மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 கிறிஸ்டோபர் நோலன் - 03

நம்பர் 1
News
நம்பர் 1 ( முகில் )

இனியது புதியது - 3முகில்

நம்பர் 1 கிறிஸ்டோபர் நோலன் - 03

கிறிஸ்டோபர் நோலன்... இந்த நூற்றாண்டின் டாப் சினிமா இயக்குநர். இன்றைய தேதியில் உலக அளவில் அதிக எதிர்பார்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகும் படங்கள் நோலனுடையவையே. இவரது படங்கள், பார்த்தால் புரியாது; பார்க்கப் பார்க்கத்தான் புரியும். இப்படி சாதாரண மனிதனுக்குப் புரியாமல் படம் எடுத்துத் தள்ளும் ஒரு 'வேற்றுக்கிரக’ இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? 

இதற்கு நோலனின் வார்த்தைகளில் இருந்தே பதிலைப் பெறலாம். 'நீங்கள் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். முழு மனதுடன் தேடவில்லை என்றால், உங்களால் அதைக் கண்டறியவே முடியாது. அர்ப்பணிப்பு இல்லாத தேடல் என்பது, உங்களை நீங்களே முட்டாள் ஆக்கிக்கொள்வதே!’

ஏழ்மையான குடும்பம். சிறுவயதில் 'புவா’வுக்கே திண்டாட்டம். படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு பிஞ்சுக்கரங்கள் நோக கூலி வேலை செய்தார்... என்பன போன்ற 'ஸ்டீரியோ டைப்’ சோகங்கள் எதுவுமே நோலனின் பால்யத்தில் கிடையாது. 1970-ல் பிறந்தது லண்டனில். அடிக்கடி பறந்தது சிகாகோ நோக்கி. காரணம், அவரது அமெரிக்க அம்மா விமானப் பணிப்பெண்ணாக இருந்தார். அப்பா, பிரெண்டன் ஜேம்ஸ் நோலன், விளம்பரங்களுக்கான காப்பிரைட்டர். நோலனின் பளிச் ஐடியாக்களின் மரபணு ரைட்டர்.

நோலனின் ஏழாவது வயதிலேயே அவருக்கு 'சூப்பர் 8’ கேமரா கைக்குக் கிடைத்தது. சுட்டித்தனமாகச் சுட்டுத்தள்ளினார். 11-வது வயதில், 'வருங்காலத்தில் சினிமா இயக்குநர் ஆக வேண்டும்’ என்ற கனவு உள்ளே விழுந்தது. வளர வளர காலம் தன் கனவைத் திருட, நோலன் அனுமதிக்கவில்லை. தான் உட்காரும் எந்த நாற்காலியின் முதுகிலும் ‘Director’ என்ற சொல் எழுதப்பட்டிருப்பதாகவே தன்னைத் தகவமைத்துக்கொண்டார். சீரான பள்ளிப்படிப்பு. பின், குறும்படம் எடுப்பதற்கான ஏகபோக வசதிகள்கொண்ட லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்க இணைந்தார். எம்மாவைச் சந்தித்தார். காதல்.

சக மாணவி; இப்போது மனைவி. (இருவருக்கும் நான்கு குழந்தைகள். எம்மாதான், நோலன் படங்களின் தயாரிப்பாளர்.) எம்மாவும் நோலனும் சேர்ந்தே செல்லுலாய்டு கனவுகள் வளர்த்தார்கள்.

கல்லூரியில் படிக்கும்போதே 'Tarantella' என்ற குறும்படத்தை எடுத்தார்கள். கிடைத்த பாராட்டுக்கள், சிறகுகள் கொடுத்தன. இருந்தாலும் படிப்புக்குப் பிறகு பணத் தேவைக்காக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆவணப்படங்களை எடுத்துக்கொடுத்தார். இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவை நோக்கி எடுத்துவைத்த முயற்சிகளில் தோல்விகள். தோல்விகள் முயற்சிகளுக்கே, நோலனுக்கு அல்ல.

