
முகில்
பெண் குழந்தைகள் பிறந்தாலே முகம் சுளிக்கும் சமூகத்தில் வாழ்ந்த கவிஞர் ஜியாவுதீன், 1997-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்த தன் மகளுக்குச் சூட்டிய பெயர் மலாலா யூசுஃப்ஸை. இதில் யூசுஃப்ஸை என்பது பரம்பரைப் பெயர். 'மலாலா’ 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்கானின் 'ஜோன் ஆஃப் ஆர்க்’. போர்க்களத்தில் வீராவேசமாகச் செயல்பட்டு தோட்டாவுக்குப் பலியானவள். அந்தப் பெயரின் உட்பொருள் 'துன்பத்தால் தாக்கப்பட்டவள்’. ஆகவே, குழந்தையின் தாத்தாவுக்குப் பெயர் பிடிக்கவில்லை.
அவர் மட்டும் 'மலாலா... இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியானவள்’ என, குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் வாழ்த்தினார். ஆனால், 'மலாலா’வின் நேற்றைய வாழ்க்கை துன்பங்களால் தாக்கப்பட்டதாகவே இருந்தது!
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு. காடு, மலை, அருவி, ஏரிகள் நிறைந்த நந்தவன பூமி. புத்தரும் புத்த மதமும் உலவிய பிரதேசம். '17 முறை படையெடுப்பு’ புகழ் கஜினி முகமதுவின் 11-ம் நூற்றாண்டுப் படையெடுப்பால் இங்கே இஸ்லாம் பரப்பப்பட்டது. சென்ற நூற்றாண்டு வரை அமைதிப் பள்ளத்தாக்காக, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப் பூமியாகத்தான் இருந்தது... தாலிபான்கள் தங்கள் இடது காலை எடுத்து வைக்கும் வரை!
ஸ்வாட்டின் பெருநகரமான மிங்கோராவில் பிறந்த மலாலாவுக்கு பால்ய கால சந்தோஷங்களுக்குக் குறைவில்லை. சேவல் வேட்டை, மொட்டைமாடி கிரிக்கெட், அத்தி, பிளம்ஸ், பீச்... என பறவைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பழங்கள் உண்ணும் பரவசம்.

இன்றும் பெண் என்பவள் திருமணத்துக்கு முன்னும் பின்னும் சமையலறையில் வாழப் பிறந்தவள்... அவள் உலகம் பர்தாவுக்குள் தொடங்கி அதனுள்ளேயே முடிந்துபோவது என்பன போன்ற சீழ்பிடித்த பழைமைவாதக் கொள்கைகள்கொண்டதுதான் மலாலா பிறந்த பாஷ்டூன் இனமும். (பாகிஸ்தானின் இரண்டாவது மிகப் பெரிய இனம்). ஆனால், ஜியாவுதீன் தன் மகளுக்கு பர்தாவுக்குப் பதில் சிறகுகள் வாங்கித் தந்தார். அவரும் தூய்மையான இஸ்லாமியரே. ஆனால், தேவையற்ற, முரணான சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்தார். பள்ளி நடத்த வேண்டும், பெரும்பான்மையானவர்களுக்குக் கல்வியறிவு அளிக்க வேண்டும் என்பது ஜியாவுதீனின் கனவு. நண்பருடன் சேர்ந்து கடன் வாங்கி 'குஷால்’ என்ற பெயரில் பள்ளி ஒன்றையும் ஆரம்பித்திருந்தார். அதைப் பதிவுசெய்யக்கூட பணம் இல்லை. அரசு அதிகாரிகள் கேட்கும் லஞ்சம் கோபமூட்டியது. ஆகவே, தனியார் பள்ளி கூட்டமைப்பில் இணைந்தார். அவரது நேர்மையும் சமூகக் கோபங்களும் மேலும் மேலும் துன்பங்களைத்தான் கொடுத்தன. மனம் தளராத ஜியாவுதீன், தன் மகளையும் போராட்டக் குணத்துடனேயே வளர்த்தார்.
மலாலாவின் அம்மா தூர்பெக்காய். சிறுவயதில் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றபோது, வகுப்பில் அவர் மட்டுமே பெண் குழந்தை. தன் வயதுச் சிறுமிகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்க, தனக்கும் பள்ளி வேண்டாம் என அறியாமையால், புத்தகங்களை விற்று, அதில் பெப்பர்மின்ட் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு படிப்பைக் கைவிட்டவர். ஆனால், இப்போது 'கல்வியே தன் மகளின் வாழ்க்கையை இனிமையாக்கும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் தூர்பெக்காய்.
