மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 5 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம்படங்கள்: விஜயகுமார், வீ.சிவக்குமார்ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா

2001ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ-வாக வென்ற கையோடு, உணவுத் துறை அமைச்சராக்கப்பட்டார். ஆனால், அடுத்த 22 நாட்களிலேயே 'முன்னாள் அமைச்சர்’ பட்டியலில் சேர்க்கப்பட்டார். முந்தைய தி.மு.க ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட தரம் இல்லாத அரிசி, கிடங்குகளில் மலையாகக் குவிந்திருக்கிறது. அதைக் கண்டுபிடித்து விவகாரமாக்கவில்லை என்பதுதான், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோபத்துக்குக் காரணம். 

பதவி பறிக்கப்பட்ட 2001-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி சட்டமன்ற விடுதியில் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சோகமாக அமர்ந்திருந்தார் விசுவநாதன். 'நான் எந்தத் தப்பும் பண்ணலை. எனக்கு ஏன் இப்படி நடந்துச்சுனு தெரியலை. தேர்தலுக்காக கைக்காசை அதிகமா செலவழிச்சுட்டேன்.

50 லட்சத்துக்கும் மேல கடன் இருக்கு. எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலை. பொண்ணுக்கு சி.எம் கோட்டாவுல டாக்டர் ஸீட் வாங்கிடலாம்னு நினைச்சேன். ப்ச்... எல்லாம்போச்சு!’ எனப் புலம்பிக்கொண்டிருந்தார்.

மந்திரி தந்திரி - 5 !

விரக்தியாக ஊருக்குத் திரும்பியவர், காலத்தை அமைதியாகக் கடத்திக்கொண்டிருந்தார். 'இத்தனை வருஷமா ஏதேதோ ஆசைப்பட்டு அரசியல்ல சாதிச்சுடலாம்னு சுத்திட்டிருந்தேன். வரமா கிடைச்ச மந்திரிப் பதவியை இப்படித் தாரைவார்த்துட்டு வந்துட்டேனே..! இனி நம்ம அரசியல் எதிர்காலம் அவ்ளோதானா?’ என்றெல்லாம் மருகிக்கொண்டிருந்தார். ஆனால், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அபார வெற்றியைச் சமர்ப்பித்த விசுவநாதனின் பம்பரப் பரபரப்பு, 'அம்மா’வின் கடைக்கண் பார்வையை அவர் மீது பாய்ச்சியது. வெகு விரைவிலேயே மீண்டும் அமைச்சரானார் விசுவநாதன். அதன் பிறகு அரசியலில் விசுவநாதனே எதிர்பார்க்காத வளர்ச்சி! இன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் 'அ.தி.மு.க’ என்றால், 'ஆர்.வி’ மட்டும்தான் எனும் அளவுக்கு செல்வாக்கு. ஜெயலலிதா மனதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடம் விசுவநாதனுக்கு. கட்சியைக் கட்டுப்படுத்தும் ஐவர் அணியில் பிரதான முக்கியத்துவம். அமைச்சரவையின் மிக முக்கியமான இரு துறைகள் விசுவநாதன் வசம். வேறென்ன வேண்டும்?!

அன்று ஒயின்ஸ் ஓனர்...  இன்று டாஸ்மாக் அமைச்சர்!

நத்தம் ராமநாதனின் நான்கு பிள்ளைகளில் ஒருவர் விசுவநாதன். அழகப்பா கல்லூரியில் பி.எஸ்ஸி., முடித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். அப்பாவிடம் வேலை பார்த்த நல்லையாவின் மகளுக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார் விசுவநாதன். அப்போது இருவருக்கும் இடையே காதல் அரும்ப, பெற்றோரை எதிர்த்து ஏழைக் காதலியைக் கரம் பிடித்தார். இதனால் விசுவநாதனை சில காலம் ஒதுக்கிவைத்தனர் குடும்பத்தினர். வாடகை வீட்டில் தனிக் குடித்தனத்தைத் தொடங்கியவர், தொழிலதிபர் கனவுடன் புளி வியாபாரத்தில் இறங்கினார்.