நம்பர் 1 கிறிஸ்டோபர் நோலன் - 03

1997-ல் தான் யார், தன் பாணி என்ன என்று உலகுக்கு உரக்கச் சொல்லும்விதமாக 'DoodliBug’ என்ற குறும்படம் எடுத்தார். ஒரு மனிதன், தன் அறைக்குள் கையில் ஷூவுடன் பூச்சி ஒன்றை அடித்துக் கொல்லும் முயற்சியில் அங்கும் இங்கும் அலைபாய்கிறான். அவன் கொல்ல நினைக்கும் அந்தப் பூச்சி, அந்த மனிதனின் விரல் அளவு உருவம்தான். அந்த உருவமும் கையில் ஷூவுடன் ஏதோ ஒன்றைக் கொல்லும் முயற்சியில் இருக்கிறது. அந்த மனிதனது பின்னணியில் அவனது மெகா உருவம் ஒன்று அவனை அடித்துக் கொல்ல தோன்றுகிறது. (youtube.com/watch?v=-WhKt_CkXD0)

மிகக் குறைந்த செலவில், கறுப்பு - வெள்ளையில், பிரமாதமாக எடுக்கப்பட்ட மூன்று நிமிடக் குறும்படம். ஆஹோ ஓஹோ கற்பனை என இன்றைக்கு யூடியூப் ஹிட்ஸை அள்ளும் அந்தக் குறும்படம், அன்றைக்கு நோலனுக்கு விசிட்டிங் கார்டாக அமையவில்லை. 'அதிர்ஷ்டம்கொண்டவனாக என்னை நான் ஒருபோதும் நினைத்ததே கிடையாது. எதிலும் மோசமானவற்றையே எண்ணும் அவநம்பிக்கையாளன் நான்’ என்பது நோலனின் வார்த்தைகள். பிரிட்டிஷ் ஃபிலிம் இண்டஸ்ட்ரியை நம்பி, தான் ஒரே இடத்தில் தேங்கி நிற்பதை நோலன் தன் 26-வது வயதில் புரிந்துகொண்டார்.

தன்னைத்தானே தனக்குள் துரத்தும் 'DoodleBug’ போல, தன் கனவை தானே துரத்திப்பிடித்து படம் எடுக்க முனைந்தார். பணம்? சொந்த சம்பளப் பணம். மிகக் குறைந்த பட்ஜெட். வாரம் முழுக்க அலுவலக வேலை. வார இறுதியில், நண்பர்களின் உதவியுடன் கையில் இருக்கும் குறைந்த உபகரணங்களைக்கொண்டு ஷூட்டிங். பெரும்பாலும் வீட்டில், நண்பர்களது வீடுகளில் காட்சிகள் எடுக்கப்பட்டன. எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு நிர்வாகம், எடிட்டிங்கில் உதவி அனைத்தும்... நோலன். சுமார் இரண்டு வருடங்களில் நிறைவடைந்த அந்தப் படம் 'Following’ . படத்துக்கான ஃபிலிம் செலவைக் குறைக்க, பலமுறை ஒத்திகை பார்த்துவிட்டு கேமராவை இயக்கினார். ஆகவே, எந்தக் காட்சியும் இரண்டாவது டேக்குக்கு மேல் செல்லவில்லை. படக் குழுவின் பசியை, நோலனின் அம்மா செய்து கொடுத்த சாண்ட்விச்கள் போக்கின.

தனது முதல் நாவலை எழுத நினைக்கும் ஒருவன், கள அனுபவத்துக்காகப் பலரையும் தொடர்ந்து சென்று கண்காணிக்கிறான். ஒரு திருடனைத் தொடரும்போது அவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. குற்றங்களின் உலகுக்குள் அவன் நுழைய, அதற்குப் பின் நிகழும் தடதட மாற்றங்களைச் சொல்லும் சஸ்பென்ஸ் திரில்லர். கறுப்பு-வெள்ளையில் எடுக்கப்பட்ட 'Following’ , விருதுகளால் திரைப்பட விழாக்களில் மஞ்சள் ஒளி பெற்றது. 'உலகின் மிகக் குறைந்த பட்ஜெட் படம்’ என்ற அறிவிப்புடன் நோலன் படத்தை வெளியிட்டார். அதனளவில் நிறையவே லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

1998-ல் வெளியான 'Following’ பட்ஜெட் வெறும் 6,000 டாலர். 2014-ல் வெளியான 'இன்டர்ஸ்டெல்லர்’ படத்தின் உத்தேச பட்ஜெட் 165 மில்லியன் டாலர். முதல் படத்தைவிட 27 ஆயிரம் மடங்கு அதிகம். தன் சம்பளப் பணத்தில் முதல் படத்தை எடுத்த நோலன், இன்டர்ஸ்டெல்லருக்காக வாங்கிய உத்தேச சம்பளம், இரண்டு கோடி டாலர். இங்கே இந்த வெற்றிப் பயணத்தின் மைல் கற்களை 'கருந்துளைப் பயண வேகத்தில்’ பார்த்துவிடுவது வசதி.

