப்பாகித் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. செந்தில் ஐயா சத்தங் காட்டாம முக்காடு போட்டு தூங்கிட்டாரு!'' என்று கலகலவென சிரிக்கிறார், இந்துஜா!
சக்தி கைலாஷ் கல்லூரியின் பி.பி.ஏ. மாணவி ஐஸ்வர்யா. ''10-வது படிக்குறப்போ ஏதோ ஒரு ஆர்வத்தில் பேச்சுப் போட்டியில் கலந்துக்கிட்டேன். வீட்ல அம்மாகிட்ட சண்டை போடுற நினைப்பிலேயே மேடையில் பிச்சு உதறிட்டேன். முதல் பரிசு கொடுத்துட்டாங்க. நம்ம பேச்சுதான் நமக்கு அடையாளம்னு அப்ப முடிவு செஞ்சேன். என் முடிவு தப்பாப் போகலை.

ஏற்காடு மலைக் கிராமத்தில் ஒருமுறை பட்டிமன்றம் பேசப் போய் இருந்தேன். தெருவில் மேடை போட்டு நான் பேசிட்டு இருக்கும்போது... என் பின்னாடி 'உர்ர்...’னு சத்தம். கண்டுக்காம பேசிட்டு இருந்தா என் காலை ஏதோ பிராண்டுது. திரும்பிப் பார்த்தா ஒரு முரட்டு நாய். மேடையில் இருந்து குதிச்சு ஓடினேன் பாருங்க... ஓட்டம். இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது!''
இவர்களின் ஜாலி ஜமாவில் கலந்து கொள்ள ஒரு கும்பல் கூட... எல்லாருக்கும் ரோஸ் கோலி சோடா வாங்கிக்கொடுத்து கட்டுப்படி ஆகாதே என்று கும்பலை சடேரென்று கலைத்தோம்!
- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்