நீல நிற புல்லட்டில் சீறியபடி புளியந்தோப்புக்குள் நுழைவார். 'இன்னிக்கு எத்தனை மரம் அடிச்சிருக்கு... எத்தனை ஆளுங்க?’ எனக் கணக்குக் கேட்டு பாக்கெட் நோட்டில் குறித்துக்கொண்டு, அடுத்த தோப்புக்குக் கிளம்புவார். புளி வியாபாரத்தில் கொட்டிய கரன்சியை ஒயின் ஷாப்பில் இறக்கினார். நத்தத்தில் 'ஸ்டார் ஒயின்ஸ்’ என்ற கடையை நடத்தியவர், பின்னாளில் 'டாஸ்மாக்’ துறைக்கே அமைச்சர் ஆவோம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

கல்லூரி காலத்திலேயே மாணவர் அமைப்பில் இருந்த விசுவநாதனுக்கு, அரசியல் என்ட்ரி சுலபமாகவே இருந்தது. இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அமைச்சர் ஒருவரின் சிபாரிசில் அரசு வேலை கிடைத்தது. 'அரசு வேலை வேண்டாம். அரசியல்தான் வேண்டும்’ எனச் சொல்லி, அந்த வாய்ப்பைத் தட்டிக்கழித்தார். நத்தம் யூனியன் சேர்மன்தான் முதல் அரசியல் பதவி. 'ஜெ.’, 'ஜா.’ என அ.தி.மு.க இரண்டாக உடைந்து தேர்தலில் போட்டியிட்ட சமயம், 'ஜெ.’ அணியில் நின்று தோல்வியைத் தழுவினார். அதன் பிறகு என்ன முட்டி மோதினாலும் ஏரியாவுக்குள் யூனியன் சேர்மன் அளவுக்கு உயர முடிந்ததே தவிர, வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை விசுவநாதனுக்கு. காரணம்... ஆண்டி அம்பலம்!

மந்திரி தந்திரி - 5 !

நத்தம் தொகுதியில் 1977-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை அசைக்க முடியாத சக்தியாக ஆறு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக (ஒருமுறை த.மா.கா) இருந்தவர் ஆண்டி அம்பலம். அவர் உயிரோடு இருந்தவரை, அங்கே மற்ற எந்தக் கட்சியினரும் தலைதூக்க முடியவில்லை. ஆண்டி அம்பலம் மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில், விசுவநாதன் வென்றார்.

துறையில் சாதித்தது என்ன?

ஷாக் (மின்சாரம்), கிக் (மதுபானம்)... என இரண்டு பவர்ஃபுல் துறைகளை கையில் வைத்திருக்கிறார் விசுவநாதன். ஆனால், இரண்டின் சாதனையும் ரிவர்ஸில் ஓடிக்கொண்டிருக்கிறது. எகிறவேண்டிய மின் உற்பத்தி, தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் குறையவேண்டிய மதுபான விற்பனையோ, அசகாய இலக்குகளைத் தொட்டுக்கொண்டிருக்கிறது!

