மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 ஃப்ளாய்ட் மேவெதர் - 05

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

குத்துச்சண்டையில் லைட்வெயிட், ஃபெதர்வெயிட், ஹெவிவெயிட்... எனக் களத்தில் மோதும் வீரர்களின் எடைக்கு ஏற்ப பல பிரிவுகள் உண்டு. அதில் ஜூனியர் மிடில்வெயிட், சூப்பர் வெல்டர்வெயிட், வெல்டர்வெயிட் பிரிவுகளில் உலக சாம்பியன் ஃப்ளாய்ட் மேவெதர் (ஜூனியர்). அவரது வெயிட் சுமார் 68 கிலோ. ஆனால், அவரது ஹெட்வெயிட்  அளவிட இயலாதது. பணவெறி பிடித்தவர்; அவரது திமிர்ப்பேச்சுக்கு முன் யாரும் நிற்கவே முடியாது; பெண் பித்தர்; தன் கேர்ள் ஃப்ரெண்டுகளைக் கண்மூடித்தனமாக அடித்துத் துவைத்துவிட்டு அவ்வப்போது ஜெயிலுக்கு சென்றுவருவார்; விளம்பர விரும்பி; முகம் சுளிக்கவைக்கும் நடவடிக்கைகளின் ஏகபோக அதிபதி; எவ்வளவுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதைவிட அதிக அளவு வெறுப்பாளர்களையும் சம்பாதித் திருப்பவர்... இப்படிப்பட்ட மேவெதரின் வாழ்க்கையில் இருந்தும் நாம் விரும்பிக் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. இரண்டு காரணங்கள். 

ஒன்று... 1996-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி 2015-ம் ஆண்டு ஏப்ரல் வரை இவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இரண்டு... உலகின் அதிகம் சம்பாதிக்கும் நம்பர் ஒன் விளையாட்டு வீரர், மேவெதர்.

'நான் மிக மிக மோசமான பின்னணியில் இருந்து வந்தவன். என் வாழ்வில் இருந்து நான் சொல்ல நினைப்பது... கடினமாக உழைத்தால், அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நீங்களும் எதை வேண்டுமானாலும் அடைய முடியும்.’

1977-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள கிராண்ட் ராபிட்ஸ் நகரத்தில் 'பாக்ஸர்கள்’ நிரம்பியக் குடும்பத்தில் பிறந்தவர் மேவெதர். தந்தை மேவெதர் (சீனியர்), அவரது தம்பி ஜெஃப் மேவெதர், இன்னொரு நெருங்கிய உறவினரான ரோஜர் மேவெதர், மூவருமே நாடு அறிந்த பாக்ஸர்கள். ஆகவே மூன்றாவது வயதிலேயே ஜூனியர் மேவெதரின் பிஞ்சுக் கைகள் பாக்ஸிங் கிளவுஸ்களைப் போத்திக்கொண்டன. தொங்கவிடப்பட்டிருக்கும் பன்ச் பேகின் உயரம்கூட எட்டாத வயதில், பொடியன் மேவெதர் எம்பி எம்பிக் குத்த ஆரம்பித்தான்.

ஆனாலும் வளர்ந்த சூழ்நிலை சரி இல்லை. அம்மா போதைக்கு அடிமை. பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தால் ஹெராயின் ஏற்ற உபயோகித்த சிரிஞ்சுகள் தரையில் சிதறிக்கிடக்கும். அப்பாவுக்கு, போதைப்பொருள் விற்பது உபதொழில். சரியான மின்வசதிகூட இல்லாத நெருக்கமான வீடு. குழந்தைகள் மேல் அதிகம் அக்கறை காட்டாத பெற்றோர். வீடு அல்ல, நரகம்!

'சிறுவயதில் வீட்டில் இரவில் கண்ணீருடன் படுத்தபடியே எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன். நான் ஒருபோதும் சிகரெட் பிடிக்க மாட்டேன்; மது அருந்த மாட்டேன். சிறுவனாக இருக்கும்போது மட்டும் அல்ல... வளர்ந்த பிறகும்; வாழ்க்கை முழுவதும்.’

