ஓவியங்கள்: ராஜ்குமார் ஸ்தபதி
துரத்திவரும் வார்த்தைகள்
தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தாள்
தோழியென அறியப்படும் யுவதியொருத்தி.
வேறு யாருமில்லா வீட்டில்
அவளை ஆளும் ஆசையில்
நானும் அமர்ந்திருந்தேன்.
தேநீர் ஊற்றியபடி சிலாகிக்கும்
பேச்சைத் தொடங்கியிருந்தவளின்
முந்தானை விலகலில்
விழிக்கத் தொடங்கியதென் மிருகம்.
நீண்டதொரு மௌனப் பாலையை
கலவிக்கான ஆயத்த நொடிகளாக...
இதயம் அதிரக் காத்திருந்தேன்.
மெள்ளச் சிரித்தபடி சொன்னாள்...
'இன்று அம்மாவின் நினைவு நாள்
நீ அருந்துவது அவள் கோப்பையில்
நீ அமர்ந்திருப்பது அவள் இருக்கையில்
வேறென்ன வேண்டும் நீயிருக்கையில்...’
விடை பெற்றுவந்து
வெகுநேரம் ஆன பின்னும்
அந்த வார்த்தைகள் துரத்திவந்து
எச்சமிடுகின்றன
என் நிர்வாணத்தில்!
- ந.சிவநேசன்

விசாரிப்பு
மாலை நேரம்
மயங்கும் சூரியன்
கனத்த இருளின் அணைப்பிற்காக
மேல்திசையில் மறைய
ஆளில்லா பூங்காவில் அமர்ந்த
என் கண்முன்
ஒவ்வொரு பூவாக அமர்ந்து
எழுந்து செல்லும் வண்ணத்துப்பூச்சி
விலாசம் தெரியா வெளியூர்க்காரன் வீதியில் விசாரித்துச் செல்வதுபோல்
விரிகிறது!
- ரமணா கே.சுப்ரமணியன்
எண்ணும் எழுத்தும்
குறிப்பெழுதி வைக்காமலே
எங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது எனத் தெரியுமளவு
இன்னும் கொஞ்சம் நல்லா படிப்போம்
பார்க்கும் பெண்களெல்லாம்
சியர் கேர்ள்ஸாகவே தென்படாதிருக்க
ஐ.பி.எல் ஸ்கோர் போர்டுகள் தவிர
மற்றவையும் கண்ணில் படுமளவு
இன்னும் கொஞ்சம் நல்லா படிப்போம்
யார் யாரைக் கட்டிக்கொள்ள வேண்டும்
அல்லது
யார் எதைக் கட்டிக்கொள்ள வேண்டும்
என்ற சர்சைகளிடையே
முகவரி மறந்த
திருவிழாக் குழந்தையாக நிற்காமல்
இன்னும் கொஞ்சம் நல்லா படிப்போம்
எவரோ உழும் நிலமும் போகுது
நாம் ஆடும் இணையக் களமும் போகுது என்று அறியாமல்
யாரோ ஒரு பெண்ணின் படம் இணைத்து
புரளி பரப்பிக் கிளராதிருக்க
இன்னும் கொஞ்சம் நல்லா படிப்போம்
- உமாமோகன்
தயக்கம்
மினரல் வாட்டர்
வைத்திருப்பவர்களிடம்
தாகத்திற்கு தண்ணீர்
கேட்க தயக்கமாக இருக்கிறது!
- மணிகண்டபிரபு
காலகாலம்
பேச்சின் ஊடாக
மறுபேச்சு சொன்னதனால்
ஒன்பதாண்டுகள்
முகம் கொடுக்கவில்லை
முனியாண்டி சித்தப்பா.
ஓங்கிய கையை
மறித்ததற்காகவே
வாழ்வு சாவில்லை அளவிற்கு
வருத்தப்பட்டார்
நட்ராஜ் மாமா.
கம்மங்கொல்லையில்
மாடு மேய்ந்த தகராறில்
ஊரைவிட்டே
ஒதுங்கிக்கொண்டார்
கருத்தையன் தாத்தா.
கீரைக்கொல்லையில்
கோழி சீய்த்ததில்
வளர்ந்த சண்டை
வெட்டுக் குத்தில்தான்
போய் முடிந்தது.
உப்பு சப்பில்லாத
காரணங்களால்
காரியங்கள் பல நடந்தேறிய
காலகட்டத்துக்குப் பிறகு
சித்தப்பு மகன் சீனு
மாமா மகன் தமிழ்
கருத்தையா மகன் சந்துரு
கீரைக்கொல்லை முருகேசு மகன் ராமு
ஒன்றாக பட்டணத்தில்
ஆறுக்கு ஆறு அறையில்
வாழ்ந்துவருவது
ஊருக்குத் தெரியாது!
- சூ.சிவராமன்