மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 ஜிஸெல் பண்ட்சென் - 06

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

ஜிஸெல் பண்ட்சென்... தமிழ் கூறும் நல்லுலகுக்கு, இந்தப் பெண்மணியின் பெயர் அவ்வளவு பரிச்சயம் இருக்காது. ஒருவேளை எஃப் டி.வி ரசிகர்கள் அறிந்திருக்கலாம். 

ஜிஸெல் ஒரு மாடல். அரைகுறை உடை அணிந்து, ஆகப் பெரிய ஹீல்ஸ் அணிந்து, அதீத ஒப்பனையுடன் அழகு நடை நடந்து, ஏக்கப் பெருமூச்சை ஆண்களுக்கும், 'எப்படித் திரியுது பாரு!’ என்ற முகச்சுளிப்பைப் பெண்களுக்கும் இயல்பாகவே ஏற்படுத்தும் ஒரு மாடல் மட்டுமே அல்ல ஜிஸெல். இன்று உலகின் பல நல்ல விஷயங்களுக்கு 'ரோல்மாடல்’ ஆக வளர்ந்து நிற்கும் ஜிஸெலின் வெற்றிக் கதையை வாசிக்க வருகிறீர்களா..?

1980-ம் ஆண்டு, பிரேசிலின் டிரெஸ் டி மயோ என்ற சிற்றூரில் பிறந்தவர் ஜிஸெல். தந்தையும் தாயும் பிறப்பால் மட்டும் ஜெர்மானியர்கள். ஆக, ஜிஸெல் பாதி ஜெர்மானியர்; பாதி பிரேசிலியர். உடன் பிறந்தது ஐந்து சகோதரிகள். அதில், ஜிஸெல் கூடவே கருவில் வளர்ந்து ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டைச் சகோதரி பேட்ரீஸியாவும் அடக்கம். ஜிஸெலைவிட, பேட்ரீஸியா அழகு. இவளைக் கண்டுகொள்ளாமல் அவளை அள்ளி அணைத்துக் கொஞ்சுபவர்களே அதிகம். ஆனால், அதெல்லாம் சிறுவயதில் ஜிஸெல்லுக்கு ஒரு குறையாகவோ, ஏக்கமாகவோ இருந்தது இல்லை. தந்தைக்குப் பல்வேறு பிசினஸ். தாய்க்கு வங்கியில் வேலை. சமத்துப் பிள்ளைகள். அன்பான, அழகான, பாசமான,  விக்ரமன் படக் குடும்பம்.

நம்பர் 1 ஜிஸெல் பண்ட்சென் - 06

ஆனால் ஜிஸெல், மற்ற சகோதரிகளில் இருந்து தனித்துத் தெரிந்தாள். நிறையச் சுட்டித்தனம்; ஓயாது வாயாடினாள்; கோபம் மிக மிக அதிகம்; நிதானம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. 'இவளை ஏதாவது 'தியான’ வகுப்புக்கு அனுப்பலாமா?’ என்றுகூட அவளது தாய் யோசித்தது உண்டு. அதே சமயம், குடும்பத்திலேயே தைரியமான பெண்ணாக வளர்ந்தாள். தன் சகோதரிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால், முஷ்டி முறுக்கி முன்னே நிற்பவள் ஜிஸெல்.

13 வயதிலேயே ஆறு அடியை நெருங்கிய அவளது உயரம், அதற்கு வசதியாக இருந்தது. வகுப்பிலேயே உயரமான பெண். பள்ளியில் மற்றவர்கள் ஜிஸெல்லை 'சராகுரா’ (நீண்ட கால்கள் கொண்ட ஒரு பறவை) என அழைத்து வெறுப்பேற்றினர். ஆம், நீண்ட கால்கள், குச்சியான தேகம், ஒடுங்கிய முகம், பெரிய மூக்கு, கத்தி போன்ற தாடை, அடர்நீலக் கண்கள், வாய் அகன்ற புன்னகை. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகுடன் ஜிஸெல் சத்தியமாக இருக்கவில்லை. 'என் பெரிய மூக்கை வைத்து எல்லோரும் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்’ என ஜிஸேல் ஒருமுறை தந்தையிடம் நொந்துகொண்டபோது, 'இப்படிப் பெரிய மூக்குகொண்ட நபர்கள், உலக அளவில் புகழ்பெறுவார்கள் தெரியுமா?’ என, தன் மகளை வார்த்தைகளால் அரவணைத்தார்.

