மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

கிளீவ்லேண்ட் கேவாலியர்ஸ். சுருக்கமாக கேவ்ஸ். அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப் பந்தாட்ட அணி. 1970-ல் ஆரம்பிக்கப்பட்டது. 86-ம் ஆண்டு தொடங்கி சில வருடங்களுக்கு அணிக்கு நல்ல நேரம். வெற்றிகள் பூ தூவின. 93-ம் ஆண்டு முதல் கேவ்ஸுக்கு ஒன்பதரைச் சனி. 2002-ம் ஆண்டு வரை தோல்விகள் துரத்தித் துரத்திக் கழுத்தைக் கவ்வின. கேவ்ஸை மீட்க எங்கிருந்தாவது ஒரு ரட்சகன் வர மாட்டானா என, அணி நிர்வாகம் ஏங்கித் தவித்தது. 

வட அமெரிக்காவின் 'நேஷனல் பாஸ்கட்பால் அசோசியேஷன்’ (ழிஙிகி)  புதிய, திறமையான கூடைப் பந்தாட்ட வீரர்களைத் தேர்ந்தெடுக்க, வருடம்தோறும் தேர்தல் (NBA Drift) நடத்தும். 30 அணிகள் அதில் கலந்துகொள்ளும். பொதுவாக, மிகவும் மோசமான நிலையில் உள்ள அணிகளுக்கு புதிய வீரர்களைத் தேர்ந்தெடுக்க முதல் உரிமை வழங்கப்படும். அதில் எந்த அணிக்கு முதல் உரிமை என 'லாட்டரி’ மூலம் முடிவுசெய்வார்கள். 2003-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி நடந்த அந்தத் தேர்வில், கேவ்ஸ்க்கு லாட்டரி அடித்தது. கேவ்ஸ் நிர்வாகத்தினர், ஒரு நொடிகூட யோசிக்காமல் உடனடியாக உச்சரித்த பெயர்... 'லெப்ரான் ஜேம்ஸ்’!

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

18 வயதுதான். பள்ளிப்படிப்பை அப்போதுதான் முடித்திருந்தார். சீனியர் லெவலில், பெரிய அணிகளுடன் இனிதான் விளையாடவேபோகிறார். அதற்குள் விளம்பர நிறுவனங்கள் மில்லியன் டாலர் ஒப்பந்தங்களுடன் ஸ்கெட்ச் போட்டு அவரை வளைக்க உழைக்க, இனி 'கூடைப் பந்தாட்டக் களத்தின் கிங் லெப்ரான் ஜேம்ஸ்’ என விளையாட்டு விமர்சகர்கள் பெருவிரலை உயர்த்த... கேவ்ஸ்தான் இனி மாஸ் என ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்க... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். அதுவரை அப்படி என்னதான் சாதித்திருந்தார் லெப்ரான் ஜேம்ஸ்?

குற்றங்களும் ஒழுங்கீனங்களும் நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் லெப்ரான் ஜேம்ஸ். 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி லெப்ரான் ஜேம்ஸைப் பெற்றெடுத்தபோது, அவனது அம்மா குளோரியாவுக்கு வயது 16. பள்ளி மாணவி. திருமணம் ஆகவில்லை. கர்ப்பமாக்கிய காதலரும் பிரிந்துவிட்டார். அவர்கள் வாழ்ந்தது, அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தின் ஏக்ரன் நகரத்தில். அங்கே கறுப்பு இன மக்களின் குடியிருப்புகளில், வாழ்வாதாரத்துக்காக நடக்கும் குற்றங்கள் வெகு சாதாரணம். குளோரியா, தன் ஏழைத் தாயைத்தான் சார்ந்து இருந்தாள். அவளது சகோதரர்கள் இருவரும் விதவிதமான குற்றங்களுக்காக அடிக்கடி சிறைக்குச் சென்று வருபவர்கள். ஆக, குடும்பத்தின் வருமானத்தில் எப்போதும் ஊசலாட்டம். இத்தனைக்கு மத்தியிலும் குளோரியா தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருந்தாள், 'என் மகனை ஒழுக்கத்துடன் வளர்ப்பேன்’!

