பழநியில் வ்வ்வர்ர்ரூம்ம்ம்
##~## |
'வ்வ்வ்வர்ர்ர்ரூம்ம்’ என்று அப்பாச்சி பைக்குகள் தார் ரோட்டில் த்ராட்டில் முறுக்கி சீறிப் பாய்கின்றன. அதுவரை பழநி ஆண்டவரின் ரத யாத்திரையை மட்டுமே பார்த்துப் பழகிய பழநிவாசிகளுக்கு அது செம த்ரில் அனுபவம்.
அப்பாச்சி பைக்குகளை விளம்பரப்படுத்துவதற்காக டி.வி.எஸ். நிறுவனம் ஏற்பாடுசெய்து இருந்த ஸ்டன்ட் ஷோ அது. ஸ்டன்ட் ஷோவின் மாஸ்டர்கள் த்ராட்லர்ஸ் டீம். பைக்கில் அதி வேகமாக வந்து பிரேக் போட்டு அப்படியே முன் சக்கர மட்கார்டுக்குத் தாவி மொத்தக்கூட்டத்தையும் அலறவைத்தார் பிஜூ. பைக்கின் முன் சக்கரத்தை அலேக்காகத் தூக்கி ஒற்றை சக்கரத்தில் வலம் வந்த சத்யராஜ், அப்படியே இரண்டு கைகளையும் ஹேண்டில் பாரில் இருந்து விலக்கி ரவுண்ட் அடிக்க, விசில் கிழிந்தது. பிரசாந்த் அதிவேகமாக வந்து, சடன் பிரேக் அடித்து சாலையோரம் நின்றுகொண்டு இருந்த பெண்ணுக்கு ரோஜா கொடுத்து அசத்தினார்.

த்ராட்லர்ஸ் அணியின் இயக்குநர் சிவாஜியிடம் பேசினேன். ''ஒரு முறை என் ஃப்ரெண்டோட ரேஸ் பைக் வாங்கி ஓட்டிப் பார்த்தேன். உடனே ரேஸில் கலந்துக்கிற ஆசை வந்துடுச்சு. வீட்ல யார்கிட்டயும் சொல்லாம ரேஸில் கலந்துக்கிட்டேன். காலில் செம அடி. அப்போதைக்கு வீட்ல பொய் சொல்லி சமாளிச்சுட்டேன். அப்புறம் நிறைய ரேஸில் கலந்துகிட்டு பரிசுகள் ஜெயிச்சேன். அப்படியே வீலிங் செஞ்சு பழகினேன். 2007-ம் வருஷம் அப்பாச்சி பைக் வாங்க ஷோ ரூம் போனேன். சர்வீஸ் மேனேஜர் கணேஷ் நான் டெஸ்ட் டிரைவ் பண்றதைப் பார்த்துட்டு என் மொபைல் நம்பர் வாங்கிட்டு அனுப்பினார். கொஞ்ச நாளில் கோயம்புத்தூர் மோட்டார் ஷோவில் கலந்துக்கச் சொல்லி என்னை கூப்பிட்டார். '10 நிமிஷம் டைம். உங்களால் பைக்கில் என்னலாம் சாகசம் செய்ய முடியுமோ அதைப் பண்ணுங்க’னு சொன்னார். நான் விதவிதமா வீலிங் செய்து காமிச்சேன். அந்த ஸ்டன்ட்தான் இந்த ஷோ வாய்ப்பு கொடுத்தது.

என்கூட பிஜூ, சத்யராஜ், பிரசாந்த்னு வந்து சேர்ந்தாங்க. த்ராட்லர்ஸ் டீம் உருவாச்சு. ரொம்ப ரிஸ்க்கான வேலை இது. இதுவரை 60 ஸ்டன்ட் ஷோவுக்கு மேல் செய்து இருக்கோம். ஒவ்வொரு முறையும் கவனம் பிசகாம இருக் கணும். சின்னதா கவனம் பிசகினாலும் பெரிய டேமேஜ் ஆகிடும். எனக்கு ஒரு தடவை கால் உடைஞ்சு ஒரு வருஷம் ரெஸ்ட்ல இருக்க வேண்டியது ஆகிடுச்சு. சத்யராஜ் ஒருமுறை ஆக்சிடென்ட் ஆகி கோமா ஸ்டேஜுக்குப் போய் திரும்பி வந்தான். எல்லார் வீட்லயும் ரொம்பக் கவலைப்படுறாங்க. இருந்தாலும் இந்த ஸ்டன்ட்ல இருக்குற த்ரில் பிடிச்சுப் போய் செய்துட்டு இருக்கோம். இந்த ரிஸ்க், எங்களோட போகட்டும். முறையான பயிற்சி இல்லாம யாரும் முயற்சி செய்யாதீங்க... ப்ளீஸ்!'' வேண்டுகோளோடு முடிக்கிறார் சிவாஜி!
கு.பிரகாஷ், படங்கள்: வீ.சிவக்குமார்
