மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 200 ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

அவசியம் போடுங்கள்... `அட்டெண்டன்ஸ்’!

க்கத்து வீட்டுப் பெண்மணி, அடிக்கடி என் வீட்டுக்குப் பேச வருவார். வந்தவுடன் முதலில் வயதான என் மாமியார் உள்ள அறைக்கு சென்று, அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்து விட்டுத்தான் என்னிடம் பேச்சு கொடுப்பார். ‘’என்ன... என் மாமியாரைக் காக்கா பிடிக்கறயா?” என்று நான் தமாஷாக கேட்டேன். அதற்கு அந்தப் பெண்மணி, ‘’வயதானவர்கள் பலருக்கும் தாங்கள் அலட்சியப்படுத்தப்படுவதாக ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். முதலில் அவர்களை விசாரித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று விளக்கம் அளித்தார்.

இனி, யார் வீட்டுக்குப் போனாலும் முதலில் வீட்டு பெரியவர்களிடம் அட்டெண்டன்ஸ் போட்டுவிடுவோம்... சரிதானே?!

- பார்வதி, பெங்களூரு

அனுபவங்கள் பேசுகின்றன!

வெல்டன் மிஸ்டர் ஆட்டோ டிரைவர்!

சிதம்பரத்தில் இருக்கும் என் அக்காவின் மகள், 7-ம் வகுப்பு படிக்கிறாள். கோடை விடுமுறைக்கு வந்தவள், பள்ளிப் புத்தகத்துடன் ‘பொது அறிவு’ புத்தகம் ஒன்றும் வைத்து படித்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும், ``பரவாயில்லையே... இப்போதிலிருந்தே பொது அறிவு புத்தகத்தையும் படிப்பது மிகவும் நல்லது. உன் அம்மா வாங்கித் தந்தார்களா?’’ என்றேன். அதற்கு அவள், ``இல்லை சித்தி, எங்களை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் அங்கிள்தான் ஆட்டோவில் செல்லும் எல்லா பிள்ளைகளுக்கும் பள்ளி கடைசி நாள் அன்று வாங்கிக் கொடுத்தார்’’ என்றாள்.

அந்த ஆட்டோ டிரைவரின் முற்போக்கு சிந்தனை, என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவருக்கு, அனைவரின் சார்பிலும் மனப்பூர்வமான நன்றிகள்!

- ஆர்.ராஜேஸ்வரி, ஶ்ரீமுஷ்ணம்

அனுபவங்கள் பேசுகின்றன!

`ஆன்லைன்’ அவஸ்தை!

நான் சமீபத்தில் ஆன்லைனில் ஒரு புடவை புக்கிங் செய்தேன். நான்கே நாளில் புடவை என் வீட்டுக்கு வந்தது. பணம் கட்டி, பொருளைப் பெற்றேன்.  நான் புக் செய்த புடவைதான்; ஆனால், அதைப் பிரித்தபோதுதான் வில்லங்கமே தெரிந்தது! உள்ளே கலர் வெளுத்து போயும், இழைகள் சில இடத்தில் விட்டும் இருந்தது. இதுபற்றி என் தோழியிடம் கூறியபோது, அவள் ``போலியான வெப்சைட்டுகள் பல இருக்கின்றன. அவற்றில் இப்படித்தான் எதையோ ஒன்றை நம் தலையில் கட்டிவிடுவார்கள். நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்’’ என்றாள்.

தோழிகளே... ஆன் லைன் வர்த்தகத்தில் நீங்கள் ஈடுபடும் முன் நம்பிக்கையான வெப்சைட்டுகளைத் தேர்வு செய்யுங்கள் இல்லையெனில், ஏமாற்றம் அடைந்த என் அனுபவம்தான் கிடைக்கும்.

- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்