நம்பர் 1 கிறிஸ்டோபர் நோலன் - 03
நம்பர் 1 கிறிஸ்டோபர் நோலன் - 03

நோலனின் இரண்டாவது படம் 'மெமன்டோ’ (தமிழ் 'கஜினி’யின் ஒரிஜினல்). அவரது சகோதரர் ஜோனாதன் எழுதிய பக்கா பழிவாங்கும் கதை. நேர்க்கோட்டில் சொல்லாமல், படத்தை இறுதிக் காட்சியில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக பின்னோக்கி வருவதாக திரைக்கதையில் மேஜிக் செய்திருந்தார். பட விழாக்களில் கவனம் பெற்றாலும், படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. நோலன் மீதான நம்பிக்கையில் படத் தயாரிப்பு நிறுவனமே ரிஸ்க் எடுத்து படத்தை வெளியிட்டது. ஆரம்ப வாரங்களில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் தாங்கள் பழிவாங்கப்பட்டதாக நினைக்க, பின் 'அட, இதில் ஏதோ இருக்கிறது’ எனப் புரிந்து கொண்டாட ஆரம்பித்தார்கள். போட்ட காசைவிட, ஐந்து மடங்கு லாபம்.

ஹாலிவுட் ஸ்டுடியோக்கள், நோலனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தன. மூன்றாவது படம் 'இன்சோம்னியா’. நார்வே மொழி படத்தின் ரீமேக். இளம்பெண் ஒருத்தியின் கொலை குறித்து விசாரிக்கப்போகும் துப்பறியும் நிபுணர்கள் இருவரின் கதை. ரீமேக் என்றாலும் அதை நோலன் தனக்கான பிரத்யேக சினிமா மொழியில் செதுக்கி யிருந்த விதத்தால், பாக்ஸ் ஆபீஸில் பண மழை. விமர்சகர்களும் நல்வார்த்தை மொழிந்தார்கள்.

2003-ல் வார்னர் பிரதர்ஸ், நோலனிடம் வந்தார்கள். பேட்மேனைக் கையில் கொடுத்தார்கள். எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அங்கெல்லாம் பறந்து வந்து வில்லனின் பல்லை உடைப்பதே சூப்பர் ஹீரோக்களின் கடமை. அவ்வளவே. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால், நோலன் தன் மந்திரச் சிந்தனையால் வெளவால் மனிதனைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டார். காமிக்ஸ்களின் காட்சி வடிவமாக இல்லாமல், 2005-ல் வெளியான 'பேட்மேன் பிகின்ஸ்’ எது மாதிரியும் இன்றி, புது மாதிரியாக மிளிர்ந்தது. பட்ஜெட் 150 மில்லியன் டாலர். பாக்ஸ் ஆபீஸ் வசூல் 374 மில்லியன் டாலர்.

பேட்மேனின் அடுத்தடுத்த பாகங்களாக நோலன் இயக்கிய 'தி டார்க் நைட்’ (2008), 'தி டார்க் நைட் ரைஸஸ்’ (2012) படங்கள் இரண்டும் வசூலில் பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தன. நோலன், மெகா வசூல் படங்களின் இயக்குநர் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள பேட்மேனைப் பயன்படுத்திக்கொண்டார். அந்த வெற்றி, இன்செப்ஷன் (2010), இன்டர்ஸ்டெல்லர் (2014) என தனது சயின்ஸ்ஃபிக்‌ஷன் பரிசோதனைகளை மெகா பட்ஜெட்டில் சுதந்தரமாக மேற்கொள்ள வழிவகுத்தது.