நெகுநெகு உயரம், ஜிஸெலைத் திறமையான வாலிபால் ப்ளேயராக வளர்த்தது. பள்ளி அணியின் கேப்டன். வருங்காலம் வாலிபாலை நம்பித்தான் என்ற எண்ணமும் ஜிஸெலுக்கு இருந்தது. ஆனால் தாய், தன் மகள்களைக் கொஞ்சம் நேரம்கூட சும்மா இருக்கவிடவில்லை. பாலே, ஜிம்னாஸ்டிக் போன்ற சிறப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள

அனுப்பினாள். தவிர, மாடலிங் பயிற்சி வகுப்புக்கும் அனுப்பிவைத்தாள். நன்றாகப் பொழுதுபோனது, அவ்வளவே. அப்போது எல்லாம் ஜிஸெல், தன் கனவில்கூட பூனைநடை நடந்து பார்க்கவில்லை.

நம்பர் 1 ஜிஸெல் பண்ட்சென் - 06

1994-ம் ஆண்டு, அந்த மாடலிங் பள்ளி, தங்கள் மாணவிகளை பிரேசிலின் சாவோ பாலோ நகரத்துக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றது. பல மணி நேரப் பயணம் தந்த களைப்பு. நல்ல பசி. ஒரு ஷாப்பிங் மாலின் உணவகத்தில் ஜிஸெல், தன் குழுவினருடன் பர்கர் கொறித்துக்கொண்டிருந்த வேளையில், வாய்ப்பு தேவதை வணக்கம் சொன்னாள்.

Elite - உலகின் முன்னணி மாடல் நெட்வொர்க். புதிய மாடல்களைத் தேடும் பசியோடு திரிந்த எலைட்டைச் சேர்ந்த ஒருவர், பசியாறிக்கொண்டிருந்த ஜிஸெலைப் பார்த்தார். 'கண்டேன் மாடலை’ என அவரது மனம் துள்ளிக் குதித்திருக்க வேண்டும். ஜிஸெலை அணுகினார். 'நீங்கள் மாடல் ஆகலாம். நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ எனக் கட்டியம் கூறினார். ஜிஸெலுக்குச் சிரிப்பு வந்தது. 'எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை. நான் வாலிபால் ப்ளேயராகத்தான் இருக்க விரும்புகிறேன்.’ அந்த நபர் மீண்டும் மீண்டும் நச்சரித்தார். 'உண்மையிலேயே நான் அழகாகத்தான் இருக்கிறேனோ?’ ஜிஸெல் மனதில் முதன்முதலாக தன் உடல்குறித்த மேன்மையான எண்ணம் வந்தது. மற்றவர்களும் வற்புறுத்தினார்கள். ஒருவழியாக ஒப்புக்கொண்டாள்.

ஊர் திரும்பினாள். பெற்றோரும் பரிபூரணமாக ஆசீர்வதித்தனர். மீண்டும் சாவோ பாலோ செல்ல வேண்டும். அங்கு நடக்கும் தேசிய அளவிலான மாடலிங் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். அதில் தேர்வுபெற்றால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வரலாம். முதன்முறையாகத் தனியாக நீண்டதூரப் பயணம். சாவோ பாலோ நகரம், ஜிஸெலுக்கு மிரட்சி அளித்தது. சொந்த ஊரில் டிராஃபிக் சிக்னல்கூட கிடையாது. இங்கே மலைப்பாம்புகளாக நீளும் சாலைகள், விழுங்குவதுபோல பயமுறுத்தின. செல்லவேண்டிய குவார்ட்டர்ஸுக்கு டாக்ஸி பிடிக்கலாம்தான். ஆனால், அந்தக் காசை மிச்சம் பிடித்தால், புதிய உடைகள் வாங்கலாம். ஜிஸெல் அதுவரை பெரும்பாலும் அணிந்தது தன் சகோதரிகளின் பழைய உடைகளைத்தான். அப்போதுகூட அப்படி ஓர் அழுக்கு ஜீன்ஸைத்தான் அணிந்திருந்தாள். ரயில் நிலையத்தைக் கஷ்டப்பட்டுத்  தேடி அடைந்து டிக்கெட் எடுப்பதற்காக பேக்கைத் துழாவியபோது, வைத்திருந்த பணம் காணாமல்போயிருந்தது. எங்கே தொலைத்தேன்? யாராவது திருடிவிட்டார்களா? தலை சுற்றியது. பணத்துக்கு என்ன செய்வது? பிச்சையெடுக்க வேண்டியதுதானா? கண்களில் திரண்ட நீரில் அதுவரை சேர்த்துவைத்திருந்த தைரியம் எல்லாம் கரைந்து ஓடிக்கொண்டிருந்தது.

