
கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா, ஜெயசூர்யாபடங்கள்: என்.ஜி.மணிகண்டன்
அ.தி.மு.க அமைச்சரவையில் நுழைய பலருக்கும் மன்னார்குடிதான் ரூட். ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 'கேபினெட் அந்தஸ்து’ பெற்றுக்கொடுத்தது கருணாநிதியும் விஜயகாந்த்தும். ஆதாரம்... இதோ!
'பட்டாசு வாங்க ரெண்டு பேர் கடைக்குப் போறாங்க. அந்தப் பட்டாசுக் கடை பேரு திருக்குவளை. அங்கே ஒரு ராக்கெட் வெடி இருந்தது. அதோட பேரு 2ஜி. விலை 176. 'இது எப்படி வெடிக்கும்?’னு கேட்டாங்க. 'இது கூட்டு ராக்கெட். இதை இங்கே பத்தவெச்சா, ஜோடியாப் பறந்து போயி திகார் ஜெயில்லதான் வெடிக்கும்’னு சொன்னார் கடைக்காரர். 'இது வேணாம்’னு சொல்லிட்டு, அடுத்த வெடியைப் பார்க்கிறாங்க. அந்த வெடி பேர் சிலோன் வெடி. 'இந்த வெடி நிமிஷத்துக்கு நிமிஷம் கலர் மாறும். நொடிக்கு நொடி நிறம் மாறும். பத்திக்கிற மாதிரி இருக்கும். ஆனா, வெடிக்காது’னு சொல்றாங்க.
இன்னொரு வெடிக் கடை இருக்கு. அது பேர் கோயம்பேடு ஃபயர் வொர்க்ஸ். இந்தக் கடையை மச்சான் இன்சார்ஜ்ல விட்டுட்டு ஓனர் ரவுண்டுக்குப் போயிட்டார். வெடியை வாங்கிப் பத்தவெச்சாலும் வெடிக்கலை. ஏன்னு கேட்டா வெடி எப்பவும் தண்ணிலேயே இருந்ததால பதத்துப்போச்சு. அதனால வியாபாரமும் படுத்துப்போச்சு. விக்காத சரக்கை எல்லாம் மொத்தமா எடுத்துக்கிட்டு அந்த ஓனர் டெல்லிக்குப் போய் கடை விரிக்கப் பார்க்கிறாரு..’ - 2013-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜயபாஸ்கர் இப்படி 'திரி’ கொளுத்திப் போட்டபோது, ஜெயலலிதா அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். மறுநாள் விஜயபாஸ்கர்... மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்!

2013-ம் ஆண்டின் இறுதியில்தான் விஜயபாஸ்கர் மந்திரியானார். ஆனால், இந்த மிகக் குறுகிய காலத்தில் வேறு எவரைவிடவும் அசகாய வளர்ச்சியும் அடாவடி சர்ச்சைகளிலும் சிக்கினார்!
மெடிக்கல் டு பொலிட்டிகல்!
புதுக்கோட்டை இலுப்பூர் அருகே ராப்பூசல் கிராமம், விஜயபாஸ்கரின் சொந்த ஊர். தந்தை சின்னதம்பி, ஆரம்ப கால அ.தி.மு.க-வில் இருந்தவர். தந்தையிடம் இருந்து மகனுக்கும் அரசியல் வாடை தொற்றிக்கொண்டது. விஜய பாஸ்கர் ப்ளஸ் டூ முடித்த பிறகு, எம்.பி.பி.எஸ் படிக்க முயற்சி செய்தார். பிறகு, முக்கியப் புள்ளி ஒருவரின் சிபாரிசில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், மெடிக்கல் படிக்கப்போன இடத்தில், பொலிட்டிக்கல்தான் படித்தார் விஜயபாஸ்கர். கல்லூரி படிப்பின்போது அண்ணாமலை, கௌதம் சிகாமணி, முரளி என விஜயபாஸ்கருக்கு மூன்று படா தோஸ்த்துகள் கிடைத்தனர். முறையே முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி, கரூர் சின்னசாமி ஆகியோரின் வாரிசு அவர்கள். அண்ணாமலையுடனான நட்பு காரணமாக, அப்போதைய தி.மு.க அமைச்சர் ரகுபதி வீட்டுக்கு சகஜமாகச் சென்று வருவார் விஜயபாஸ்கர். ரகுபதியை 'அப்பா’ என அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.
