மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 100

அனுபவங்கள் பேசுகின்றன!

பழகப் பழக வரும் தமிழ்! 

ஒருநாள் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவளின் பத்து வயது மகளிடம் மளிகைப் பொருட்களின் லிஸ்ட்டை சொல்ல, அதைக் கேட்டு அச்சிறுமி எழுதிக் கொண்டிருந்தாள். ‘`வீட்டின் வரவு செலவை இப்போதே தெரிந்துகொள்ள வைக்கும் ஏற்பாடா? என்று கேட்டேன். அதற்கு என் தோழி, ``இவளுக்கு தமிழில் சரியாக எழுத, படிக்கத் தெரியவில்லை. வகுப்பில் படிப்பது மட்டும் போதாது. இதுபோல் லிஸ்ட்டை எழுதச் சொல்வது, செய்தித்தாளை வாய் விட்டு படிக்கச் சொல்வது, சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்களை படிக்கச் சொல்வது, டி.வி-யில் வரும் வாசகங்களைப் படிக்கச் சொல்வது என கூடுதல் பயிற்சி அளிக்கிறேன். இதன் மூலம் தமிழில் பிழையின்றி பேசும், எழுதும் நிலை ஏற்படும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், `தமிழ் தெரியவில்லை’ என்பது இழுக்கான ஒன்று!’’ என விளக்கமளித்தாள்.

அவளின் இந்த செயல்முறையை பாராட்டிவிட்டு வந்தேன்.

- பி.சுஜாதா, சேலம்

அனுபவங்கள் பேசுகின்றன!

கிஃப்ட் பேக் சிந்தனை!

என் தோழி ஒரு திருமணத்துக்கு கொடுக்க வேண்டிய கிஃப்ட் ஒன்றை வாங்கிக்கொண்டு, பேக் செய்ய வேண்டிய கலர் பேப்பர், லேபிள், சாட்டின் ரிப்பன் எல்லாவற்றையும் தனியே வாங்கிக்கொண்டு வந்துவிட்டாள். ``கடையிலேயே பேக் பண்ணி வாங்கி வந்திருந்தால் சிரமம் குறையுமேடி...’’ என்றேன். அதற்கு, ``கிஃப்ட்டை வீட்டில் `பேக்’ செய்தால்... அது என்ன என்று வீட்டில் உள்ளவர்களும் பார்ப்பார்கள். பொருளில் ஏதேனும் குறையிருப்பின் தெரிந்துவிடும். மேலும், நம் வீட்டில் நிறுத்தி நிதானமாக வாழ்த்துச் செய்தியுடன் வீட்டு முகவரியையும் எழுதி `பேக்' பண்ணலாம். கடையில் கடைப் பையன் அவசரம் அவசரமாக `பேக்’ பண்ணுவான். அவசரத்தில் எழுதுவான். அதில் சில தவறுகள் ஏற்படவும் சான்ஸ் உண்டு’’ என்றாள்.

நல்ல ஐடியாதான்! நாமும் வீட்டிலேயே வந்து நிதானமாக, அழகாக `பேக்’ செய்யலாமே!

- அமுதா அசோக்ராஜா, திருச்சி

அனுபவங்கள் பேசுகின்றன!

என்னப்பா நடக்குது..?!

வானொலி கேட்டுக்கொண்டே வீட்டு வேலை செய்வது என் மகளின் வழக்கம். வானொலியில் கேட்ட வினாவுக்கு சரியான விடையை என் மகள் கைபேசியில் தொடர்புகொண்டு கூறினாள். குறிப்பிட்ட அலுவலகத்துக்குச் சென்று துணிக்கடைக்கான சலுகைப் படிவத்தைப் பரிசாக பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் வந்தாள். அந்தக் கடையில் துணி எடுக்க சென்றபோது, அங்கு ஆகக் குறைந்த விலையே இரண்டாயிரம் ரூபாய். இவளுக்குக் கிடைத்த சலுகைப் படிவமோ ஐந்நூறு ரூபாய்க்கு மட்டுமே! எனவே, வந்ததற்கு மேலாடை மட்டும் ரூபாய் எழுநூறு மதிப்புக்கு எடுத்தபோது, கடைக்காரர்களோ கண்டிப்பாக சேலையோ, சுடிதாரோ மட்டும்தான் வாங்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். `அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை, எங்களிடம் கூறப்படவும் இல்லை’ என்று சொல்லிப் பார்த்தும் கடைக்காரர்கள் அசையவே இல்லை. சலுகைப் படிவத்தை பயன்படுத்தாமல் வருத்தத்துடன் திரும்பினாள் என் மகள்.

ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொள்பவர் களை இப்படி ஏமாற்றத்தில் ஆழ்த்துவது என்ன நியாயமோ?!

- வே.தேவஜோதி, மதுரை