Published:Updated:

சல்மான் Vs சாதாரணன்

இதுவா இந்தியா ?பாரதி தம்பி

ல்மான் கான் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பும், அதற்கு இந்தியப் பிரபலங்கள் ஆற்றிய எதிர்வினையும், அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனும் கடந்த வாரத்தின் தேசியப் பரபரப்பு. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், போதையின் ஆதிக்கத்தில் கார் ஓட்டி வந்ததாகச் சொல்லப்பட்ட நடிகர் சல்மான் கான், மும்பை நகரின் பந்த்ரா என்ற இடத்தில் சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். அதில் ஒருவர் உடல் நசுங்கி மரணம் அடைய, நான்கு பேருக்குக் கடுமையான காயம். அதில் ஒருவருக்கு கால் பறிபோய்விட்டது. 

13 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், இப்போதுதான் 'சல்மான் கான் குற்றவாளி. ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்’ எனத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால், தீர்ப்பின் நகல் சல்மான் கான் கைகளுக்குச் சென்று சேரும் முன்பே, அவருக்கு இரண்டு நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அடுத்த இரண்டாவது நாள், 'ஐந்து ஆண்டுகள் தண்டனை’ என்ற தீர்ப்பும் நிறுத்திவைக்கப்பட்டது. இது பல்வேறு சர்ச்சை விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது!

சல்மான் Vs சாதாரணன்

ஏழைக்கு ஒரு நீதி... பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?

ஏழைகளுக்கு சாதா தரிசனம், பணக்காரர்களுக்கு சிறப்பு தரிசனம் என்பது இந்தியக் கோயில்களில் உள்ள நடைமுறை. சட்ட நிர்வாகத்தில் நடைமுறையும் அதுதானோ என்ற சந்தேகத்தை உண்டாக்கியிருக்கிறது சல்மான் வழக்கு.

அது ஒரு விபத்து வழக்கு. தெளிவான சாட்சிகள் இருக்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வர 13 வருடங்கள் ஆகின; ஜாமீன் கிடைக்க 13 மணி நேரம்கூட ஆகவில்லை. தண்டனையும் நிறுத்திவைக்கப்பட்டுவிட்டது. இப்போது சல்மானுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வழக்கம்போல பாலிவுட் ஹீரோவாக வலம்வரலாம்; ஒப்பந்தம் போட்ட/போடும் படங்களில் தொடர்ந்து நடிக்கலாம். வழக்கு..? அதெல்லாம் ஒரு பிரச்னையா? மேல்முறையீடு, வாய்தா என இன்னும் பல்லாண்டுகளுக்கு இழுத்தடிக்கலாம்.

இத்தனைக்கும் சல்மான்கான் ஒருமுறைகூட நீதிமன்றத்தை மதித்தவர் இல்லை. அவர் குடித்துவிட்டு கார் ஓட்டி பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியதற்கான சாட்சி, அப்போது சல்மானின் பாதுகாப்புக்காக உடன் இருந்த ரவீந்திர பாட்டீல் என்கிற போலீஸ்காரர்தான். காசநோயால் பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் அந்த மனிதர் பரிதாபமாக இறந்துபோனார். ஆனால், தன் சாட்சியத்தில் கடைசி வரை உறுதியாக இருந்தார். சல்மானோ முடிந்தவரை வழக்கை இழுத்தடித்தார்.

2002-ம் ஆண்டு செப்டம்பரில் விபத்து நடந்ததும் காவல் துறையால் சல்மான் கான் கைதுசெய்யப்பட்டாலும், உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த மாதம் மறுபடியும் சல்மான் கைதுசெய்யப்பட... இரண்டு வாரங்கள் மட்டும் சிறையில் இருந்தவர் மறுபடியும் ஜாமீனில் வெளியில் வந்தார். பிறகு, தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குப் பிரிவு தவறானது என வழக்குத் தொடர்ந்தார். அது இழுத்தடிக்கப்பட்டு, 2006-ம் ஆண்டுதான் அவர் மீது குற்றச்சாட்டே பதிவுசெய்யப்பட்டது.

