மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 11

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

அஞ்ஞானச் சிறுகதைகள் - 11

''நீ பார்க்கப்போவது, காலபகோஸ் தீவுகளில் இருந்து நான் கொண்டுவந்த, அழியப்போகும் ஒரு சிலந்தி இனத்தின் கடைசி சிலந்தி. இந்த ஒரு சிலந்தியும் செத்துப்போனால், இனி அந்த இனமே இல்லை. பெயர் பெயசிலிதோரியா எண்டி. எட்டுக்காலி டாரண்டுலா ஃபேமிலி. டார்வின், தன் காலபகோஸ் தீவு டைரியில் இந்தச் சிலந்தி இனத்தைப் பற்றி பதிவுசெய்திருக்கிறார். பல நூறு வருடங்களுக்கு முன்பு செத்துபோன ஓர் ஆண் சிலந்தியின் படிவத்தை ஒரு சிறு பாறைத்துண்டில், அப்போது அவர் கண்டெடுத்தார்' - லேப் செல்லும் வராந்தாவில் நடந்தபடி தன் தோழி லின்சியிடம் சொன்னான் கிறிஸ். இளம் எண்டமோலஜிஸ்ட். பூச்சியியல் ஆய்வாளன்.   

'நேற்று இரவு முழுக்க டார்வின் எடுத்த பாறைத்துண்டுப் படிவத்தையும், அந்தச் சிலந்தியையும் வைத்துக்கொண்டு உடலியலை ஆராய்ந்துகொண்டிருந்தேன். வித்தியாசத்தை கடைசியில்தான் கண்டேன். நம்மிடம் இருப்பது பெண் சிலந்தி'' என்றபடி, லேபின் கதவைத் திறந்தான். லின்ஸி லேசாகப் புன்னகைத்தபடி பின்தொடர்ந்தாள்.

சிலந்தி இருந்த கண்ணாடி பாட்டில் வெறுமையாகத் திறந்து கிடந்தது. அதிர்வுடன் மேஜையை நெருங்கிய கிறிஸ், அப்போதுதான் பக்கத்தில் கிடந்த பாறைத்துண்டைக் கவனித்தான். அதில் டார்வினின் படிவம் இல்லை.

தூசி படிந்த மேஜையில் இருந்து ஜன்னலை நோக்கி 16 கால்கள் ஊர்ந்துபோனதற்கான மிக மெல்லிய தடயத்தை லின்ஸி மட்டுமே முதலில் பார்த்தாள்!

களமெழுத்து

'உத்தம வில்லன்’ படத்தில் தெய்யம் பார்த்தி ருப்பீர்கள். குறிப்பாக, வடகேரளத்தில் ஆடப்படும் ஒரு வகை நாட்டார் கூத்து. யுத்தம், வன்முறை, எதிர்ப்பு போன்ற விஷயங்களை மனித மனம் எப்போதும் மறக்க விரும்புவது இல்லை. நேரடியாக முடியாதபோது கலைகளின் வழியாக அதை நிகழ்த்திக்கொள்ளும். சமூகத்தின் மனதுக்கு, கலை ஒரு வகையான வடிகால். தெய்யம், அந்த வகையான போரின், தியாகத்தின் எச்சங்கள் வண்ணமயமாக எழுந்து வரும் கலை. குறிப்பாக, 'காவுகள்’ எனச் சொல்லப்படும் கேரளக் கோயில் விழாக்களுடன் தொடர்புள்ளது.

இதேபோல கேரளக் கோயில்களுடன் தொடர்புள்ள இன்னொரு விஷ§வல் வடிவம் 'களமெழுத்து’. 'களம்’ என்றால் முற்றம். 'எழுதுவது’ எனச் சொல்வது வரைவதைத்தான். தரைகளில் வரையும் பழக்கம், நம்மூர் கோலம் முதல் வட இந்திய ரங்கோலி வரை உண்டு. 'களமெழுத்து’ எப்படி வித்தியாசப்படுகிறது என்றால், கோயில் சடங்குகளில் சில குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே வரையப்படுகிறது. அரிசி மாவின் வெள்ளை, மஞ்சளின் மஞ்சள், உமியை எரித்த கரி, எலுமிச்சைச் சாற்றை மஞ்சளுடன் கலந்துவரும் சிவப்பு, இலைகளில் இருந்து பிழியப்பட்ட பச்சை... என முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த வண்ணக் கலவைகள் மட்டுமே.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 11