லெப்ரானுக்கு ஒரு வயது இருக்கும்போது, குளோரியாவுக்குப் புதிய பாய் ஃப்ரெண்ட் அமைந்தார்... எடி ஜாக்சன். அவரும்கூட ஜெயில் ஆறு மாதம், பெயில் ஆறு மாதப் பிரகஸ்பதிதான். இருந்தாலும் குளோரியாவுடன் சேர்ந்து லெப்ரான் மீது பாசத்தைக் கொட்டினார். மூன்று வயதுடைய லெப்ரானுக்கு சிறிய கூடைப்பந்து ஒன்று வாங்கித் தந்தார். கோல் போடவேண்டிய வளையத்தை, சுவரில் சற்றே உயரத்தில் பொருத்தினார். பந்தை வளையத்தினுள் போட, தானாகவே முயற்சி செய்துகொண்டிருந்தான் லெப்ரான்.

அந்தச் சமயத்தில் குளோரியாவின் பாட்டி இறந்துபோக, இருந்த வீடும் பறிபோனது. எங்கே தங்க? தெரிந்தவர்கள் வீட்டில் கொஞ்ச காலம்... நண்பர்கள் வீட்டில் ஒருசில வாரங்கள்... சில நாட்களில் வானமே கூரை. இருக்க ஓர் இடமின்றி லெப்ரான் பால்ய வயதில் அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம். அந்தச் சூழலில் வளரும் சிறுவர்கள், வன்முறையும் குற்றங்களும் நிறைந்த புதைகுழிக்குள் ஈர்க்கப்படுவது இயல்பு. குளோரியா, அதில் வெகு கவனமாக இருந்தாள். லெப்ரானின் ஆர்வத்தை விளையாட்டின் மீதும் படிப்பின் மீதும் திருப்பினாள்.

லெப்ரானின் விளையாட்டுப் பயிற்சிகளை, தொடர்ந்து கவனித்த பயிற்சியாளர் வாக்கர், அவனுக்குள் ஒரு கூடைப் பந்தாட்ட வீரனுக்குரிய திறமையும் குணங்களும் இயல்பாகவே அமைந்திருப்பதைக் கண்டுபிடித்தார். உள்ளூர் கூடைப் பந்தாட்ட அணி ஒன்றின் கோச்சாகவும் இருந்த வாக்கர், லெப்ரானுக்கும் கூடைப் பந்தாட்டப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். 1995-ம் ஆண்டு குளோரியாவுக்கு வேலை, வருமானம், வீடு அமைந்தது. குடும்பம் கொஞ்சம் வசதிகளை அனுபவித்தது. அப்போது குளோரியா தன் மகனுக்குச் சொன்ன அறிவுரை... 'எந்தச் சூழலிலும் படிப்புக்குத்தான் முன்னுரிமை; அடுத்தது விளையாட்டு. கால்பந்து, கூடைப்பந்து இரண்டையுமே விட்டுவிடாதே. ஏதாவது ஒன்று உன்னை உயரத்துக்குக் கொண்டுசெல்லும்’!

லெப்ரானின் வயதுக்கு மீறிய உயரம், உடல்வாகு, ஆர்வம், அக்கறையான பயிற்சி அவனை அந்தந்த விளையாட்டுக்களில் ஜொலிக்கச் செய்தன. 1996-ம் ஆண்டு ட்ரூ ஜாய்ஸ் மிமிமி, வில்லி, காட்டன் ஆகிய மூன்று சிறுவர்களுடன் லெப்ரான் கூடைப் பந்தாட்டக் கூட்டணி அமைத்தான். Fab Four  என்றழைக்கப்பட்ட அவர்கள், 'ஷூட்டிங் ஸ்டார்ஸ்’ என்ற ஜூனியர் அணிக்காகக் களம் இறங்கினால், எதிர் அணியில் எக்ஸ்ட்ராவாக ஆள் சேர்த்தாலும் வெற்றி கிட்டாது என்பது எழுதப்படாத விதியானது. அந்த நால்வரால் மூன்றே வருடங்களில் 200 வெற்றிகளைக் குவித்தது ஷூட்டிங் ஸ்டார்ஸ். லெப்ரான் ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த விமானப் பயண வாய்ப்புகள் கிடைத்தன. கூடவே, புகழ், பரிசுகள், பாராட்டுக்கள். இது என் வெற்றியோ... எங்கள் நால்வரின் வெற்றியோ அல்ல. இது அணி விளையாட்டு. அனைத்தும் அணியின் வெற்றியே. லெப்ரானுக்கு அப்போதே அந்தத் தெளிவான புரிதல் இருந்தது!

