இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

உற்சாகம் தரும் ஊசுட்டேரி!

உற்சாகம் தரும் ஊசுட்டேரி!

‘‘லீவுல ஜாலியா ஊட்டி, கொடைக்கானல் போகணும்னா, அப்பா ஆபீஸுக்கு லீவு, டிக்கெட், ரூம் கிடைக்கிறதுக்கு பெரிய பிளான் போடணும். நமக்குப் பக்கத்திலேயே கண்களுக்குக் குளிர்ச்சியா ஓர் இடம் இருந்தா, சின்ன டூர் அடிக்கலாமே” என்றாள் நிரஞ்சனா.

‘‘இருக்கே, புதுச்சேரிக்குப் பக்கத்துல  ‘ஊசுட்டேரி’ என்கிற இடம். கடல் மாதிரி ஏரி, படகுச் சவாரி, ஏரிக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள், சிலுசிலு காற்று, ஊஞ்சல், சறுக்கு மரம் என அட்டகாசமா இருக்கும். அதிக பேருக்கு தெரியாத அங்கே போகலாமே” என்றான் பரத்.

உற்சாகம் தரும் ஊசுட்டேரி!

அபர்ணா, ஸ்வேதா, பாலாஜி, யது கிருஷ்ணா... என ஒரு கேங் சேர்ந்ததும், டூருக்குக் கிளம்பினார்கள்.

ஊசுட்டேரி பகுதியை நெருங்கும்போதே சுற்றுப்புறச் சூழ்நிலை மாறியது. அவ்வளவு நேரம் தலைக்கு மேலே துரத்திய சூரியனின் கதிர்கள், ‘இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன். நீங்களும் வரக் கூடாது’ என்பது போல ஜகா வாங்கியது.

பரத் சொன்னது போலவே, ‘இது ஏரியா... கடலா?’ என்று நினைக்கும் வகையில், கண்களுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர். சவாரி செய்ய, உற்சாகமாகப் படகுகளில் ஏறினார்கள்.

‘‘நீங்க ‘லைஃப் ஆஃப் பை’ படம் பார்த்தீங்களா? அந்தப் படத்தின் சில காட்சிகளை இங்கேதான் எடுத்தாங்க” என்றபடி வரவேற்றார், படகு ஓட்டுநர்.

ஏரியில் பாதி தூரம் போனதும் ‘‘வாவ்... அங்கே கூட்டமா இருக்கிறது ஆஸ்திரேலியன் பெலிக்கான்  பறவைகள்தானே” என உற்சாகமாகக்  கத்தினாள் ஸ்வேதா.

‘‘ஆமாம். இந்த ஏரியைச் சுற்றி  கிட்டத்தட்ட 4,000 பறவைகள் இருக்கு. இதில், ஆஸ்திரேலிய பெலிக்கான் ரொம்ப ஃபேமஸ்” என்றார் படகு ஓட்டுநர்.

உற்சாகம் தரும் ஊசுட்டேரி!

‘‘பறவைகள் கிட்டே போங்க அங்கிள்” என்றான் பாலாஜி.

‘‘ம்ஹூம்... சின்ன சத்தம் கேட்டாலே பறந்துடும். தூரத்தில் இருந்துதான் ரசிக்கணும்” என்றார்.

சொன்னது போலவே, படகு  தூரத்தில் வரும்போதே அத்தனைப் பறவைகளும் பறந்துவிட்டன.

படகுச் சவாரி முடிந்து, கரைக்குத் திரும்பியதும், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை இறைத்து, ஜாலியாக விளையாடினார்கள். ‘கூகூகூ சிக் புக் சிக் புக்’ என ரயில் விட்டார்கள். ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தார்கள்.

‘‘நேரம் ஆகுது கிளம்பலாமா?” என்று யது கிருஷ்ணா கேட்க, “போறதுக்கு மனசு வரலியே. ஊசுட்டேரி, மனசுல அழுத்தமா உட்கார்ந்துடுச்சு. இனி, அடிக்கடி இங்கே வரணும்” என்றாள் அபர்ணா.

அந்த ஏரிக்கும், தூரத்தில் தெரிந்த பறவைகளுக்கும் டாட்டா காட்டிவிட்டு கிளம்பினார்கள்.

உற்சாகம் தரும் ஊசுட்டேரி!

புதுச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில்... வழுதாவூர் ரோட்டில் உள்ளது, ஊசுட்டேரி. புதுவையில் இருந்து திருக்கனூர் வழியாகச் செல்லும் எல்லாப் பேருந்துகளும் இங்கே நிற்கும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி உண்டு. படகுச் சவாரிக்கு, 10 வயதுக்கு உட்பட்டோருக்கு `40, பெரியவர்களுக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.

சு.கற்பகம்

எஸ்.தேவராஜன்