மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 17

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

''20 வருஷ ஆராய்ச்சியில, போன வாரம்தான் ஒரு பறக்கும் தட்டும், அதில் வேற்றுக்கிரகப் பிராணி ஒண்ணும் வசமா மாட்டினாங்க' 

- கண்ணாடிக்குள் சிரித்தார் வானியல் விஞ்ஞானி பைரவன்.

ஆச்சர்யத்தை கேள்வியாக்கினேன், 'எங்கே... நான் பார்க்க முடியுமா?'

மலை மீது ஆய்வுக்கூடம் அமைத்திருக்கிறார் பைரவன். தனிமையே துணைவி. கைக்கு எது கிடைத்தாலும் விதவிதமான சூப் செய்வதுதான் அவரின் ஒரே பொழுதுபோக்கு. அவரைச் சந்திப்பதைவிட, அதைச் சாப்பிடத்தான் பெரும்பாலும் என் வருகை.

'ம்ம்... காட்டுறேன். அதுக்கு முன்னாடி இந்த சூப்பைக் குடி!'

அஞ்ஞானச் சிறுகதைகள் - 17

கோப்பையை வாங்கி சூப்பை ஸ்பூனில் அள்ளிக் குடித்தபடி அவருடனே நடந்துகொண்டு, 'காளான் சூப்பா..?' என்றேன்.

குறுந்தாடியைக் கோணலாக்கிச் சிரித்தவர் அறையைத் திறந்தபடி, 'இந்த சூப்பை இதுவரை பூமியில் யாரும் சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள்' என்றார்.

எனக்கு களுக்கெனப் புரையேற பதறியபடி, 'சார்... அய்யய்யோ... அந்த வேற்றுக்கிரகப் பிராணியைத்தான் சூப் வெச்...' எனச் சொல்லி முடிப்பதற்குள், அறைக்குள் இருந்து அந்த வேற்றுக்கிரகப் பிராணி துள்ளி அவர் கைகளில் ஏறியது. அதை இடுப்பில் வைத்துக்கொண்டு, திரும்பிப் பார்த்துச் சிரித்தார். அது பித்தளைச் செம்பு          மூஞ்சியில், ஊதா கண்களை சிமிட்டியது.

கோப்பையும் குழப்பமுமாக நின்ற என்னைப் பார்த்து, 'குழந்தை மாதிரி என் கூடவே ஒட்டிக்கிட்டான். சுவாரஸ்யமான குழந்தை' - அதன் உச்சியை முகர்ந்தார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 17

'அப்போ... இந்த சூப் ஏது?’ என நான் (கிட்டத்தட்ட கத்தியபடி) கேட்டதைக் காதில் வாங்காமல், 'அந்தப் பறக்கும் தட்டு அப்படியே நம்மூர் காளான் மாதிரி சாஃப்ட்டா இருந்துச்சு' என்றார்!

கார்ப்பரேட் சித்தன்

''கார் வாங்க லோன் வேணுமா சார்?''என்றான் தொலைபேசி வங்கியாள்.

''எல்லாரும் கடன்'காரா’னு சொல்றதுக்கா?'' எனச் சிரித்தான் கார்ப்பரேட் சித்தன்!

பயமே வணக்கம்

நண்பர்களுடன் ஒரு பயணம் சென்றிருந்தேன். கர்நாடகாவின் துபாரேவில், யானைகள் முகாம். ஒரு படகு  எடுத்துக்கொண்டு காவிரி நதியைக் கடந்தால், ஒருசில நிமிடங்களில் அடையும் சின்னத் தீவில் இருக்கிறது முகாம்.

பாகன்கள், நதியின் ஆழம் இல்லா தொடுகரையில் சில யானைகளைப் படுக்கவைத்துக் குளிப்பாட்டினார்கள். யானைகளும் நீரை துதிக்கையால் பீச்சியடித்தும், கண்களை மூடிப் படுத்துக்கொண்டும் குளியலை உற்சாகமாக ரசித்தன.