அடுத்தவர்களது கனவுக்குள் நுழைந்து அவர்களது எண்ணங்களைத் திருடி விளையாடும் சயின்ஸ் மாஃபியாக்கள் குறித்த அதிவிநோத ஒன்லைன் 'இன்செப்ஷன்’. பட்ஜெட் 160 மில்லியன் டாலர். 825 மில்லியன் டாலராக பாக்ஸை நிறைத்தது. மனிதர்கள் வாழ மாற்றுக் கிரகத்தைத் தேடிச் செல்லும் ஒரு குழு, அந்தக் கிரகத்தில் இருக்கும் சில மணி நேரங்கள், இங்கே பூமியில் சில வருடங்களாகக் கரைந்துபோக... விண்வெளி வீரரான தந்தைக்கும், பூமியில் காத்திருக்கும் மகளுக்குமான பாசப் போராட்டம், உணர்வுகளின் இயல்போடு இயற்பியலையும் கலந்து செய்த காவியம். செலவு 165 மில்லியன் டாலர். வரவு 627 மில்லியன் டாலர்.

இப்படி தொட்டதெல்லாம் வெற்றி. ஹாலிவுட்டின் திரைமேதைகள் வரிசையிலும் நோலனுக்கு நாற்காலி கிடைத்துவிட்டது. திரைத் துறையில் கால் பதித்து 18 வருடங்களில் நோலன் அடைந்த இந்த உயரம் அசாத்தியமானது. இதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, திட்டமிட்டு உழைத்தல்.

'ஃபாலோயிங்’ படம் மூலம் கிடைத்த வரவேற்பு மங்கிப்போகும் முன்பே, 'மெமன்டோ’வுக்கான திரைக்கதையுடன் தயாரானார். 'முதல் வெற்றிக்குப் பின், அடுத்தது என்ன எனப் பலரும் கேட்பார்கள். அந்தச் சமயத்தில் எந்த முன்யோசனையும் இல்லாமல் இருக்கக் கூடாது. நமக்கான வாய்ப்பு இருக்கும்போதே, மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார் நோலன்.

உணர்வுபூர்வமான வசனங்கள் நோலனின் மகாபலம். 'விண்வெளி, காலம் இதை எல்லாம் கடந்த ஒரே விஷயம், காதல் மட்டும்தான்’ என்பது இன்டர்ஸ்டெல்லரில் வரும் வசனம். அதேசமயம், 'மாஸ்’ வசனங்களுக்கும் பஞ்சமே இருக்காது. 'நான் இருளில் பிறந்தவன். நீ இருளாகவே இருப்பவன்’ என பேட்மேன், வில்லனிடம் சொல்லும் வசனம். படத்தில் தேவை இல்லாமல் ஒரு வசனம்கூட வைக்க மாட்டார். உணர்வுகள் பேசும் இடத்தில் மொழிக்கு வேலை இல்லை என்பது நோலனின் மேக்கிங் மந்திரம்.

நம்பர் 1 கிறிஸ்டோபர் நோலன் - 03

'பேட்மேன்’ வரிசைப் படங்கள்தான் நோலனை அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் கொண்டுசேர்த்தன. ஆனால், அதிலும் நோலன் தன் பாணியை விட்டுக்கொடுக்கவில்லை. பாப்கார்ன் கொறித்தபடியே சூப்பர் ஹீரோ படங்களைப் பார்த்து ரசித்து பொழுதுபோக்கலாம் என்ற பொதுச் சிந்தனையை உடைத்தார். 'கெட்டவன்’, 'மக்கள் விரோதி’, 'தேசத்துரோகி’ என்ற ரெடிமேட் லேபிள்களோடு வில்லனை உலவ விடாமல், நெகட்டிவ் கதாபாத்திரத்துக்கும் வலுவான, உணர்வுபூர்வமான பின்னணிகளைக் கொடுத்தார். வலுவான திரைக்கதை, வளமையான தொழில்நுட்பம், வாய் பிளக்கவைக்கும் சாகசங்கள், யூகிக்க முடியாத திருப்பங்கள்... வரலாறு காணாத வெற்றி. இனி யார் எந்த சூப்பர் ஹீரோ படங்களை எடுத்தாலும், 'நோலனின் படம்போல இல்லை’ என ரசிகர்கள் ஒப்பிட்டு விமர்சிக்கும் அளவுக்கு முத்திரை பதித்துவிட்டார் நோலன்.