நம்பர் 1 ஜிஸெல் பண்ட்சென் - 06

ஒருவழியாகத் தைரியத்தைத் திரட்டி, தான் செல்லவேண்டிய இடத்தைத் தேடித்தேடி நடந்தே அடைந்தாள் ஜிஸெல். அந்த நடைதான் உலகை மயக்கும் ஒய்யார நடையாக உருமாறத் தயாராக இருந்தது. அதுநாள் வரை உடை விஷயத்தில் அலட்சியமாக இருந்த அந்தப் பெண், தன்னை அணிந்துகொள்ள மாட்டாளா என ஒவ்வோர் உடையும் ஏங்கிக் காத்திருக்கும் எதிர்காலம் அவளை அங்கே வரவேற்றது. 'அன்று ஷாப்பிங் மாலில் என்னுடன் இருந்த 50 இளம்பெண்களில் அவர் என்னை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால், என்னிடம் ஸ்பெஷலாக ஏதோ இருக்கிறது என்றுதானே அர்த்தம்’ - ஜிஸெல் மன உறுதியுடன் அந்த மாடலிங் தேர்வில் கலந்துகொண்டாள். உடை அணிவது எப்படி, ஒப்பனை செய்துகொள்வது எப்படி, என்ன வேகத்தில் நடக்க வேண்டும், சிரிக்கலாமா, முகத்தை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்... போன்ற எதுவுமே  ஜிஸெலுக்குத் தெரியாது. இயல்பாகக் கலந்துகொண்டாள். அவளது இயற்கையான அழகும், அதுவரை மற்றவர்கள் கேலி பேசிய உயரமும் நடுவர்களை வசீகரித்தன. 'எலைட் லுக் ஆஃப் தி இயர்’ என்ற அந்தப் போட்டியில் ஜிஸெலுக்கு இரண்டாம் இடம். ஸ்பெயினில் நடந்த 'எலைட் லுக் ஆஃப் தி வேர்ல்டு’ போட்டியில் நான்காவது இடம்.

அடுத்தது? மீண்டும் ஊர். மீண்டும் பள்ளி. வலை அருகே எம்பிக் குதித்து வாலிபால். 'ம்ஹூம்... இதையெல்லாம் மறந்துவிடு ஜிஸெல். நீ பூனைநடை நடக்கப் பிறந்தவள். லண்டனும் பாரீஸும் நியூயார்க்கும் மிலனும் உனக்காகக் காத்திருக்கின்றன. வா... வந்து மாடலிங் ரன்வேயை வசப்படுத்து’ - எலைட் அழைத்தது. வாவ், பாரீஸ், லண்டன்... இதையெல்லாம் நான் எப்போது பார்ப்பது? பள்ளிப் படிப்பை விட்டாள். 14-வது வயதில் ஜிஸெலின் கரத்தைப் பிடித்து நடக்க ஆரம்பித்தது ஃபேஷன் உலகம்.

சாவோ பாலோ நகரத்தில் தனது ஃபேஷன் வாழ்க்கையை ஆரம்பித்த ஜிஸெலுக்கு, முதலில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள். 'இவளா... மாடலா..? ம்ஹூம், இவள் அதற்குச் சரிப்பட்டு வர மாட்டாள்’ என காதுபடப் பேசினார்கள். ஆனால் ஜிஸெல், கொஞ்சம்கூட சோர்ந்துவிடவில்லை. நாளுக்குநாள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். ஒருமுறை செய்த தவறு, மறுபடியும் நிகழாமல் கவனமாக இருந்தார். தன்னை உடலால், மனதால் மெருகேற்றிக்கொண்டே வந்தார். கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கிடுகிடுவென உயர அர்ப்பணிப்புடன் 'அழகாக’ உழைத்தார்.

