மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 12

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

''உங்களைப் போன்ற செயின் ஸ்மோக்கர்கள் சிகரெட் பழக்கத்தைவிட்டு ஒழிப்பதற்காகத்தான் இந்த சிகரெட் இன்வென்ஷன். மரண பயம் காட்டணும்'' எனச் சொன்ன தன் மாணவன் டேவிட்டை, கோணல் சிரிப்புடன் பார்த்தார் புரொஃபஸர். அவன் உள்ளங்கையில் ஒரு சிகரெட் இருந்தது. 

''மூன்று தியரிகளின்படி இதைத் தயாரித்திருக்கிறேன். நியூட்டனின் மூன்றாவது விதி, கொஞ்சம் பிளாக் ஹோல், நான் வணங்கும் கிறிஸ்துவிடம் இருந்து மூன்றாவது...'' என்றான். புரொஃபஸர், நெற்றியைச் சுருக்கியபடி அந்த சிகரெட்டை எடுத்து தன் உதடுகளில் பொருத்தினார். கிண்டலாகப் புன்னகைத்துக்கொண்டே பற்றவைத்தார்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 12

முதல்முறை புகையை உறிஞ்சி வெளியேவிட்டார். இரண்டாவது முறை சிகரெட்டை வாயில் வைத்ததும் சிகரெட் அவரை உறிஞ்சத் தொடங்கியது.

''எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு'' என்றான் டேவிட்.

சுதாரிப்பதற்குள் புரொஃபஸரின் மொத்த உடலையும் சுருக்கி, சிகரெட் உள்ளிழுத்துக்கொண்டது.

''தனது நிறையைவிட அதிக நிறையை உள்ளிழுத்துக்கொள்ளும் பிளாக் ஹோல்'' என்றான்.

கீழே விழுந்த சிகரெட்டுக்குள் இருந்து புரொஃபஸர் கத்தினார்...

''அந்த மூன்றாவது தியரி என்ன?''

''ரிசரெக்‌ஷன் அதாவது வெளியே வர மூன்று நாட்களாகும்!'' என்றபடி புன்னகைத்தான்.!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 12

''எர்த்க்வேக் ஆஃபர்!'' என்றது விளம்பரம்.

'' 'செத்தவன் நெத்தியில இருந்தும் சில்லறையை அடிக்கிறது’னா இதுதான்!'' என்றான் கார்ப்பரேட் சித்தன்.

ஹார்ன் ப்ளீஸ்!

லாரி போன்ற வாகனங்களின் முன்பக்கம் கிட்டத்தட்ட ஒரு முகம்போல நமக்குத் தோன்றுவதை, சின்ன வயதில் இருந்தே கவனித்திருப்போம். ஒருவிதமான இல்லூஷன். அந்த முன்பக்கத்துக்கு, கண்கள் எல்லாம் வரைந்து அந்த இல்லூஷனை இன்னும் எகிறவைப்பார்கள்.

எல்லாவற்றையும் கலர்ஃபுல்லாக அலங்கரிப்பதில் நம் ஆட்களுக்கு இருக்கும் ஆர்வம் சற்று ஆக்ரோஷமானது. அதற்கு ஓர் உதாரணம்தான், 'இந்தியன் ட்ரக் ஆர்ட்’ என உலக அளவில் அறியப்படும் லாரி ஆர்ட். இந்தியா மட்டும் அல்ல... பாகிஸ்தான், பங்ளாதேஷ் போன்ற எல்லா அங்காளி பங்காளிகளுக்கும் இதுவே ரசனை. மக்களின் அன்றாடத் தேவைகளைச் சுமந்துகொண்டு நெடுஞ்சாலைகளைக் குறுக்கும் மறுக்குமாகக் கடக்கும் லாரிகளை, சும்மா விட்டுவைக்க மனம் இல்லாமல், கிட்டத்தட்ட நடமாடும் கலர்ஃபுல் கலைக்கூடமாகவே மாற்றிவிடுகிறார்கள்.

எனாமல் பெயின்ட் உபயோகித்து வரையும் சைன் போர்டுகளின் இடத்தை ஃப்ளெக்ஸ் பிரின்டிங் டெக்னாலஜி பிடித்துவிட்ட பிறகு, இன்னும் எனாமல் பெயின்ட்களுக்கு இடம் அளிப்பது லாரி ஆர்ட்கள்தான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 12

'ஹார்ன் ப்ளீஸ்’ முதல் 'கீப் டிஸ்டன்ஸ்’ வரை பின்னால் வரும் வாகனங்களுக்கு அறிவுரைகளும் 'டாட்டா... பை பை’ என லேசானச் சீண்டலும் கலந்துகட்டிய லாரியின் பின் பாகம் முதல், 'ரோட் கிங்’ போன்ற பெயர்களையோ, அலங்காரமாக வரையப்பட்ட கடவுள் படங்களையோ கொண்ட முன்பக்கம் வரை ஹோலி கொண்டாடுவதுபோல வண்ணங்களை வாரி இறைத்து, முழு லாரிக்கும் கலர்ஃபுல் மெஹந்தி போடுகிறார்கள்.

சாந்தனு சுமன் என்கிற கிராஃபிக் டிசைனர், இந்த லாரி ஆர்ட் பற்றி இந்தியா முழுவதும் சுற்றி 'ஹார்ன் ப்ளீஸ்’ என்ற பெயரில் டாக்குமென்ட்ரி படம் எடுத்திருக்கிறார்.

