மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி ! - 1

மந்திரி தந்திரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

கேபினெட் கேமராபுதியது அதிருதுவிகடன் டீம், ஓவியம்: ஹாசிப் கான்

2000 - ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, பிற்பகல். போயஸ் கார்டனை ஆச்சர்யத்தோடு அண்ணாந்து பார்க்கிறார் செந்தில்பாலாஜி. பேன்ட் அணிந்து சட்டையை இன் பண்ணியிருந்தார். மொட்டை போட்டிருந்த தலையில் அப்போதுதான் கொஞ்சம் முடி எட்டிப் பார்த்தது. கரூர் ஒன்றியக் குழு தி.மு.க கவுன்சிலரான செந்தில்பாலாஜி, அ.தி.மு.கவில் சேர்வதற்காக வந்திருந்தார். ஜெயலலிதா முன்னிலையில் பவ்யமாக நின்று அ.தி.மு.கவில் ஐக்கியமானார். அன்றைக்கு 'மெட்டல் டிடெக்டர்’ சோதனைக்கு உள்ளாகிய செந்தில்பாலாஜி, இன்று சர்வசாதாரணமாகத் தோட்டத்துக்குள் உலா வரும் அளவுக்கு போயஸ் கார்டனின் செல்லப்பிள்ளை. ஒரு கட்டத்தில் முதலமைச்சர் ரேஸில் ஓடுபவராகவும் உயர்த்தப்பட்டார். ஜெயலலிதாவின் பதவிப் பறிப்புக்குப் பிறகு 'அடுத்த முதலமைச்சர் யார்?’ என்ற பட்டியலில் செந்தில்பாலாஜியின் பெயரும் இருந்தது. அவருடைய தாடியின் பின்னணி வேண்டுதல் அதுவாகவும் இருக்கலாம்!     

 கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி,  செந்தில்பாலாஜியின் சொந்த ஊர். கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, கரூர் அரசு கலைக் கல்லூரியில்

பி.காம் படிக்கப் போனார். அரசியல் ஆசை எட்டிப்பார்க்கவே, படிப்பைப் பாதியில் விட்டு விட்டு அரசியலில் குதித்தார். 1996ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் அவரால் சோபிக்க முடியவில்லை. 2000ம் ஆண்டில் அ.தி.மு.கவில் இணைந்த பிறகுதான், 'அரசியல் எஸ்கலேட்டர்’ பயணம் தொடங்கியது.

கரூர் தாந்தோன்றிமலை பெருமாள்தான் செந்தில்பாலாஜியின் குலதெய்வம். சனிக்கிழமை தவறாமல் பெருமாளுக்கு அட்டெண்டன்ஸ் போடுவார். 'வி.செந்தில்குமார்’ என்ற இயற்பெயரை 'வி.செந்தில்பாலாஜி’ என நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டார். 'குமார்’ துறந்து 'பாலாஜி’ சேர்ந்த பிறகு, சுக்ரதசை தொடங்கியது.  

மந்திரி தந்திரி ! - 1

அ.தி.மு.க மாணவர் அணிச் செயலாளராக இருந்த கலைராஜன் மூலம் முதல் லிஃப்ட் கிடைத்தது. அ.தி.மு.கவில் சேர்ந்த ஆறே மாதங்களில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர். 2004ம் ஆண்டு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர். 2006ல் எம்.எல்.ஏ ஸீட். 2007 மார்ச் 11ல் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், அடுத்த 10வது நாளில் மாவட்டச் செயலாளர்.