நம்பர் 1 ஜிஸெல் பண்ட்சென் - 06

ஒவ்வொரு ஷோ ஆரம்பிக்கும் முன்பும், சரியாகச் செய்துவிடுவேனா, தடுக்கி விழாமல் நடப்பேனா, உடை நழுவாமல் இருக்க வேண்டுமே என, பய பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் பறக்கும். ஆனால், ஷோவுக்கான இசை ஒலிக்கத் தொடங்கியவுடன் எல்லாம் மறந்துபோகும். அதுவும் வழக்கமான மாடல்களின் பூனைநடை நடக்காமல், உயர ஹீல்ஸ் அணிந்து, கால்களை சற்றே அதிகம் உயர்த்தி, கொஞ்சம் குறுக்காகத் தரையில் ஆழமாகப் பதித்து நடக்கும் 'குதிரை நடை’யில் அசத்தினார் ஜிஸெல்.

நியூயார்க் 'ஃபேஷன் வீக்’கில் கலந்துகொள்ள ஜிஸெலுக்கு வாய்ப்பு அமைந்தது. அதென்ன ஃபேஷன் வீக்? இங்கே, கொஞ்சம் வரலாறு தெரிந்துகொள்வது வசதி. காலம் காலமாக ஃபேஷன் என்றாலே பாரீஸ்தான். அந்த நகர டிசைனர்களுக்கு, தனி மதிப்பு... மரியாதை. இது மற்ற நகர டிசைனர்களுக்குக் கடுப்பைக் கொடுத்தது; குறிப்பாக அமெரிக்கர்களுக்கு. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாடுவிட்டு நாடு சென்று ஃபேஷன் ஷோக்களில் கலந்துகொள்ள இயலாத நிலையில், 1943-ம் ஆண்டு அமெரிக்க ஃபேஷன் டிசைனர்கள் நியூயார்க் நகரிலேயே ஒரு வாரத்துக்கு ஃபேஷன் ஷோக்களை நடத்தினர். அமோக வரவேற்பு. அமெரிக்க டிசைனர்கள் பக்கம் கவனம் திரும்பியது. இப்படியாக உலகம் முழுக்க 'ஃபேஷன் வீக்’ நடத்தும் வழக்கம் பரவியது. யாருக்காக இந்த ஃபேஷன் வீக்? ஃபேஷன் டிசைனர்கள், உடை தயாரிப்பு நிறுவனங்கள், தகுந்த மாடல் அழகி/அழகன்களைக்கொண்டு தங்களின் புதிய உடைகளை 'நடை’ விரிப்பார்கள். உடை விற்பனையாளர்கள், தங்களைக் கவர்ந்த உடைகளுக்கு ஆர்டர்களை வழங்குவார்கள். மீடியா, புதிய டிரெண்ட் என்ன என உலகுக்கு படம்பிடித்துச் சொல்லும். இதுவே ஃபேஷன் உலகின் பிசினஸ் மாடல்.

ஜிஸெல், லண்டனில் 42 ஷோக்களில் கலந்துகொண்டார். அதில் அலெக்ஸாண்டர் மெக்குயின் நடத்திய ஒரு ஷோ, ஜிஸெலுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. நடக்கும் பாதையில் மழை பொழிவதுபோல செட்அப். ஜிஸெல்,

ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு, வழுக்கும் பாதையில் தன் வனப்பைக் காட்டியபடி அசால்ட்டாக நடந்துவர, பார்வையாளர்களின் இதயம் வழுக்கியது. ஃபேஷன் பத்திரிகைகள் ஜிஸெலை மொய்த்தன. உலகின் டாப் ஃபேஷன் போட்டோகிராஃபர்களின் கேமராக்கள் ஜிஸெலை ஃபோகஸ் செய்தன.

உலகின் முன்னணி ஃபேஷன் இதழான 'வோக்’ தன் பிரிட்டன் பதிப்பில் ஜிஸெலை அட்டைப்படத்தில் முதன்முதலாகப் பிரசுரித்தது. அடுத்தடுத்து பல இதழ்களின் அட்டைப்படங்களில் ஜிஸெலின் ஜில் போஸ். 'ஃபேஷன் பத்திரிகையின் விற்பனை குறைகிறதா? அட்டையில் ஜிஸெலின் புது படத்தைப் போடு. விற்பனை வீறுகொண்டு எழும்! குறைந்த வருடங்களில் அதிக முறை அட்டையில் இடம்பெற்ற மாடல் என்ற சாதனையை தன்வசமாக்கினார் ஜிஸெல். (இளவரசி டயானாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச அளவில் அதிக முறை (600) பத்திரிகை அட்டைகளை அலங்கரித்த பெருமை ஜிஸெலுக்கே).