''லாரி ஆர்ட் என்பது, வெறும் அலங்காரம் மட்டும் அல்ல; உற்று நோக்கினால் அது இந்தியர்களின் நம்பிக்கை, தேசபக்தி, மக்களின் உணர்வுகள், விழிப்புஉணர்ச்சி போன்ற விஷயங்களைப் பிரதிபலிக்கிறது'' எனச் சிலாகிக்கிறார் சாந்தனு.

ரிஸ்வா பெயிக் போன்ற ஃபேஷன் டிசைனர்களுக்குக்கூட லாரி ஆர்ட் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு லாக்மி ஃபேஷன் ஷோவில் லாரி ஆர்ட் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட உடைகளை அணிந்து மாடல்கள் ராம்ப்வாக் வந்தார்கள். பார்வையாளர்களின் மனசு ப்ரேக்டவுண் ஆகியிருக்கும்!

குட்டீஸின் அட்டகாசம்

''அம்மா... ஐஸ் ஸ்கேட்டிங்னா என்னம்மா?'' என்றான் அபி.

குழந்தையின் கேள்வியில் மகிழ்ச்சியான ஷர்மி, 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்...’ பாவனையுடன், ''ஐஸ் ஸ்கேட்டிங்னா... ஐஸ் மேல சறுக்கி விளையாடுற விளையாட்டு. ஒரு அட்வெஞ்சர் கேம்டா'' என்றாள்.

''அப்படின்னா அந்த ஃப்ரீஸர்ல இருக்கிற ஐஸ் கட்டிகளை எடுத்து தா... நான் சறுக்கி விளையாடணும்.''

இப்படித்தான் கோடை விடுமுறை எல்லா வீடுகளிலும் களேபரமாக ஆரம்பிக்கிறது. அல்லுசில்லு அரை டிக்கெட்களால் அல்லோலகல்லோலப்படுகிறது அம்மாக்களின் தேசம். அலுவலகத்தைக் காரணம் காட்டி டாடிகள் ஓடிவிட, அகப்பட்டுக்கொள்வது மம்மிகள்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 12

கிராமத்துச் சிறுசுகளாவது, பொசுங்கும் வெயிலானாலும் போய் விளையாட, கொஞ்சம் மர நிழலாவது இருக்கும். பட்டணத்துப் பொடிசுகள் நிலைமைதான் பாவம். கொளுத்தும் வெயிலில் வெளியே போக முடியாமல், வீட்டுக்குள்ளேயே பூட்டிக்கிடக்கிறார்கள்.

பக்கத்து வீட்டு பாஸ்கரையும் அடுத்து தெரு அப்புவையும்விட, சோட்டாபீமையும் மோட்டு - பட்லுவையும் பொம்மியையும் நிஞ்சா கடோரியையும் விளையாட்டுத் தோழர்களாக்கிக்கொள்கிறார்கள். விளம்பரங்கள் பார்த்து விவரமாக புராடெக்ட் பெயர்களைச் சொல்லி அம்மாக்களை கடைகடையாக ஏறி இறங்கவைக்கிறார்கள்.

பிளாஸ்டிக் வில்லில் அம்பு விட்டு, தாத்தாக்களைத் தடுத்தாடச் செய்கிறார்கள். கௌபாயாக மாறி, கன்களால் சுட்டு, பாட்டிகளைப் பாதுகாப்பற்றவராகப் பதற்றப்பட வைக்கிறார்கள். தண்ணீர்த் துப்பாக்கிகளால் கண்ணீர் வரவைக்கிறார்கள். இதில் ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்ற வேறுபாடு இல்லாமல், வீட்டைக் கூறுபோடுவதில் சமத்துவம் சரிவிகிதத்தில் இருக்கிறது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 12

இதில் இருந்து எல்லாம் எஸ்கேப்பாக, வாண்டுகளை மியூசிக், டான்ஸ், கராத்தே... என சம்மர் கேம்ப்களுக்கு அனுப்பி வீட்டில் சமாதானக்கொடியை நாட்டலாம் என எதிர்பார்க்கிறார்கள் பெற்றோர்கள். இதுதான் சாக்கென சந்துக்கு ஒன்றாக சம்மர் கேம்ப்கள், நேற்று பெய்த வெயிலில் காளான்களாக முளைத்து பெற்றோரின் பாக்கெட்டை பிராக்கெட் போடுகின்றன.

பிள்ளைகளின் விடுமுறை பெற்றோர்களுக்கு வன்முறையாகக் காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இந்தியா போன்ற கோடை நாடுகளில் பிள்ளைகளுக்கு மட்டும் விடுமுறை கொடுத்துவிட்டு, அலுவலகத்தில் பெற்றோர்களை புராஜெக்ட்களோடு மல்லுக்கட்டவிடுவது எந்த வகையில் (அ)நியாயம்? அவர்களுக்கும் ரெண்டு மாதச் சம்பளத்துடன் விடுமுறை கிடைக்க எல்லாம் வல்ல கார்ப்பரேட் ஆண்டவர்களை வேண்டிக்கொள்வதைத் தவிர, வேறு என்ன வழி இருக்கிறது!?