ச.ஜெ. ரவிபடங்கள் : தி.விஜய்
தமிழ்நாடு தலைப்புச் செய்திகளில் அது நிச்சயம் வித்தியாசம். 'கோவையில் மாவோயிஸ்ட் தம்பதி கைது’. வட இந்தியா தொடங்கி ஆந்திரா வரை ஆதிக்கம் செலுத்திவந்தவர்கள், தமிழ்நாட்டிலும் தளம் அமைத்துச் செயல்படுகிறார்கள் என்பது அதிர்ச்சி. 'மாவோயிஸ்ட்’ எனச் சொல்லி கைதுசெய்யப்பட்ட ரூபேஷ் - ஷைனா தம்பதியின் இரு மகள்கள் வெளிப்படையாக நீதிமன்றத்துக்கு வந்து, பெற்றோருக்கு ஆதரவு அளித்தது தமிழ்நாடு காணாத துணிச்சல்!
''அரசியல்வாதிகள் மாதிரி என் அப்பா - அம்மா, யாரையும் ஏமாத்தலை; மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கலை. மக்கள் உரிமைகளுக்காகப் போராடினாங்க. அதுக்காகக் கைதானதுக்கு அவங்க ரொம்பப் பெருமைப்படுறாங்க. அவங்களுக்கு மகளாப் பிறந்ததற்காக நானும் பெருமைப்படுறேன்'' - அத்தனை அமளிதுமளிகளுக்கு இடையிலும் தீர்க்கமாகப் பேசுகிறார் 19 வயது ஆமி ரூப் ஷைனா. ரூபேஷ் - ஷைனா தம்பதியின் மூத்த மகள். ப்ளஸ் டூ முடித்துவிட்டு சட்டம் படிப்பதற்கான முனைப்பில் இருக்கும் ஆமி ரூப், 'படாந்திரம்’ எனும் மாத இதழ் ஒன்றின் உதவி ஆசிரியர். அவரது தங்கை சவேராவுக்கு 13 வயது.
''நானும் தங்கச்சியும் தாலாட்டு கேட்டதைவிட, அரசியல் முழக்கங்கள்தான் அதிகமாக் கேட்டிருப்போம். கைக்குழந்தையா இருந்தபோதே, ஒவ்வொரு போராட்டத்துக்கும் எங்களைத் தூக்கிட்டுப் போயிருவாங்க. அங்கே மரத்துல தொட்டில் கட்டி எங்களைப் போட்டுட்டு அவங்க போராட்டத்துல பரபரப்பா இருப்பாங்களாம். அதனால இந்தப் போராட்டம், பதற்றம் எல்லாம் எங்களுக்குப் புதுசு இல்லை'' - தங்கையை அணைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார் ஆமி.

''கேரளா ஹைகோர்ட்ல கிளார்க் வேலை பார்த்துட்டு இருந்தாங்க என் அம்மா. மாவோயிஸ்ட் கொள்கைகளில் அவங்களுக்கு மெள்ள ஈர்ப்பு உண்டாச்சு. அரசாங்கத்தின் போக்கைப் பார்த்துட்டுதான், 'மாவோயிஸ்ட் ஆதரவாளரா மட்டுமே இருந்த என்னை, உங்க போலீஸும் அரசும்தான் மாவோயிஸ்ட்டா மாத்துச்சு’னு அப்போ கேரள முதலமைச்சரா இருந்த அச்சுதானந்தனுக்குக் கடிதம் எழுதிட்டு, வேலையை ராஜினாமா பண்ணிட்டாங்க. அப்பாகூட சேர்ந்து இயக்க வேலைகளில் தீவிரமானாங்க. நானும் தங்கச்சியும் கேரளாவில் பாட்டி நஃபீஸா வீட்ல இருந்தோம். அப்பா எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவார். ஆனா, கேரளாவுல பல பொது இடங்கள்ல நானும் தங்கச்சியும் அப்பப்போ அவரைப் பார்த்துப் பேசிப்போம்.