'என் கடன் ஷோவுக்கு வருவது, ஒப்பனை செய்துகொள்வது, உடை மாற்றுவது, நடப்பது, உடையை ஹேங்கரில் தொங்கவிட்டுக் கிளம்புவது’ என்பதில் ஜிஸெல் தெளிவாக இருந்தார். எல்லோருடனும் நட்புடன் பழகினார். போட்டி, பொறாமைகளைத் தவிர்த்தார்... பார்ட்டிகளையும்தான். 2000-ம் ஆண்டு வரை, பரபரவென பல்வேறு நிறுவனங்களின் ஃபேஷன் ஷோக்களில் கலந்துகொண்டார். ஒரே நாளில்

12 ஃபேஷன் ஷோக்களில் பங்குபெற்ற அனுபவமும் உண்டு. ஒரு மணி நேர வருமானம் 7,000 அமெரிக்க டாலர்கள். உண்ண, உறங்க நேரம் இன்றி நாடுவிட்டு நாடு பறந்து நளினம் காட்டினார். குடும்பத்தை மறந்து, சந்தோஷங்களை இழந்து எதற்கு இதெல்லாம்? உடலும் மனமும் களைத்த பொழுது ஒன்றில் கொஞ்ச காலம் ஓய்வு.

உள்ளாடை விற்பனையில் உலக அளவில் டிரெண்டிங் முன்னணியில் இருக்கும் நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட், 2000-ம் ஆண்டு ஜிஸெலை ஒப்பந்தம் செய்துகொண்டது. இனி, தேர்ந்தெடுத்து 'நடந்தால்’ போதும். அந்த ஆண்டில் விக்டோரியாஸ் சீக்ரெட், 15 மில்லியன் டாலர் மதிப்புள்ள காஸ்ட்லி கச்சை ஒன்றை ஜிஸெலுக்கு அணிவித்து அழகு பார்த்தது. கின்னஸ் சாதனை. தொடர்ந்து Haute Coulture என அழைக்கப்படும் விலை உயர்ந்த, அதிநவீன பிரத்யேக ஆடைகளை இந்த 34-25-35 அளவுகொண்ட அழகிக்கு அணிவித்து பலரது தூக்கத்தைக் கெடுத்தது. பிசினஸும் உயர்ந்தது, நிறுவனத்துக்கும் ஜிஸெலுக்கும். சிறகுகளுடன் மாடல்களை நடக்கவிடுவது விக்டோரியாஸ் சீக்ரெட்டின் வழக்கம். 2007-ம் ஆண்டு வரை அங்கே சிறகடித்த ஜிஸெல் கிளி, பின் சில 'ஒவ்வாத’ காரணங்களால் வெளியேறியது.

நம்பர் 1 ஜிஸெல் பண்ட்சென் - 06

ஜிஸெல், சாதாரணமாக ஒரு ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு நடந்தால், அந்த மாடல் ஹேண்ட் பேக்குகளுக்கு ஆர்டர்கள் குவிந்தன. நிறுவனங்கள், தங்களுக்கு வரம் தரும் தேவதையாக ஜிஸெலைக் கொண்டாடின. தொட்டதை எல்லாம் பொன்னாக்கும் ஃபேஷன் உலகின் 'கிங் மிடாஸ்’ என்ற பெயர் குயின் ஜிஸெலுக்கு அமைந்தது. ஹாலிவுட் வாய்ப்புகளும் வாசலில் தவம் கிடந்தன. ஜிஸெல் அதில் அதிக கவனம் குவிக்கவில்லை.

இத்தனை அழகான... வெற்றிகரமான பெண்ணை, காதல் கவ்வாமல்விடுமா என்ன? இரண்டு பிரேக்-அப்களுக்குப் பிறகு மூன்றாவது பாய் ஃப்ரெண்டாக நங்கூரம் இட்டவர் லியானார்டோ டிகாப்ரியோ. 'டைட்டானிக்’ கொடுத்த புகழ் காரணமாக உலகப் பெண்களின் கனவுக் காதலனாகத் திகழ்ந்த டிகாப்ரியோவின் 'ஹனி மினி’ பெண் தோழியாக வாழ்ந்தார் ஜிஸெல். 2004-ம் ஆண்டு அமெரிக்காவின் 'பீப்பிள்’ இதழ், 'உலகின் உன்னத அழகு ஜோடி’ என்ற அந்த ஆண்டுக்கான பட்டத்தை அவர்களுக்கு வழங்கியது. அடுத்த ஆண்டிலேயே இருவரும் தங்கள் ஐந்து வருட ஒப்பந்தமற்ற பந்தத்தில் தீப்பந்தம் எறிந்துகொண்டனர்.

