மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 18

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

''உண்மையில், ஆண்டுக்கு இரண்டு முறை பூமிக்கும் சூரியனுக்குமான தூரம் ஒரே மாதிரி இருக்கும். கோடையிலும் குளிர்காலத்திலும். ஆனால், கோடையில்தான் அதிக வெப்பம், நீண்ட பகல். பூமியின் அச்சு 23.4 டிகிரி சாய்வாக இருப்பதால், இது நடக்கிறது' என்றார் புரொபஸர். 

'இந்தச் சாய்வை தற்காலிகமாகச் சரிசெய்துவிட்டால், கோடையின் அனலைக் குறைக்கலாம். அதற்கான புராஜெக்ட்தான் இது. நாளை முடித்துவிடுவேன். இனி சூரியனை ஒரு கை பார்த்துவிடலாம். அவன் கொட்டத்தை அடக்கலாம்' என்றபடி மனிதகுலத்தின் மொத்த அகங்காரமும் சேர்த்த சிரிப்புடன் வெளியே பார்த்தார். நானும் பார்த்தேன், சூரியன் தகித்துக்கொண்டிருந்தான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 18

மறுநாள்...

ஆஸ்பத்திரியில் புரொபஸரின் படுக்கையை நோக்கி நடக்கும்போது ஃபேமிலி டாக்டர், 'ஹைபெர்பைரெக்ஸியா... காரில் இருந்து இன்ஸ்டிட்யூட் வாசலை நோக்கிப் போகும்போது விழுந்திருக்கிறார். அரை மயக்க நிலை. மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன' என்றார்.

'எதனால் டாக்டர்?' என்றேன்.

'சன் ஸ்ட்ரோக்' என்றார் டாக்டர்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 18

குனிந்து படுக்கையில் புரொபஸரைப் பார்த்தேன். உளறலாக சில வார்த்தைகள் வந்துகொண்டிருந்தன.

'என் மீது தடதடத்து ஓடியது... என் மீது... என் தலையின் மீது...' என அரற்றினார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 18

'என்ன, என்ன சொல்லுங்கள்..!' என்றேன்.

'ஏழு... ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்' என்றார்!

''நேரத்தை நம்ம கன்ட்ரோல்ல வெச்சிருக்கணும்'' என முஷ்டி முறுக்கினான் நண்பன்.

''நேரத்தோட கன்ட்ரோல்லதான் நாம இருக்கோம்!' என ஞாபகப்படுத்தினான் கார்ப்பரேட் சித்தன்.

பாத்திரக் கலைஞன்!

'இந்தியர்களின் சமையலறை, பூஜையறைக்கு இணையானது’ என்கிறார் சுபோத் குப்தா. இவர், சமையல் கலைஞர் அல்ல; இந்தியாவின் முக்கியமான சிற்பக் கலைஞர்.

ஓவியங்கள், வீடியோ ஆர்ட்... என பல மீடியங்களில் வேலை செய்தாலும், பாத்திரங்களால் செய்த பெரிய அளவிலான பளபளக்கும் இன்ஸ்டல்லேஷன் சிற்பங்கள் இவரது அடையாளம்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 18

'ஏன்... இப்படி பித்தளைப் பாத்திரங்கள், வாளிகள், டிபன் பாக்ஸ், எவர்சில்வர் கிளாஸ்கள்..?’ எனக் கேட்டால், 'அது என் சிறுவயதுடன் பிணைந்திருக்கும் விஷயம். ஒவ்வோர் இந்தியரின் மனதில் இருக்கும் இந்த ஞாபகங்களை நான் சிற்பங்களாக மாற்றுகிறேன்’ என்கிறார்.

அன்றாடம் சாதாரணமாகப் பார்க்கும் தூக்குவாளியில் இருந்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சொம்புகள் வரை பிரமாண்டமான ஒரு கொலாஜாகப் பார்வையாளர்கள் முன் எழுந்து நிற்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

சாதாரண பொருட்களைக்கொண்டு அசாதாரண உருவங்களை உருவாக்குகிறார். உதாரணமாக, 'லைன் ஆஃப் கன்ட்ரோல்’ எனும் தலைப்பில், அணுகுண்டு வெடிப்பின்போது எழுந்த காளான் வடிவப் புகையை ஞாபகப்படுத்தும் ஒரு இன்ஸ்டல்லேஷன்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 18

'மேற்கத்தியக் கலை, கிழக்கத்தியக் கலை என நான் பிரித்துப் பார்ப்பது இல்லை. கலைஞர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் மீடியமும் வழிமுறைகளும்தான் வேறு’ என்கிறார்.