பல்வேறு வாய்தாக்களுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு மாஜிஸ்திரேட், கோர்ட் நீதிபதி சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால், விசாரணையின் இறுதியில் வழக்கை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அங்கு மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கியது. 2014-ம் ஆண்டு ஜூலையில்,           64 சாட்சியங்கள் குறித்த கோப்பு காணாமல்போய்விட்டதாக நீதிமன்றத்தில் சொன்னது போலீஸ். அந்தக் கோப்புகளைக் கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். இரண்டே மாதங்களில் கோப்புகள் 'கண்டுபிடிக்கப்பட்டு’ ஒப்படைக்கப்பட்டன.

சல்மான் Vs சாதாரணன்

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் சாட்சிகள் விசாரணை நடந்தது. 'நான் காரை ஓட்டவே இல்லை’ என்றார் சல்மான். இன்னொருவர், 'நான்தான் சல்மான் கானின் டிரைவர். காரை ஓட்டியது நான்தான்’ என்றார். இத்தனைக்கும் பிறகுதான் சல்மானுக்கு 'மரணத்தை விளைக்கக்கூடிய’ குற்றத்தைப் புரிந்த பிரிவின் கீழ் ஐந்து ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

வதைபடும் விசாரணைக் கைதிகள்!

பொதுவாக ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களைக் கலைத்துவிடும் சாத்தியம் இருந்தால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்படும். ஆனால், சல்மான் கான் அப்பட்டமாகப் பொய் சொன்னதுடன், ஒரு பொய் சாட்சியையும் உருவாக்கி இருக்கிறார். ஆனாலும் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. சல்மான் கான் போன்ற '5 ஸ்டார் இந்தியர்’களுக்குச் சாத்தியமாகும் இந்தத் துரித நீதி, சாதா இந்தியனுக்குச் சாத்தியமா? நிச்சயம் இல்லை.

இந்திய சிறைகளில் வெறும் விசாரணைக் கைதிகளாகவே பல்லாண்டுகளாக அடைபட்டுக் கிடப்போர் லட்சக்கணக்கானோர். இந்தியாவில் இருக்கும் 1,382 சிறைகளில் அதிகபட்சமாக             3.32 லட்சம் பேரை அடைத்துவைக்கலாம். ஆனால், இவற்றில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 3.81 லட்சம். இவர்களில் 2.54 லட்சம் பேர் விசாரணைக் கைதிகள். இது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் கடந்த ஆண்டு புள்ளிவிவரம்!

விசாரணை கைதி என்பவர், ஒரு வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்படுபவர். அவர் மீது, 90 நாட்களுக்குள் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த விசாரணைக் கைதியை நீதிமன்றம் பிணையில் விடுவிக்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், எந்த நீதிமன்றமும் இதை நிறைவேற்றுவது இல்லை. போலீஸ் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. இதனால், வழக்கு நிரூபிக்கப்பட்டால் கிடைக்கும் அதிகபட்சத் தண்டனைக் காலத்தைவிட, கூடுதலான ஆண்டுகள் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வக்கீலுக்குச் செலவழித்து, வழக்கை முன் நகர்த்தி, வெளியில் வரும் அளவுக்கு இவர்களுக்கு பலம் இல்லை. அதனால் சிறு குற்றங்களை இழைத்தோரும், குற்றமே இழைக்காதோரும் போலீஸின் பொய் வழக்குகளில் சிக்கி வருடக்கணக்கில் சிறைக்கூடங்களில் வதைபடுகின்றனர்.

உங்களுக்கு சென்னை, திருவான்மியூர் முருங்கைக்காய் வழக்குத் தெரியுமா?