தனது நடிகர்களிடம்கூட கதையை முழுமையாகச் சொல்லாமல், சஸ்பென்ஸோடு வேலைவாங்குவது நோலனின் ஸ்டைல். தனது கதாபாத்திரங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை மிக நுட்பமாகச் சித்திரித்து, அந்தக் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளின் மூலமாகக் கதையை யோசிக்கவே முடியாத திருப்பங்களுடன் நகர்த்திச் சென்று அசரடிப்பார். குறிப்பாக, க்ளைமாக்ஸ் யூகிக்கவே முடியாதபடி அல்லது படம் முடிந்த பின் ரசிகர்களே யூகித்துக்கொள்ளும்படி இருக்கும்.

இத்தனை ப்ளாக் பஸ்டர்களுக்குப் பிறகும், உலகளாவிய ரசிகர்களின் அங்கீகாரத்துக்குப் பிறகும் நோலன் மீது வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனம், 'சாதாரண மனிதனுக்குப் புரியாத விதத்தில் படங்களை எடுக்கிறார். ரசிகர்களைக் குழப்பிவிடுகிறார்.’

அதற்கான பதிலாகத்தான் நோலன் இன்செப்ஷனில் பம்பரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் படத்தில் கனவு உலகிலும் நிஜ உலகிலும் சஞ்சரிக்கும் நாயகன், பம்பரத்தைச் சுற்றிவிடுவான். பம்பரம் கீழே விழுந்தால், அது நிஜ உலகம். விழாமல் சுற்றிக்கொண்டே இருந்தால், அது கனவு உலகம். சினிமா, கனவு உலகம். நோலனின் கனவு உலகப் பம்பரங்கள், நிஜ உலகில் ரசிகர்களின் மனதில் என்றென்றும் சுற்றிக்கொண்டே இருக்கும்!

விசித்திர நோலன்

நம்பர் 1 கிறிஸ்டோபர் நோலன் - 03

உலகமே வியக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் எடுக்கும் நோலன், செல்போன் உபயோகிப்பது இல்லை; இ-மெயில் பார்ப்பதும் அரிது; புதிய தகவல் தொழில்நுட்பங்களில் ஈடுபாடற்ற பழைமைவாதி.

நோலன், நிறக் குருடால் பாதிக்கப்பட்டவர். சிவப்பு, பச்சை வண்ணங்கள் அவருக்குத் தெரியாது.

Rory’s First Kiss, Oliver’s Arrow, Magnus Rex, Flora’s Letter  'நான் எப்போதும் ஒரு படத்தை அதன் பட்ஜெட்டை வைத்து அளவிடுவது இல்லை. அந்தப் படத்துக்காக நான், என் வாழ்க்கையின் எவ்வளவு காலத்தைச் செலவிடுகிறேன் என்பதை வைத்தே அளவிடுகிறேன்’ என்பது நோலனின் கோல்டன் ஸ்டேட்மென்ட்!

நோலன் பாணி

நோலன் படத்தின் ஆரம்பக் காட்சி, ஃபிளாஷ்பேக்காக அல்லது நடுவில் வரும் ஏதோ ஒரு காட்சியாக அல்லது க்ளைமாக்ஸாக இருக்கும்.

தனது மெயின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது, அவர்களது கைகள் ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பதுபோல ஆரம்பிப்பார்.

நம்பர் 1 கிறிஸ்டோபர் நோலன் - 03

அவரது அனைத்துப் படங்களிலும் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களைச் சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டிருக்கும்.

ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் தொடர்ச்சி இருக்காது. காட்சிகள் இயல்பான முடிவின்றி சட்டென வெட்டப்பட்டு, இன்னொன்றுக்குத் தாவும். ஃபிளாஷ்பேக்கினுள் ஃபிளாஷ்பேக் விரியும். ஒருபோதும் நேர்க்கோட்டில் கதை சொல்ல மாட்டார்.  

அவரது கதாபாத்திரங்களில் ஏதோ ஒன்று, மனநிலைப் பாதிப்புக்குள்ளானதாக இருக்கும். (உதாரணம்: 'மெமன்டோ’ நாயகனுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். 'இன்செப்ஷன்’ நாயகனுக்கு நிஜம் எது, கனவு எது எனத் தெரியாது.)

க்ளைமாக்ஸ் முடிந்த நொடியில்தான், படத்தின் பெயரைப் போடுவார்.