“நாலு வருஷம் ஐ.டி வேலை. அங்கே உள்ள பாலிட்டிக்ஸை தாங்க முடியாமல் வேலையை உதறிட்டு, ஸ்கூல் டீச்சரா போனேன். ஆனால், கார்ப்பரேட் பாலிட்டிக்ஸைவிட ஸ்கூல் பாலிட்டிக்ஸ் அதிகமா இருந்துச்சு. அங்கிருந்தும் வெளியேறினேன். இப்போ, எனக்குப் புடிச்ச மாதிரி சொந்த பிசினஸ் ஒரு பக்கம்; குழந்தைகளுக்கான ஆக்ட்டிவிட்டி சென்டர் இன்னொரு பக்கம்னு சந்தோஷமா பயணிச்சுட்டிருக்கேன்” - சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த தீபிகாவின் குரலில் அவ்வளவு பரவசம். குழந்தைகளுக்கான 'ஜூலா' என்ற தனது ஆக்ட்டிவிட்டி சென்டர் குறித்து நம்மிடம் பகிர்கிறார்.
“என் நேட்டிவ் தஞ்சாவூர். படிச்சது பி.டெக். 2008-ம் வருஷம், டி.சி.எஸ்ல வேலை. நாலு வருஷம் கடுமையா உழைச்சாலும் மனசுக்குத் திருப்தி இல்லை. வேலையை விட்டுட்டு 2012-ம் வருஷம் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு ஸ்கூல்ல டீச்சரா சேர்ந்தேன். குழந்தைகளோடு இருக்கிறது சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அங்கேயும் சில பாலிட்டிக்ஸைப் பார்த்து வெறுத்துப்போச்சு. கை நிறைய சம்பளம் கிடைச்ச ஐ.டி வேலையையே தூக்கிப் போட்டவள், இந்த வேலையையும் விடறதுன்னு நிமிஷத்தில் முடிவுப்பண்ணி, என் கணவரிடம் சொன்னேன். கொஞ்சமும் தயங்காமல், ‘உனக்கு எது சரின்னு தோணுதோ, அதைச் செய்'னு சொல்லிட்டார். அவரும் ஐ.டி ஸ்டாஃப்தான். என் தம்பியும் எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருந்தான். அவனோடு சேர்ந்து, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸை ஆரம்பிச்சேன். அது நல்லபடியா போய்ட்டிருக்கு. என் சொந்தக்காலில் நிற்கிறது கெத்தா இருக்கு'' என்று பெருமிதமான குரலில் சொல்கிறார் தீபிகா.
அவர் எடுத்துவைத்த அடுத்த அடி, அழகானது. அதுதான் 'ஜீலா சென்டர்'. (Jhoola)
''டீச்சரா இருந்தபோது குழந்தைகளோடு இருந்த நினைவுகள் மனசுக்குள் ஓடிட்டே இருந்துச்சு. படிப்பு என்கிற பெயரில் சின்னக் குழந்தைகள் ஸ்கூல்ல எந்த அளவுக்கு டார்ச்சர் ஆகறாங்கன்னு பார்த்தவள் நான். அதனால், பாடங்களோ, புத்தகங்களோ இல்லாத ஒரு டியூஷன் சென்டரை ஆரம்பிச்சேன். அதுதான் 'ஜூலா.'' இதை, டியூஷன் சென்டருன்னு சொல்றதைவிட ஆக்ட்டிவிட்டி சென்டர்னு சொல்றதுதான் சரியா இருக்கும். இங்கே பாடப்புத்தகங்களோ, ஹோம் வொர்க், எக்ஸாம் எதுவுமே கிடையாது. நான் குழந்தையா இருந்தபோது, என் பாட்டி வீட்டில் எப்படி ஓடி ஆடி விளையாடினேனோ அதே சூழலை இந்த சிட்டி குழந்தைகளுக்குக் கொடுக்க நினைச்சேன். 2015-ம் வருஷத்தின் கடைசியில பிளான் பண்ணினேன். முதலில், சம்மர் கேம்ப் ஒண்ணு ஆரம்பிச்சு, 'ஹாலிடே அண்டு கிராண்ட்மா' என்கிற புரோகிராம் பண்ணினேன். சென்னை அப்பார்ட்மென்ட் குழந்தைகள் அக்கம்பக்கத்துக் குழந்தைகளையே தெரிஞ்சுக்காமல் இருக்காங்க. கேட்ஜெட்ஸ்தான் அவங்களின் பொழுதுபோக்கா இருக்கு. அதையும் இந்த ஜூலா மூலமா மாற்ற நினைச்சேன்” என்கிறார் தீபிகா.
அதென்ன ஜூலா?
“ஜூலான்னா, 'ஊஞ்சல்'னு அர்த்தம். குழந்தைகளுக்கு ஊஞ்சல் ரொம்ப பிடிக்கும் இல்லியா? அதனால் இந்தப் பெயர். தினமும் சாயந்திரம் ஃபைவ் டு செவன் கிளாஸ். இதுவரை 50 குழந்தைகள் தொடர்ச்சியா வந்துட்டிருக்காங்க. நம் பாரம்பர்ய விளையாட்டுக்களான பாண்டி, கண்ணாமூச்சி, கபடி, நொண்டி, பல்லாங்குழி, தாயங்கட்டை போன்ற விளையாட்டுக்கள் நடக்கும். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதைகளையும் சொல்லிக்கொடுக்கிறோம். இங்கே வரும் குழந்தைகள் வீட்டில்கூட மொபைலோ, வீடியோ கேம்ஸோ பார்க்கிறதில்லே. குழந்தைகளோடு சேர்ந்து எப்படி விளையாடணும், வெற்றி தோல்வியை எப்படி சமமா எடுத்துக்கணும் எனத் தெரிஞ்சுக்கறாங்க. முக்கியமா இங்கே வரும் குழந்தைகளின் பேரண்ட்ஸ்கிட்ட 'உங்க குழந்தை நிறைய மார்க் வாங்க மாட்டாங்க. ஆனா, சந்தோஷமா இருப்பாங்க. சம்மதமா?'னு கேட்டுத்தான் சேர்க்கிறோம். கொஞ்ச நாளில் அவங்களும் 'எங்க பசங்க இங்கே வந்ததிலிருந்து ரொம்ப ஹேப்பியா இருக்காங்க. ஸ்கூல்விட்டு வந்ததுமே இங்க வரணும்னு துடிக்கிறாங்க'னு உற்சாகமகா சொல்றாங்க. அதுதான் எனக்கு வேணும். நம் பாரம்பர்யத்தை குழந்தைகளிடம் விதைச்சாலே, அவங்களுக்கான எதிர்காலத்தை அவங்களால் சிறப்பாக அமைச்சுக்க முடியும்” என்று புன்னகைக்கிறார் தீபிகா.
கணவர் அருண், மகள் சம்யுக்தா, மாமனார், மாமியார் என கூட்டுக் குடும்பமாக, தனது வீட்டையும் நந்தவனமாக வைத்திருக்கும் தீபிகாவுக்கு ஒரு பெரிய ஆசை இருக்கிறது. சென்னையின் பல இடங்களில் ஜூலா குழந்தைகள் ஆக்ட்டிவிட்டி சென்டரை ஆரம்பிப்பதுதான் அது.