இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

சிற்ப நகரத்தில் சங்குகள் சங்கமம்!

சிற்ப நகரத்தில் சங்குகள் சங்கமம்!

“வாவ்... மாமல்லபுரம் என்றதும் சிற்பங்களும் கடலும்தான் நினைவுக்கு வந்துட்டு இருந்துச்சு. இனிமே, இந்த அருங்காட்சியகமும் நினைவுக்கு வரும்” என்ற கல்பனாவின் குரலில் வியப்பும் உற்சாகமும்.

மாமல்லபுரத்தின் ஐந்து ரதம் பகுதிக்கு அருகில் இருக்கிறது, இந்தியா சீ ஷெல் மியூசியம் (India Sea shell Museum). கோடைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கே விசிட் அடித்த சுட்டிகளைப் புன்னகையுடன் வரவேற்றார் அவர்.

சிற்ப நகரத்தில் சங்குகள் சங்கமம்!

“ஆசியாவின் பெரிய கடல் சிப்பிகள் அருங்காட்சியகத்துக்கு வந்திருக்கிற உங்க எல்லோருக்கும் வணக்கம். என்னோட பேரு முகம்மது ரிஸ்வான். இந்த மியூசியத்தை   2013-ம் வருஷம் என் அப்பா, ராஜா முகம்மது ஆரம்பிச்சார். அவர் பிறந்தது ராமேஸ்வரம். ஒன்பது வயசில் இருந்தே சங்குகளை சேரிக்க ஆரம்பிச்சார். இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் என 16 நாடுகளுக்குப் பயணம் செய்து, 33 வருஷங்களாகச் சேகரிச்சவை” என்றார் முகம்மது ரிஸ்வான்.

“இங்கே எத்தனை சங்குகள் இருக்கு?” எனக் கேட்டான் அசோக்.

சிற்ப நகரத்தில் சங்குகள் சங்கமம்!

“நத்தை ஓடுகள், சிப்பிகள், சங்குகள், கிளிஞ்சல்கள் என 2,000 இனங்களைச் சேர்ந்த 40,000 கலெக்‌ஷன்ஸ் இருக்கு. கடுகு அளவே இருக்கும் மிகச் சிறிய சங்குகளில் தொடங்கி, மிகப் பெரிய சங்குகள் வரை இருக்கு. இங்கே இருக்கிறதிலேயே ரொம்பப் பெரிசு,  ப்ளிரோப்லோகா (Pleuroploca) என்ற நத்தையின் மேல் ஓடு. வடக்கு மெக்ஸிகோ மற்றும் ஆஸ்திரேலியக் கடல்களில் இருக்கும். இதோட நீளம், 55 சென்டிமீட்டர்” என்றார் முகம்மது ரிஸ்வான்.

“சங்கு, சிப்பி, கிளிஞ்சல் எல்லாம் வேற வேறயா அங்கிள்?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“ஆமாம். கடலில் ஓடுகளோடு இருக்கும் உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கு. இதில், சங்கு என்பது, கடலில் 25 அடி ஆழத்தில் கூட்டம் கூட்டமாக வாழும் ஓர் உயிரினம். இதில், ‘வெண் சங்கு’ என்கிற வலம்புரிச் சங்கு ரொம்ப ஃபேமஸ். கடலில் இருக்கும் புழு, பூச்சிகளைச் சாப்பிட்டு வளரும். ஆண் சங்குகளைவிட பெண் சங்குகள் பெரிதாக இருக்கும். தங்களிடம் இருந்து சுரக்கும் ஒரு திரவத்தின் மூலம், 300 மில்லிமீட்டர் நீளத்துக்கு  கூடு கட்டும். இதை, ‘முட்டைக் கூடு’ (Egg cases) எனச் சொல்வாங்க. இந்தக் கூட்டில் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும். இதோ, இதுதான் அந்தக் கூடுகள்” என்று காண்பித்தார்.

அடுத்து, ஒரு கண்ணாடிப் பெட்டியில், முத்து உருவாகும் படிப் படியான நிலையில் பல சிப்பிகள் இருந்தன. சுண்டு விரல் அளவு சிறிய மீன் ஒன்று, ஒரு சிப்பிக்குள் உறைந்துபோய் இருந்தது.

“இது என்ன அங்கிள்... மீன்கூட முத்தாக மாறுமா?” என வியப்புடன் கேட்டாள் நிவேதா.

சிற்ப நகரத்தில் சங்குகள் சங்கமம்!

“ஆமாம். சிப்பிக்குள் சேரும் தூசி, புழு, பூச்சிகள், இதுபோன்ற சிறிய மீன்கள் மீது சிப்பி வெளியிடும் திரவம் உறைந்துவிடும். நாளாக நாளாக அது, முத்தாக மாறிவிடும். வெவ்வேறு சிப்பிகளைச் சேகரித்து, அவற்றைப் பக்குவமாக உடைத்து, அவற்றில் முத்து உருவாகும் படிநிலையை பாடம் செய்திருக்கிறோம்’’ என்றார் முகம்மது ரிஸ்வான்.

மேலும் பல வகையான சங்குகள், கிளிஞ்சல்கள் பற்றி சொன்னார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், “கடலுக்குள்ளே ஒரு பயணம் போய்ட்டு வந்த மாதிரி இருந்துச்சு. சீ ஷெல் மியூசியத்துக்கு ஓ போடுங்க” என்றார்கள் உற்சாகமாக.

கே.யுவராஜன்

கே.ராஜசேகரன்