பசுமை, வெண்மைப் புரட்சிகளை எல்லாம் லெஃப்ட்டில் அடித்து ஒதுக்கிவிட்டு 'ஆல்கஹால் புரட்சி’யில் இந்தியாவுக்கே 'முன்மாதிரி மாநிலமாக’த் தள்ளாடுகிறது தமிழ்நாடு. 'தமிழ்நாட்டின் ஜீவாதார நதி... டாஸ்மாக் மது’ என்னும் அளவுக்கு, செல்போன் சிக்னல் கிடைக்காத மாநிலத்தின் இண்டு இடுக்குகளில்கூட மதுபானத்தைத் தங்குதடை இல்லாமல் கிடைக்கச்செய்கிறது அரசாங்கம். அமைச்சர் விசுவநாதனின் சீரிய முயற்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மதுபான விற்பனை மூலம் கடந்த ஆண்டு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 'கல்லா’ கட்டியது. ஆனால், துறையின் பெயரிலோ 'மதுவிலக்கு’ என்ற வார்த்தைகள் பளிச்சிடும். ஆக, அரசுக்கு சில்லறையும் மக்களுக்கு கல்லறையையும் ஒருசேர எழுப்பிக்கொண்டிருக்கிறது மதுவிலக்குத் துறை.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நான்கு மதுபான நிறுவனங்களுக்கு மது விற்பனை உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. முந்தைய தி.மு.க ஆட்சியில் எலைட் டிஸ்டில்லரீஸ், எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ் நிறுவனங்கள் செழித்துக் கொழிக்க, இப்போது மிடாஸுக்கு சுக்ர தசை. இது யாருடைய நிறுவனம் என்பது ஊர் அறிந்த செய்தி. ஆனால், தி.மு.க ஆட்சியில் தடபுடல் வியாபாரம் நடத்திக்கொண்டிருந்த எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ் நிறுவனத்துக்கும் விசுவநாதனின் கரிசனம் கிடைத்திருப்பதுதான் ஆச்சர்யம். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் வசனத்தில் தயாரான 'பெண் சிங்கம்’ படம் 'எஸ்.என்.ஜெயமுருகன் வழங்கும்...’ என்ற டைட்டிலோடுதான் தொடங்கும். அந்த எஸ்.என்.ஜெயமுருகனுக்குச் சொந்தமானதுதான் எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ்.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் தலையெழுத்தையும், கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவிதியையும் தீர்மானிக்கும் மதுபானத் தொழிலின் மூலம் பலரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஒட்ட ஒட்ட உறிஞ்சும் 'குடிமகன்களுக்கு’, 10 ரூபாய் டீ குடிக்கும் வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் உரிமையோ, உபசாரமோ கிடைக்காது. டாஸ்மாக் பார்களில் நச்சுப் பாதிப்பு அளவு குறைவான, தரமான(!) பிராண்டுகள் கிடைக்காது. பிரபலம் இல்லாத பிராண்டுகள்தான் வலிந்து விற்கப்படும். ஏனென்றால், எந்த பிராண்டுகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை முடிவுசெய்வது அதிகாரிகள்தான். அதனால் அவர்கள் காட்டில் கரன்சி மழை கொட்டும். ஆஃப், ஃபுல் பாட்டில்களை அதிக அளவில் கொள்முதல் செய்யச் சொல்லி, லாப சதவிகிதம் குறைவாகக் கிடைக்கும் குவார்ட்டர் பாட்டில்களைக் குறைத்து விற்கச் சொல்லும் ராஜதந்திரம் எல்லாம் நடக்கும். இதனால் நச்சு அதிகமான அல்லது அதிக அளவு 'சரக்கை’ வாங்கி மரணத்தை நோக்கி வேகமாக அடியெடுத்துவைக்கிறான் 'டாஸ்மாக்’ தமிழன்!

ஆனால் மறுபக்கம், 'அரசு எடுத்துவரும் நடவடிக்கையால், 2011-ம் ஆண்டு முதல் கள்ளச்சாராயச் சாவுகளே இல்லை’ என சட்டமன்றத்தில் ஜம்பமாகப் பெருமைப்பட்டுக்கொள்வார் விசுவநாதன். கள்ளச்சாராயச் சாவுகள் இல்லைதான். ஆனால், ஆல்ஹகால் இறப்புகள்? குடி போதையில் உண்டாக்கப்படும் விபத்தின் இறப்புகள்? அவர்கள் எல்லாம் விசுவநாதனின் கணக்குக்குள் வர மாட்டார்கள். ஆண்டுக்கு சுமார் 26 ஆயிரம் கோடியை அரசுக்கு அள்ளித்தருகிறது ஆயத்தீர்வைத் துறை. ஆனால், மதுவின் தீமைகள் பற்றி விழிப்புஉணர்வுப் பிரசாரங்களுக்கு விசுவநாதன் பெருந்தன்மையோடு ஒதுக்கியிருக்கும் தொகை... ஒரே ஒரு கோடி!

