மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி ! - 4

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

கேபினெட் கேமரா விகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா

2007-ம் ஆண்டு. நாகப்பட்டினம் நகர காவல் நிலையம். வாசலில் இருந்த அறிவிப்புப் பலகையில் Hs No : 643/2007-ன்படி ரௌடிகள் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒருவர், ஜெயபால்! 

2011-ம் ஆண்டு. தமிழ்நாடு தலைமைச் செயலகம். மீன்வளத் துறை அமைச்சர் அறையின் வாசலில் இருந்த பெயர்ப் பலகையில் இருந்த பெயர்... அதே ஜெயபால்!

ஆந்திர சினிமாக்கள்போல, காவல் துறையின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர், பின்னர் 'ஓஹோ’ அரசியல் வளர்ச்சி காரணமாக மந்திரிகள் பட்டியலில் இடம்பிடிக்க முடியும் என்பதற்கு... நேரடி சாட்சி ஜெயபால்!

2008-ம் ஆண்டு நீதிமன்றத்தில் போராடி, காவல் துறை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து தன் பெயரை நீக்கிய ஜெயபால், அதன் பின்னர் மந்திரி பதவி கைக்கு வந்ததும் காக்கிகளையே பந்தாடினார். நாகப்பட்டினம் எஸ்.பி-யாகப் பணிபுரிந்த பலர், ஜெயபாலின் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு இடம் அளிக்காததால், இடமாற்றம் செய்யப்பட்டனர். ஜெயபாலின் வாழ்க்கையில் நடந்த பல சமாசாரங்கள், சினிமாவையும் மிஞ்சும் ஆச்சர்யங்கள்!

மந்திரி தந்திரி !  - 4

கேஷியர் டு கேபினெட்!

ஜெயபாலின் பூர்வீகம் நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை. வீட்டில் ஆறு பிள்ளைகளில் ஒருவர். பி.காம் முடித்துவிட்டு வேலையில்லாப் பட்டதாரியாக இருந்த காலத்தில், நெடுஞ்சாலைத் துறையில் சிறிய அளவில் ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்துகொண்டிருந்தார். அப்போது அக்கரைப்பேட்டையில் தி.மு.க பிரமுகராகவும் நாட்டாராகவும் (மீனவத் தலைவர்) இருந்த நைனியப்ப நாட்டாரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். நாட்டாருக்கு உதவியாக, கிராமப்

பஞ்சாயத்துக்களை பைசல் செய்துகொண்டிருந்த ஜெயபாலின் மனதில் அரசியல் ஆசை துளிர்விட்டது அப்போதுதான்.

1991-ம் ஆண்டு. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல். ஜெயபாலின் எதிர் வீட்டில் வசித்த கோடி மாரிக்கு, அ.தி.மு.க-வில் எம்.எல்.ஏ ஸீட் கிடைத்தது. மீனவக் கிராமங்களில் ஒரு சம்பிரதாயம் உண்டு. எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மீனவர் ஒருவருக்கு தேர்தலில் ஸீட் கிடைத்துவிட்டால், அவரை வெற்றி பெறவைப்பதற்காக, மீனவ மக்கள் தங்கள் பணத்தைச் செலவுசெய்வார்கள். அப்படி கோடி மாரியின் தேர்தல் செலவுகளுக்காக, மீனவக் கிராம மக்கள் நிதி திரட்டி ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். அந்த நிதியை முறையாகச் செலவழித்து, கணக்குகளைப் பராமரிக்க தகுதியான நபரைத் தேடினார்கள். அப்போது அக்கரைப்பேட்டை ஏரியாவில் பி.காம் படித்திருந்த ஜெயபால், அதற்குப் பொருத்தமாக இருப்பார் என ஏகமனதாக முடிவெடுத்தார்கள்.