அடுத்ததாக ஜிஸெலின் வாழ்வில் நுழைந்தார் டாம் பிராடி. அமெரிக்கக் கால்பந்து வீரர். சுமார் மூன்று வருடங்கள் மோதிரம் அற்ற, எந்த முகாந்திரமும் அற்ற கூட்டு வாழ்க்கை, 2009-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. அன்று திருமண உடை அணிந்துகொண்டார்கள். டாமின் காதலியாகி, மனைவியாகி, பின் இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் ஆனார் ஜிஸெல். ஆனாலும், அவரது ஃபேஷன் மவுசு அதிகரித்துக்கொண்டே சென்றது.

2011-ம் ஆண்டு டாமும் ஜிஸெலும் உலகின் 'அதிமதிப்பான’ செலிப்ரிட்டி ஜோடியாக உயர்ந்தனர். ஃபோர்ப்ஸ் அளிக்கும் தகவலின்படி, 2007-ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை, உலகின் அதிகம் சம்பாதிக்கும் மாடல் ஜிஸெல். 2014-ம் ஆண்டு அவரது வருவாய் 47 மில்லியன் டாலர். தவிர, ஏகப்பட்ட பட்டங்கள், விருதுகள், சாதனைகள், புகழ் மழை!

எத்தனையோ பேர், புகழ் கிடைத்தாலும் அதைக்கொண்டு சமூகத்துக்கு ஏதும் செய்யாமல் விலகிப்போகும் உச்ச நட்சத்திரமாக ஜிஸெல் ஒருபோதும் இருந்தது இல்லை. பிரேசிலின் மழைக் காடுகளில் உள்ள நீர் ஆதாரங்களை மீட்டெடுப்பது, தூய்மைப்படுத்துவது, காடுகளை வளர்க்க ஆயிரக்கணக்கில் மரங்களை நடுவது, பெண்கள் சுயதொழில் தொடங்க புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது, சுற்றுச்சூழல் அமைப்புகளின் நல்லெண்ணத் தூதுவராகப் பணியாற்றுவது, பிரேசிலின் வறுமை ஒழிப்புத் திட்டத்துக்கு நிதி திரட்டிக் கொடுப்பது, எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற வியாதிகளுக்காகப் பணம் கொடுப்பது, புயல், சுனாமி, நிலநடுக்கம்... என இயற்கைப் பேரழிவுகள் நிகழும்போது முதல் ஆளாக உதவுவது என புறத்தால் மட்டும் அல்ல, அகத்தாலும் ஜிஸெல் பேரழகியே.

20 வருடங்கள் சூப்பர் மாடலாகப் பவனி வந்த 34 வயது ஜிஸெல், தன் வாழ்க்கையை ஆரம்பித்த சாவோ பாலோ நகரத்திலேயே தனது கடைசி ஃபேஷன் ஷோவில் (இந்த மாதம் 15-ம் தேதி) கலந்துகொண்டார். 'என் உடல் 'போதும். நிறுத்திக்கொள்’ என்றது. நான் என் உடலுக்கு மதிப்பு கொடுக்கிறேன்.’ ஜிஸெலின் கண்களில் அன்று நீர். சாதித்துத் தீர்த்த களிப்புடன் ரன்வேயில் இருந்து சந்தோஷமாக விடைபெற்றார்.

அடுத்தது என்ன? ஜிஸெலின் பதில்...

'பாத்திரம் நிரம்பித் தளும்பும்போது அதில் மேற்கொண்டு எதையும் ஊற்ற முடியாது. பாத்திரத்தைக் காலிசெய்தால்தான், அதில் புதிதாக நிரப்ப முடியும். நான் இப்போது காலிப் பாத்திரம்!’

தாய்ப்பால் சட்டம்!