ஆயத்தீர்வைத் துறை செயல்பாடுகள் தமிழ்நாட்டைத் தடுமாறவைத்துக் கொண்டிருக்க, மின்சாரத் துறை நிர்வாகமோ தாறுமாறு. '2013-ம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும்’ என அறிவித்தது அ.தி.மு.க தேர்தல் அறிக்கை. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு, 'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,140 மெகாவாட் அனல் மின்சாரம், 5,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம்... என மொத்த மின் உற்பத்தித் திறன் 23,140 மெகாவாட் அளவுக்கு உயரும்’ என ஆவேசமாக அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால், துறை அமைச்சர் விசுவநாதனோ அடுத்த

15 வருடங்களுக்கு தனியாரிடம் இருந்து 3,330 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கான 'தொலைநோக்கு’ ஒப்பந்தம் போட்டதோடு அமைதியாகிவிட்டார்.

சொந்தமாக திட்டம் தீட்டி, அ.தி.மு.க ஆட்சியில் 100 மெகாவாட் அளவுக்குக்கூட மின் உற்பத்தி செய்யப்படவில்லை. இத்தனைக்கும் கடந்த 2013-14 நிதியாண்டில் வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்கச் செலவிட்ட தொகை 30,529 கோடி ரூபாய். இப்படி செலவான தொகையை மின் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும். இதனால் தமிழ்நாட்டின் 'மின்மிகை மாநிலம்’ கனவு தகர்ந்து, 'கடன் சுமை மாநிலம்’ அந்தஸ்து வலுவாகிக்கொண்டிருக்கிறது.

அந்தத் தனியார் மின் கொள்முதலிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் என எதிர்க்கட்சிகள் அலறுகின்றன. அதற்கு உதாரணம் முந்தைய தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உடன்குடி மின் திட்டம். 1,600 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட இந்தத் திட்டத்தை மின்சார வாரியமும் பெல் நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் என அறிவித்தார்கள். ஆனால், தி.மு.க ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் 8,000 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை அரசே செயல்படுத்தும் என 2012-ம் ஆண்டு அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனாலும், வேலை நடக்கவில்லை. திட்டத்தைச் செயல்படுத்த டெண்டர் கோரி வந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்காமல், பின்னர் திட்டத்தையே கிடப்பில் போட்டுவிட்டது அ.தி.மு.க அரசு. 'துறை அமைச்சரும் அதிகாரிகளும் வெளி சந்தையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய விரும்புவதாலேயே, உடன்குடி திட்டப் பணிகளுக்கு முட்டுக்கட்டை விழுகிறது’ என வெளிப்படையாகவே தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார் மருத்துவர் ராமதாஸ். ஆனால், அப்படி இல்லை என அடித்துச் சொல்கிறார் அமைச்சர்.

திட்டமிட்டபடி உடன்குடி திட்டப் பணிகள் நடந்திருந்தால், 2012-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தொடங்கிய புள்ளியிலேயே நிற்கிறது அந்தத் திட்டம். ஆக, பூர்வாங்கத் திட்டப் பணிகளுக்கென செலவான பொதுமக்களின் வரிப் பணம் எட்டு கோடி வீணாகியதுதான் மிச்சம். 'இதுபோன்ற மின் திட்டங்களை நிறைவேறாமல் தடுப்பதன் மூலம் வெளி மார்க்கெட்டில் ஒரு யூனிட் ரூ.15.10 என்ற விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் துறையைச் சேர்ந்தவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். ஆனால், தமிழ்நாட்டின் நிதி நிலைமை அசுர வேகத்தில் விழ்ச்சியடையும்’ என மின்சாரத் துறையின் நேர்மையான அதிகாரிகளே அங்கலாய்க்கிறார்கள்.

இப்போதைய நிலவரப்படி சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது மின்சார வாரியம். ஆனால், அதை எதிர்காலத்திலேனும் கரை சேர்க்க, எந்த முயற்சியும் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை என்பதே கசப்பான உண்மை!