சல்மான் Vs சாதாரணன்

சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராணி வெங்கடேசன். இவரது கணவர் வெங்கடேசன், தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் டி.ஜி.பி. இவரது மருமகன் ராஜேஷ் தாஸ், சென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனர். 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம், கொட்டிவாக்கத்தில் உள்ள ராணி வெங்கடேசனின் வீட்டு காம்பவுண்ட் ஓரமாக இருந்த முருங்கை மரத்தில், செல்வம், சக்தி என்ற இருவர், முருங்கை இலை பறிக்க, கிளை ஒடிந்து ராணி வெங்கடேசனின் வீட்டுக் காம்பவுண்டுக்குள் விழுந்துவிடுகின்றனர். காவலாளி கத்த, பயந்துபோன இருவரும் ஓடிவிடுகின்றனர். உடனே கொதித்தெழுந்த ராணி வெங்கடேசன் குடும்பத்தினர், திருடர்களைப் பிடிக்குமாறு புகார் அளிக்க... ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர், 10 காவலர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து இருவரையும் கைதுசெய்து, இ.பி.கோ 385-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்து புழல் சிறையில் அவர்களைத் தள்ளினார்கள்.

வி.ஐ.பி-க்களின் கண் அசைவுக்காக அவர்களின் வரவேற்பறையில் காத்திருக்கும் நீதி, சாதாரண மக்களுக்கு, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி வெகு தொலைவில் வைக்கப்பட்டிருக்கிறது!

வி.ஐ.பி தண்டனைக்கு வி.ஐ.பிக்களின் அதிர்ச்சி!

'சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் கேட்டதும் என் இதயமே நொறுங்கிவிட்டது’ என்றார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதேபோல்தான், முன்பு நடிகர் சஞ்சய் தத்துக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியபோது ரஜினிகாந்தின் இதயமும் நொறுங்கியது. நீதி, நியாயத்துக்குக் குரல் கொடுப்பவர் என்ற இமேஜ்கொண்டிருக்கும் அமீர் கான், சல்மான் கானைத் தேடிச்சென்று ஆறுதல் கூறினார். இவர்கள் யாரும் சல்மான் கானைத் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியாகக் கருதவில்லை. இவர்களைப் பொறுத்தவரை சல்மான் கான், சக வி.ஐ.பி; பணம், புகழ், செல்வாக்கு... எனப் பல அம்சங்களில் ஒரே நேர்கோட்டில் இருப்பவர். அதனால்தான் அவர்களின் உதிரம் துடிக்கிறது. 'சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டால், பாலிவுட்டில் 500 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும்’ என்ற செய்தி, அவர்களின் துடிப்புக்கான காரணத்தை விளக்குகிறது. அதுவே, செத்துப்போன ஏழைக்காக மனம் இரங்கிப் பேசுவதால், இவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைத்துவிடும்? 'சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது’ என வசனம் பேச, இது திரைப்படமும் அல்ல. எனவே, இந்தப் பிரபலங்களின் பதற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், சாதாரண ரசிகர்களும் சல்மான் கானுக்காகப் பரிதாபப்படுவது ஏன்? அவர்கள் யாரும் சல்மான் கானின் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. பிளாட்பாரத்தில் சல்மான் கானின் கார் டயர் ஏறி நசுங்கிச் செத்த ஏழை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் அவர்களால், தங்கள் மனம் விரும்பிய திரை நட்சத்திரம் சிறைக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ரசிகனை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? திரையில் நேர்மை, நீதி, நியாயம் என பன்ச் வசனம் பேசும் ஹீரோவைக் கொண்டாடும் அவன், அதே ஹீரோ நிஜ வாழ்க்கையில் குடித்துவிட்டு, அப்பாவிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்தால், அதையும் ஏற்கிறான். ஏன் ஏற்கிறான் என்றால், உலகத்தின் நடைமுறை அவ்வாறு இருக்கிறது.

பணக்காரர்களும், அதிகாரத்தில் உள்ளோரும் ஏழைகளை வதைப்பது சாதாரணமானது என மக்கள் நினைக்கிறார்கள். தங்கள் தெருவில் ஒரு வார்டு கவுன்சிலர் செய்யும் அட்டுழியங்களை தினம்தோறும் பார்க்கிறார்கள். பொறியாளரை மிரட்டி தற்கொலை செய்யவைக்கும் அமைச்சர்களைப் பார்க்கிறார்கள். முருங்கைக்காய் திருட்டுக்கு சிறையில் அடைக்கும் அதிகாரத் திமிரைப் பார்க்கிறார்கள். ஸ்கூல் ஃபீஸ் கட்டவில்லை என்றால், பிள்ளையை ஃபெயிலாக்கும் ரௌடிப் பள்ளிகளைப் பார்க்கிறார்கள். என்கவுன்ட்டர் என்ற பெயரில் 20 மனித உயிர்களை காக்கா, குருவிகளைப்போல சுட்டுக்கொல்லும் காவல் துறையின் கொடூரத்தைப் பார்க்கிறார்கள். ஆகவே, சல்மான் கான் காரைவிட்டு ஏற்றியது, நாட்டில் நடக்காத ஒன்று அல்ல; இது பத்தோடு பதினொன்றான நிகழ்வு. எனவேதான் சல்மான் கானின் குற்றத்தை ரசிகர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