மேவெதருக்கு ஒரே ஆறுதல் அவனது பாட்டி. 'வருங்காலத்தில் நல்ல வேலைக்குப் போக வேண்டும்’ என மேவெதர் சொன்னபோது, 'வேண்டாம், பாக்ஸிங்கில் கவனம் செலுத்து. வேறு எதையும் யோசித்துக்கூடப் பார்க்காதே’ என உறுதியாகச் சொன்னார் பாட்டி. சீனியர் மேவெதர், தன் மகனுக்கு பார்க், சினிமா... என எந்தச் சந்தோஷத்தையும் வழங்கவில்லை. அவருடனேயே ஜிம்முக்கும் பாக்ஸிங் பயிற்சிக்கும் மட்டும் அழைத்துச் சென்றார். ஆகவே, குத்துச்சண்டை ஆர்வம் ஜூனியரின் மனதில் குத்துக்காலிட்டு அமர்ந்தது.

நம்பர் 1 ஃப்ளாய்ட் மேவெதர் - 05

பாக்ஸிங் பாரம்பர்யமுள்ள குடும்பம். மரபணுவிலேயே பாக்ஸிங் பிணைந்திருந்தது. வாய்ப்புகளும் அமைந்தன. ஆகவே, முன்னுக்கு வந்துவிட்டான் என மேவெதரின் வெற்றியை எளிமைப்படுத்துதல் தவறு. இயற்கையான திறமை என்பது உப்புபோல. விடாமுயற்சி, அபார உழைப்பு, தீவிர அர்ப்பணிப்பு இவற்றுடன் திறமை என்ற உப்பும் கலக்கும்போதுதான் சுவையான உணவு கிடைக்கிறது என்கிற தெளிவு மேவெதருக்கு சிறுவயதிலேயே இருந்தது.

இருந்தாலும் சில இரவுகள் பயமுறுத்தின. 'நான் நேற்றைய போட்டியில் தோற்றுவிட்டேன்’ என காலையில் கண்ணீருடன் எழுவான். பின்பே அது கனவு எனப் புரியும். மனதை ஏதோ ஒரு பயம் கவ்வும். அடுத்த சில நிமிடங்களில் மேவெதர் பயிற்சிசெய்யக் கிளம்பிவிடுவான். தினமும் மைல்கணக்கில் ஓட்டப் பயிற்சி; மற்ற நேரங்களில் ஜிம்; ஓயாது ஸ்கிப்பிங்; ஓய்வெடுக்கும்போதும் கைகள் காற்றைக் குத்திக்கொண்டிருக்கும்.

சீனியர் மேவெதர், போட்டியின்போது குத்து வாங்காமல் விலகுவது / தடுப்பது எப்படி என்ற நுட்பங்களை அறிந்த கில்லாடி. ரிங் என அழைக்கப்படும் களத்தில் எதிரியைவிட அதிவேகமாகச் செயல்படுவது எப்படி என அறிந்த வித்தகர். தந்தையின் வித்தைகள் மகன் மனதில் விதைகளாக விழுந்தன. 'இனிமேல் பாக்ஸிங் மட்டுமே. படிப்பு உதவப்போவது இல்லை. பாக்ஸிங்தான், எனக்குப் பணம் கொடுக்கப்போகிறது; என்னை உயரத்தில் வைக்கப்போகிறது’ என தன் பதின்வயதில் தீர்க்கமான முடிவெடுத்த ஜூனியர் மேவெதர், உயர்பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டான். சிறுவயதிலேயே உலகத்தின் பணக்கார மனிதனாக வேண்டும் என்ற ஆசை மேவெதருக்குள் இருந்தது. அதை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்ற புரிதலும் இருந்தது.

கோல்டன் கிளவுஸ் போட்டிகள் அமெரிக்காவில் தேசிய அளவில், பல நகரங்களில் நடக்கும் குத்துச்சண்டைப் போட்டிகள். மேவெதர் அவற்றில் கலந்துகொள்ள ஆரம்பித்தான்.