'கிராம கேஷியர்’ என்ற பொறுப்பு மூலம் அரசியல் அரங்கில் நுழைந்தார் ஜெயபால். அ.தி.மு.க உறுப்பினர் அட்டையே இல்லாத ஜெயபாலுக்கு, அந்தக் கட்சியின் உள்ளூர் பிரமுகர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தில், 'ஆறு மாதங்கள் முன்பு வரை சிவாஜி ரசிகர் மன்றத்தில் இருந்த கோடி மாரிக்கே எம்.எல்.ஏ ஸீட் கிடைத்திருக்கிறது. நாமும் கொஞ்ச காலம் அ.தி.மு.க-வில் இருந்தால், எம்.எல்.ஏ ஆகிவிடலாம்’ என கணக்குப்போட்டார் ஜெயபால். அழகு திருநாவுக்கரசு முன்னிலையில் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார்.

மாவட்டச் செயலாளராக

ஓ.எஸ்.மணியன் இருந்தபோது அவரின் நட்பு கிடைத்தது. தலைஞாயிறு ஏரியாவில்தான் ஓ.எஸ்.மணியனின் வீடு. குளம் ஒன்று கட்டி மீன்களை வளர்த்துவந்தார் அவர். வாரம் தவறாமல் அங்கே 'உள்ளேன் ஐயா’ சொல்லும் ஜெயபால், அந்தக் குளத்தில் கொடுவா மீன்களை வலைவீசிப் பிடிப்பார். பிடித்த மீன்களைக் கொண்டுபோய் மார்க்கெட்டில் விற்று, அந்தக் காசை ஓ.எஸ்.மணியனிடம் கொடுப்பார். இந்தப் பணிவும் விசுவாசமும்தான் ஜெயபாலுக்கு நாகை மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் பதவியைப் பரிசளித்தன. அதுவரை குளத்தில் வலைவீசி மீன் பிடித்துக்கொண்டிருந்த ஜெயபாலுக்கு, அரசியல் களத்தில் வலைவீசி பதவி பிடிக்கும் கலை அப்போதுதான் கைவந்தது.

கடலில் பிடித்த ஃப்ரெஷ் மீன்களை அரசியல் புள்ளிகளின் வீடு தேடிப் போய்க் கொடுத்தார் ஜெயபால். அப்படித்தான் மன்னார்குடி திவாகரன் வீட்டுக்கும் மீன்களைக் கொடுத் தார். அப்படி மீன் கொடுக்கச் செல்லும்போதெல்லாம் லுங்கி, பனியன் காஸ்ட்யூமில்தான் செல்வார் ஜெயபால். 'நானே கடலுக்குப் போய் பிடிச்சுட்டு வந்த மீனுங்க’ என்பதைச் சொல்லாமல் சொல்லும் வித்தை வியூகம் அது. திவாகரன் வீட்டுக்கு சின்ன மீன்களைக் கொடுத்து, அரசியலில் பெரிய மீனைப் பிடித்தார் ஜெயபால். திவாகரன் சிபாரிசில் ஜெயபால் மனைவி கண்ணகி, நாகை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரானார். அரசியலில் அதிகாரம் குவிந்தது. எதிரி முகாம் மூலம் கார்டனுக்கும் ஜெயபால் மீதான புகார்கள் குவிந்தன!

மந்திரி தந்திரி !  - 4

2004-ம் ஆண்டு ஜெயபாலுக்கு சிரம தசை. சென்னை கொளப்பாக்கம் கூட்டத்தில் நேரடியாகவே ஜெயலலிதாவிடம் திட்டு வாங்கி, நாகை மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் மற்றும் அக்கரைப்பேட்டை கிளை மேலமைப்பு பிரதிநிதி ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். கொஞ்ச காலம் அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார். மீண்டும் உற்சாகமடைந்து, 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஸீட் கிடைத்துத் தோற்றார். 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ஜெயித்து, முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார். மீனவருக்கு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை அறிந்த ஜெயபால், மன்னார்குடி சேனல் மூலம் காய் நகர்த்த, கேபினெட்டில் ஜெயபாலுக்கான கதவுகள் திறந்தன... மீன்வளத் துறை அமைச்சர்!