தாமதத்தின் பயனாளிகள் யார்?

விபத்து நடந்தது 2002-ம் ஆண்டு. தீர்ப்பு வந்திருப்பது 2015-ம் ஆண்டில். இடையில் 13 ஆண்டு காலத் தாமதம். இந்தத் தாமதம்தான் இந்திய நீதித் துறையின் ஆகப் பெரிய பலவீனம். கிரிமினல்கள் மனதைரியம் பெறுவது இந்தத் தாமதத்தின் மூலமே. நீதிமன்றத்துக்குச் சென்று தன்னை எதுவும் செய்ய முடியாது என கிரிமினல்கள் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சட்டத்துக்கு அஞ்சாமல் துணிந்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு கொலையைச் செய்துவிட்டு நீதிமன்றத்தில் சரணடையும் மனத் துணிவு அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? அது வெறுமனே பகை உணர்ச்சியின் தீவிரம் மட்டும் அல்ல; நீதிமன்ற விசாரணை, அதன் தாமதம் மீது கொண்டுள்ள நம்பிக்கை எல்லாம் அடங்கியிருக்கிறது.

ஆனால், மறுபுறம் சாமானிய மக்கள் நீதிமன்றங்களை நினைத்து அஞ்சுகின்றனர். திரைப்படங்களும், இந்த நிர்வாக அமைப்பும் நீதிமன்றம் மீது உருவாக்கிவைத்திருக்கும் பிரமை அவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. 'கோர்ட்டுக்குப் போனால் பல வருடங்கள் ஆகும்’ என்பது எல்லோருக்கும் தெரியும் என்றாலும்கூட, 'அதுதான் இந்த ஜனநாயக அமைப்பின் இறுதி நம்பிக்கை’ என்றும் மக்கள் நம்புகின்றனர்; அவ்வாறு நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தாமதமாக, பல காரணங்கள் இருக்கலாம். கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு இந்தியா. பல மதங்கள், ஏராளமான சாதிகள். இவற்றுக்கு இடையே ஒவ்வொரு நாளும் கணக்கிட முடியாத சண்டைகள்; சச்சரவுகள். பல்வேறு இனக் குழுவினர், பல்வேறு மொழியினர் இங்கு வாழ்கின்றனர். அவர்களுக்கு இடையே அனுதினமும் பிரச்னை வெடிக்கிறது. ஆண் - பெண் சமத்துவம் இல்லாத இந்தியத் திருமண உறவில் குடும்பச் சிக்கல்கள் கணக்கில்லாமல் வந்துகொண்டே இருக்கின்றன. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களுக்குப் பஞ்சம் இல்லை.

கடந்த ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 3.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 'இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விசாரித்து முடிக்க, இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்’ என்றார் ஒடிசா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சௌகான். இந்தத் தாமதத்தைத் தவிர்க்கவும், துரிதமான தீர்ப்புகளை உறுதிப்படுத்தவும் நீதித் துறையை நவீனமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மாறாக, யாருக்கு அதிக அதிகாரம் என்ற போட்டியில் அரசும் நீதித் துறையும் மோதிக்கொள்வதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.

சல்மான் கான் வழக்கில் உடனடியாக தண்டனை வழங்கப்பட்டிருந்தால், மக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை வந்திருக்கும். மாறாக ஆறப்போட்டு, ஊறப்போட்டு, இழுத்தடித்தால்... எது எக்கேடு கெட்டால், எனக்கு என்ன என்றுதான் இருப்பார்கள்!