உயர் பள்ளிப் படிப்புக்காக செயின்ட் வின்சென்ட் செயின்ட் மேரி என்ற பள்ளியில் நால்வரும் சேர்ந்தனர். பள்ளியின் கூடைப் பந்தாட்ட அணியான ஐரிஷில் இணைந்தனர். நால்வர் கூட்டணியால் ஐரிஷ§க்கு தொடர் வெற்றிகள். ஒஹையோ மாகாணத்தின் அறியப்பட்ட ஜூனியர் நட்சத்திரங்களாக ஜொலித்தனர். அவ்வப்போது சில அதிர்ச்சித் தோல்விகள். அணியினர் உடைந்துபோக, லெப்ரான் அலட்டிக்கொள்ளவில்லை. எதிர் அணியினரோடு நேசமாகக் கைகுலுக்கிவிட்டு, பின்பு ரோஷம் பொங்கப் பயிற்சியில் கடுமையாகக் கவனம் செலுத்தினான். தோல்விகள்தான் அடுத்தடுத்த பெரிய வெற்றிகளை நோக்கி அழைத்துச்செல்லும் என நம்பினான். 'நான் ஒஹையோவின் அறியப்பட்ட வீரனாக மட்டும் இருக்க விரும்பவில்லை. தேசத்தின் புகழ்பெற்ற வீரனாக உயர விரும்புகிறேன்’!

கால்பந்தை மறந்துவிட்டு கூடைப் பந்தாட்டத்தில் தன் முழுக் கவனத்தையும் செலுத்தினான் லெப்ரான். அதே ஆண்டில் Sports illustrated என்ற பத்திரிகையின் அட்டையில் லெப்ரானின் புகைப்படம் வெளிவந்தது. எந்த ஒரு பள்ளிக்கூட வீரருக்கும் அதுவரை கிடைத்திராத கௌரவம். லெப்ரான் விளையாடுகிறார் என்ற காரணத்தினாலேயே ஜூனியர் லெவல் போட்டிகள் சிலவற்றை ஈ.எஸ்.பி.என் சேனல் நேரடியாக ஒளிபரப்பியது. எங்கு போனாலும் ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு மொய்த்தனர். பின்பு 'லெப்ரானின் ஆட்டோகிராப்’ என அதை இ-பேயில் விற்றுக் காசாக்கிக்கொண்டனர். ஆனால், அதுவரையில் லெப்ரானுக்குச் சொல்லிக்கொள்ளும்படி வருமானம் இல்லை. அதே சாதாரண வீடு. அம்மாவின் அன்பு மட்டுமே பெரிய சொத்து!

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

ஜூனியர் கூடைப் பந்தாட்ட வீரர்களில் டாப் ரேங்கில் இருக்கும் லெப்ரான், என்.பி.ஏ வீரராக எப்போது எந்த அணியில் இணைவார் என்பது அவ்வப்போது மீடியாவின் வாய்க்கு பபுள்கம். 'லெப்ரான், பள்ளி இறுதி ஆண்டில் படிக்காமல், என்.பி.ஏ தேர்வில் கலந்துகொள்ளப் போகிறார்’ என்றும், 'ஐரோப்பாவுக்குச் செல்லும் லெப்ரான், அங்கே மில்லியன்கணக்கில் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஏதோ ஓர் அணியில் இணைந்து விளையாடப்போகிறார்’ என்றும் வதந்திகள் கூடைப்பந்து விளையாடின. அதற்கு குளோரியா சொன்ன அழுத்தமான பதில், 'லெப்ரானுக்குப் பள்ளிப் படிப்பு முக்கியம்’!

பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போதே, லெப்ரானை நோக்கி கேவ்ஸ் உள்ளிட்ட பல அணிகள் தூண்டிலை வீசின. நைக்கும் அடிடாஸும் ரிபோக்கும் அவரது காலடியில் ஷூவாகக் கிடக்கக் காத்திருந்தன. 2002-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் குளோரியா, தன் மகனுக்கு மிகவும் விலை உயர்ந்த Hammer H2  கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்தார். 'குளோரியாவுக்கு ஏது இவ்வளவு பணம்? ஏதோ ஒரு நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம் போட்டு, தன் மகனை விற்றுவிட்டார். அதன் பலன்தான் இந்த கார்’ எனச் சர்ச்சைகள் சலசலத்தன.

குளோரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வங்கியில் முறைப்படி கடன்பெற்றதும், வருங்காலப் பிரபல வீரருக்காகக் கடன் அளிப்பதை வங்கி கௌரவமாகக் கருதியதும் தெரியவந்தது. இப்பேர்ப்பட்ட கொம்பனைத்தான் கேவ்ஸ், 2003-ம் ஆண்டு என்.பி.ஏ தேர்தலில் கொத்திக்கொண்டது. மூன்று வருட ஒப்பந்தம். (சுமார் $13 மில்லியன்). 'நைக்’ உடன் ஏழு வருடத்துக்கு $100 மில்லியனுக்கு ஓர் ஒப்பந்தம். இன்னும் சில 'சில்லறை மில்லியன்’ ஒப்பந்தங்கள். சிறுவனாக வீடு இல்லாமல் திரிந்த லெப்ரான், இப்போது சிங்கிள் மேட்ச் விளையாடுவதற்கு முன்பாகவே மில்லினியர்!

கிளீவ்லேண்ட் என்பதும் ஓஹையோவுக்கு உட்பட்ட நகரம்தான் என்பதால் ரசிகர்கள், லெப்ரானை 'எங்க வீட்டுப் பிள்ளை’யாகக் கொண்டாடினர். லெப்ரான் ஆடும் மேட்ச்களின் டிக்கெட் விற்பனை ஓஹோ! கேவ்ஸ் அணிக்கு வெற்றி மீது வெற்றி. ஒரு போட்டியில் லெப்ரான் மட்டும் 41 புள்ளிகள் எடுத்து சாதனை படைக்க, 2003-2004ம் காலகட்ட என்.பி.ஏ-வின் சிறந்த அறிமுகக் கூடைப் பந்தாட்ட வீரருக்கான Rookie of the year விருது லெப்ரானுக்குக் கிடைத்தது. ஒரு வீரனுக்கு ஸ்பான்ஸர்களின், ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொடுக்கும் அழுத்தம் மிகப் பெரியது. அவற்றை மனதுக்குள் கொண்டுசெல்லாமல், தன் இயல்பான ஆட்டத்தால் எதிரிகளால் ஈடுகொடுக்க முடியாத வேகத்தால், 94ஜ்50 அளவுகொண்ட கூடைப் பந்தாட்டக் களத்தை ஆளத் தொடங்கினார் கிங் லெப்ரான் ஜேம்ஸ்.

2004-2005ம் காலகட்டத்தில் ட்ரிபிள் டபிள் சாதனையும் படைத்தார் லெப்ரான். அதென்ன?