போலீஸ் எங்களை எப்பவும் கண்காணிச்சுட்டே இருக்கும். எனக்கு 12 வயசு ஆனப்போ, திடீர்னு என்னையும் தங்கச்சியையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ராத்திரி முழுக்க பயந்துட்டே ஸ்டேஷன்ல உட்கார்ந்து இருந்தோம். அப்புறம் போகச் சொல்லிட்டாங்க. இப்படி அடிக்கடி போலீஸ் எங்களை விடாமத் துரத்திட்டே இருந்ததால, என் அப்பா - அம்மா மாவோயிஸ்ட்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு. எங்களை ஸ்கூல்ல இருந்து வெளியேத்திட்டாங்க. அதனால நான் ரெண்டு தடவை செவன்த் படிக்க வேண்டியிருந்தது.
கேரளாவுக்குப் போன பிறகும் அடிக்கடி எங்களைக் கூட்டிட்டுப்போய் விசாரிப்பாங்க. அப்போ, 'உங்க அப்பாவைச் சுட்டுக் கொன்னுடுவோம்’னு சொல்வாங்க. பாட்டிகிட்ட, 'இவங்க ரெண்டு பேருக்கும் விஷத்தைக் கொடுத்துக் கொன்னுடு’னு சொல்லி மிரட்டுவாங்க. இப்படி போலீஸ் நிழலோடுதான் எங்கள் குழந்தைப் பருவம் கழிஞ்சது.
'இப்படி ஒரு அப்பா - அம்மாவுக்குப் பிறந்து கஷ்டப்படுறோமேனு நினைச்சிருக்கீங்களா?’னு நிறையப் பேர் என்கிட்ட கேட்டிருக்காங்க. அப்படி எல்லாம் எப்பவும் எனக்குத் தோணினதே இல்லை. ஏன்னா, அப்பாவும் அம்மாவும் எங்களை அந்த அளவுக்கு சந்தோஷமாப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களோடு நான் சுத்தாத இடமே இல்லை. கொல்கத்தா, பாட்னா, லக்னோனு இந்தியா முழுக்க பல இடங்களைச் சுத்திப் பார்த்திருக்கேன். வெவ்வேறு மாநிலம், மொழி, வாழ்க்கைமுறைனு பல கலாசாரங்களை இப்பவே வாழ்ந்து பார்த்திருக்கோம். இந்த வாய்ப்பு எத்தனை குழந்தைகளுக்குக் கிடைச்சிருக்கும்? என் பள்ளி நண்பர்கள்ல யாருக்கும் இந்த மாதிரி அனுபவம் கிடைச்சது இல்லை. ரொம்ப முக்கியமா எதைப் பத்தியும் கேள்வி கேட்க, யோசிக்க, சிந்திச்சு முடிவெடுக்கக் கத்துக்கொடுத்தாங்க என் பெற்றோர். சுத்தி என்ன நடக்குதுனு கவனிக்கக் கத்துக்கொடுத்தாங்க. அதனால இப்பவும் எப்பவும் அப்பா - அம்மாவின் அன்பை, அரவணைப்பை நாங்க இழந்துட்டதா நினைக்கவே இல்லை. ஏன்னா, 'உன்னை மாதிரி ஆயிரமாயிரம் பெண்கள் இங்கே சுதந்திரமா வாழணும். அதுக்காகத்தான் நாங்க போராடிட்டு இருக்கோம்’னு அப்பா அடிக்கடி சொல்வார். அப்படின்னா இப்பவும் அவர் எனக்காகத்தானே போராடிட்டு இருக்கார்!''
ஆமி, தனது பெற்றோருக்குத் தீவிரமாக ஆதரவு திரட்டிக்கொண்டிருக்க, சதித் திட்டம் தீட்டியதில் பெற்றோருக்கு உதவியாக இருந்ததாகக் கூறி, ஆமியையும் கைதுசெய்ய போலீஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். இதையடுத்து, 'சேவ் ஆமி’ என அவருக்கு ஆதரவுகள் குவிகின்றன.
''கைது பத்தி நான் பயப்படலை. அருந்ததி ராய் சொல்லியிருக்காங்க... 'நீங்கள் காட்டுக்குள் இருந்தால், உங்கள் நெஞ்சில் ஒரு தோட்டா பாயலாம்; நாட்டுக்குள் இருந்தால், சிறையில் அடைக்கப்படலாம். இவை எதற்கும் நீங்கள் தயாராக இருந்தால்... வாருங்கள் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம்’னு. நான் எல்லாத்துக்கும் தயாரா இருக்கேன்!''