அரசியலில் ஏறுமுகத்தில் இருந்த செந்தில்பாலாஜிக்கு, அவர் செய்துவந்த ஜவுளி வியாபாரத்தில் நட்டம். கடனாளிகள் நெருக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே கடனில் தத்தளித்துக்கொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, தேர்தலில் செலவழிக்கப் பணம் இல்லை. நெருக்கமானவர்கள் உதவ... முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார். தி.மு.க ஆட்சியில் எம்.எல்.ஏ ஆனாலும், தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கையிலெடுத்தார். அதில் ஓர் ஆயுதம்தான், மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம். ஜே.சி.பி முன்பு படுத்து போராட்டம் நடத்தினார். ஆளும் கட்சி மற்றும் கரூர் கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக செந்தில் பாலாஜி கட்டிய முண்டாசு, போயஸ் கார்டனை எட்டியது. விளைவு, மாவட்டச் செயலாளர் பதவி பரிசாகக் கிடைத்தது. சசிகலாவின் உறவினர்களுடன் கைகோத்துக் கொண்ட பிறகு, கார்டனில் செம செல்வாக்கு. 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் கரூர் தொகுதிக்கு செந்தில் பாலாஜியின் பெயர் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. உபயம் சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தி கலியப்பெருமாள். சசிகலா உறவுகளின் துணையால், 2011, மே 16ம் தேதி முதல், அமைச்சராக சிவப்பு காரில் வலம் வரத் தொடங்கினார் செந்தில்பாலாஜி.

2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கும் முன்பு வரை செந்தில்பாலாஜியின் பொருளாதாரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதற்கு ஓர் உதாரணம்... அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான

மந்திரி தந்திரி ! - 1

நமது எம்.ஜி.ஆர்' நிறுவனம், 13.5.2010 தேதியில் கடிதம் ஒன்றை செந்தில்பாலாஜிக்கு அனுப்பியிருந்தது. 'ஏப்ரல் மாதம் பில் தொகையையும் சேர்த்து மொத்தம் 95,150 ரூபாய் நமது எம்.ஜி.ஆருக்கு பாக்கி வைத்திருக்கிறீர்கள். அதனால் பார்சல் நிறுத்தப்பட்டிருக்கிறது. பாக்கி குறித்து தகவல் தெரிவிக்க செல்போனில் தொடர்புகொண்ட போது, ஏனோ பேசுவதைத் தவிர்த்து வருகிறீர்கள். கடிதம் எழுதினால், அதற்கும் பதில் இல்லை. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் பாக்கியைச் செலுத்தாமலும் பதில் தெரிவிக்காமலும் உதாசீனப்படுத்துவது ’நமது எம்.ஜி.ஆர்' அலுவலகத்தையே அவமதிப்பதாகும்’ என அந்தக் கடிதத்தில் கடுமையாகக் குறிப் பிட்டிருந்தார்கள். காலத்தின் கோலம் அன்றைக்குக் கடனாளியாக இருந்த செந்தில்பாலாஜிதான், இன்றைக்கு நமது எம்.ஜி.ஆருக்கு படி அளக்கிறார். ஆம், இப்போது நமது எம்.ஜி.ஆருக்கு அதிக விளம்பரம் தருவது செந்தில்பாலாஜிதானாம்.

மந்திரி தந்திரி ! - 1

ஜெயலலிதாவுக்கே தவறான தகவல் தந்த சாமர்த்தியசாலி. 2011ம் ஆண்டு தேர்தலில் கரூர் தொகுதிக்கு செந்தில்பாலாஜி சம்பிரதாயமாக விண்ணப்பித்தபோது 'பி.காம்’ படித்திருப்பதாகச் சொல்லியிருந்தார். அவர் பெயரை வேட்பாளர் பட்டியலில் ஜெயலலிதா சேர்த்தபோது அதைக் குறிப்பிட்டும் இருந்தார். ஆனால், செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தபோது அவரின் 'குட்டு’ உடைந்துபோனது. 'பி.காம்’ படிப்பை கரூர் அரசு கலைக் கல்லூரியில் 16.4.95ல் இடைநிறுத்தம் செய்துவிட்டதாக வேட்புமனுவில் சொல்லியிருந்தார். ஆனால் படிக்காத படிப்பைப் படித்தாக போஸ்டரிலும் சட்டசபை ரெக்கார்டிலும் போட்டு தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டார்.  

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பல முறை அமைச்சரவை அசைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், செந்தில்பாலாஜியையோ, அவரது போக்குவரத்துத் துறையையோ அசைத்துப் பார்க்கக்கூட யாரும் எண்ணியது இல்லை. இப்படி உச்சாணிக் கொம்பில் இருப்பதற்கு கார்டனில் அவருக்குக் கிடைக்கும் மரியாதையும், சசிகலாவின் உறவுகளோடு ஏற்பட்ட நம்பிக்கையுமே காரணம் என்கிறார்கள்.