இதே நிலை நீடித்தால், 'வளமான வலிமையான தமிழகம்’ என்ற கனவு... கனவாகவே இருக்கும் மிஸ்டர் விசுவநாதன்!

விசுவநாதனின் நிழல்!

மந்திரி தந்திரி - 5 !

விசுவநாதன் மனைவியின் மூன்றாவது தம்பி மற்றும் மருமகன், கண்ணன். வறுமை காரணமாக பள்ளிப் படிப்பையே முடிக்கவில்லை. ஆனால், இன்று விசுவநாதன் திண்டுக்கல்லில் இல்லாதபோது, கண்ணன்தான் அங்கு 'ஆக்ட்டிங் அமைச்சர்’. அத்தனை அரசு அதிகாரிகளும் கண்ணன் கண் அசைத்தால்தான் காரியத்தை முடிப்பார்கள். அமைச்சர் ஊரில் இல்லாதபோது அரசு விழாக்களில் கண்ணனுக்கு 'மந்திரி மரியாதை’ கிடைக்கும். அழைப்பிதழ் தொடங்கி விளம்பரம் வரை அதிகாரிகள், கட்சி சீனியர்கள் பெயரைக் காட்டிலும் கண்ணனின் பெயருக்குத்தான் அதிமுக்கியத்துவம்.

மச்சானை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காய் நகர்த்தினார் விசுவநாதன். 'ஸீட் நிச்சயம்... வெற்றி அதைவிட நிச்சயம்!’ என்ற நம்பிக்கையில் இந்தி டியூஷன் படிக்கத் தொடங்கினார் கண்ணன். நாடாளுமன்றத்தில் இந்தி பேச வேண்டும் அல்லவா! டிகிரி படித்தவர்களைத்தான் வேட்பாளராக அம்மா 'டிக்’ அடிப்பார் என்பதால், கண்ணன் பெயருக்குப் பின்னால் 'பி.ஏ.’, 'எம்.ஏ.’ என மனதுக்குத் தோன்றிய டிகிரிகளைப் போட்டு பேனர் வைத்த காமெடி எல்லாம் அரங்கேறின. ஆனால், என்ன ஆச்சோ தெரியவில்லை... கண்ணனின் எம்.பி கனவு பலிக்கவில்லை!

பார் பாலிட்டிக்ஸ்!

மந்திரி தந்திரி - 5 !

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள டாஸ்மாக் கடைகள் 6,800. இதில் பார் உள்ள கடைகள் 4,271. இது அதிகாரபூர்வ எண்ணிக்கை. ஆனால், அனுமதி இல்லாத பார்கள் பல இடங்களில் செயல்பாட்டில்தான் இருக்கின்றன.  நத்தத்திலேயே ஒரே கடைக்கு ஐந்து பார்கள் உள்ளன. டாஸ்மாக் பார்களைக் கைப்பற்றுவதற்கான பாலிட்டிக்ஸ்தான், பலரின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. செல்வம், செல்வாக்கு, அதிகாரம், அதட்டல், மிரட்டல்... என அனைத்தையும் அங்கே பிரயோகிக்க வேண்டியிருக்கும். பொதுவாக பாருக்குள் தின்பண்டங்கள் விற்க, காலி பாட்டில்களைச் சேகரிக்க மட்டும்தான் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், அங்கு நடப்பதெல்லாம் அதகளம். ஒவ்வொரு செயலும் சட்ட விதிமீறல். இதனாலேயே அரசியல் பின்னணி கொண்டவர்கள் மட்டும்தான் பார் உரிமம் பெற முடிகிறது. ஆனால், அதில் தி.மு.க., அ.தி.மு.க என கட்சிப் பாகுபாடு கிடையாது. பிளாஸ்டிக் கப் முதல் மசாலா கடலை வரை நியாயமான விலையில், ஐ.எஸ்.ஐ தரம்கொண்ட பொருட்களைத்தான் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், ஒரு ரூபாய் பிளாஸ்டிக் கப் ஐந்து ரூபாய்க்கு விற்பது முதல் கெட்டுப்போன இறைச்சியால் செய்யப்படும் உணவு வரை அங்கே நடப்பது அராஜக வியாபாரம். சமயங்களில் மது உண்டாக்காத கெட்ட விளைவுகளை, பார்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் உண்டாக்கிவிடும். போலி மதுவை ஒரு பக்கம் விற்பார்கள். மறுபுறம் நிர்ணயிக்கப்பட்ட 10 மணிக்கு மேல் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பார்கள். பார்களில் அடுப்பு பற்ற வைக்கக் கூடாது என்பது கண்டிப்பான விதி. ஆனால், தமிழகத்தில் அடுப்பு எரியாத பார்கள் மிக மிக சொற்பம். பாரில் சுகாதாரமான கழிப்பறை இருக்க வேண்டும். பிராணிகளோ, பறவைகளோ மதுக்கூடத்தில் சமைக்கப்படக் கூடாது, ஆபாச சுவரொட்டிகள் இருக்கக் கூடாது எனப் பல விதிமுறைகள். ஆனால், எல்லாமே காற்றில் பறப்பதற்கே அரசாணைப் பக்கங்களில் இடம் பிடித்திருக்கின்றன. வருமானத்தை மட்டும் கெடுபிடிக் கறாராக வசூலிக்கும் ஆயத்தீர்வைத் துறை, பார்களை ஒழுங்குமுறைப்படுத்துவதில் 'கட்டிங்’ அளவுக்குக்கூட முனைப்பு காட்டுவதே இல்லை! 