அப்போது சிதம்பரத்தில் ஒரு விழாவில் பங்கேற்க வந்தார் ஜெயலலிதா. அவரை ஈர்க்க வேண்டும் என ஆங்கிலத்தில் வாழ்த்து வாசகங்களோடு ஒரு பேனரும், உப்பால் உருவாக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிரமாண்ட உருவத்தையும் அமைத்திருந்தார் விஜய். அது ஜெயலலிதாவையே நின்று ரசிக்கவைத்தது. விளைவு... அடுத்த சில நாட்களில் கடலூர் மாவட்ட மாணவர் அணிப் பொறுப்பு பரிசாகக் கிடைத்தது விஜய்க்கு. அதன் பிறகு 'தீயாக வேலை’ செய்ய ஆரம்பித்தார்.

படிப்பு முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்துவந்தார் விஜய். அங்கேதான் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷின் அறிமுகம் கிடைத்தது. அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவுக்கு வேண்டிய உதவிகளைப் பார்த்துப் பார்த்துச் செய்து, வி.ஐ.பி வட்டாரத்துக்குள் நுழைந்தார். அப்படி அங்கே சிகிச்சைக்கு வந்த புலவர் சங்கரலிங்கத்துடனும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். சங்கரலிங்கம், ஜெயலலிதாவின் பி.ஏ பூங்குன்றனின் தந்தை. அப்பா மூலம் பூங்குன்றனுடன் நெருக்கமானார். இந்தப் பல்முனை விசுவாச நெட்வொர்க்கின் விளைவாக, 2001-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயபாஸ்கருக்கு, புதுக்கோட்டையில் போட்டியிட ஸீட் கிடைத்தது.
கரை வேட்டி கட்டாமல், வெள்ளைச் சட்டை கசங்காமல் ஸீட் வாங்கிய விஜயபாஸ்கர், 'மக்கள் பிரதிநிதி’யாகவும் வென்றார். ஆனால், முதல் முறை எம்.எல்.ஏ பதவிக்காலம், அத்தனை சுபமாக இல்லை. பல அதிருப்திப் புகார்கள் குவிந்தன. இதனால், 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட திவாகரன் மூலம் ஸீட் கேட்டபோது, கிடைக்கவில்லை. பிறகு 2009-ம் ஆண்டு எம்.பி தேர்தலில், திருச்சியைக் குறிவைத்தார். குறி தப்பியது. அதனால் சில காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, குவாரி தொழிலில் கவனம் செலுத்தினார். லாபம் குவித்தார். தி.மு.க ஆட்சிக் காலத்தில் குவாரி தொழிலுக்கு 'வேறு எங்கோ’ இருந்து கிடைத்த உதவிகள், அவரை வேறு ஒரு முடிவுக்குத் தள்ளியது. ஆனால், டாக்டர் வெங்கடேஷ் அவரை இழுத்துப் பிடித்து, கட்சி வேலைகளில் தீவிரமாக்கினார். பலனாக 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. முன்னர், 'அப்பா’ என ஆசை ஆசையாக அழைத்த அதே ரகுபதியை எதிர்த்துக் களமாடி வென்றார் விஜயபாஸ்கர். எம்.எல்.ஏ-வானதும் அமைச்சர் பதவி மீது கண் பதித்தார் விஜய்; காய் நகர்த்தினார். மன்னார்குடியைச் சுற்றிச் சுற்றி வந்தார். ஆனால், கேபினெட்டுக்குள் நுழைய முடியவில்லை. முந்தைய அனுபவம் காரணமாகப் பொறுமையாக இருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துக்குமரன் மறைவால் இடைத்தேர்தல் வந்தது. மொத்த அமைச்சரவையும் புதுக்கோட்டையில் முகாம் போட, அழுக்குச் சட்டையோடு ஓடியாடி வேலைபார்த்தார் விஜயபாஸ்கர். எந்த ரியாக்ஷனும் காட்டாத ஓ.பன்னீர்செல்வமே ஆச்சர்யப்பட்டார். அந்த இடைத்தேர்தலில் களமிறங்கி வேலைபார்த்த ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்குப் பக்கபலமாக இருந்தார் விஜய். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற, ஓ.பி.எஸ் குடும்பத்தோடு நெருக்கமானார் விஜய். கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வரை 'பாக்கெட்’ செய்துவிட்ட விஜய், அடுத்து 'லைக்ஸ்’ பெறவேண்டியது 'அம்மா’விடம் மட்டுமே. அதற்கு கை கொடுத்தது 'கதைசொல்லி’ அவதாரம். ஊருக்கே கதை சொல்லிக்கொண்டிருந்த தலைவியையே கதை சொல்லி அசத்தினார். கை மேல் பலன்... மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக கோலோச்சிக்கொண்டிருக்கிறார்!