தாறுமாறு தகராறு!

ஜெயபால் வீட்டு முகவரி முதல் தேர்தல் வேட்பு மனு வரை அத்தனையிலும் குந்தாங்கூறு குளறுபடிகள். 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் ஜெயபால் சி.பி.எம் வேட்பாளர் மாரிமுத்துவிடம் 2,344 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காரணம், ஜெயபாலின் சொந்த ஊரான அக்கரைப்பேட்டையில் அவருக்கு விழவேண்டிய வாக்குகள் விழவில்லை. ஜெயபாலைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஊர் மக்கள் சார்பில் தே.மு.தி.க சார்பாக மதியழகன் களம் இறக்கப்பட்டார். மீனவர்களின் வாக்குகளை மதியழகன் குவிக்க, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயபால் தோற்றுப்போனார். அந்தக் கோபம், பின்னாளில் கடும் மோதலாக உருவெடுத்தது.

அக்கரைப்பேட்டையில் ஜெயபால் கோஷ்டியும் எதிர்க்கோஷ்டியும் மோதிக்கொள்ள, வீடு சூறை, தாக்குதல், காயம், போலீஸ் ஜீப் சேதம்... என சகலமும் அரங்கேறின. கலவரம் ஏற்படுத்துதல், கொடிய காயம் உண்டாக்கியது, அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருந்தது, கொலை முயற்சி... என நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவாக, ஜெயபாலோடு 27 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். கட்சிப் போராட்டங்களுக்காக சம்பிரதாயமாகக்கூட சிறைப் பக்கம் ஒதுங்காத ஜெயபால், கொலை முயற்சி வழக்கில் உள்ளே போனார். அதன் பிறகும் சின்னச் சின்னத் தகராறுகளில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டதால், ரௌடிகள் பட்டியலில் ஜெயபால் பெயரைச் சேர்த்தனர் காக்கிகள்.

இந்தக் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருந்த நிலையில்தான், 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட, கட்சித் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்தார் ஜெயபால். அந்த மனுவில், 'உங்கள் மீது வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா... இருந்தால், அதுபற்றிய விவரம்?’ என்றொரு கேள்வி இருக்கும். அதற்கு, 'தன் மீது எந்த வழக்கும் இல்லை’ எனப் பதில் அளித்து ஜெயலலிதாவிடமே உண்மையை மறைத்தவர் ஜெகஜ்ஜால ஜெயபால்.

2011-ம் ஆண்டு மீன்வளத் துறை அமைச்சரான பிறகு, அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டியிருந்தது. அப்போது ஜெயபாலிடம் பாஸ்போர்ட் இல்லை. 'தட்கல்’ முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார். ஒருவர் மீது வழக்கு இருந்தால், பாஸ்போர்ட் வழங்க மாட்டார்கள் என்ற தகவல் அப்போதுதான் தெரிய வருகிறது அமைச்சருக்கு. நாகப்பட்டினத்தில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப் பித்தால் வழக்கு விவகாரம் வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்பதால், உஷாராக சென்னை முகவரியைக் குறிப் பிட்டு விண்ணப் பித்தார் ஜெயபால்.

மந்திரி தந்திரி !  - 4

'ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நன்னடத்தைச் சான்றிதழ் அளித்தால், உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்கும்’ என்ற விதி பற்றி அறிந்ததும், அப்போது மீன்வளத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடியிடம் தன் மீதான வழக்கு விவரங்களை மறைத்து நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றார் ஜெயபால். ஒருவேளை வழக்கு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கலாகி, அரசுப் பயணம் ரத்தாகி, அந்தத் தகவல் ஜெயலலிதாவை எட்டினால், பதவி பணாலாகிவிடும் என்பதாலேயே தலையால் தண்ணீர் குடித்து பாஸ்போர்ட் பெற்றார் ஜெயபால். ஆக, ஜெயலலிதா, பாஸ்போர்ட் துறை, ஐ.ஏ.எஸ் அதிகாரி... என உச்ச அதிகார மையங்களின் கண்களில் மண்ணைத் தூவி பாஸ்போர்ட் பெற்றார் ஜெயபால்!

'நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இல்லை... காவல் நிலையத்தில் பதிவுசெய்ததோடு சரி. அதனால், வேட்புமனு, பாஸ்போர்ட் நிபந்தனைகள் ஜெயபாலுக்குப் பொருந்தாது’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

இந்த விவகாரங்களைச் சுட்டிக்காட்டி கலியமூர்த்தி என்பவர், 'அமைச்சர் ஜெயபால் சட்ட விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, 'கொலை முயற்சி வழக்கில் புகார் கொடுத்தவர்கள், காயம் அடைந்தவர்கள் என இருதரப்பும் புகாரையும் வாபஸ் பெற்றுக்கொண்டு சமாதானமாகிவிட்டார்கள். அதனால் தன் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்துசெய்ய வேண்டும்’ என நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்தார் ஜெயபால்.

புகார்தாரர் மற்றும் காயம்பட்டவரின் வாக்குமூலங்களை ஏற்று, கொலை முயற்சி வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம். ஆனால், அந்தச் சமாதானப் படலத்திலும் ஓர் ஆச்சர்யம் ஒளிந்திருக்கிறது. அந்த ஆச்சர்யம் அ.தி.மு.க தரப்பை அதிர்ச்சியடையவைக்கும். அந்த வழக்குக்காக ஜெயபாலுக்கு ஆதரவாக வாதாடியவர் தி.மு.க வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த ஜே.சி.துரைராஜ்!

துறையில் சாதித்தது என்ன?

சுமார் 1,000 கி.மீ நீளக் கடற்கரையைக்கொண்ட தமிழகத்தில், மீன் வளம் அள்ள அள்ளக் குறையாதது. ஆனால், மீன் வளத் துறையின் சொதப்பல் செயல்பாடுகளோ சொல்லிச் சொல்லி மாளாதவை. அக்கரைப்பேட்டை மற்றும் கல்லார் கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்க அரைகுறையாக நடந்த வேலைகளால் எந்தப் பலனும் இல்லை என்கிறார்கள் ஏரியாவாசிகள். 360 கோடி ரூபாய் செலவில் நாகை துறைமுகத்தை கன்டெய்னர்கள் கையாளும் வசதியோடு 'கிரீன் போர்டு’ ஆக மாற்றும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.

15 ஏக்கர் பரப்பு உள்ள சென்னை சேத்துப்பட்டு ஏரி, 42 கோடி ரூபாய் செலவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் என அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால், அமைச்சர் மனதுவைக்க வேண்டுமே! திட்டம் பாதிக் கிணற்றைக்கூட தாண்டவில்லை. மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்போடு கன்னியாகுமரி குளச்சலில் சுமார் 87 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் மீன்பிடித் துறைமுகம், 2015-ம் ஆண்டு ஜூனில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்கள். ஆனால், அதுவும் ஆமை வேகத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறது.

இவ்வளவு ஏன்... சிங்கள ராணுவத்தின் தோட்டாக்களுக்கு, தமிழக மீனவர்கள் பலியாகும் அவலம் இந்த ஆட்சியிலும் தொடரத்தான் செய்கிறது. ஆனால், அந்தப் பிரச்னையைத் தீர்க்க தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் எந்த முனைப்பும் காட்டவில்லை. இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டால், அவர்கள் வீடுகளுக்கு அமைச்சர் வந்து ஆறுதல் சொல்வது நடைமுறை வழக்கம். அந்த நடைமுறையும் இப்போது கடைப்பிடிக்கப்படுவது இல்லையாம்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'தமிழ்நாட்டு மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு’ என்கிறார். 'எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொல்வோம்’ என்கிறார் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. இப்படி வெளிப்படையாக விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அது ஏதோ தனக்கு சம்பந்தம் இல்லாத துறையின் விவகாரம் என்பதுபோல அசட்டை அமைதி காக்கிறார் ஜெயபால்.