12 வயதிலேயே 18 வயது வீரருக்குரிய அனுபவத்துடன் களத்தில் அசத்தினான். அவனது வேகம் அசாத்தியமானதாகத் தோன்றியது. வயதில் மூத்த எதிரி வீரர்களும் மேவெதர் விட்ட பன்ச்களில் விதிர்விதிர்த்துப்போயினர். வெற்றிகள் அவனிடம் தஞ்சம் அடைந்தன. சோதனைகளுக்கும் பஞ்சம் இல்லை. 1993-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிறைக்குப் போனார் சீனியர் மேவெதர். மகன், சோகங்களை எல்லாம் விழுங்கிக்கொண்டு போட்டிகளுக்குச் சென்றான். 'என் கையில் ஓரளவு பணம் சேர ஆரம்பித்த பின், நான் யாரையும் நம்பியிருக்கவில்லை. என்னை நம்பினேன். என்னை மட்டுமே!’

நம்பர் 1 ஃப்ளாய்ட் மேவெதர் - 05

விளைவு, 1993, 1994, 1996 என மூன்று ஆண்டுகளும் வெவ்வெறு எடைப் பிரிவுகளில் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் மேவெதர். அமெச்சூர் வீரராக மேவெதர் களம் இறங்கியவை மொத்தம் 90 போட்டிகள். அதில் 86-ல் வெற்றி.  ’Pretty boy’ என்ற அடைமொழி மேவெதருடன் ஒட்டிக்கொண்டது.

1996-ம் ஆண்டு. அட்லாண்டா ஒலிம்பிக்ஸ். 19 வயது மேவெதர், 57 கிலோ எடைப் பிரிவில் நிச்சயம் தங்கம் வெல்வார் என அமெரிக்கா நம்பியது. கால் இறுதி வரை வெற்றிக் குத்தில் குழப்பம் இல்லை. அரை இறுதி (90-வது போட்டி). எதிரில் மோதியவர் பல்கேரியாவின் செராஃபிம் டொடுரோவ். கடும் மோதல். மேவெதரின் குத்துகள் நம்பிக்கையூட்டின. மூன்று சுற்றுகளின் முடிவில் ரிங்கில் ரெஃப்ரி வெற்றிபெற்றவரை அறிவிக்கும் சமயத்தில், மேவெதரின் கையை உயர்த்தினார். ஆனால், வெற்றியாளராக மைக்கில் அறிவிக்கப்பட்டதோ டொடுரோவின் பெயர். 109 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வென்றதாகச் சொல்லப்பட்டது. குழப்பம். சர்ச்சை. (போட்டியைக் காண : www.youtube.com/watch?v=yo3Ar538Sf4)  'நடுவர்கள் பாரபட்சமாக நடந்துகொண்டனர்; மேவெதர் விட்ட பன்ச்கள் சில, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை’ என அமெரிக்க வீரர்கள் எதிர்ப்பைக் காட்டினர். சர்வதேச நடுவர் குழுவில் இருந்த அமெரிக்கர் ஒருவர் கண்டனம் தெரிவித்து, தன் பதவியை ராஜினாமா செய்தார். தங்கம் எதிர்பார்த்துச் சென்ற மேவெதர் வெண்கலத்தோடு வீடு திரும்ப நேரிட்டது. அதுதான் அவர் வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பமும்கூட.

மேவெதருக்கும், யாரோ தன்னை பன்ச் பேகில் அடைத்து வைத்துவிடாமல் குத்திக்கொண்டே இருந்ததுபோல தோன்றியது. உண்மையில் இது தோல்வி அல்ல. ஆனால், உலகம் இதை என் தோல்வியாகத்தான் பார்க்கிறது. இனி, தோல்வி என்னைச் சீண்டக் கூடாது... ஒருபோதும்! வெற்றியாளனாக மட்டுமே நான் அறியப்பட வேண்டும். எப்போதும்! மேவெதர் தன் வாழ்வைப் புரட்டும் முடிவை அப்போது எடுத்தார். 'இனி நான் அமெச்சூர் பாக்ஸராக இருக்கப்போவது இல்லை. புரொஃபஷனல் பாக்ஸராக விளையாடப்போகிறேன்.’

