Published:Updated:

வதந்திகளின் மனம்

கவிதை: கவின்மலர் ஓவியம்: ஹாசிப் கான்

வதந்திகளின் மனம்

வதந்திகளின் வனமொன்றில்

மரத்தின் கிளையில் அமரும் பறவை

பொய்களின் நெடியைத் தாங்கவியலாமல்

மூர்ச்சையாகிறது.

குரங்கொன்று கிளைதோறும் தாவித்தாவி

மயங்கி மண்ணில் வீழ்கிறது

புரட்டுகளின் நாற்றத்தால்.

வேட்டைப் புலியொன்று

மயங்கி வீழ்கிறது வாயில் கவ்விய இரையுடன்

காற்றில் பரவிய புனைகதைகளின் மணத்தால்.

மரங்களுக்கு விதையூன்றியோரில் ஒரு மனிதன்

ஏகாந்தமாய் அக்கானகத்தினுள் நடக்கிறான்

பாடலொன்றை இசைத்தபடியே

அவதூறுகளின் நறுமணத்தை நுகர்ந்தவாறே.

வதந்திகளின் மனம்

சற்றுத் தொலைவில்

காட்டுக்கு வெளியே

அம்மனிதனை மோப்பம்பிடித்த

தெருவோர நாயொன்று

வீழ்ந்து இறக்கிறது!

ஒரு தேதியும் இரண்டு நாட்குறிப்புகளும்

நீயும் நானும் பேசிக்கொள்ளாததொரு நாளில்

என்னவெல்லாம் நிகழ்ந்துவிட்டன பார்த்தாயாவென்று

வியப்புறுகிறாய்.

பெட்ரோல் விலை உயர்வு

ஒரு விமான விபத்து

பசிபிக் பெருங்கடலில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம்

நீ பார்த்த ஒரு சாலை விபத்து என அடுக்குகிறாய்.

இவற்றின் சுவடற்றதாய்க் கழிந்தது என் நாள்

பணியில் சுணங்கிக் கிடந்தது

நொடிக்கொரு முறை

அலைபேசித் திரையை வெறித்தது

உன் குரலையொத்த தேவாலய மணியை

செவிமடுத்த நொடியில் கண்ணீர்விட்டது

மனதின் வலி கிளை பரப்பி உடல் நடுங்கியது

இவற்றால் மட்டும் நிரம்பியது

எனது ஞாபகக் குறிப்பேட்டின் அன்றைய பக்கம்.

தவிர

அன்றைக்கான மிக மோசமான நிகழ்வென்பது

எனக்கென்னவோ

நாமன்று பேசிக்கொள்ளவில்லை

என்பதாகவே இருக்கிறது!