மந்திரி தந்திரி ! - 1

அரசியலில் ஏறுமுகம் கண்ட பிறகு தனக்கு எதிரானவர்களையும், எதிர்காலத்தில் எதிரியாக உருவெடுக்கலாம் என நினைப்பவர்களையும் அரசியல் சதுரங்கத்தில் வீழ்த்த ஆரம்பித்தார். சீனியர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடினார்கள்; ஒதுங்கினார்கள்; ஓரங்கட்டப் பட்டார்கள். கரூரைக் கட்டி ஆண்டுகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமி, தி.மு.கவுக்குத் தாவினார். ராஜா பழனிச்சாமி, வடிவேல், சாகுல் அமீது... என முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் ஓரங்கட்டினார். தனக்குப் போட்டியாக மாவட்டத்தில் யாரும் தலைதூக்கிவிடக் கூடாது என செந்தில்பாலாஜி ரொம்ப உஷாராகவே இருந்தார். ஜெயலலிதா விடம் செல்வாக்கு படைத்தவராக இருந்த தம்பிதுரையே தள்ளாட ஆரம்பித்தார். கரூர் எம்.பி தேர்தலில் பிரசாரத்துக்குப் போன தம்பிதுரைக்கு, ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின. ஊருக்குள் அனுமதிக்கவே மறுத்தார்கள். இதற்குப் பின்னால் உள்ளூர் அ.தி.மு.கவினரின் கைங்கரியம் உண்டு எனத் தொகுதிக்குள் பேச்சு எழுந்தது. சட்டசபைத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட செந்தில்நாதன் என்கிற இளைஞரை ஜெயலலிதாவே தேர்ந் தெடுத்திருந்தார். அவர் வெற்றி பெற்றுவிட்டால், கரூர் மாவட்டத்தின் அமைச்சர் பிரதிநிதித் துவத்தில் போட்டிக்கு நிற்பார் என்பதாலேயே  அவர் வீழ்த்தப்பட்டார் என்ற பேச்சு, கரூர் அ.தி.மு.கவில் கேட்கிறது. 'கரூர் அ.தி.மு.க’ என்றால் அது செந்தில்பாலாஜி மட்டும்தான். கலைராஜன், கலியப்பெருமாள் என செந்தில் பாலாஜிக்கு முகவரி தந்தவர்களே, இன்று அவரின் பார்வைக்காகத் தவம் கிடக்கிறார்கள்.  

நில அபகரிப்பில் தி.மு.க புள்ளிகள் வளைக்கப்பட்டபோது செந்தில்பாலாஜி மீது நில அபகரிப்பு புகார் கிளம்பியது. 'நிலத்தை அபகரிக்க என்னை மிரட்டினார்’ என செந்தில்பாலாஜிக்கு எதிராக புகார் கிளப்பி னார்கள் கரூரைச் சேர்ந்த தெய்வானையும் அவரது மகன் கோகுலும். செந்தில்பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்கும் கடத்திவைத்து அடித்து உதைத்து சொத்துக்களை அபகரித்து விட்டதாகச் சொல்லி கரூர் போலீஸில் புகார் கொடுத்தார் கோகுல். அதோடு கரூர் நீதி மன்றத்தில் 164ம் பிரிவில் ஒப்புதல் வாக்குமூலம் வேறு கொடுத்தார். செந்தில்பாலாஜிக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடைசியில் புகார் மனு தள்ளுபடி ஆனது. இப்போது கோகுல் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. ஆனால், அதற்குள் இன்னொரு கோகுல் விவகாரம் வெடித்தது. 'கோகுல் இல்லை என்றால், செந்தில்பாலாஜி வெற்றி பெற்றிருக்கவே முடியாது’ என்றனர். இந்த கோகுல், செந்தில் பாலாஜியின் சித்தி மகளைத் திருமணம் செய்தவர்; மைத்துனர். செந்தில்பாலாஜி அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் இருந்து அமைச்சராகும் வரை எல்லா நிலைகளிலும் கோகுல் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். அமைச்சரின் அனைத்து அரசியல் வேலைகளையும் கோகுல்தான் செய்து முடிப்பாராம். செந்தில்பாலாஜிக்குப் பக்கபலமாக இருந்த கோகுல், இப்போது உயிருடன் இல்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட உரசலில் பிரிந்துபோய் தி.மு.கவில் சேர்ந்த கோகுல், சில மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டார். கரூர் அரசு மருத்துவமனையில் இருந்த கோகுலின் உடலைப் பார்க்க வந்த செந்தில்பாலாஜியின் அம்மாவை, கோகுலின் மனைவி புழுதி வாரித் தூற்றியதை ஊரே வேடிக்கை பார்த்தது.