இங்கு... சிறு குறிப்பு ஒன்று. புரொஃபஷனல் பாக்ஸிங்  என்பது நாட்டுக்காக விளையாடுவது அல்ல. தனிப்பட்ட முறையில் பணப் பரிசுக்காக விளையாடுவது. இதை நடத்த தனியே அமைப்புகள் (IBF, WBA, WBC, WBO, IBO, WPBF)  இருக்கின்றன. வீரர்களுக்கான ஒப்பந்தம், போட்டித்தொகையை நிர்ணயிப்பது, சாம்பியன்ஷிப் பெல்ட், பட்டங்கள், விளம்பரப்படுத்துதல், ஒளிபரப்பு உரிமை, பெட்டிங் என பல்வேறு அம்சங்கள்கொண்ட தனி உலகம். போட்டிகளுக்கான விதிகள் அமெச்சூர் பாக்ஸிங்கில் இருந்து மாறுபட்டவை. அதிகபட்சம்

12 சுற்றுகள். ஆரம்பச் சுற்றுகளிலேயே அடிதாங்க முடியாமல் ஒரு வீரர், கோழையாகக் கும்பிடு போட்டு விலகலாம். விழும் 'பன்ச்’கள் அபாயகரமானவை. தாடை எலும்பு நொறுங்குவது முதல் சிற்சில சமயங்களில் 'பாடை’ கட்டப்படுவது வரை அரங்கேறலாம். ஏனென்றால், புரொஃபஷனல் பாக்ஸிங்கில் 'ஹெட் கியர்’ எனும் தலைக்கவசம் அணிதல் கூடாது.

'குத்துகள் வாங்குபவன்தான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். நான் எதிரிக்குக்  குத்துகளை வாரி வழங்கப் பிறந்தவன்’ என்றபடி சீறிக் கிளம்பினார் மேவெதர். புரொஃபஷனல் பாக்‌ஸராகக் களம் இறங்கிய முதல் போட்டியிலேயே மெக்ஸிகோவின் அறிமுக வீரரான ரோபர்டோவை துவம்சம் செய்தார். இரண்டாவது சுற்றிலேயே நாக்அவுட். 1998-ம் ஆண்டு வரை மேவெதர் மொத்தம் 19 போட்டிகளில் கலந்துகொண்டார். அனைத்திலும் வெற்றி. பண ருசி கண்ட பூனை மீண்டும் மீண்டும் ஆக்ரோஷத்துடன் களம் இறங்கியது.

மேவெதருக்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே சென்றனர். கூடவே, அவரை வெறுப்பவர்களும். 'நீங்கள் என்னை விரும்புகிறீர்களா, வெறுக்கிறீர்களா என்பது விஷயமே அல்ல. எப்படியும் என் போட்டியைப் பார்க்கத்தான்போகிறீர்கள்’ என்றபடி ரிங்கில் சுற்றிச் சுழன்றார் மேவெதர். அவர் களம் இறங்கும் நாட்களில் அமெரிக்கர்களும், பிற தேச பாக்ஸிங் ரசிகர்களும் மற்ற வேலைகள் அனைத்தையும் மறந்தனர். 'பாக்ஸிங்கின் மிகச் சிறந்த வீரராக, தன்னிகரற்றவராக மேவெதர் நிலைத்துநிற்கப்போகிறார்’ எனப் போட்டி வர்ணனையாளர்கள் கொண்டாடினார்கள். அவர் காட்டில் டாலர் மழை. உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள்... உயரிய விருதுகள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மேவெதரா!

