சேர்ந்து செதுக்கினால் சிலை!
##~## |
'தனித்தனியா இருக்கிற வரைக்கும் சாதாரண மரக் கட்டைதாங்க. ஆனா, சேர்த்து செதுக்கும்போது அழகான சிற்பம் ஆயிடுதுல்ல? அப்படித்தான், நாங்களும் தனித்தனியா இருக்கும்போது கடன் தொல்லையால் கஷ்டப்பட்டோம். இப்போ குழுவா இணைஞ்சா வளர்ச்சினு புரிஞ்சுக்கிட்டோம்!''- எளிய மொழியில் பெரிய தத்துவம் சொல்கிறார் ராம லிங்கம்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேஉள்ள அண்ணா நகர் ஆண்கள் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இந்தக் குழுவினர் வங்கிக் கடன் மூலம் சிலைகள் செய்து வாழ்க்கையை நடத்து கின்றனர். அண்ணா நகர் பகுதிக்குச் சென்றால், எங்கு பார்த்தாலும் மரச் சிற்பங்கள்தான். அதில் அதிகம் இருப்பவை கடவுள் சிலைகள்தான். கோயில், ஹோட்டல், திருமண மண்டபம் போன்ற முக்கியமான இடங்களில் வைக்கப்படும் சிலைகள் இங்கு தயாரா கின்றன. இந்தப் பகுதியில் 300-க்கும் அதிகமான குடும் பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
கடவுள் சிலைகள், விலங்கு, பறவைகள் மட்டுமல்லாது எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கும் பஞ்சம் இல்லை. புத்தர், ஷீர்டி சாய்பாபா, குழலூதும் கண்ணன், பிள்ளையார், அம்மன் சிலைகள் எனப் பார்ப்பவர்களுக்கும் கலை ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, புதுவை போன்ற இடங் களுக்கு இங்கிருந்துதான் சிலைகள் ஏற்றுமதி ஆகின்றன.

''தாத்தா காலத்துல கோயில்களுக்குத் தேர் செய்து கொடுக்கும் வேலைதான் பிரசித்தம். நாங்களும் அதே மரச் சிற்ப வேலையைத்தான் செஞ்சோம். ஆரம் பத்துல நாங்க தனித்தனியா தொழில் செய்ததால் ஏகப்பட்ட கடன். லாபம்லாம் வட்டிக்கே போயிரும். கையில் எதுவும் நிக்காது. அப்பதான் எங்க ஊருக்கு வந்த வள்ளலார் கிராம பேங்க் சேர்மன், 'நீங்க சுய உதவிக் குழு ஒண்ணு ஆரம்பிங்க. அதனால் நிறைய லாபம் இருக்கு’னு சொன்னார். ஆனா, எங்களுக்கு அப்போ சுய உதவிக் குழுங்கிற விஷயமே புதுசு. எதுவும் புரியாமத் தயங்கி நின்னோம். ஆனா, சேர்மன் தான் மறுபடி மறுபடி பேசி, எங்களை ஒப்புக்கவெச்சார். அவரே வங்கிக் கடனும் வாங்கித் தந்தார். இப்பதான் அவர் சொன்னது எவ்வளவு உண்மைனு புரிஞ்சது!'' என்கிறார் குழுவின் தலைவர், நடராஜன்.

''இப்போ இந்தப் பகுதியில் மொத்தம் 12 சுய உதவிக் குழுக்கள் இருக்கு. இதில் ஐந்து ஆண்கள் சுய உதவிக் குழுக்கள். ஏழு பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இன்னும் சிலர் எந்தக் குழுவிலும் சேராமல் சுயமா வேலை செய்றாங்க. வெளியூர் போய் தங்கிச் சிலைகள் செய்து கொடுத்துட்டு வர்றவங்களும் இருக்காங்க. ஒரு காலத்தில் லட்சக்கணக்குல வட்டிக்குப் பணம் வாங்கி தொழில் செய்ய வேண்டிய நிலை. வட்டி கட்டுறதுக்கே ரொம்பக் கஷ்டப்படுவோம். ஆனா, இப்போ வட்டிக்குப் பணம் வாங்க வேண்டிய தேவையே இல்லை, மரம் அறுக்க, மத்த வேலைகளுக்குனு நாங்களே, ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, நாலு லட்ச ரூபாய் விலையில 8 சென்ட்ல நிலம் வாங்குற அளவுக்கு முன்னேறி இருக்கோம்!'' என்கிறார் குமார்.
''எல்லாத்தையும்விடப் பெரிய விஷயம். இன்னிக்கு எங்க பொண்டாட்டி பிள்ளைங்க நல்லா இருக்காங்க சார். முன்பெல்லாம் பிள்ளைங்களைப் படிக்கவைக்க முடியாத நிலை இருந்துச்சி. ஆனா, இப்போ எங்க பசங்களை நல்லா படிக்கவைக்கிறோம்!'' என்கிறார் நடராஜன்.
'ஒரு கை தட்டினால் ஓசை வராது’ என்பது உண்மைதான் என நிரூபிக்கிறார்கள் இந்த அண்ணா நகர் சிற்பிகள்!
- அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்