திக்கெட்டும் மிரட்டும் சர்ச்சை!
ஓர் அரசியல்வாதி மீது எந்தச் சர்ச்சையும் எழாவிட்டால், அவர் அரசியலில் ஆக்ட்டிவாக இல்லை என்பார்கள். ஆனால், விஜயபாஸ்கர் மீது குவியும் சர்ச்சைகளைப் பார்த்தால், அவர் வருடத்தின் 365 நாட்களும் 24*7 அரசியல் மட்டுமே செய்துகொண்டிருப்பதுபோல தோன்றும். அந்த அளவுக்கு வகைதொகை இல்லா சர்ச்சைகள்!
தமிழ்நாட்டில் வேறு எந்த எம்.எல்.ஏ-வுக்கு எதிராகவும் அப்படி ஒரு போஸ்டர் முளைத்திருக்காது. 'தமிழ்நாட்டில் நிலம் வாங்க, விற்க வேண்டுமா? அணுகுங்கள் விஜயபாஸ்கரை...’ என புதுக்கோட்டையில் முளைத்த போஸ்டர்கள் தலைமைச் செயலகம் வரை பரபரப்பு கிளப்பியது. '2001-ல் அரசியலுக்கு வரும் முன்பு விஜயபாஸ்கருக்கு சொத்துக்கள் இல்லை. இன்றோ கடலைத் தவிர, தமிழ்நாடு முழுக்க இவரால் வாங்கப்பட்ட சொத்தின் மதிப்பு 450 கோடியைத் தாண்டும்’ என கணக்கு சொன்னது இன்னொரு போஸ்டர். 'உஷார்... உஷார்... புதுக்கோட்டை மக்களே உஷார்! இன்று உங்களின் இடம் நாளை விஜயபாஸ்கரின் இடமாக மாறலாம்’ என எச்சரித்தது மற்றொன்று. இப்படி அடிக்கடி குபீர் போஸ்டர்கள் முளைக்க, அரண்டுபோனார் விஜய். தனக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களைக் கண்காணித்துக் கிழிக்கவே சொந்த மாவட்டம், எம்.எல்.ஏ விடுதி என 'கங்காணிப் படை’கள் அமைத்தார். விஜய்க்கு எதிராக யார் எங்கே போஸ்டர் ஒட்டினாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே தகவல் பறந்து, போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.
விஜயபாஸ்கர் மீதான இத்தனை கொந்தளிப்புகளுக்குக் காரணம், அரசியலில் அவர் ஒதுங்கியிருந்த 2006-11 காலகட்டத்தில் ஈடுபட்ட குவாரி தொழில்தான். அப்போது புதுக்கோட்டை 'மா.செ’-வாக இருந்த வைரமுத்துதான், விஜய்க்கு குவாரி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என ரூட் போட்டுக்கொடுத்தார். உயிர் காக்கும் மருத்துவத்தைவிட, பாறை நொறுக்கும் தொழிலில் லாபம் கொழிக்கும் எனத் தெரிந்ததும் அதில் அழுத்தமாகக் காலூன்றினார் விஜய். தன் பெயரில் 'ராசி ப்ளூ மெட்டல்’, மனைவி ரம்யா பெயரில் 'வி இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர்’ நிறுவனங்களை ஆரம்பித்தார். 'குவாரி தொழிலில் புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வைத்ததுதான் சட்டம். சாலை தொடங்கி பாலம் வரை எந்தக் கட்டுமான வேலைகளுக்கும் தேவையான பொருட்கள் அனைத்தும் விஜயபாஸ்கர் நிறுவனங்களில் இருந்துதான் செல்கின்றன’ எனக் குமுறிக் கொட்டுவது எதிர்க்கட்சியினர் இல்லை. விஜயபாஸ்கரின் சொந்தக் கட்சியினரேதான். 'மாவட்டத்தில் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் மணல், ஜல்லி குவிக்கப்பட்டிருந்தால், அது எங்கே வாங்கப்பட்டது என விசாரிக்கவே ஒரு பறக்கும் படை உலவும்’ என்கிறார்கள்.