ஓர் ஆட்டத்தில் ஒரு வீரர் கூடைக்குள் பந்தைப் போடுவதன் மூலம் கிடைக்கும் புள்ளிகள் - றிஷீவீஸீts. எதிர் அணியினர் கோல் போட முயற்சி செய்து அது தவறும் வேளையில், அங்கு இருந்து பந்தை வேகமாகக் கடத்திக் கொண்டுவந்து தமக்குரிய கூடையில் சேர்ப்பது - ஸிமீதீஷீuஸீபீ. கூடைக்குப் பக்கத்தில் நிற்கும் தன் அணி வீரரிடம், 'கோல்’ ஆக மாற்றும்படி பந்தைச் சரியாக வீசுவது -Assist. எதிர் அணியினரிடம் இருந்து பந்தைப் பறித்து, லாகவமாகக் கடத்திக் கொண்டுவருவது - steal. எதிர் அணி வீரர் கூடையை நோக்கி வீசும் பந்தைச் சாதுரியமாகத் தடுப்பது - Block. இந்த ஐந்தில் ஒரு வீரர் ஒரே ஆட்டத்தில் மூன்று விஷயங்களில் பத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை எடுப்பதே ட்ரிபிள் டபிள். என்.பி.ஏ வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ட்ரிபிள் டபிள் சாதனை படைத்தது லெப்ரானே. 27 points  11 rebounds  10 Assists. (2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லெப்ரான் தனது 50-வது ட்ரிபிள் டபிள் சாதனையைச் செய்தார்.)

அடுத்தடுத்த வருடங்களிலும் லெப்ரானால் கேவ்ஸுக்குத் தொடர் வெற்றி மேளா. அதற்காக ஒன் மேன் ஆர்மியாக கோல்களைச் சுட்டுத்தள்ளினார் என்றும் அர்த்தம் இல்லை. களத்தில் கேப்டனாக தானும் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, அணியினரையும் தன்னுடன் இணைத்து அதிகப் புள்ளிகளைக் குவிக்கச்செய்து, வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினார். சில ஆட்டங்களில் அணிகளின் புள்ளிகள் சமமாகவோ அல்லது எதிர் அணியைவிட ஒன்று - இரண்டு புள்ளிகள் குறைவாகவோ இருக்கும் இறுதி நொடிகளில், லெப்ரானின் உள்ளங்கையை நோக்கி பந்து ஈர்க்கப்படும். அடுத்த நொடியில் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி, எத்தனை பேர் தடுத்தாலும் சரி, பந்து வளையத்துக்குள் விழும் காட்சியே ரசிகர்களின் கருவிழிகளுக்குத் தெரியும். இப்படி லெப்ரான், தன் அணிக்குப் பெற்றுத்தந்த இறுதி நொடி ஆச்சர்ய வெற்றிகள் நிறைய நிறைய.

ஆண்டு முழுவதும் நடைபெறும் போட்டிகளில் இருந்து என்.பி.ஏ-வின் கிழக்கு மண்டல அணிகள் 15-ல் ஏழும், மேற்கு மண்டல அணிகள் 15-ல் ஏழும், 'என்.பி.ஏ ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குத் தகுதி பெறும். அவற்றுக்குள் போட்டிகள் நடக்கும். இறுதியில் கிழக்கில் டாப்பில் வரும் ஓர் அணியும், மேற்கில் டாப்பில் வரும் ஓர் அணியும் 'என்.பி.ஏ ஃபைனலில்’ மோதும். அந்த சீரியஸில் வெல்லும் அணியே அந்த ஆண்டின் என்.பி.ஏ சாம்பியன். 2010-ம் ஆண்டுக்குள் இரண்டு முறை NBA Most Valuable player , ஆறு முறை NBA All - starவிருதுகள். லெப்ரானின் ஆகச் சிறந்த பங்களிப்பால் கேவ்ஸ், ப்ளே-ஆஃப் சுற்றுகளுக்குத் தகுதி பெறுவது வாடிக்கையானது. 2007-ம் ஆண்டு என்.பி.ஏ ஃபைனலுக்கும் முன்னேறியது. வெற்றி கிட்டவில்லை.

2010-ம் ஆண்டு ஜூலை. அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகில் பல்வேறு தேச கூடைப் பந்தாட்ட ரசிகர்களும் ஈ.எஸ்.பி.என்-னில் ஒளிபரப்பான ஜிலீமீ ஞிமீநீவீsவீஷீஸீ என்ற அந்த லைவ் நிகழ்ச்சியைப் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். லெப்ரான் ஜேம்ஸ் தன் முடிவை அறிவித்தார். 'இது நிச்சயம் மிகக் கடினமான முடிவுதான். இனி நான் கேவ்ஸுக்காக விளையாடப்போவது இல்லை. மியாமி ஹீட் அணியில் இணையப்போகிறேன்!’

லெப்ரான் அணி மாறியதன் பின்னணியில் பண பேரம் படியாததும் ஒரு முக்கியக் காரணம். தவிர, வேறு பல காரணங்கள். கோபத்தில் கேவ்ஸ் ரசிகர்கள் 23 என்ற எண் பதித்திருந்த லெப்ரானின் ஜெர்ஸியைக் கொளுத்தினர். இந்த நிகழ்ச்சி மூலமாகவே $2.5 மில்லியன் டாலர் நலத்திட்ட உதவி திரட்டிக் கொடுத்த பக்கா பிசினஸ்மேன் லெப்ரான், 6 என்ற புதிய எண் பதித்த ஜெர்ஸியுடன் ஃப்ளோரிடாவின் மியாமி ஹீட்டுக்காகக் களம் இறங்கினார். அங்கே வெறிகொண்ட வேங்கையாக டிவைன்வேட், சினம்கொண்ட சிங்கமாக கிறிஸ், மதம்கொண்ட யானையாக லெப்ரான் ஜேம்ஸ் என மூவர் அணி களத்தில் சுழன்றடிக்க, மியாமி அணி, 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு முறை என்.பி.ஏ ஃபைனல்ஸுக்குத் தகுதி பெற்றது. அதில் இரண்டு முறை சாம்பியன்!

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்ட நபர்கள், தாய்க் கழகத்துக்குத் திரும்புதல் சகஜம்தானே. 2014-ம் ஆண்டு ஜூலையில் மீண்டும் கேவ்ஸுக்குத் திரும்புவதாக அறிவித்தார் ஜேம்ஸ். எந்த ரசிகர்கள் லெப்ரானின் மீது நெருப்பை அள்ளிக் கொட்டினார்களோ, அதே கேவ்ஸ் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க வரவேற்றார்கள். லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு 'சிஷீனீவீஸீரீ பிஷீனீமீ’ என லெப்ரானை வரவேற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி 'ரிட்டர்ன் ஆஃப் தி கிங்’ என கொண்டாடித் தீர்த்தனர். 'இதைத்தான் என் மாகாண மக்களாகிய நீங்கள் விரும்பினீர்கள். ஆகவே மீண்டும் வந்துவிட்டேன். உங்களுக்காக!’ என லெப்ரானும் உருகினார்.

இன்றைய தேதியில் உலகின் அதிகம் சம்பாதிக்கும் நம்பர் 1 கூடைப் பந்தாட்ட வீரர் லெப்ரான் ஜேம்ஸ். அவரால் மீண்டும் கேவ்ஸ் புத்துயிர் பெற்றிருக்கிறது. கேவ்ஸை என்.பி.ஏ சாம்பியன் ஆக்குவதே லெப்ரானின் அடுத்த லட்சியம். 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட அந்த மனிதரால் அது நிச்சயம் முடியும். ஏனெனில், அவரது நம்பிக்கை அவரைவிட மிக உயரமானது.  

'எப்போதும் நிரந்தமாக வாழ்வதுபோல உன் கனவுகளைக் கட்டமைத்துக்கொள். ஆனால், இன்றைக்கே இறுதி நாள் எனும் தீவிரத்தை உன் செயலில் காட்டு’ என்பதுதான் லெப்ரானின் தாரக மந்திரம்!

பாஸ்கெட்பால் மேன்!

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

போட்டித் தொடங்கும் சமயத்தில், ரசிகர்களுக்கு முன்பாக கையில் சாக் பவுடரை நிறையக் கொட்டி, இரு கைகளாலும் அதை வானத்தை நோக்கித் தூவி, புகையைக் கிளப்புவது லெப்ரானின் வழக்கம்.