'நெப்போலியனிடம் அவன் படைத்தலைவன் ஒருவன் ஓடிவந்து, 'அரசே, எதிரிநாட்டுப் படையினர், எல்லா பக்கங்களும் நம்மைச் சுற்றி வளைத்துவிட்டார்கள். என்ன செய்வதென்றே புரியவில்லை!’ எனத் தடுமாற்றத்துடன் கூறினான். அதற்கு நெப்போலியன் கொஞ்சமும் கலங்காமல், 'அதனால் என்ன? எல்லா பக்கங்களும் துப்பாக்கியால் சுடலாம் என சந்தோஷப்படுங்கள்!’ என்றாராம். எதையும் சவாலாக எடுத்துக்கொண்டு முன்னேறுபவர்களைத்தான் வரலாறு பதிவுசெய்துள்ளது!’ - இது தன் தலைவியைப் புகழ்ந்து சட்டசபையில் ஜெயபால் பதிவுசெய்த பேச்சு. ஆனால், இதே போக்கை ஜெயபால் கடைப்பிடித்தால், வரலாறு நிச்சயம் அவரைப் பற்றிய தகராறுகளை மட்டுமே பதிவுசெய்திருக்கும்!

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கப் பணி, 35 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுவருகிறது. இதில் அக்கரைப்பேட்டை தோட்டம் பகுதியில் படகுகள் நிறுத்துவதற்காக 18 அடி உயரத்தில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது. ஆனால், அது 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இடிந்து விழுந்தது. இதற்கு, தரம் குறைந்த கட்டுமானப் பொருட்கள், கொள்ளை லாப கமிஷன்தான் காரணம் என மீனவர்கள் கொதித்தனர். ஆனால், இதற்காக யார் மீதும் துறைரீதியான நடவடிக்கை இல்லை; திட்டமும் மெகா சீரியலை மிஞ்சுகிறது.

தமிழகத்தில் மதிப்பிடப்பட்ட கடல் மீன் உற்பத்தி 7 லட்சம் டன். ஆனால், இப்போது 4.32 லட்சம் டன் அளவுக்குத்தான் உற்பத்தி இருக்கிறது. மதிப்பிடப்பட்ட இலக்கை எட்டிப்பிடிக்க துறைரீதியாக எந்த நடவடிக்கையும் முடுக்கிவிடப்படவில்லை.

மந்திரி தந்திரி !  - 4

ஆழ்கடலில் மீன் பதனிடும் அலகு நிர்மாணம் மற்றும் தாய் கப்பல் நிறுத்தும் புதுமையான திட்டங்களை அறிவித்தார்கள். நடுக்கடலில் நிற்கும் தாய் கப்பல் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப் படகுகளுக்கு அத்தியாவசியமான இடுபொருட் களை வழங்கவும், கப்பலிலேயே மீன் பதனிடுவதற்கான வசதிகளை வழங்கவும் திட்டம். ஆனால், அறிக்கையில் மட்டுமே தாய் கப்பல் படபடக்கிறது. கடலில் இறங்குவதற்கான சமிக்ஞைகளைக் காணோம்!

மீனவர்கள் பாதுகாப்பாகக் கடலுக்குச் சென்று திரும்புவதற்கு கம்பியில்லா தொலைதொடர்பு வசதி அளிக்க 52 கோடியில் திட்டம் தீட்டப்பட்டது. அது இன்னும் 'ஆன் தி வே’!

மல்லுக்கட்டு ஜல்லிக்கட்டு!