அதற்குப் பிறகு மேவெதர் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் மட்டுமே கலந்துகொள்ள ஆரம்பித்தார். ஆனால், அந்தப் போட்டிகளுக்காக வருடம் முழுவதும் தன்னைத் தீவிரமாகத் தயார்படுத்திக்கொண்டார். போட்டிக்கு முன்பு எதிரியின் பழைய போட்டி வீடியோக்களைப் பார்த்து அதற்கு ஏற்ப வியூகம் அமைக்கும் வழக்கம் மேவெதருக்குக் கிடையாது. ரிங்கில் இறங்கிவிட்டால், எதிரி என்ன நினைக்கிறான் என உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்ப அதிவேகமாகச் செயல்படுதல், எதிரி தான் திட்டமிட்டதைச் செயல்படுத்தும் முன்னரே, தன் சாதுர்யத் தாக்குதலால் அவனை நிலைகுலைய வைத்தல், எதிரி தாக்கவரும்போது தன் இடது தோளை உயர்த்தி, ஒரு குத்துகூட வாங்காமல் தன் லாகவமான அசைவுகளால், கால்களின் நகர்வுகளால் தப்பித்து, எதிர்பாராத கோணத்தில் எதிரிக்கு ஏராளமான குத்துகளை வழங்கி அவனை மனதால், உடலால் பலவீனப்படுத்துதல் போன்றவை மேவெதரின் கள வெற்றிச் சூத்திரங்கள். 'எப்போது நான் ரிங்கில் இறங்கினாலும், என் திறமை அனைத்தையும் அங்கே களம் இறக்குவேன்!’

2007-ம் ஆண்டு மே மாதம். ஆறு எடைப் பிரிவுகளில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஆஸ்கர் டி லா ஹோயா என்ற ஜாம்பவானுடன் மேவெதர் மோத ஏற்பாடுகள் நடந்தன. 'தோற்கடிக்கவே முடியாத மேவெதர், முதன்முதலில் மூக்கு உடைபடப்போகிறார்!’ என்றும் செய்திகள் கிளம்பின. ஹெச்.பி.ஓ சேனல் போட்டிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்றியது. உலக வரலாற்றில் அதுவரை இல்லாத அளவில் ஒரு பாக்ஸிங் நிகழ்ச்சியின் தொலைக்காட்சி வருமானம் மட்டும் 120 மில்லியன் டாலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆஸ்கர் ஜெயித்தால் 58 மில்லியன் டாலர்; மேவெதர் ஜெயித்தால் 25 மில்லியன் டாலர் எனப் பரிசு ஒப்பந்தம் போடப்பட்டது.

போட்டியின் ஆரம்பச் சுற்றுகளில் ஆஸ்கரின் கை ஓங்குவதுபோல தெரிந்தது என்றாலும் போகப் போக மேவெதரின் 'பன்ச்’கள் பேசின. 12 சுற்றுகளின் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் மேவெதர் வென்றார். (போட்டியைக் காண: www.youtube.com/watch?v=1KhBzF6UX_0)  'என் மீதி வாழ்க்கையை இதே தோல்வியுடன் வாழ்ந்து தீர்க்க வேண்டும்’ என்றார் நொந்துகொண்டார் ஆஸ்கர். 'இந்த யுகத்தின் மிகச் சிறந்த போட்டியில் நான் வென்றுவிட்டேன்’ என மகிழ்ந்த மேவெதர், அடுத்த வெற்றிக்குப் பின் 2007-ம் ஆண்டு இறுதியில், 'பாக்ஸிங்கில் நான் சாதிக்க இனி எதுவுமே இல்லை’ என அசால்ட்டாகத் தன் ஓய்வை அறிவித்தார். பொழுதுபோக்காக டி.வி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டார். ரெஸ்லிங் களத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்தார்.

களமாடிய கால்களும் கிளவுஸ் அணிந்த கைகளும் சும்மா இருக்குமா?! மேவெதர் 2009-ம் ஆண்டு மே மாதம் மீண்டும் ரிங்கில் களம் இறங்கினார். 21 மாத ஓய்வு அவரது உத்வேகத்தைக் கொஞ்சம்கூட குறைக்கவில்லை. தீவிர முயற்சி...  தீராத பயிற்சி அதே அதிரடி வேகத்தைத் தக்கவைத்திருந்தன. 'தகுதியான எதிரிகள் நிச்சயம் தேவை. அவர்களே எனக்கு மேலும் மேலும் உத்வேகம் கொடுக்கிறார்கள். என் பயிற்சியைத் தீவிரமாக்குகிறார்கள்’ என அடுத்தடுத்த போட்டி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

