என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

விழுப்புரம் என்றால் சரித்திரம்!

##~##

''தமிழகத்தின் தொன்மையான நகரங்களுள் ஒன்று விழுப்புரம். வரலாறு, அரசியல் விழிப்பு உணர்வு, கலை, இலக்கியம் எனப் பல்வேறு பெருமைகளைக்கொண்ட ஊர்!'' - என்று பெருமிதத் துடன் விழுப்புரத்தின் பெருமையைப் பேசத் தொடங்கினார் கவிஞர் த.பழமலய்.

 ''கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த நாட்களில், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்ததால், பல்வேறு கிராமங்களுக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான், விழுப்புரத்தைச் சுற்றி உள்ள கிராமங்களின் வரலாற்றுத் தன்மையை அறிந்து வியந்தேன். பல்லவர் காலத்து விநாயகர் சிலைகள், புடைப்புச் சிற்பங்கள், மூதேவி சிலைகள் இந்த வட்டாரத்தில் மிகப் பிரபலம். பக்கத்துக் கிராமங்களான விக்கிரவாண்டி, கோலியனூர், சேர்ந்தனூர்

என் ஊர்!

ஆகியவற்றில் இப்போதும் அத்தகைய சிற்பங்கள் இருக்கின்றன. பொதுவாக, மூதேவிக்கு வாகனமாகக் கருதப்படுவது சிங்கம். ஆனால், இங்கே  மூதேவியின் வாகனமோ மான்.

என் நெருங்கிய நண்பர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி, ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளர். கீழவாளை என்ற கிராமத்தில் 'ரத்த குடைக்கல்’ என்று ஓர் இடம் உண்டு. குடை போன்ற வடிவமைப்பு உடைய கல்லில், சிவப்பு வண்ணத்தில் ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கும். நண்பர் கிருஷ்ணமூர்த்தி சொன்னதன் பேரில் சென்று பார்த்தபோதுதான், அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான சிற்பங்கள் என்று அறிய முடிந்தது. குதிரை மேல் ஆட்கள் அமர்ந்து இருப்பது, தெப்பத்தில் வந்து இறங்குபவர்களை வர வேற்பது போன்ற சிற்பங்கள் உள்ளன.

தற்போது பழைய பேருந்து நிலையம் உள்ள இடத்தில், ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆதி வாலீஸ்வரர் கோயில் இருந்துள்ளது. அப்போது ராஜ ராஜ சோழனுக்கு, 'ஜனநாதன்’ என்று ஒரு பெயரும் இருந்தது. அதன் காரணமாக, இந்த ஊர் 'ஜனநாதமங்களம்’ என்றும் அழைக்கப்பட்டது. 'விழுப்புரமாகிய ஜனநாத மங்களம்’ என்று குறிப்பிடும் கல் வெட்டும் உண்டு. 'விழுப்பரையன்’ என்ற சிற்றரசன் ஆண்ட காரணத்தாலேயே இது விழுப்புரம் என்று அழைக்கப்பட்டது.

என் ஊர்!

ஆங்கிலேயர்கள், மொகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மோதிக்கொள்ளும் இடமாகவும் இது இருந்தது. போரின்போது கோட்டைப் பகுதியில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட பீரங்கிகளை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஒன்றும் சென்னை யில் ஒன்றுமாக வைத்து உள்ளனர். பிரெஞ்சுக்காரர்கள் ஒருவேளை இங்கே வெற்றிபெற்று இருந்தால், விழுப்புரமும் புதுச்சேரியோடு சேர்ந்து இருக்கும். இப்படி விடுதலைக்கு முன்பான விழுப்புரத்துக்கு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளதைப்போலவே, சுதந்திர இந்தியாவிலும் இந்த ஊருக்கு ஏராளமான பெருமைகள் உண்டு.

விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி என்ற சிற்றூரில் பிறந்தவர் திருக்குறள் முனுசாமி. 'திருக்குறளார்’ என்று அழைக்கப்பட்ட அவர், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அதிபரான கோயங்காவை எதிர்த்து நின்றார். கோயங்காவுக்கு ஆதரவாக, ஹெலிகாப்டரில் இருந்துகூட நோட்டீஸ்கள் வீசப்பட்டன. ஆனால், இறுதியில் திருக்குறளார்தான் வென்றார். அதேபோல், 'உழவர் உழைப்பாளர் கட்சி’ ராமசாமி படையாட்சியால் தொடங்கப்பட்டதும் விழுப்புரத்தில்தான். பல சாதியினர் தனிக் கட்சி தொடங்குவதற்கு அடித்தளம் இட்டதும் விழுப்புரம்தான்.

என் ஊர்!

ஜெயகாந்தன் தனது சிறு வயதை விழுப்புரத்தில் கழித்துள்ளார். அவருடைய 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் அதைக் குறிப்பிட்டு இருப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த ஊரும் இதுவே. அவருக்கு பிறப்புச் சான்றிதழும் விழுப்புரத்தில்தான் அளிக் கப்பட்டு இருக்கிறது. இங்கு உள்ள திருநங்கை களுக்கான கூத்தாண்டவர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது.

கடந்த காலம் மற்றும் சமகாலத்தில் தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஊர்தான் விழுப்புரம்!''

- நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்