'பாத்திரங்களின் வெளிப்புறம் பளபளக்க, அதன் உள்புறமோ ஒன்றும் இல்லாத வெற்றிடம். அது என்னைக் கவர்கிறது’ என தத்துவம் பேசும் சுபோத் குப்தா, பீகாரின் பின்தங்கிய ஒரு கிராமத்தில் இருந்து பாட்னா ஓவியக் கல்லூரிக்கு வந்து படித்தவர். இன்று உலகம் முழுக்க ஆர்ட் கேலரிகளில் அவருடைய படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

கதாபாத்திரங்களை, சிற்பங்களாகச் செதுக்குவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர், சிற்பங்கள் செய்வதே பாத்திரங்களைக் கொண்டுதான் என்பதே சுவாரஸ்யம்!

இனிவரும் தலைமுறை

ஆதிவாசிகள், அவர்கள் உரிமைக்கான போராட்டங்களை நடத்துவது நாம் அறிந்ததே. இயற்கைக்கும், 'வளர்ச்சி’ என்ற பெயரில் நடக்கும் அரசியலுக்கும் இடையேயான போராட்டம் அது. கேரளாவின் ஒரு போராட்ட மேடையில்

அஞ்ஞானச் சிறுகதைகள் - 18

பாடகி ரேஷ்மி சதீஷ் பாடிய ஒரு பாடலை இணையத்தில் கேட்டேன். ரேஷ்மி சதீஷ் 'உருமி’ போன்ற திரைப்படங்களில் பாடிய பிரபல பாடகி.

'இனி வரும் தலமுறைக்கு இவிட வாசம் சாத்தியமோ...’

என ஆரம்பிக்கும் பாடலை, நான் மொழிபெயர்க்க முயன்றேன்.

இனி வரும் தலைமுறைக்கு இங்கே வாழ்க்கை சாத்தியமா

அசுத்தமாகும் நீர்வளம் அசுத்தமாகும் பூமியும்

நிழலை வேண்டி தவமிருக்கும் இங்கு எல்லா மலைகளும்

தாக நீருக்காய் நாவை நீட்டிக் காத்திருக்கும் நதிகளும்

காற்றுகூட மூச்சுமுட்டி காத்துநிற்கும் நிலைமையும்

இங்கே எப்போதென் பிறப்பு என்ற விதைகளின் முனகலும்

இனி வரும் தலைமுறைக்கு இங்கே வாழ்க்கை சாத்தியமா

அசுத்தமாகும் நீர்வளம் அசுத்தமாகும் பூமியும்

இலைகளின் கிசுகிசுப்புகள் கிளிகளின் பாடல்கள்

எல்லாம் இன்று அழிந்து கேட்பது இயற்கையின் கதறலே

நிறங்களழிந்த பூமியின்று வசந்தம் வராத நிலம்

நாளை நமது பூமியோ பனி மூடிய பாழ்நிலம்

இனி வரும் தலைமுறைக்கு இங்கே வாழ்க்கை சாத்தியமா

அசுத்தமாகும் நீர்வளம் அசுத்தமாகும் பூமியும்

பெரிய அணைகள் அணு உலைகள் யுத்தங்கள்

இனி நமக்கு வேண்டாம் என்று ஒரு மனதாய்ச் சொல்லலாம்

வளர்ச்சி என்பது மனதின் எல்லையை விரிப்பதில் தொடங்கலாம்

வளர்ச்சி என்பது நன்மை பூக்கும் உலகை உருவாக்க ஆகலாம்

ஈஞ்சக்காடு பாலச்சந்திரன் எழுதிய பாடல், பாடகி ரேஷ்மி சதீஷ் வழியாக ஆதிவாசிகளின் குரலாக ஒலித்து நம் காதில் கேள்விகளாய் நிறைகிறது. பதில்..?