வருமானம் கொட்டும் டாஸ்மாக்!

ஆயத்தீர்வை, விற்பனை வரி மற்றும் மதுபான விற்பனை மூலம் ஒவ்வோர் ஆண்டும் அரசுக்குக் கிடைத்த வருவாய்...

மந்திரி தந்திரி - 5 !

ஆண்டு -   வருவாய் (கோடிகளில்)

2010-11 - 14,965.42

2011-12 - 18,081.16

2012-13 - 21,680.67

2013-14 - 23,401

2014-15 - 26,188

2015-16 - 29,672 (இலக்கு)

தள்ளாடச் செய்யும் புள்ளிவிவரம்!

மந்திரி தந்திரி - 5 !

தமிழகத்தில்,

நூலகங்கள் - 4,028

டாஸ்மாக் கடைகள் - 6,800

மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள் -   11  

பீர் தயாரிக்கும் நிறுவனங்கள்           -    7

பார் வசதி உள்ள டாஸ்மாக் கடைகள் - 4,271

2011-12 முதல் 2013-14 வரை விற்பனை செய்த மதுப் புட்டிகளின்   எண்ணிக்கை - 195.84 கோடி

1994 முதல் 2011 வரை தமிழர்கள் குடித்துத் தீர்த்த மது - 302 கோடி லிட்டர்

'சாப்பிட்டுக்கிட்டே சமாதானம்!’

* அமைச்சர் விசுவநாதன், சுலபத்தில் எதற்கும் டென்ஷன் ஆக மாட்டார். அப்படியே பதற்றமானாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்

மந்திரி தந்திரி - 5 !

பிரசாரத்தின்போது, விசுவநாதனின் சொந்த ஊரான உலுப்பக்குடியில், 'புளி வித்தவன்... புண்ணாக்கு வித்தவன் எல்லாம் இன்னிக்கு 'மந்திரி’னு சொல்லிட்டுத் திரியுறாங்க.. இவங்களுக்கு இவ்வளவு பணம் எங்கே இருந்து வந்தது?’ என உலுக்கினார் விஜயகாந்த் மனைவி பிரேமலதா. ஆனால், விசுவநாதனிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை!

* அரசு அதிகாரிகளை 'சார்’ என்றே அழைப்பார்.

* அரசியல் எதிரிகளைச் சரிக்கட்ட அதிகாலையிலேயே அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிடுவார். 'வீடு தேடி வந்திருக்கேன். எதுவும் சாப்பிடத் தர மாட்டீங்களா?’ என உரிமையாகக் கேட்டு, சமாதானப் படலத்தைத் தொடங்குவார்.