'இதில் பெரிய ஆச்சர்யம்... தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் இந்தத் தொழில்களைத் தொடங்கி விருத்தியடையச் செய்தார் விஜய். அது எப்படிச் சாத்தியம்? 'பொன்முடி மகன், ரகுபதி மகன்... இவர்களுடனான நட்புதான் காரணம். பொன்முடி உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தது அரசியல்ரீதியிலான முட்டுக்கட்டைகளைத் தகர்த்தது’ என்கிறார்கள் உள்ளூர் ர.ர-க்கள்!


துறையில் சாதித்தது என்ன?
மந்திரிசபையில் 'புரோட்டோகாலின்படி’ கடைசிப் பெயர் விஜயபாஸ்கர். அந்த ராசியோ என்னவோ, 'செயல்பாட்டின் அடிப்படை’யில் அவரது துறையும் கடைசி இடத்தில்தான். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 6 லட்சம் புறநோயாளிகள், 50 ஆயிரம் உள்நோயாளிகள், 2,000 பிரசவங்கள், 600 ஆபரேஷன்கள் என, தினமும் பரபரப்பாக இருக்கும் துறை... மக்கள் நல்வாழ்வு துறை. ஆனால், அதுதான் உச்சபட்ச அலட்சியத்துடன் கையாளப்படுகிறது!
தமிழ்நாடு முன்பு எப்போதும் காணாத கொடூரமாக, பிரசவத்தின்போது தாயும் சேயும் இறக்கும் கொடுமை அரசு மருத்துவமனைகளில் அதிகமாக அரங்கேறியது. தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் 20 குழந்தைகள் உயிர் இழக்க, ஊட்டி மற்றும் கோவை மருத்துவமனைகளில் நான்கு கர்ப்பிணிகள் இறந்தனர். அந்த அதிர்ச்சி விலகும் முன்பே விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எட்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிர் இழந்தன. அடிப்படைக் கட்டமைப்புகள், மருந்துகள், அவசரக் கால சிகிச்சை வசதிகள் அரசு மருத்துமனைகளில் இல்லாததே அந்த மரணங்களுக்கு காரணம் என, மனித உரிமை ஆர்வலர்கள் அறிக்கைகள் வாசித்தனர். ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, 'உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 40 குழந்தைகள் இறப்பு என்ற இந்திய சராசரியைவிட, தமிழ்நாட்டின் சிசு இறப்பு எண்ணிக்கையான 21 என்பது குறைவுதான்’ என புள்ளிவிவரங்களை அடுக்கினார்.