கரூர் அ.தி.மு.கவைச் சேர்ந்த ஏழு பேர் போலி மது விற்பனை செய்ததாகச் சொல்லி, 2008ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் சிலர் பல நேரங்களில் அமைச்சரைச்் சுற்றிலும் காணப்படுகிறார்கள். 'போலி மது கும்பலுக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் தொடர்பு உண்டு’ என பா.ஜ.கவின் பொன்.ராதாகிருஷ்ணனே ஒரு முறை திரி கொளுத்திப்போட்டார். அமைச்சரின் பெயருக்கு அடுத்து கரூரில் அதிகம் அடிபடும் பெயர் அசோக். செந்தில்பாலாஜியின் சகோதரர். அசோக்கை அவ்வளவு சீக்கிரத்தில் யாருமே நெருங்கிவிட முடியாது. அவருடைய கண் அசைவு இல்லாமல் அணுவும் அசையாது. தவிர, அமைச்சருக்கு எல்லாமுமாக வலம் வருபவர்கள் பொலிட்டிக்கல் பி.ஏக்களான திருவை தியாகராஜன், சுப்ரமணி, கான்ட்ராக்டர் மாயனூர் எம்.பி.எஸ். சங்கர், கோல்டுஸ்பாட் ராஜா, தானேஷ் என்கிற முத்துக்குமார், பி.கே.எஸ். முரளி என ஒரு பெரும் படை.

மந்திரி தந்திரி ! - 1

போக்குவரத்துத் துறையில் செந்தில்பாலாஜி சாதித்தது என்ன?

சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்கிற நீண்ட வருடக் கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுத்தது செந்தில்பாலாஜிதான். அந்த ஸ்மால் பஸ்களில் 'இரட்டை இலை’ சின்னத்தைப் போட்டு அங்கும்

மந்திரி தந்திரி ! - 1

அம்மா லைக்ஸ்' குவித்தார். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கிளப்பியபோது, 'வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு உணவு தரப் படைப்பது, வாழை இலை. உணவில் வாசத்தை ஏற்படுத்துவது, கருவேப்பிலை. உணவாகவே சமைக்கப்படுவது, கீரை இலை. சாப்பிட்ட பிறகு போடுவது, வெற்றிலை. வீட்டு வாசலில் அலங்கரிப்பது, மாவிலை. மனிதனின் நோய் போக்குவது, துளசி இலை. இப்படி தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்த இலைகளின் அடையாளம் இது’ என புது விளக்கம் சொன்னார் செந்தில்பாலாஜி.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ்தான் குடிநீர் தொடர்பான விஷயங்கள் வருகின்றன. ஆனால், அந்தத் துறையின் அமைச்சருக்குக்கூட 'அம்மா குடிநீர்’ பாட்டிலைக் கொண்டுவரும் யோசனை இல்லை. அடுத்த துறையில் மூக்கை நுழைத்து சாமர்த்தியமாகப் பெயரைத் தட்டிக்கொண்டு போய் 'வரலாறு முக்கியம் அமைச்சரே...’ என, காலர் உயர்த்திக் கொண்டார். குடிநீருக்குச் சம்பந்தம் இல்லாத போக்குவரத்துத் துறை, தண்ணீரைத் தயாரித்து ஊர் ஊராக விற்கிறது. 'அம்மா’, 'இரட்டை இலை’ என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார்.

ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வந்து அவர் கைகளால் தொடங்கிவைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே புதிய பஸ்கள் இயக்கப்படாமல் வைத்திருக்கும் கொடுமையும் நடக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை போக்குவரத்துக் கழகங்களுக்கு வாங்கப்பட்ட 260 புதிய பஸ்கள் இப்போது வரை இயக்கப்படவில்லை.

மந்திரி தந்திரி ! - 1

'சென்னையில் மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்’ என ஆட்சிக்கு வந்த புதிதில் அறிவித்தார் ஜெயலலிதா. 'சென்னையில் 115 கி.மீ தூரத்துக்கு மோனோ ரயில் ஓடும் திட்ட அறிக்கை தயாராகிவிட்டது. ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் அடிக்கல் நாட்டுவிழா’ என சொன்ன செந்தில்பாலாஜியின் கலர் மத்தாப்பு இன்னும் அணையவில்லை. அவருடைய நிர்வாகத் திறமையின்மைக்கு உதாரணம், பஸ் ஸ்ட்ரைக். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தப் பிரச்னை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. பல அம்சக் கோரிக்கைகளை வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டபோது, போக்குவரத்துத் துறையின் மெத்தனம் வெட்டவெளிச்சமானது.    

ஜெயலலிதா பச்சைக் கொடி காட்டி தொடங்கிவைத்த பல பஸ்கள், பல் இளிக்கின்றன. கரூரில் பாடி கட்டப்பட்ட பஸ்கள் டப்பா டான்ஸ் ஆடுகின்றன. சென்னை நகரில் மண்டை ஓடுகள்போல மாநகர பஸ்கள் காட்சி அளிக்கின்றன.

அரசின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடப்பது வாடிக்கை. ஆனால், 'போக்குவரத்துத் துறை அமைச்சரை மாற்ற வேண்டும்’ எனச் சொல்லிப் போராடியதுதான் வேடிக்கை. செந்தில்பாலாஜிக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் முஷ்டி முறுக்கினார்கள். சட்டசபைத் தேர்தலின்போது நாமக்கல்லில் பிரசாரம் செய்த ஜெயலலிதா, 'வாகன ஓட்டுநர்களுக்கான கல்வித் தகுதி தளர்த்தப்படும்’ என வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதியோடு லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதைத் தடுக்க வேண்டும் எனச் சொல்லி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் போர்க் கொடி தூக்கினார்கள். ஒருகட்டத்தில் அமைச்சரின் வீட்டையே முற்றுகையிட்டார்கள். 'போக்குவரத்துத் துறை அமைச்சரைக் கண்டுபிடித்தால், 10 லட்சம் பரிசு’ என அறிவித்தார்கள். ஆனால், எதற்கும் செந்தில்பாலாஜி அசைந்துகொடுக்கவில்லை.  

போக்குவரத்துக் கழகங்களுக்கு டிக்கெட் வழங்க கையடக்க இயந்திரம் வாங்கப்பட்டதில் முறைகேடு என புயல் வீசியது. புகாரை ஆணித்தரமாக மறுத்தார் அமைச்சர். ஆனால், அந்த இயந்திரங்கள் பல இடங்களில் இயங்காமல் மக்கர் பண்ணிக் கொண்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டிரைவர், கண்டக்டர் தேர்வு செய்யும் பணியில் ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாவட்டம்தோறும் புரோக்கர்கள்  முளைத்தனர். ஆனால், அமைச்சர் எதற்கும் அசங்கவில்லை மசங்கவில்லை.

