Published:Updated:

மீதம் இருக்கும் தீர்ப்புகள் !

மீதம் இருக்கும் தீர்ப்புகள் !

மீதம் இருக்கும் தீர்ப்புகள் !

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது கட்சியினர் பெரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். தங்கள் தலைவியின் வருகையைக் கொண்டாடுவது, அவர்களின் உரிமை. ஆனால் ஓர் அரசாங்கம் என்ற வகையில், இப்போது தமிழ்நாடு அரசு உடனடியாக உண்மையாக செய்யவேண்டியது என்ன? 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் '4 ஆண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம்’ என்ற தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார். இடையில் இந்த ஏழரை மாதங்கள் மொத்தத் தமிழ்நாடும் நிர்வாகக் குளறுபடிகளால் ஸ்தம்பித்தது. ஓர் அரசாங்கம் என்பது அன்றாட அலுவல்களைக் கவனிக்கும் நிர்வாக அமைப்பு மட்டுமா என்ன? மக்கள் நலனையும் மாநில வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதும், சட்டங்களை அமல்படுத்துவதும்தான் ஒரு முழுமையான அரசின் செயல்பாடுகள். இந்த ஏழரை மாதங்களில் அப்படி எதுவுமே நடைபெறவில்லை.

மாநிலம் முழுவதும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின. ஏற்கெனவே இருந்த பல திட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன. புதிய கட்டடங்கள் பாதியில் நின்றன. தமிழ்நாடு அரசின் நிதிநிலையோ மிக மோசமானது. புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குகின்றன. ஏற்கெனவே இருக்கும் முதலீடுகள் வெளியேறுகின்றன. இவற்றைக் கவனித்து சரிசெய்ய வேண்டிய அமைச்சர்களோ, கோயில், கோயிலாகச் சென்று தீ மிதிப்பதும் காவடி எடுப்பதுமாகவே பொழுதைக் கழித்தனர். ஏழு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் பெருங்கடமையை ஆளுமையுடன் கையாளும் திறன் இல்லாமல் தடுமாறினர். எதைக் கேட்டாலும் 'அம்மா வரட்டும்... அம்மா வந்தால்தான்...’ என்றே எல்லா மட்டங்களிலும் சொல்லப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதற்கும், இப்போது மே 11-ம் தேதி விடுவிக்கப்பட்டிருப்பதற்கும் இடையிலான 227 நாட்கள், செயல்படாத தமிழ்நாடு அரசாங்கத்தின் கறுப்பு தினங்கள்.

இதோ ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுவிட்டார். இதுவரை அவர் பெயரால் நிகழ்த்தப்பட்ட அலட்சியங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்பேற்கவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. 'அமைதி, வளர்ச்சி, வளம்’ என நாடாளுமன்றத் தேர்தலின்போது தான் முன்வைத்த முழக்கத்தை அவரே ஒருமுறை நினைவூட்டிக்கொள்ளட்டும். அரசு இயந்திரம் இனியேனும் முறையாக, முழுமையாக, இதயசுத்தியுடன் செயல்படட்டும்.

ஏனெனில், தீர்ப்பு தேதிகள் இன்னும் மீதம் இருக்கின்றன!