அமைச்சர் சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களும் விவகாரங்கள்தான். ஒவ்வொன்றும் மல்லுக்கட்டு மல்யுத்தம்!

* ஆரம்ப காலத்தில் 'வியாபாரக் காந்தம்’ ஆகவேண்டும் என்ற ஆசை ஜெயபாலுக்கு. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் டீசல் பங்க் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தார். கிடைக்கவில்லை. உடனே சுதந்திரப் போராட்ட தியாகி லட்சுமண நாயுடு நடத்திக்கொண்டிருந்த டீசல் பங்கில் பார்ட்னராகச் சேர்ந்துகொண்டார். பின்னர், அந்தப் பங்கை தன் பெயருக்கே மாற்றிக்கொண்டார். வருமானம் கொட்டியது. அவருடைய பங்குக்கு அருகிலேயே அரசு பங்க் ஒன்று அமைய, தன் வருமானம் பாதிக்கும் என உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார். இதனால் உள்ளூர் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர், பின்னர் அந்த மனுவை வாபஸ் பெற்றார். இதனால் ஆரம்ப நாட்களில் 'டீசல் பங்க் ஜெயபால்’ என்றுதான் ஊருக்குள் பிரபலமானார்.

* விடுமுறையில் நாகைக்கு வரும் அமைச்சரை வரவேற்க, ரயில்வே ஸ்டேஷனில் கட்சி நிர்வாகிகள் சால்வை போட்டு வரவேற்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதேபோல சென்னைக்குத் திரும்பும்போதும் பிரியா விடை கொடுக்க வேண்டும். வரவேற்பு, வழியனுப்பு வைபவங்களுக்கு வராதவர்கள் 'கறுப்புப் பட்டியலில்’ வைக்கப்படுவார்கள்.

* கட்சி நிர்வாகிகளை வார்த்தைகளில் வறுத்தெடுத்துவிடுவார் ஜெயபால். 'உன்னை, தொலைச்சுடுவேன்; அரசியல்ல இல்லாமப் பண்ணிடுவேன்!’ என்றெல்லாம் ஏகமாகத் திட்டுவார். இப்படித்தான் ஒருமுறை மணல்மேடு பேரூராட்சித் துணைத் தலைவர் மதனை போனில் ஒரு பிடி பிடிக்க, அதை மதன் பதிவுசெய்து வாட்ஸ்அப்பில் பரப்ப, ஜெயபால் புகழ் கார்டன் வரை பரவியது.

* அதட்டல் பேச்சில் பட்டையைக் கிளப்பினாலும், மேடைப் பேச்சில் சொதப்பிவைப்பார் ஜெயபால். ஒரு கல்லூரி விழாவில், 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என ஒளவையார் பாடியிருக்கிறார்’ எனச் சொல்லி அசடு வழிந்தார். ஒரு பள்ளி விழாவில், 'விடாமுயற்சியுடன் ரஜினி 16 முறை படையெடுத்தார்’ எனச் சொல்ல மாணவர்கள் சிரித்துவிட்டார்கள். அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்கள் என்பது தெரியாமல், மீண்டும் மீண்டும் 'கஜினி’க்குப் பதில் ரஜினி என்றே சொல்லிக்கொண்டிருந்தார் ஜெயபால்.

* எதிர்க்கோஷ்டியினர், ஜெயபாலின் காலடி மண்ணை எடுத்துச் சென்று, பூஜை செய்ததாகச் செய்தி பரவியது. அதன் பிறகு விழாவுக்கோ நிகழ்ச்சிக்கோ செல்லும் ஜெயபால், காரைவிட்டு இறங்கும் முன் ஒரு விரிப்பை விரிக்கிறார்கள். அதன் மீது நடந்து சென்றே மேடையேறுவார். ஒருகட்டத்தில் தன் நிழலைக்கூட நம்பாத எச்சரிக்கையுடன் வலம்வந்தார்.