* அழகப்பா கல்லூரி மாணவனாக இருந்தபோது, அரசியல் வேலைகளைக் காரணம் காட்டி அடிக்கடி விடுப்பு எடுத்ததால், 600 ரூபாய் அபராதம் கட்டினார் விசுவநாதன்.

* விசுவநாதனுக்கு தன் காரில் எப்போதும் செம ஃப்ரெஷ் மல்லிகைப் பூ தொங்கிக்கொண்டே இருக்க வேண்டும்!

* விசுவநாதனின் மகன் அமர்நாத், தீவிர கிரிக்கெட் வெறியர். சர்வதேசத் தரத்திலான கிரிக்கெட் மைதானம் ஒன்றை என்.பி.ஆர் கல்லூரியில் அமைத்து ரஞ்சி டிராபி போட்டிகளை அங்கு நடத்தவைத்தார். ஷேவாக், லக்ஷ்மண்... என கிரிக்கெட் பிரபலங்களை அடிக்கடி கல்லூரிக்கு அழைத்துவருவார்.

* சீட்டு விளையாட்டில் கில்லி விசுவநாதன். ரம்மியில் 320 பாயின்ட்டுக்கு மீண்டும் மீண்டும் ரீஜாயின்ட் அடிப்பார். சீட்டில் விட்ட பணத்தை, பிடித்தே ஆகவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்.

* திண்டுக்கல் மாவட்ட தி.மு.க-வின் 'பெரிய கை’ ஐ.பெரியசாமி. கூட்டங்களில் தி.மு.க-வை வறுத்தெடுக்கும் விசுவநாதன், உள்ளூர் பார்ட்டி ஐ.பெரியசாமியை மட்டும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்.

* அமைச்சர் விசுவநாதனின் அதிகாரபூர்வ அரசு பங்களாவுக்கு மின் கட்டணத்தை அரசுதான் செலுத்துகிறது. ஆனால், கடந்த டிசம்பர், பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. மே14-ம் தேதி வரையிலான மொத்தம் பாக்கி 1,10,342 ரூபாய்!

* முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் விசுவநாதன். ஆனால், அவருடைய போக்குவரத்துக்காக ஒரு கார்கூட அவர் பெயரில் இல்லை. இருந்தாலும் தொகுதிக்குள் 20 கார்கள் சூழ்ந்த கான்வாயில்தான் புழுதி பறக்க உலா வருவார் அமைச்சர்.    

* தேனியும் திண்டுகல்லும் அடுத்தடுத்து மாவட்டங்கள். தமிழ்நாடு அமைச்சரவையில் அந்த இரு மாவட்டங்களுக்குத்தான் அதீத முக்கியத்துவம். தேனியைச் சேர்ந்த ஓ.பி.எஸ்-ஸும் திண்டுக்கல்லைச் சேர்ந்த விசுவநாதனும் கேபினெட்டின் அசைக்க முடியாத சக்திகள். ஆனால், இவர்கள் இருவரிடையிலும் அவ்வளவு அந்நியோன்னியம் இருக்கும்!

நஷ்டம் சூழ் மின் துறை!

* மின் வாரியத்தின் கடன், 1 லட்சம் கோடியை எட்டப்போகிறது.

மந்திரி தந்திரி - 5 !

* 'சூரிய ஒளி மின் உற்பத்திக் கொள்கை மூலம் ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம் மூன்று ஆண்டுகளில் மூன்று ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும்’ என ஆட்சிப் பொறுப்பேற்ற சமயம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுமார் 115 மெகாவாட் தயாரிக்கப்படும் அளவுக்கே மின் உற்பத்திக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* தமிழ்நாட்டின் மின் தேவை 14,500 மெகாவாட். பல்வேறு சோர்ஸ் மூலம் 11,000 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட, பற்றாக்குறை 3,500 மெகாவாட்.