முந்தைய தி.மு.க ஆட்சியில் சிக்குன்குனியா பாதிப்புகளுக்காக நாள்தோறும் அலறல் அறிக்கை வாசித்தார் ஜெயலலிதா. ஆனால், அவருடைய ஆட்சியில் அதைக் காட்டிலும் அதிகமாகப் படையெடுத்து படுத்தியது கொசு. 'டெங்கு மரணம்’ என நாள்தோறும் செய்திகள் படபடக்க, அசைந்துகொடுக்கவில்லை விஜயபாஸ்கர். ஒரு கட்டத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே களமிறங்கி ஆலோசனைக் கூட்டம் போட்டார். 'டெங்குவே பரவாயில்லைபோல’ என இன்னொரு பக்கம் பன்றிக்காய்ச்சல் பயமுறுத்தியது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் கூட்டணிக்கு சுமார் 50 பேர் வரை பலியானார்கள். தமிழ்நாடே அதிர்ந்து நின்றபோது, சட்டமன்றத்தில் அம்மா புகழைப் பாடிக்கொண்டிருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
வேளாண்மைத் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலையைப் போல, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி அறிவொளியின் தற்கொலையும் அதிர்வலையை உண்டாக்கியது. மாநில காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றிய அறிவொளி இறந்தபோது, 'புற்றுநோயால் தற்கொலை செய்துகொண்டார்’ என செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், 'காச நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் 687 பணியிடங்களை நியமிப்பதில், அறிவொளி நேர்மையுடன் செயல்பட்டதே, அவரது மரணத்துக்குக் காரணம்’ எனக் கொந்தளித்தனர் எதிர்க்கட்சிகள். இதைக் கடுமையாக மறுத்தார் அமைச்சர்.
இதுபோக ஊழல் குற்றச்சாட்டுகளும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீது கறை பூசுகிறது. சமீபத்தில், பொதுப்பணித் துறையின் டாப் 10 ஊழல் பேர்வழிகள் என வெளியான பட்டியலில் ஐந்து பேர் அரசு மருத்துவமனைகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டிருப்பவர்கள்.
'கட்டி முடிக்கப்பட்ட கோபுரத்தை ஒரு டிப்-டாப் ஆசாமி தாங்கிப்பிடித்துக்கொண்டு, 'நான்தான் இதற்கு முட்டுக்கொடுத்திருக்கிறேன். இல்லையென்றால் விழுந்துவிடும்’ என்றார். ஆனால், நேரில் சென்று பார்த்தவர்களுக்கோ அவரே நிற்கும் நிலையில் நிதானமாக இல்லை என்பதை உணர்ந்தனர். ஆக, யாரும் முட்டுக் கொடுத்ததால் அல்ல... நாங்கள் விட்டுக்கொடுத்ததால்தான் 29 இடங்கள் அவர்களுக்கு கிடைத்தன’ - அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை மறைமுகமாகக் குட்டி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜயபாஸ்கர் இந்தக் கதையைச் சொன்னபோது, எதிர்க்கட்சியினரான தே.மு.தி.க-வினர் கொந்தளித்தனர். ஆனால், சபாநாயகர் 'அவர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை’ எனச் சொல்லி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அப்படி நாமும் மக்கள் நல்வாழ்வுத் துறை சீர்கேடுகளுக்கு யார் பெயரையும் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரையை முடிப்போம்!
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல் என தமிழர்கள் அல்லாடிக்கொண்டிருந்தபோது, 'டெங்கு... இனி இங்கு... அது எங்கு?’ எனக் கேட்கும் வண்ணம் டெங்குவுக்கு சங்கு ஊதிய மருத்துவச் சிங்கம் எங்கள் அம்மா!’ என சட்டசபையில் ரைமிங்கில் பாடிக்கொண்டிருந்தார் அமைச்சர்!

மாவட்டத்தில் குவாரி பிசினஸ், உள்ளூர் அதிகாரப் பதவிகள், அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவது, எதிரிகளை பலவீனப்படுத்துவது... இவற்றில் எப்போதும் கவனமாக இருப்பார்!
மாவட்டத்தில் எந்த கான்ட்ராக்ட் என்றாலும் அதற்கான பொருட்கள் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான நிறுவனங்களில் இருந்துதான் சப்ளை செய்யப்பட வேண்டும் என்பது தொகுதியில் எழுதப்படாத விதி!
சுமார் ஒன்றறைக் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரஷ்ஷிங் யூனிட், ஒன்றே கால் கோடி ரூபாய்

மதிப்புள்ள பொக்லைன், டிரான்ஸிட் மிக்ஸர், பேட்சிங் பிளான்ட், டிப்பர் லாரிகள், ஹாட்மிக்ஸ் பிளான்ட்... என குவாரி தொழிலுக்கான சகலமும் வாங்கிக்குவித்தார் விஜய். ஊருக்குள் சரேலென கடக்கும் கட்டுமானப்பொருள் மற்றும் இயந்திர வாகனங்களில் சில, அமைச்சரின் நிறுவனங்களுக்குச் சொந்தமானவையே!
