
சந்தோஷ் நாராயணன்
அகதிகள்
'எல்லா சொந்தங்களையும் இழந்த இந்தப் பூமியில், இனியும் வாழ முடியாது. எதற்காகத்தான் இத்தனை வெறுப்புகள், ஆயுதங்கள், மரணங்கள்?’ - சேபியன், மனதுக்குள் அழுதபடியே விண்வெளிக் கலத்தைக் கிளப்பத் தயாரானான்.
யாராவது உடன் வருவதாக இருந்தால்கூட கூட்டிக்கொண்டு போய்விடலாம். எட்டிய தொலைவு வரையில் பிணங்களைத் தவிர, வேறு யாருமே இல்லை. சேபியன், பட்டனை அழுத்தவும் வெளியே ஒரு குரல் கேட்டது. ஒரு தாத்தா, வெண்ணிறத் தாடி காற்றில் அலைந்து நடுங்க நின்றுகொண்டிருந்தார்.
கதவைத் திறந்து அவரை ஏற்றிக்கொண்டான். கலம் புறப்பட்டது.
'எங்கே செல்கிறோம்?' - கேட்டார் தாத்தா.

'எனக்கே தெரியாது. இதுவரை ஸ்பேஸில் நான் பயணித்தது இல்லை' என்றான் சேபியன்.
'எனக்கு வழி தெரியும். இடது பக்கமாகத் திரும்பி, செங்குத்தாக மேல் நோக்கி போ' என்றார் தாத்தா.
'நீங்களும் அகதிதானா?' என்றான்
'ஆம்!'
'உங்கள் பெயர்?'
நடுங்கும் உதடுகளால் சொன்னார்...
'ஒவ்வொரு நாட்டிலும் எனக்கு ஒவ்வொரு பெயர். இந்த
யுத்தங்களே என் பெயரால்தான்!''
தீப்பெட்டி ஓவியங்கள்!
தீப்பெட்டி ஓவியங்களை மொத்தமாகப் பார்க்கும்போது நமக்கு சிறுவயது ஞாபகம் வரலாம். அது, ஒருவகையான நாஸ்டால்ஜியா. அதன் சித்திரங்களும் வண்ணங்களும் நம் பால்ய காலத்துடன் பிணைந்துவிட்டவை.

தீப்பெட்டி ஓவியங்களை 'வின்டேஜ் ஆர்ட்’ எனும் வகைக்குள் அடைத்துவிடலாம். வின்டேஜ் ஆர்ட் என்பது, 19-ம் நூற்றாண்டின் கடைசியில் இருந்து 1960-கள் வரையிலான காலகட்டம்தான் என ஒரு கணக்கு சொல்லப்பட்டாலும், அது இன்றும் ஒருவகையான ஆர்ட் ஸ்டைலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
வின்டேஜ் ஆர்ட்டின் அடித்தளம் அச்சுக்கலைதான். மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் உணவு டப்பாக்களில் இருந்து போஸ்ட் கார்டு வரை, தினமும் புழங்கும் பொருட்களில் அச்சடிக்கப்படும் படங்களுடனே அந்தக் கலையும் வளர்ந்து வந்தது. அதனாலேயே ஒருவகையான 'பாப்(ப்புலர்) ஆர்ட்’ என்றும் சொல்லலாம்.
நம் ஊரில் பிரின்டிங் ஆகும் தீப்பெட்டியும் ஒருவகையில் பிரிக்க முடியாத விஷயமாகத்தான் இருந்ததுபோலும். சிவகாசி ஞாபகம் வருகிறதா? யானை, கடவுள், கப்பல் முதல் மக்களுக்குப் பிடித்தமான தலைவர்கள் படங்கள் வரை அங்கிங்கெனாதபடி எல்லா விஷயங்களையும் அச்சிட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.
இந்த வகையான தீப்பெட்டி ஓவியங்களைச் சேகரிப்பதை, ஆங்கிலத்தில் 'பில்லுமெனி’
(றிலீவீறீறீuனீமீஸீஹ்) என்கிறார்கள். கிரேக்க மொழியில் 'றிலீவீறீ’ என்றால் காதல், 'றீuனீமீஸீ’ என்றால் ஒளி என விக்கிபீடியா விளக்கம் தருகிறது. மார்ஜோரிஸ் இவான்ஸ் என்கிற பிரிட்டிஷ் ஆசாமிதான் இந்தப் பழக்கத்தைப் பற்றவைத்திருக்கிறார். இன்று தீப்பெட்டி ஓவியங்களைச் சேகரிப்பதிலும், கின்னஸ் சாதனை படைப்பதிலும் போட்டிபோட்டு
உரசிக்கொள்கிறார்கள். ஷாகித் டாடாவாலா என்பவர் இந்தியத் தீப்பெட்டி படங்களின் கலெக்ஷனை புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார்.
'வெட்டுப்புலி’ தீப்பெட்டி நீங்கள் பார்த்திருக்கலாம். வெட்டுப்புலி தீப்பெட்டியின் ஓவியத்தில் இருக்கிற சிறுத்தையை வெட்டுகிற ஆள், ரத்தமும் சதையுமாக வாழ்ந்த சின்னாரெட்டி என்கிற மனிதர் என்றும், சிறுத்தையை தனி ஆளாகக் கொன்றது உண்மைச் சம்பவம் என்றும் அறிந்து அதைப் பற்றிய தேடலையே ஒரு நாவலாக எழுதி இருக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன்.
ஒரு தீப்பெட்டி ஓவியத்தில் இருந்து ஒரு நாவலே உருவாகி இருக்கிறது என்பது சுவாரஸ்யம்தானே!
பயணிகளின் கவனத்துக்கு
நம் ஊரில் பேருந்துகளில் நீண்ட பிரயாணம் செய்வது என்பது, 2024-ம் ஆண்டு மார்ஸ் திட்டப்படி செவ்வாய்க் கிரகத்துக்குப் பயணிப்பதைவிட அபாயகரமானது. மார்ஸ் பயணத்தில் ஆக்ஸிஜன் பிரச்னை என்றால், நம் ஊர் பயணத்தில் ஆல்கஹால் பிரச்னை.
முன்பெல்லாம் குறட்டைச் சத்தங்களையும், நம் மீது குடைசாயும் கும்பகர்ணன்களையும்தான் சமாளிக்கவேண்டி இருந்தது. இந்த வகையினருக்குத் தோழனாகத் தோள் கொடுத்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். இன்றைய 'குடி’மகன்கள், பஸ்ஸையே குத்தகைக்கு எடுத்ததுபோல அலப்பறை பண்ணுகிறார்கள் என்பது அடிக்கடி காதில் விழுகிறது.

சமீபத்தில் நண்பர்கள் வா.மணிகண்டனும் செல்வேந்திரனும் தங்கள் பயண அனுபவங்களை இணையத்தில் எழுதி இருந்தார்கள்.
மணியின் கட்டுரையில், குடித்துவிட்டு வந்த ஒரு கும்பல், பஸ்ஸில் ஏறி, ஏரியா செல்வாக்கைச் சொல்லி நடத்துனரிடம் டிக்கெட்டுக்குக் காசு கொடுக்காமல் கலாட்டா செய்து இருக்கிறது; பயணிகளையும் பாடாய்படுத்தி இருக்கிறது. பொறுத்துப் பார்த்த ஓட்டுநர், உஷாராக பஸ்ஸை அருகில் இருந்த காவல் நிலையத்துக்குவிட்டு 'பயபுள்ளைகளை’ பக்காவாக ஒப்படைத்திருக்கிறார்.
செல்வேந்திரனின் கட்டுரையில், இரண்டு 'குடிநாயகர்கள்’ மொத்த பஸ்ஸுக்கே பித்தத்தை எகிறவைத்திருக்கிறார்கள். செல்போன் டி.ஜே-க்களாக சவுண்டை அலறலில்விட்டு, யாரையும் தூங்கவிடவில்லை. முன் இருக்கையில் காண்டாமிருகம்போல முட்டிக் கடுப்பேற்றியிருக்கிறான் ஒருவன். பஸ்ஸையே பாதி ராத்திரியில் பரிதவிக்கவைத்திருக்கிறார்கள். இப்படி டார்ச்சர் கொடுத்த குவார்ட்டர்வாலாக்களை, ஒரு தாத்தா நேக்காக டோல்கேட் நிறுத்தத்தில் கழற்றிவிட்ட பின்புதான், பேருந்து சீருந்தாக மாறி, சென்னை வந்து சேர்ந்திருக்கிறது.
குடிகாரர்களுடன் பயணிகளும் எழுத்தாளர்களும் உயிரைப் பணயம் வைத்துப் பயணிப்பதால், தமிழில் பயணக் கட்டுரை அல்ல... பணயக் கட்டுரைதான் இனி எழுத முடியும்போல!

ஜனநாயகத்தில் பஸ்ஸில் ஏறுபவர்களை, ஓட்டுநரோ நடத்துனரோ தடுக்க முடியாது. என்றாவது பயணிக்கும் நமக்கே இந்தப் பதைபதைப்பு என்றால், தினமும் இப்படி குடிமகன்களுடன் கோகோ விளையாடும் ஓட்டுநர், நடத்துனர்களின் நிலைமை பாவம்தான். பேசாமல் நடத்துனர் கையில் பில் போடும் இயந்திரத்துடன் நம் ஊர் போலீஸார் வைத்திருக்கும் ஆல்கஹால் டிடெக்டரையும் கொடுத்து, பயணிகளை ஸ்கேன் செய்த பிறகு பேருந்துக்குள் அனுமதிக்கலாம் அல்லது குடிகாரர்களுக்கு என தனி கோட்டாவில் சில பஸ்களையே இயக்கலாம்.
இல்லையேல், இந்தியன் தாத்தாபோல பொதுமக்களே இப்படி ஹீரோ அவதாரம் எடுக்கவேண்டியதுதான்!