மந்திரி தந்திரி ! - 1

போயஸ் தோட்டத்தின் பார்வை தன் மீது விழ, எதையும் செய்யத் துணிவார் செந்தில்பாலாஜி. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு என்ன செய்து அம்மாவிடம் 'ஸ்கோர்’ பண்ணலாம் என அமைச்சர்கள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தபோது, போக்குவரத்துத் தொழிலாளர்களின் ரத்தத்தைக் குறிவைத்தார் செந்தில்பாலாஜி. கின்னஸ் சாதனைக்கான ரத்ததானத் தேதி குறிக்கப்பட்டது. ரத்ததானம் என்ற பெயரில் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அதற்காக அன்றைக்கு பல பேருந்துகள் பஸ் டெப்போவிலேயே முடக்கிவைக்கப்பட்டன. பயணிகளைத் தவிக்கவிட்டு தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து, கின்னஸ் சாதனை படைத்தார் அமைச்சர். அந்தச் சான்றிதழை அம்மாவிடம் கொடுத்து சபாஷ் வாங்கினார்.

மந்திரி தந்திரி ! - 1

நால்வர் அணி'யில் இடம்பிடிக்க நடத்தப்பட்ட நாடகம் இது எனப் பேச்சுகள் கிளம்பின.

மூலவரைத் துதிபாடும் கடமையே கண்ணாக இருப்பதால், விமர்சனங்களைக் காதில் போட்டுக்கொள்ளக்கூட நேரம் இல்லை இந்த உற்சவருக்கு!

அன்று ஆர்ப்பாட்டம்...

இன்று ஆழ்கடல் அமைதி!

'மணல் கடத்தும் தி.மு.க எம்.பி பழனிச்சாமியையும் அதற்குத் துணைபோகும் தி.மு.க ஆட்சியையும் கண்டித்து, கரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்’ எனக் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அறிவித்தார் ஜெயலலிதா. 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நடந்த அந்தப் போராட்டத் துக்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் 'மணல் கொள்ளையில் ஈடுபடும் தி.மு.கவினரைக் கண்டித்துப் போராட்டம்’ எனப் போட்டு, கே.சி.பழனிச்சாமியின் பெயரை சாதுர்யமாகத் தவிர்த் திருந்தார் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி. இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசும் உடன் பிறப்புகள்,  'கே.சி.பழனிச்சாமியிடம் செந்தில் பாலாஜி காட்டிய விசுவாசத்தின் வெளிப்பாடு இது. அம்மாவே கே.சி.பழனிச்சாமியின் பெயரைச் சுட்டிக்காட்டிய போதும், செந்தில்பாலாஜி அடக்கிவாசிக்கக் காரணம் என்ன? கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அரவக்குறிச்சி தொகுதியில் நிறுத்தப்பட்ட செந்தில்நாதன் தோற்கடிப்பட்டதற்குப் பின்னணி என்ன? 'தி.மு.க எம்.எல்.ஏ கே.சி.பியை மணல் அள்ளும் ஜே.சி.பி’ எனத் தேர்தல் பிரசாரத்தில் போட்டுத்தாக்கினார் அம்மா. ஆனால் செந்தில் பாலாஜியோ, அது தொடர்பாக மெளனம் காக்கிறார். இப்போது கரூரில் மணல் கொள்ளை பற்றிய பேச்சே எழாமல் போனதற்கு என்ன காரணம்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். அமராவதி ஆற்றிலும் காவிரி ஆற்றிலும் மணல் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. மீடியா ஆட்களே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு ராணுவ கேந்திரம் போல அரண் போட்டுவைத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் மணல் தினமும் கொள்ளையடிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜே.சி.பி முன்பு படுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய செந்தில்பாலாஜி, இப்போது அப்படி ஒரு பிரச்னை தொகுதியில் இருப்பதாக காட்டிக்கொள்வதே இல்லை.

உள்ளூரில் ஒன் மேன் ஷோ!

கரூர் ஏரியாவில் இருக்கும் டி.வி சேனல்கள்கூட செந்தில்பாலாஜியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் பெயரில் இயங்கும் லோக்கல் சேனலில் 24ஜ்7 செந்தில் பாலாஜியின் தரிசனம்தான். கோயில்களில் யாகம் நடத்துவது பூஜைகள் செய்வது என செந்தில் பாலாஜியின் ஆன்மிக வழிபாடல்களும் அவர்

கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும்தான் அந்த சேனல்களில் லைவ் அடிக்கிறது. அம்மாவின் முகத்தைவிட செந்தில்பாலாஜியின் முகம்தான் அதிகம் தெரிகிறது!