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

 தன் அணி வீரர் பந்தை வளையத்தை நோக்கி எறிய, காற்றில் மிதந்துசென்று தன் கையால் பந்தை வளையத்துக்குள் அழுத்தி அடித்து கோல் ஆக்கும் ஞிuஸீளீ ஸ்டைலை லெப்ரானின்

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

ஆட்டத்தில் அதிகம் பார்க்கலாம் (www.youtube.com/watch?v= D3LHA2w9zUc)
 

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

 புத்தகங்கள் படிக்கும் வழக்கம் லெப்ரானுக்குக் கிடையாது. ஆனால், எந்த நேரமும் இசை கேட்பது உயிர். வெற்றிகளில், இடது கையைப் பக்கவாட்டில் நீட்டி, வலது உள்ளங்கையால் நெஞ்சின் மீது அடித்துக்கொண்டே, வலது காலால் தரையை அழுத்தி உதைத்து ஆடுவது லெப்ரானின் கிங்காங் ஸ்டைல் கொண்டாட்டம்.

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

 2014-ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள லெப்ரானின் சொத்து மதிப்பு $72 மில்லியன்.

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

 கோகோகோலா, நைக், மெக்டொனால்ட்ஸ், சாம்சங், அப்பர் டெக் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களோடு லெப்ரான் விளம்பர ஒப்பந்தத்தில் உள்ளார்.

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

 சூப்பர் ஹீரோக்கள் என்றால் லெப்ரானுக்குப் பிடிக்கும். 'என் உடல் பலத்தை, உயரத்தை வைத்துப் பார்த்தால், நானும் ஒரு சூப்பர் ஹீரோதான். என் பெயர் பாஸ்கெட்பால் மேன்!’ என்பது லெப்ரானின் கமென்ட்.

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

 'லெப்ரான் ஆடும் முறை சரியில்லை, அவர் அணியின் மற்ற வீரர்களுடன் ஒத்திசைந்து விளையாடுவதும் இல்லை... கோச்சின் பேச்சை லெப்ரான் மதிப்பதும் இல்லை!’ என அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புவது உண்டு. அதற்கு லெப்ரானின் பதில், 'என்னை மிக மிகக் கடுமையாக விமர்சியுங்கள். அது என்னை மேலும் மேலும் பலமாக்கும்!’

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

 தன்னை இத்தனை உயரத்துக்குக் கொண்டு சென்ற அம்மாவுக்கு எப்போதும் நன்றி சொல்லும் லெப்ரான், ஒருமுறை தான் அறியாத அப்பாவுக்கும் நன்றி சொன்னார்... 'நல்லவேளை என் அப்பா என்னுடன் இல்லை. இருந்திருந்தால், நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். நன்றி அப்பா’!

பதக்கப் பங்காளி!

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க பாஸ்கெட்பால் அணியில் லெப்ரான் இடம்பெற்றிருந்தார். ஆனால், அதில் போட்டிகளில் அதிக நேரம் 'பென்ச்’சில்தான் அமர்ந்திருந்தார். அமெரிக்காவுக்கு வெண்கலமே கிட்டியது. தனக்குச் சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனக் குறைபட்டுக்கொண்டார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் லெப்ரானின் செமையான பங்களிப்பால் அமெரிக்கா தங்கம் வென்றது. 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிலும் அமெரிக்க அணி கேப்டன் லெப்ரான் தலைமையில் தங்கம் வென்றது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் லெப்ரானின் டிரிபிள் டபிள் சாதனையும் அடக்கம்!

ஓ.கே சவன்னா!

நம்பர் 1 லெப்ரான் ஜேம்ஸ் - 08

சவன்னா பிரின்ஸன், லெப்ரான் ஜேம்ஸின் பள்ளிக்காலக் காதலி. பல ஆண்டுகள் 'ஓ.கே கண்மணி’ வாழ்க்கை. லெப்ரான் ஜேம்ஸ் ஜூனியர், பைரேஸ் ஜேம்ஸ் என்கிற இரு மகன்களைப் பெற்றெடுத்த பிறகு, நிதானமாக 2013-ம் ஆண்டு செம்டம்பரில் திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியிருக்கின்றனர்!