காளி முதல் 'வேட்டைக்கொரு மகன்’ போன்ற நாட்டார் தெய்வங்கள் வரை கடவுள்களின் ஓவியங்கள் மட்டும்தான். கோபத்தில் உறைந்த கடவுள்கள். கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என அடர்த்தியான வண்ணங்கள் கலந்து, பார்வையாளர்களின் நெஞ்சில் பக்தியுடன் கொஞ்சம் திக் திக் ஃபீலையும் ஏற்றிவிடுகிறது. சடங்குகள் முடிந்ததும் உடனடியாக ஓவியத்தை அழித்துவிடுவார்கள்.

பல நூற்றாண்டுகள் வரலாற்றுப் பாரம்பர்யம் கொண்ட களமெழுத்துக் கலையின் இன்னொரு விசேஷம், அதன் பெர்ஸ்பெக்ட்டிவ். இந்தியாவின் ஓவிய மரபு என்பது பெரும்பாலும் சிற்ப மரபுதான். சித்தன்னவாசல், அஜந்தா, எல்லோரா என சுவர் ஓவியங்களை எடுத்துக்கொண்டால், உருவங்கள் ஒரு பக்கமாக முகத்தைத் திருப்பியபடி 'புரொஃபைல் போர்ட்ராயிட்’ வடிவில்தான் இருக்கும். காரணம், ஓவியத்துக்குள் தூரத்தையும் ஆழத்தையும் வரைவதில் உள்ள சிக்கல். நேரான முகத்தை வரைவதில் சற்று குழப்பம். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க, ஒரு சைடாக முகத்தை வரைந்துவிடுவார்கள். மூக்கும் முழியும் ஒழுங்காகத் தெரியும் என்பதால்.

ஆனால் களமெழுத்தில் சிற்பத்தைப்போல ஓவியத்திலும் நேரான முகங்களை வரையும் பழக்கம் இருந்திருக்கிறது. முகம், உடல், பின்னணி என அடுக்குகளாகத் தூரமும் ஆழமும் உருவாகி, ஒருவகையில் சிற்பம்போல 3-டி தன்மையின் தோற்ற மயக்கத்தையும் தருகிறது. இந்த வகையான தன்மை, நமது பாரம்பர்ய ஓவியக் கலையில் மிகக் குறைவு.

களமெழுத்து என்பது, வெறும் விஷ§வல் கலையாக மட்டும் அல்ல; கூடவே இசையும் நடனமும் கலந்த ஒரு பழங்குடி வழிபாட்டுச் சடங்குகளின் நிகழ்த்துக் கலை. பரம்பரையாக வரைவதற்கும், பாடுவதற்கும், கருவிகளை மீட்டுவதற்கும், பூசைகள் செய்வதற்கும் என, பல்வேறு கேரள சாதிகளின் சங்கமமாக இருக்கும் இந்தக் கலை, ஒருவகையில் சமூகங்களுக்கு இடையேயான ஒரு சமரசப் புள்ளியாக உருவாகிவந்ததாகவும் இருக்கலாம்!  

கவலைக்கொள்ள காரணம் ஆயிரம் !

'வாழ்க்கை வாழ்வதற்கே’ என ஒவ்வொரு நொடியும் வாழ்வின் மூலைமுடுக்கு எல்லாம் மகிழ்சியாக இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றன விளம்பரங்கள். ஆனால், நடப்பது எல்லாம் தலைகீழ்.  

