நெய் ஒரட்டியும் ஓட்டப்பமூம்!
##~## |
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான், தன் சொந்த ஊர் 'தேங்காய்ப்பட்டணம்’ பற்றியும் தன் இளமைக் காலம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார்...
''கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பக்கத்தில் இருக்கு தேங்காய்ப்பட்டணம். ரொம்பவே பழமையும் வரலாற்றுப் பின்னணியும்கொண்ட ஊர். ஒன்பதாம் நூற்றாண்டில் எங்க பகுதி 'ஆய்’ அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போ இந்தப் பகுதியோட பேர் 'தெங்க நாடு’. அந்தத் தெங்க நாட்டின் தலைநகர்தான் இந்தத் தேங்காய்ப்பட்டணம்.

பல வருஷத்துக்கு முன்னாடியே எங்க ஊரில் இயற்கைத் துறைமுகம் இருந்து இருக்கு. எங்க ஊரைச் சுற்றிலும் தென்னை மரங்கள்தான். இங்கே இருந்து பல பகுதிகளுக்கும் தேங்காய், கொப்பரையை ஏற்றுமதி செய்வாங்க. துறைமுகமும் ஏற்றுமதி வாய்ப்பும் இருந்ததால் அரபி வணிகர்கள் அப்போ தேங்காய்ப்பட்டணத்துக்கு அடிக்கடி வந்து போய் இருக்காங்க. அவங்க மூலமாத்தான் எங்கள் பகுதிகளில் இஸ்லாம் மதம் துளிர்விட்டு இருக்கு.
எங்க ஊரோட முக்கிய அடையாளம் மாலிக் இபுதீனார் பள்ளிவாசல். அப்போ தமிழகம் வந்த 'மாலிக் இபுதீனார்’ தலைமையில் ஆன இஸ்லாமியப் பிரசாரக் குழு, அந்தந்தப் பகுதிகளில் எது அதிகமா கிடைக்குதோ, அதையே மூலப் பொருளாகவெச்சு பள்ளிவாசலைக் கட்டினாங்க. அந்த வகையில் எங்க ஊரில் அதிகமாக் கிடைக்குற கருங்கல்லைவெச்சு பள்ளிவாசலைக் கட்டினாங்க. இப்பப் பார்த்தாலும் பளபளனு இருக்கும் அந்தப் பள்ளிவாசலுக்கு 1,400 வயசு. அன்றைய காலத்தில் யாருக்குமே படிப்பு மேல் அக்கறை கிடையாது. 'ஸ்கூலுக்குப் போ’னு யாரும் கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆசிரியர்களே வீடு, வீடா வந்து பசங்களை ஸ்கூலுக்கு இழுத்துட்டுப் போவாங்க.

பள்ளிக்கூடத்தை கட் அடிச்சுட்டு தேங்காய்ப் பட்டணம் கடற்கரையில் விளையாடுவேன். எங்க ஊரு கடற்கரையில் ஒரு மா மரம் குடை மாதிரி படர்ந்து தரையில் முட்டி நிற்கும். பார்க்க விட்டலாச்சார்யா படத்தில் வர்ற குகை மாதிரியே இருக்கும். அதில் ஒளிஞ்சு விளையாடுவோம். அங்கேயும் தேடி வந்து டீச்சருங்க ரெண்டு அப்புவெச்சு எங்களை இழுத்துட்டுப் போவாங்க.
ஸ்கூல் விடுமுறை நாள்கள்ல கடல்தான் எங்க பொழுதுபோக்கு. கடலை ஒட்டி பெரிய ஆறு ஒண்ணு போகும். அதில் மரத்தடியை வெட்டி, ஊற போட்டு இருப்பாங்க. அதை மதகு மாதிரி பயன்படுத்தி ட்ரிப் போய்ட்டு வருவோம்.
எங்க ஊரு கடற்கரையில் பாறைகள் அதிகமா இருக்கும். அதில் முக்கியமானது 'சேண்ட பள்ளிப் பாறை’. இந்தப் பாறையின் மேல் நின்னு பார்த்தா வீடுகளே தெரியாது. தென்னை மரமா தெரியும். பார்க்குறதுக்கே பச்சைப் போர்வையைப் போர்த்தின மாதிரி கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கும். ரம்ஜானுக்கு முதல் நாள் பிறை பார்க்க, இந்தப் பாறையில்தான் ஏறுவோம். எங்க ஊரில் இந்த மாதிரியான இயற்கையோடு கூடிய கலைநுட்பம், சாதாரண மனிதனைக்கூட படைப்பாளி ஆக்கிவிடும்.

பேச்சு, உணவுப் பழக்கம்னு அத்தனை விஷயத்திலும் எங்க ஊருக்குனு தனித்தன்மை இருந்துச்சு. நெய் ஒரட்டி, ஓட்டப்பம்னு சில வித்தியாசமான 'டிஷ்’ வகைகள் எங்க பகுதியில் பிரபலம். முன் னாடி எல்லாம் எங்க ஊரு மக்கள் வழிப்போக்கர் கள் யாராவது பசியோட பள்ளிவாசலில் படுத்திருக் காங்களானு பார்த்து கூப்பிட்டுப் போய் சாப்பாடு போடுவாங்க. ஆனா, இப்போ அந்தப் பண்பே இல்லாமப் போச்சு. சின்ன வயசுல எங்க ஊரைத் தாண்டி வெளி உலகத் தொடர்பே இல்லாமல்தான் வளர்ந்தேன். முதல் தடவையா குழித்துறை டவுனுக்குப் போயிருந்தேன். அதுவரை மீன் உணவைத் தவிர வேற எதையுமே நான் பார்த்தது இல்லை. ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனப்ப, சின்ன இலையில் வெண்ணெயை மடக்கிவெச்சு இருந்தாங்க. அதை எப்படிச் சாப்பிடணும்னுகூட தெரியாம, இலையோட விழுங்கிட்டேன். பேப்பர் கப் கேக்கை முன்னாடி பேப்பரோட சேர்ந்துதான் சாப்பிடுவேன். இப்படி வெளி உலகத் தொடர்பே இல்லாமல் வளர்ந்த என்னை, வெளி உலகுக்குக் கொண்டுபோனது தேங்காய்ப் பட்டணம் கிராமமும் அங்கு வாழ்ந்த மனிதர் களும்தான். அவர்கள்தான் என் படைப்புகளின் மூலதனம்!''
- என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்