நம்பர் 1 ஜிஸெல் பண்ட்சென் - 06

பெஞ்சமின் என்ற மகன், விவியன் என்ற மகளுக்குத் தாயான ஜிஸெல், எப்போதும் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்திப் பேசுபவர். உதவியாளர்கள் சிகை அலங்காரம் செய்துகொண்டிருக்க, ஜிஸெல் தன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட அது பரபரப்பைக் கிளப்பியது. 'உங்கள் பச்சைக் குழந்தைக்கு கெமிக்கல் கலந்த உணவையா கொடுப்பீர்கள்? எந்தக் குழந்தைக்கும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது தாய்ப்பால் அத்தியாவசியம். இதற்காக உலக அளவில் பொதுவான சட்டம்கூட கொண்டுவரலாம்’ என அந்த விமர்சனங்களை லெஃப்ட்டில் அடித்தார்!

நிர்வாண உண்மைகள்!

நம்பர் 1 ஜிஸெல் பண்ட்சென் - 06

எப்போதெல்லாம் ஜிஸெலுக்கு மார்க்கெட் இறங்குமுகமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் அவர் முழு நிர்வாண போஸ் கொடுத்து ரேட்டிங் ஏற்றிக்கொள்வார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஜிஸெல் அவ்வப்போது அப்படி போஸ் கொடுத்தது உண்மையே. 'இரண்டு குழந்தைகளின் தாயான பிறகும் ஜிஸெல் இப்படிச் செய்வது நாகரிகம் இல்லை’ என்று எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தாலும், ஜிஸெல் எதையும் காதில் வாங்குவது இல்லை. வோக்-ன் பிரேசில் பதிப்பு மே இதழ் அட்டைப்படத்தில்கூட, தனது 20 வருட மாடலிங் சாதனையைக் கொண்டாடும் விதத்தில் கிரேக்கச் சிலைபோல் நிர்வாணமாக நிற்கிறார் ஜிஸெல்!

முன்னாடி கண்ணாடி!

ஜிஸெல், ஃபேஷன் புகைப்பட ஷூட்டிங்கின்போது கேமராவுக்கு அருகில் ஆள் உயரக் கண்ணாடி வைத்துக்கொள்வார். தன் முகமும் உடலும் நிற்கும் நளினமும் சரியாக உள்ளதா எனப் பார்த்தபடியே போஸ் கொடுப்பது அவரது பாணி. பல்வேறு போட்டோகிராஃபர்கள் விரும்பும் அலட்டல் இல்லாத, தொல்லைகள் தராத, எளிமையாகப் பழகும் அழகி.

விலங்குகள் மேல் அலாதிப் பிரியம். நாய்கள், குதிரைகள் வளர்க்கிறார். தவிர, ஒரு பண்ணை வைத்துப் பராமரிக்கிறார். இறைச்சியை உண்ணும் முன் தனக்கு இரையாக வாய்த்திருக்கும் அந்த உயிரினத்துக்கு நன்றி சொல்லி ஜெபம் செய்துவிட்டே உண்பார். விலங்குகளின் தோலினால் ஆன உடைகளை ஃபேஷன் ஷோவில் அணிவதைத் தவிர்ப்பார்.

மன அமைதிக்காக தியானம், யோகா செய்வார். குங்ஃபூ பயிற்சியும் மேற்கொள்வார். ஆழ்ந்த உறக்கத்துக்கு முதல் இடம். ஜிம் பயிற்சி தவறுவதே இல்லை.

இறுக்கமான உணவுக்கட்டுப்பாடுகள் விதித்து உடலை வருத்திக்கொள்ள மாட்டார். பேறுகால சமயம் ஒரு மாடலாக தன் உடல் எடை பற்றி அலட்டிக்கொள்ளாமல், மற்ற பெண்களைப்போல மனம் விரும்பியதை உட்கொண்டவர். இரண்டுமே சுகப்பிரசவம். அதற்குப் பின் பழைய சிக் உடலுடன் ரன்வேயில் நடந்தார்.

காலணிகள் தயாரிக்கும் நிறுவனம், தன் பெயரில் உள்ளாடைகள் தயாரிக்கும் ஒரு நிறுவனம், ஹோட்டல்... என ஜிஸெலின் பிசினஸ் முகம் தனி.

'Taxi', 'The devil wears prada'என்ற  இரு படங்களில் ஜிஸெல் நடித்துள்ளார்.