மேவெதரின் செகண்ட் இன்னிங்ஸில் எதிரிகள் எதிரில் எமனைக் கண்டார்கள். காக்கக் காக்க மனோதிடம் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்கத் தாக்க தடையறத் தாக்க, பார்க்கப் பார்க்க எதிரியின் கண்பயம் பார்க்க, மெக்ஸிகோவின் ஜூவானும், அமெரிக்க விக்டரும், மார்தட்டி வந்த அர்ஜென்டினா மார்கோஸும், ராபர்ட்டும் ஷானும் இன்னும் பலரும், மேவெதர் பெயர் சொன்னால் இடிவிழுந்ததுபோல ஓடினார்கள்.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மேவெதர் விளையாடிய புரொஃபஷனல் போட்டிகள் 47. ஒன்றில்கூட தோல்வி இல்லை. அதில் 26 நாக்-அவுட் வெற்றிகள். ஃபோர்ப்ஸ்  பத்திரிகை வெளியிட்டுள்ள சென்ற ஆண்டுக்கான உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் வரிசையில் முதல் இடத்தில் அமர்ந்திருக்கிறார், விஷீஸீமீஹ் மேவெதர். ஆம், அவர் தன் பெயரை அப்படித்தான் மாற்றிக்கொண்டுள்ளார். ஃபோர்ப்ஸ் சொல்லியிருக்கும் அவரது சொத்து மதிப்பு 105 மில்லியன் டாலர். லாஸ் வேகாஸில் 22 ஆயிரம் சதுர அடியில் ஒரு மாளிகை, பிரைவேட் ஜெட், எண்ணற்ற காஸ்ட்லி சொகுசு கார்கள், ஒரு நாளின் நிமிடங்களின் எண்ணிக்கையைவிட அதிகமான வாட்ச் கலெக்‌ஷன். டாம்பீகத்தின் நவீன ஐகானாகத் திகழும் மேவெதர் சொல்லும் வார்த்தைகள், 'நான் சம்பாதித்த அனைத்துமே முறையானவை. வெறுமனே உழைத்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடும். உழைக்காமல் அனுபவிப்பவர்களும் காணாமல்போய்விடுவர். நான் உழைக்கிறேன்; சம்பாதிக்கிறேன்; அனுபவிக்கிறேன்!’

சில பல கேர்ள் ஃப்ரெண்டுகள். யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், அவர்கள் மூலமாக நான்கு குழந்தைகள் உண்டு. எந்தத் தோழியுடனும் மேவெதர் அதிக காலம் சேர்ந்து இருந்தது இல்லை. காதல் கசந்து, காமம் கரைந்து ஏதுமற்ற ஒரு பொழுதில் மேவெதரின் மனத்தில் வன்முறை கரைபுரண்டோடும். ரிங் மாற்றிக்கொள்ளாத தோழிகளிடம் பாக்ஸிங் 'ரிங்’கில் காட்டும் வீரத்தைப் பிரயோகிப்பார். வழக்கு. விசாரணை. சிறை தண்டனை. கடைசியாக 2012-ம் ஆண்டு ஜெயிலுக்குச் சென்று வந்த மேவெதர் சொன்ன வார்த்தைகள்... 'பாக்ஸிங் எளிதானது. வாழ்க்கை கடினமானது’!

உலக அளவில் பாக்ஸிங்கில் 'தோற்கடிக்கப்பட முடியாதவன்’ என்ற பெருமை, இன்று வரை மேவெதருக்கு மட்டுமே நிலைத்திருக்கிறது. உலகின் ஆகச்சிறந்த பாக்ஸராக நிமிர்ந்து நிற்கிறார்.

எதுவும் நிலையற்றதல்லவா?! நாளை ஏதாவது ஒரு போட்டியில் மேவெதரின் வெற்றி வானிலை மாறக்கூடும் அல்லவா?! அதற்கு அவர் சொல்லும் பதில்... 'என் வெற்றிகளுக்குக் காரணம் நான் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறேன். என்னை ஒருவன் வெல்ல நினைத்தால், அவன் என்னைவிட மிக மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி யாரும் இங்கு இல்லை!’