இரண்டு குட்டி யானைகள், தங்கள் கரிய உடம்பில் மினுமினுக்கும் நீர் வழிதலுடன் கரையேறி வந்தன. அவற்றைப் பார்க்கும்போது மனதில் இனம்புரியாத ஒரு பரவசம் எழுந்தது. ஆளாளுக்கு அதைத் தொட்டும் தடவியும் தங்கள் அன்பைக் காட்டுகிறார்கள். 'நாங்க எத்தனை பேரை பார்த்திருக்கிறோம்...’ என்பதுபோல அவை தங்கள் சிறு காதுகளை விசிறியபடி கடந்துபோயின.

முகாம் உள்ளே சென்றபோது, யானைகளை அழைத்துக்கொண்டு பாகன்கள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்வதைப் பார்க்க முடிந்தது. பிரமாண்டமான அந்த உருவங்கள் உங்களைச் சுற்றி நடந்துகொண்டிருப்பது பிரமிப்பாக இருக்கும்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 17

சில யானைகளை, சுற்றுலா சவாரிக்குப் பயன்படுத்துகிறார்கள். பெரிய கயிறுகளை அதன் வாலுக்கு அடியிலாக விட்டும், வயிற்றுக்கு அடியில் சுற்றியும் முதுகில் உட்காருவதற்கான மரமேடை ஒன்றைக் கட்டிவைத்திருக்கிறார்கள். 10 பேருக்கு மேலே ஒரு யானையின் முதுகில் கூக்குரல் இட்டவாறு ஏறிப் பயணிக்கிறார்கள். அது மௌனமாக அரை கி.மீ தூரம் சுற்றிவந்து, தொடங்கிய இடத்திலேயே இறக்கிவிடுகிறது. யானைகளின் மௌனமான அந்த நடை, மனிதர்களிடம் சொல்ல எங்களுக்கு எதுவும் இல்லை என்பதைப்போல இருந்தது.

ஓர் இடத்தில் ஒற்றைக்கொம்பு உள்ள ஒரு யானையை நிற்கவைத்து அதற்கு வைக்கோல் பொதிகளைச் சுருட்டி உணவாக அளித்துக்கொண்டிருந்தார் ஒருவர். அது அமைதியாக‌ வைக்கோல் பொதிகளை தும்பிக்கையில் வாங்குவதும் வாய்க்குள் போட்டு மெல்வதுமாக இருந்தது. பார்வையாளர்கள் பக்கத்தில் நின்றும், அதன் நீளமான ஒற்றைக்கொம்பை தொட்டுக்கொண்டும் செல்ஃபி எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். யானைக்கு எரிச்சலாக இருக்கிறதா இல்லையா என்பதை, அதன் சாந்தமான கண்களில் என்னால் கண்டுணர முடியவில்லை.

நான் அதன் கால்களைக் கவனித்தேன். முன்னங்கால்கள்  சங்கிலியால் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு, அதன் தொடர்ச்சி பின்னங்கால்கள் வரை நீண்டு இருந்தது. அது நினைத்தால் ஒரு நொடியில் அந்தச் சங்கிலியைச் சிதறடிக்க முடியும். ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி, சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தது அது.

'யானைகளைக் குட்டிகளாக இருக்கும்போதே கடினமான சங்கிலிகளால் கால்களைப் பிணைத்துக் கட்டிப்போடுவார்கள். அது, முடிந்தவரை சங்கிலிகளை உடைக்க முயற்சிசெய்யும். குட்டியாக இருப்பதால், அதனால் உடைக்க முடியாது. பிறகு, மெள்ள மெள்ள அது மனதுக்குள் பதிந்து, சங்கிலிகளை மானசீகமாக ஏற்றுக்கொள்ளும். ஒருகட்டத்தில் வெறும் சணல் கயிற்றால் கட்டிப்போட்டால்கூட, அதை அறுக்க முயற்சி செய்யாது’ என்றான் நண்பன் ஒருவன்.

யானையின் கால்களில் கிடப்பது சங்கிலி அல்ல... மனிதனின் அகங்காரம் என ஒரு கணம் நினைத்தேன். அது கட்டிப்போடப்பட்டிருக்கிறது என்ற காரணத்தாலேயே அதன் தந்தங்களைத் தடவியபடி போட்டோ எடுத்துக்கொள்வதுதான் மனிதர்களின் வீரம். 20 ரூபாய் கொடுத்தால், உங்கள் சார்பாக ஒரு பொதி வைக்கோல் யானைக்கு ஊட்டப்படும். அவ்வளவு பிரமாண்டமாக‌ நம் முன்னே நிற்கும் அந்த இயற்கையின் படைப்புக்கு, 20 ரூபாயில் ஒரு பிடி உணவு அளிப்பதில் நமது ஈகோவைத் திருப்திப்படுத்துகிறோமா?

சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அந்த யானையின் துதிக்கையைத் தடவியபடி போஸ் கொடுக்கச் சொல்லி போட்டோ எடுத்தனர். ஒரு குழந்தை மட்டும் அதைச் செய்ய மறுத்து கண்களில் தெரியும் பயத்துடன் தள்ளி நின்று யானையைப் பார்த்துக்கொண்டிருந்தது. நான் யானையின் கண்களைப் பார்த்தேன். அது ஓரக்கண்ணால் அந்தக் குழந்தையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது!

விஷூவல் கார்னர்

மரணத்தின் கலைஞன்

டேமியன் ஹிஸ்ட். இவர், ஒரு பிரிட்டிஷ் ஆர்ட்டிஸ்ட்; வன்முறையின் கலைஞன். வாழ்க்கை,  மரணம் இரண்டும்தான் இவருடைய கலைப்படைப்புகளின் தீம். 'மரணத்தை யார்தான் விரும்புவார்கள்?’ என யோசிப்போம். ஆனால், இன்று வாழும் கலைஞர்களில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது இவருடைய படைப்புகள்தான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 17

'எ தௌசண்டு இயர்ஸ்’ என்ற அவருடைய படைப்பைப் பார்த்து பிரபல ஓவியர் பாகன் வியந்துபோய், 'பெயின்டிங் மட்டும்தான் 'கலை’ என நான் இருந்துவிட்டேன். டேமியன் போன்றோர் அந்த எண்ணத்தை உடைக்கிறார்கள்’ என்றார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 17

அவர் சொன்னதற்குக் காரணம் இருந்தது. டேமியன் ஆயிரக்கணக்கான ஈக்களின் முட்டைகளை பெரிய கண்ணாடிப் பெட்டி ஒன்றில் போட்டிருந்தார். கண்காட்சி நடந்துகொண்டிருக்கும் நாட்களிலேயே அவை வளர்ந்து வெளிவந்து, ஒரு மூலையில் உணவாக இருந்த மாமிசத்தைத் தேடிச் சென்றன. ஆனால், அந்த மாமிசத்தை நெருங்கும் முன்பு ஈக்களை ஈர்த்துப் பிடித்துக் கொல்லும் கருவியும் இருந்தது. சில ஆயிரம் ஈக்கள் மாமிசத்தை அடைந்தபோது, சில ஆயிரங்கள் கருவியிலும் மாட்டிக்கொண்டன. இப்படி வாழ்க்கையின் தத்துவத்தை உயிருள்ள ஒரு கலைப்படைப்பாகக் காட்சிக்கு வைத்திருந்த டேமியன், விமர்சனத்துக்கு உள்ளானார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 17

இறந்துபோன சுறா மீனை 'ஃபார்மல்டிஹைட்’ எனும் திரவத்தில் உறையச்செய்து, ஒரு பெட்டியில் அடைக்கப்பட்ட அவருடைய 'வாழும் மனதுக்கு மரணம் இல்லை’ என்ற ஒரு ஆர்ட் டிஸ்ப்ளேயில் ஆரம்பித்து, அந்த ஸ்டைலில் அவர் செய்துகொண்டிருக்கும் ஆர்ட் பீஸ்கள், இன்று உலக கலை ஆர்வலர்கள் மத்தியில் மிகப் பிரபலம். கன்றுக்குட்டி, ஆடு முதல் வரிக்குதிரை வரை, மரணத்தைக் கேள்வி கேட்டபடி உறைந்துபோய் நிற்கின்றன அவர் படைப்புகளில்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 17

லண்டன் சாச்சி கேலரி முதல் உலகின் பல்வேறு ஆர்ட் கேலரிகளில் அவர் படைப்புகள் இருக்கின்றன. வாழ்க்கையின் அர்த்தமின்மையை படைப்புகளில் சொல்லும் டேமியனுக்குத்தான், ஐரோப்பாவில் வாழும் பணக்காரக் கலைஞர்களில் முதல் இடம். இதுதான் வாழ்க்கையின் அர்த்தம்போலும்!