குவாரி தொழில் போக கல்வியிலும் கண் பதித்தது விஜய் குடும்பம். தந்தை சின்னதம்பி, சகோதரர் உதயகுமார் பெயரில் 'மதர் தெரெசா’ என்ற பெயரில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், பள்ளி முதல் பல பாடப்பிரிவு கல்லூரிகள் வரை உள்ளடக்கி 100 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது.
விருந்து வித் அமைச்சர்!
* விஜயபாஸ்கர் கிழித்த கோட்டைத் தாண்டாதவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ். அரசாங்க நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகளைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, ஜெயலலிதாவைப் புகழ்ந்துவிட்டு, பின்னர் விஜயபாஸ்கரையும் அதே அளவுக்கு வாழ்த்திவிட்டுத்தான் தன் உரையையே தொடங்குவார்.
* குறைந்தது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு காரணம் சொல்லி, புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுக்கு கறி விருந்து நடக்கும். சிக்கன், மட்டன் என அந்த பொலிட்டிக்கல் பொடிமாஸில் கரைந்துபோகிறவர்கள் பலர்!

* எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர், தன்னை எதிர்ப்பவர்களிடம்கூட நேரடியாகக் கோபம் காட்ட மாட்டார். அவர்கள் தோளில் கை போட்டு சமாதானப்படுத்தி, பின்னர் அவர்களை வீழ்த்துவார். இந்த ஃபார்முலாவில் சிட்டிங் அமைச்சர் சுப்ரமணியன், புதுக்கோட்டை மாவட்ட சீனியர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் வைரமுத்து, அறந்தாங்கி எம்.எல்.ஏ ராஜநாயகம்... என வீழ்ந்தவர்கள் ஏராளம்.
* நூற்றாண்டு கடந்த புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அரங்கேறிய கூத்துக்கள் 'திருமங்கலம் ஃபார்முலா’வைப் பின்னுக்குத் தள்ளிவிடும். அந்தப் பதவியில் தன் ஆதரவாளர் ராஜசேகரனைப் போட்டியின்றி ஜெயிக்கவைக்க, எதிர்க்கட்சியினரை மனுத்தாக்கல் செய்யக்கூடவிடாமல் தடுத்தது அமைச்சர் படை. உள்ளூர் தேர்தல்களில் அதன் பின்னர் இந்தப் 'புதுக்கோட்டை ஃபார்முலா’தான் கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சி கமிஷனர் பதவியில் அமைச்சரின் ஆதரவாளரை நியமிக்க வேண்டும் என்பதால், பல மாதங்களாக அந்தப் பதவியைக் காலியாகவே வைத்திருக்கிறார்கள்.
எதுகை மோனை முக்கியம் அமைச்சரே!
கதை சொல்லும்போது எதுகை, மோனையில் விளையாடுவார் அமைச்சர். ஆனால், அதெல்லாம் அவருடைய சொந்த சரக்கு அல்ல. 'சிலபல பேர் கொண்ட குழு’ ரூம் போட்டு யோசித்து எழுதிக் கொடுப்பதையே, சினிமா வசனம்போல பேசி 'சிக்ஸர்’ அடிப்பார். கவிஞர் ஒருவர்தான் அந்தக் குழுவின் தலைவர். இவரோடு பத்திரிகை ஆசிரியர், கம்பன் கழகத்தைச் சேர்ந்த இருவர் இணைந்து விஜயபாஸ்கரின் விறுவிறு பேச்சுக்கு சுறுசுறு மசாலா சேர்க்கிறார்களாம். சினிமா பாடல் எழுதும் கவிஞர்கள் லெவலுக்கு, அந்தக் குழுவுக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. அதிலும் மந்திரி பதவியை வாங்கித் தந்த ஸ்கிரிப்ட்டுக்கு அளிக்கப்பட்ட பரிசு வாய் பிளக்க வைக்கிறதாம். சமீபத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு உரை தயாரிக்கச் சொல்லும் அளவுக்கு, அந்த நாலு பேர் கொண்ட குழுவுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது!