சார்லஸ்
ஐ.பி.எல்-லில் பிளே-ஆஃப் சுற்றுக்கு, தொடர்ந்து எட்டு ஆண்டுகளாகத் தகுதி பெற்றிருக்கும் ஒரே அணி என்ற கெத்துடன் நுழைந்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், இனி சென்னையில் போட்டிகள் நடைபெறாது என்பதால், சென்னை மண்ணிடம் இருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றிருக்கிறது சி.எஸ்.கே.
'சலோ... சலோ...’ என்கிற பெயரில் இசை ஆல்பம் உருவாக்கிக்கொண்டிருக்கிறார் சென்னை ட்வெய்ன் பிராவோ. அந்த ஆல்பத்தின் அறிமுக விழாவில் சென்னையின் பிரபல இசைக் குழுவான டக்காட்டோ (Staccato) நடத்திய இசை நிகழ்ச்சிக்கு ஆரவார அப்ளாஸாம்.
'நிறையப் பாடல்கள் பாடினோம். அதில், 'கடல்’ படத்தில் வரும் 'அடியே... அடியே.... எங்க நீ கூட்டிப்போற...’ பாட்டுக்கு டாப் லைக்ஸ். தோனி, கெயில்... எனப் பல ப்ளேயர்கள் மாறி மாறி ரிப்பீட் கேட்க, அந்தப் பாடலை மட்டும் ஐந்து முறை பாடினோம்’ எனப் பூரிக்கிறார் டக்காட்டோ கிடாரிஸ்ட் கிறிஸ்ட் கெவின் அலெக்ஸ்.

* அதிகாரபூர்வமாக, இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் அல்ல. தன் பெயரில் இருந்த 29 சதவிகிதப் பங்குகளை இந்தியா சிமென்ட்ஸ் அறக்கட்டளை பெயரில் மாற்றிவிட்டார் சீனிவாசன். ஆனால், அந்தக் அறக்கட்டளையின் தலைவர்? வேறு யார்... சீனிவாசன்தான்!
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனான பிரண்டன் மெக்கல்லம், ப்ளே ஆஃப் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாட மாட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறார். இதனால் சென்னை அணியில் மெக்கல்லமுக்குப் பதில் இனி மைக் ஹஸ்ஸி விளையாடுவாராம்.
* இந்த ஐ.பி.எல்-லின் பஞ்சாயத்துப் பப்ளிகுட்டியில் முக்கியமானது, வர்ணனையாளர்களின் உளறல்கள். முரளி கார்த்திக்கை 'இந்திய அணியின் முன்னாள் கேப்டன்’ என ரமீஸ் ராஜா சொல்ல, 'பரிசளிப்புத் திலகமான’ ரவிசாஸ்திரி ஒவ்வொரு போட்டியிலும் எதையாவது மாற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் லைவ் வர்ணனை, விவாதங்களில் சித்து எல்லோரையும் கண்டபடி திட்ட, எரிச்சலில் இருக்கிறார்கள் சோனி டி.வி-யின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்!

* 22 வயதான பவான் நெகி, இந்த ஆண்டு சூப்பர் கிங்ஸின் சூப்பர் கண்டுபிடிப்பு. டெல்லியைச் சேர்ந்த நெகி, ரவிச்சந்திரன் அஷ்வின் காயம் அடைந்ததால் அணிக்குள் சேர்க்கப்பட்டார். முதல்

போட்டியிலேயே 12 பந்துகளில் 27 ரன்கள் அடித்ததோடு, ஒரு விக்கெட்டும் எடுத்து அணிக்குள் வலுவாக இடம்பிடித்தார். ஆல் ரவுண்டரான நெகி, சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாமல் சென்னை அணியில் விளையாடும் ஒரே வீரர்.
* அதிரடி மன்னனும் பெங்களூரு பேட்ஸ்மேனுமான கிறிஸ் கெயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலுமே பங்கேற்கவில்லை. 'முழு உடல் தகுதியுடன் இருந்தாலும் ஏன் சென்னைக்கு எதிரான போட்டிகளில் மட்டும் விளையாடவில்லை?’ எனக் கேட்டதற்கு, 'ரெஸ்ட் எடுத்தேன்; டி.வி பார்த்தேன்; ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு ஜாலியாக இருந்தேன். ஏன் விளையாடவில்லை என்றெல்லாம் கேட்காதீர்கள்’ என்கிறார் செம கூலாக.
* 'தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் தன் வாழ்க்கையையே சினிமாவாகத் தயாரித்து வருகிறார் தோனி. இந்தப் படத்தில் தோனியாக நடிப்பவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டதாம். இப்போது மிச்சம் இருப்பது சாக்ஷி என்ட்ரி. சாக்ஷியாக படத்தில் யாரை நடிக்கவைப்பது என்பதில் ஏக குழப்பம். பல நடிகைகளைப் பரிசீலித்ததில் அலியா பட் பெயர்தான் முதல் சாய்ஸில் இருக்கிறது. அவரது கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்!