உப்பு இல்லாத டூத் பேஸ்ட் என்கிற குற்ற உணர்ச்சியில் ஆரம்பிக்கிறது நம் மக்களின் காலை. பிரெஷ் பண்ணி முடிந்தால், இந்த ஃப்ரெஷ்னெஸ் 24 மணி நேரம் நீடித்திருக்குமா? சிரித்தால் பற்கள் டாலடிக்குமா... இல்லை பார்ப்பவர்களின் மனது டல்லடிக்குமா? என யோசிக்க வேண்டியிருக்கிறது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 11

மார்க்கெட் போன நடிகர்கள், துடைப்பமும் கையுமாக சிபாரிசு செய்கிற கிளீனர்கள் உபயோகிக்காத டாய்லெட் எல்லாம் 'நிஷப்தம் பிராணசங்கடமோ’ என ஒருமுறை யோசித்துவிட்டுத்தான் உள்ளே போகத் தோன்றுகிறது. குளியல் சோப், குடும்பத்தின் மொத்தப் பிரச்னை அல்ல... அட்லீஸ்ட் 10 பிரச்னைகளையாவது குறைக்குமா? கை கழுவாவிட்டால் விரல் இடுக்கில் மறைந்திருக்கும் கிருமிகளின் கொட்டம் அடங்குமா என, குழந்தைகளின் கேள்விகளுக்கு வேறு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

உடைகளை குறிப்பிட்ட கம்பெனியின் சோப் பவுடர் இல்லாமல் துவைத்தால், ஜெர்ம்ஸ் போயிருக்காது. 'கறை நல்லது’ எனப் பார்ப்பவரிடம் கதைவிடவும் முடியாது. பிராண்டு பெயர் இல்லாத துணிகளை எல்லாம் துச்சமாக மதிக்கிறது இந்தச் சமூகம். சாப்பிடுகிற தட்டில் இருந்து குடிக்கிற தண்ணீர் வரை கிருமிகளைக் கொன்று களையெடுக்காமல், தொண்டைக்குக் கீழே எதுவும் இறங்குவதாக இல்லை.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 11

நடப்பவன் பைக் இல்லாமல் இருப்பதையும், பைக் இருப்பவன் கார் இல்லாமல் இருப்பதையும் நினைத்து ஏங்காமல் இருக்க முடியாது. கடன் வாங்கிய காரை பார்க் பண்ண வழி இல்லாமல் வருத்தப்படுபவர்களை, மேலும் கடனாளியாக்கி 'சென்னைக்கு மிக அருகில்’ வீடு கட்டித்தர ஆலாய் பறக்கிறார்கள்.

'பெர்ஃப்யூம் போடாவிட்டால், ஃபிகர் மடியாதோ?’ என இளைஞர்களுக்கு கிளர்ச்சியின் குழப்பம். 'பேக்கேஜ்டு பொடி’களைக் கொடுக்காவிட்டால் பிள்ளைகள் கஜினி சூர்யாக்களாக மாறி, தங்கள் ஞாபகச்சக்தியை இழந்துவிடுவார்களோ, எக்ஸாமில் மார்க் எக்கச்சக்கமாகக் குறையுமோ?’ என அம்மாக்களுக்கு வளர்ச்சியின் குழப்பம். 'லிட்டருக்கு மைலேஜ் எத்தனை வரும்?’ என்றோ, 'வளமான வருங்காலத்துக்கு எந்த வங்கி சிறந்தது?’ என்றோ அப்பாக்களுக்கு ஆல்வேஸ் குழப்பம். 'நூடுல்ஸை சாப்பிடுவதா... குடிப்பதா?’ எனப் பிள்ளைகளுக்குப் பெரும் குழப்பம். பணம் இருப்பவனுக்கு 'நகையை எந்தக் கடையில் வாங்கலாம்?’ எனக் குழப்பம். பணம் இல்லாதவனுக்கு 'நகையை எந்த ஃபைனான்ஸில் வைக்கலாம்?’ எனக் குழப்பம்.

இப்படி காலை முதல் இரவு வரை குழப்பக் கும்மிகளால் நம்மைப் பொம்மைகளாக்கி ஆட்டுவிக்கும் விளம்பரங்களே, குழப்பங்கள் போக்கி நிம்மதியாகத் தூங்க சாமி படங்கள் போட்ட

அஞ்ஞானச் சிறுகதைகள் - 11

டாலர்களையும் வாங்கச் சொல்லி, வாய் பிளக்கவைக்கிறது.

வாழ்க்கை, வாழ்வதற்கா... வாங்குவதற்கா?  

''இதுதான் டார்கெட்'' என இன்ஃபோகிராபிக்ஸ் காட்டினார் பாஸ்.

''கழுதை முன்னால் கட்டுற கேரட் மாதிரில்ல இருக்கு'' என்றான் கார்ப்பரேட் சித்தன்!