நடனம்+தைரியம் = நந்தினி!
##~## |
நந்தினிக்கு நடனம்தான் மூச்சு. தனியரு பெண்ணாக தடைகளைத் தாண்டும் தன்னம்பிக்கைப் பெண். ஆண்ட்டோ கதிர் என்ற நடனப் பள்ளியை நிறுவி, பள்ளி மாணவர்களுக்கு மேற்கத்திய நடனமும் பாரம்பரிய பரதநாட்டியமும் பயிற்று விப்பவர். தனியரு பெண்ணாக இந்த உயரத்தை அடைந்த தற்குப் பின் மறைந்திருக்கும் தழும்புகள் அதிகம். அதை அவர் குரலிலேயே கேட்போமே...
''திருவாரூர் என் சொந்த ஊர். சின்ன வயசிலேயே அப்பா தவறிட்டார். அம்மாதான் என் உலகம். நடனப் பாரம்பரியம் எதுவும் இல்லாத, சாதாரண கூலித் தொழிலாளி குடும்பம். ஆனால், நடனத்தின் மீது அடங்காத ஆர்வம். ஆறாவது வயதில் விஜயகுமார் மாஸ்டர்கிட்ட ஓரளவு பரதம் கத்துக் கிட்டேன். தெரிஞ்ச நடனத்தை வெச்சு பள்ளிப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கினேன்.

பிறகு, குடும்பப் பிரச்னைகளால் ஓசூர் போயிட்டோம். அந்தச் சமயத்துல என்னால் பரத நாட்டியத்தைத் தொடர முடியாத நிலை. வெறும் அடவு, பதம் இந்த ரெண்டு மட்டும் தான் தெரிஞ்சுது. பள்ளிப் படிப்பு முடிச்சதும் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் அனுமதி கிடைச்சு, 2005-ல் புதுவை வந்தேன். பெண்கள் அரசு விடுதியில் தங்கி கல்லூரிக் குப் போய் வந்தேன். சொந்த ஊரில் கூலி வேலை மூலமா வர்ற வருமானம் அம்மாவோட செலவுக்கே சரியா இருக்கும். நானும் அம்மாவுக்கு வீண் செலவு வைக்கக்கூடாதுன்னு ஆறு மாசத்துக்கு ஒரு தடவைதான் ஊருக்கே போவேன்.
பரதத்தில் ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு, தஞ்சாவூர் ஸ்டைல். இன்னொண்ணு, கலாஷேத்ரா ஸ்டைல். இதில் தஞ்சாவூர் ஸ்டைல் கொஞ்சம் கடினமானது. நான் அதை எடுத்துப் படிச்சேன்.
உள்ளூரில் நடக்கும் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் ஜெயிச்சேன். கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் புதுச்சேரியிலேயே தங்கினேன். போட்டிகளில் ஜெயிச்ச பணத்தை வெச்சு நானும் நண்பர்களும் ஒரு டான்ஸ் அகாடமி மாதிரி ஒண்ணு ஆரம்பிச்சோம். வெளியூர் போட்டிகளில் கலந்துகிட்டபோது மத்த டீமில் இருந்த சில டான்ஸர்களும் என் கிட்ட வந்து சேர்ந்தாங்க.

ஆனா, நாங்க நினைச்ச மாதிரி வளர்ச்சி இல்லை. பல நாட்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டோம். ரொம்பச் சிரமப்பட்டு எங்க நிலைமையை விளக்குற மாதிரி 'கலைஞனின் போர்க்களம்’னு ஒரு குறும்படம் எடுத்தோம். அந்தப் படத்துக்காக வாடகைக்கு எடுத்த கேமராவுக்கு வாடகை கொடுக்கக்கூட பல பொருட்களை அடகுவெச்சோம். 2010-ல் 'காதல் 420’னு ஒரு ஆல்பத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைச்சது. அதன் மூலமா பல வாய்ப்புகள் வந்தன.
புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டினருக்கு பரதம் கத்துக் கொடுக்கத் தொடங்கினேன். பரதம் மட்டும் போதாதுன்னு உள்ளூரில் இருந்த ஒரு சில மாஸ்டர்களிடம் வெஸ்டர்ன் டான்ஸ் கத்துக்கிட்டேன். அதை என் ட்ரூப்பில் இருந்த வங்களுக்கும் கத்துக் கொடுத்தேன். தனியா வசிக்கிற பெண் என்பதால், எனக்குச் சுலபத்தில் வீடு கிடைக்கலை. இதுவரை மூணு வீடுகள் மாத்தியாச்சு.

தனியா கலைத் துறையில் இயங்கும் பெண் என்பதால், பாலியல் தொந்தரவுகளும் வரும். ஆனா, நண்பர்கள் உதவியால் அந்தப் பிரச்னைகளைச் சமாளிச்சேன். என் டான்ஸ் குரூப்பில் இப்போ ஆறு பேர் இருக்காங்க.
எல்லா பிரச்னைகளின்போதும் இவங்கதான் என்கூடவே இருந்தவங்க. வெஸ்டர்ன், பரதநாட்டியம், கிராமிய நடனங்கள்னு இப்போ எல்லா நடனங்களும் ஆடுவோம். புதுச்சேரி சுற்றுலாத் துறையிலும் எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தாங்க. இப்பக்கூட கோயம்புத்தூர் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்பு. இதோ கிளம்பிட்டே இருக்கோம்!''- உற்சாகம் வார்த்தைகளில் நடனமாடச் சொல்கிறார் நந்தினி!
- நா.இள.அறவாழி, படங்கள்: எஸ்.தேவராஜன்