வேகம்... வேகம்... வேகம்!

நம்பர் 1 ஃப்ளாய்ட் மேவெதர் - 05

* குழந்தைகளுடன் பொழுதுபோக்குவதும் டேபிள் டென்னிஸ் விளையாடுவதும் மேவெதருக்குப் பிடித்த விஷயங்கள்.

* ராப் பாடகரான 50 சென்ட், மேவெதரின் நெருங்கிய நண்பர். மேவெதரின் புகழ் பரப்பும் புராஜெக்ட்களைச் செய்துவருகிறார்.

* மற்ற பல பிரபலங்களைப்போல மேவெதர் தன் உடலில் எந்த டாட்டூக்களும் வரைந்துகொள்ளவில்லை. 'என் உடல் இயல்பான அழகுடன் இருப்பதையே விரும்புகிறேன்’ என்பார்.

*  ஆறு துண்டு இறைச்சி, பாஸ்தா, நிறையக் காய்கறிகள், உருளைக்கிழங்கு, சிக்கன்... தீவிரப் பயிற்சிக்குப் பிறகு மேவெதரின் வழக்கமான உணவு இது. அதிலும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் இயற்கையான புல், தழைகளை உண்டு வளர்ந்த கால்நடைகளின் இறைச்சி மட்டுமே!

* ஸ்கிப்பிங், பன்ச் பேகை குத்தும் பயிற்சி, ஸிட்அப்ஸ், புல்அப்ஸ்... எதிலும் எப்போதும் மேவெதர் வேகம்தான். இந்த அவரது பயிற்சியைக் கண்டு  மலைத்துப்போன எதிரிகளே ஏராளம். (மேவெதரின் பயிற்சி வீடியோ: www.youtube.com/watch?v=SOqbYk8phRA )

தந்தை Vs மகன்

மேவெதர் சீனியருக்கும் - மேவெதர் ஜூனியருக்குமான முட்டல் மோதல்கள் எப்போதுமே

நம்பர் 1 ஃப்ளாய்ட் மேவெதர் - 05

பரபரப்பானவை. தந்தையும் மகனும் எப்போது ஒட்டிக்கொள்வார்கள், எப்போது வெட்டிக்கொள்வார்கள் என்பது தெரியாது. 'மேவெதர் ஜூனியரை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்தது நான் அளித்த பயிற்சிகளே’ என தந்தை சொல்வதும், 'நான் சுயமாகவே வளர்ந்தேன்’ என மகன் மறுப்பதும் வாடிக்கை. மேவெதர் சீனியர், ரோஜர் மேவெதர் மற்றும் சிலர், மேவெதர் ஜூனியரின் பயிற்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், மேவெதர் பயிற்சியாளர்களிடம் எப்போதும் அறிவுரையை எதிர்பார்ப்பது இல்லை!

 மேவெதர் தி கிரேட்!

நம்பர் 1 ஃப்ளாய்ட் மேவெதர் - 05

'முகமது அலியைவிட, சுகர் ரே ராபின்ஸனைவிட நீங்க சிறந்த பாக்ஸரா?’ என்ற கேள்வி மேவெதரிடம் கேட்கப்பட்டபோது, 'இல்லையா என்ன? முகமது அலி, ராபின்சன் ஆகிய லெஜெண்ட் வீரர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் காலத்தில் அவர்கள் நிறைய விளையாடி, நிறைய வெற்றிகளைப் பெற்றிருக்கலாம். ஆனால், இன்றைய காலம், களம் வேறு. முகமது அலியும் ராபின்சனும் என்னைவிடச் சிறந்தவர்கள் என யாரும் என்னை மூளைச்சலவை செய்துவிட முடியாது. நானே சிறந்தவன்; வேறு யாரும் கிடையாது’ - இது ஃப்ளாய்ட் மேவெதரின் பதில்.