தவழும் வயதிலேயே மலாலா பள்ளியில்தான் வளர்ந்தாள். பேசப் பயிலும் பருவத்தில் வகுப்பில் பாடம் கவனித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு தந்தையின் பள்ளிதான் எல்லாம். பெருவிருப்பத்துடன் கல்வி கற்றாள். சிறுபிள்ளைத்தனங்களுக்கும் குறைவில்லை. எட்டு வயசு மலாலாவிடம் இருந்த ஒரே விளையாட்டுப் பொருள், பொம்மைக் கைப்பேசி. அது ஒருநாள் காணாமல்போனது. பக்கத்து வீட்டுச் சிறுமி சபீனா அதேபோல் ஒரு பொம்மையை வைத்திருக்க, மலாலாவுக்குச் சந்தேகம்; கோபம். பதிலுக்கு சபீனாவின் பொம்மைகள், காதணி, நெக்லெஸ் என ஒவ்வொன்றாகத் திருட ஆரம்பித்த மலாலா, ஒருநாள் பிடிபட்டாள். 'இப்படித் திருடி எங்களை அவமானப்படுத்துகிறாயா?’ - அம்மாவின் கேள்வி சுட்டெரித்தது. 'அப்பாவிடம் சொல்லிவிடாதீர்கள்’ என அழுது அரற்றியபடியே மலாலா மன்னிப்பு கேட்டாள்.
ஜியாவுதீனின் காதுகளுக்கும் விஷயம் போனது. அப்பா உஷ்ணமாகவில்லை. 'தவறு செய்ய சுதந்திரம் இல்லையென்றால், அந்தச் சுதந்திரம் தேவையற்றது’ என காந்தி சொல்லியிருக்கிறார். 'தவறை உணரும்போது, அதில் இருந்து கற்றுக்கொள்வதுதான் முக்கியமானது.’ மலாலாவின் மனதில் ஆழப்பதிந்த வார்த்தைகள் இவை! மதிப்பற்ற அழகுப் பொருட்களுக்காக நான் ஏன் எனது விலைமதிப்பற்ற ஆளுமையைத் தொலைக்க வேண்டும்? தன் அற்ப ஆசைகளை அப்போதே விட்டு விலகினாள் மலாலா. வகுப்பில் முதல் மாணவியாக இருக்க வேண்டும். நிறைய புதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும். தந்தைபோல அரசியலில் அறிவையும் பேச்சாற்றலையும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என மலாலாவுக்கு ஏகப்பட்ட லட்சியங்கள். தந்தை உற்சாகப்படுத்தினார். 'மகளே... நீ உன் கனவுகளைப் பின்தொடர்ந்து செல். நான் உன் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன்’!
'என் போன்ற சிறுமிகள் ஒவ்வொருவருக்குமே இதுபோல் கனவுகள் இருக்கும்தானே. ஆனால், பல சிறுமிகள் பள்ளியின் வாசனையையே இதுவரை உணர்ந்தது இல்லை. நேற்று வரை என் சக மாணவியாக இருந்த 10 வயது சிறுமியை இன்று அரைக் கிழவன் ஒருவனிடம் விற்றுவிடுகிறார்கள். இரு குடும்பங்களின் பழைய பகையைத் தீர்க்க, ஒரு குடும்பத்தின் பெண்ணைப் பலிகடாவாக்கி, கேவலமான ஒருவனுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கிறார்கள். வேற்று இன ஆணுடன் அன்புவைத்த ஒரு சகோதரி, திடீரென இறந்துபோகிறாள். இது குடும்பத்தினரே செய்யும் கொலைதான். இந்த இழிநிலைகள் என்றைக்குமே மாறாதா? இதையெல்லாம் தட்டிக்கேட்கவே முடியாதா?’ - மலாலா மனதில் அடுக்கடுக்காகக் கேள்விகள்!

'ஷக்கலக்க பூம்பூம்’ என்ற டி.வி தொடரில், சிறுவன் சஞ்சு தனது மாயப் பென்சில் கொண்டு வரையும் ஓவியங்கள் உயிர்பெறும். அதன் மூலம் அநியாயங்களைத் தட்டிக்கேட்பான். அயோக்கியர்களை ஓடஓட விரட்டுவான். மலாலா, அந்த மாய பென்சில் தனக்கும் வேண்டும், தானும் சஞ்சுவாக மாற வேண்டும் என ஐந்து வேளை தொழுகையிலும் இறைவனிடம் வேண்டினாள். தொழுகை முடிந்து மேஜை டிராயரை நம்பிக்கையுடன் இழுத்தும் பார்த்தாள். மாய பென்சில் இல்லை. இன்னொரு முறை தன் நகரத்தில் குப்பைமேட்டில் உழலும் குழந்தைகளுக்காக வேண்டியும், இந்த உலகத்தைக் குறைகளற்றதாக மாற்றக் கோரியும் கடவுளுக்குக் கடிதம் எழுதினாள். ஆங்... கடவுளின் முகவரி என்ன? தெரியவில்லை. கடிதத்தை ஒரு மரச்சட்டத்தில் கட்டி, ஓடும் நதியினில் மிதக்கவிட்டாள். 'நிச்சயம் இதைக் கடவுள் கண்டெடுத்துவிடுவார்’!
தந்தையின் பள்ளி விரிவடைந்து, மூன்று கட்டடங்களில் இயங்க ஆரம்பித்தது. தனது சமூக ஆர்வமிக்க செயல்களினால், பேச்சுக்களினால் ஜியாவுதீனும் ஊரறிந்த புள்ளி ஆனார். 'உலக அமைதிக் குழு’ என ஓர் இயக்கம் ஆரம்பித்து அதன் தலைவராகவும் இயங்கினார். 9/11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு காட்சிகள் மாறின. ஒசாமா பின்லேடன் 'சூப்பர் ஹீரோ’ அந்தஸ்து பெற்றார். தாலிபான்கள் மீது பாகிஸ்தான் மக்களுக்கு ஈர்ப்பு உண்டானது. உலக அமைதியை விரும்பிய புத்தர் மீது குண்டுகள் பொழிந்த தாலிபான்களின் விஷ நிழல், 2007-ம் ஆண்டு ஸ்வாட் பள்ளத்தாக்கின் மீதும் படர்ந்தது. மக்கள், அவ்வப்போது சிறிய, பெரிய நிலநடுக்கங்களால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது உண்டு. ஆனால், அனைத்தையும்விட பெரிய அழிவு சக்தியாக அங்கே தாலிபான்கள் நுழைந்தனர். அப்போது மலாலாவுக்கு வயது 10.
மலாலாவுக்கு பர்தா பிடிக்காது. ஒருமுறை தூர்பெக்காய் தன் மகளுடன் கடைவீதிக்குப் போகும்போது, 'முகத்தை மூடிக்கொள். அவர்கள் உன்னைப் பார்க்கிறார்கள்’ என நடுக்கத்துடன் எச்சரித்தார். மலாலா பயப்படவில்லை. 'பரவாயில்லை. நானும் அவர்களைப் பார்க்கிறேன்’. அவள் மனத்தில் தந்தை சொன்ன வார்த்தைகள் எப்போதும் இருந்தன. 'பர்தா வெறும் துணியில் இல்லை. அது இதயத்தில் உள்ளது’!
தாலிபான்கள் பள்ளிகளைக் குண்டுவீசித் தகர்க்கும், இடித்துத் தரைமட்டமாக்கும் செய்திகள் அதிகரித்தன. ஜியாவுதீனின் பள்ளிகளுக்கும் மிரட்டல்கள் வந்தன. ஒன்று, தாலிபான்களின் அடிமையாக ஒடுங்கி வாழ வேண்டும் அல்லது, சாகத் துணிந்து அவர்களை எதிர்க்க வேண்டும். அவர் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். ஸ்வாட்டில் தாலிபான்களின் அட்டூழியங்கள் குறித்து ஊடகங்களிடம் பேச ஆரம்பித்தார். அதில் பி.பி.சி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் உண்டு. பெண்கள் சார்பாகப் பேசுவதற்கு, தனது 11 வயது மகள் மலாலாவை முன் நிறுத்தினார். அவளும் அழுத்தமாகப் பேசினாள். 'கல்வி என் அடிப்படை உரிமை. அதைப் பறிக்க தாலிபான்கள் யார்? பள்ளி செல்வதும் படிப்பதும் வீட்டுப்பாடங்கள் எழுதுவதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது எங்கள் எதிர்காலம். தாலிபான்களால் எங்கள் புத்தகங்களை, பேனாக்களைப் பறிக்க முடியும். ஆனால், எங்கள் சிந்தனையைத் தடுக்கவே முடியாது. உலகில் உள்ள அனைவரும் முஸ்லிம்களாக மாற விரும்பினால், முதலில் அவர்கள் தங்களை நல்ல முஸல்மான்களாக மாற்றிக்கொள்ளட்டும்!’
2008-ம் ஆண்டு நிலைமை மிகவும் மோசமானது. தாலிபான் எதிர்ப்பாளர்கள், சந்தேகப் பட்டியலில் உள்ளவர்கள், கணுக்கால் தெரியும்படி உடை அணிந்த பெண்கள், இப்படிப் பலரும் கொல்லப்பட்டு சதுக்கம் ஒன்றில் வீசப்பட்டார்கள். அது 'ரத்தச் சதுக்கம்’ என்ற பெயர்பெற்றது. ஜியாவுதீனின் உயிருக்கும் குறிவைக்கப்பட்டதாகத் தகவல். தூர்பெக்காய் வீட்டின் பின்புறத்தில், தாலிபான்கள் வந்தால் தன் கணவர் தப்பித்து ஓட, எப்போதும் ஓர் ஏணியைத் தயாராக வைத்திருந்தார். மலாலா ஒரு சுரங்கப்பாதை தோண்ட முடியுமா எனத் திட்டமிட்டுக்கொண்டிருந்தாள். தலையணைக்குக் கீழ் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு தூங்கினார்கள். வீட்டுக்கு அருகிலேயே வெடிக்கும் குண்டுச் சத்தங்கள் உயிரை உலுக்கின. 'நானும் மனுஷிதானே. எனக்கும் பயம் இருந்தது. ஆனால், அது தைரியத்தைவிட குறைவாகவே இருந்தது.’ மலாலாவின் தம்பிகள் இருவரும் கையில் மரக்கிளையைத் துப்பாக்கிபோல பிடித்துக்கொண்டு 'ராணுவம்-தாலிபான்’ விளையாட்டை ஆட ஆரம்பித்திருந்தனர்.
பி.பி.சி - பிரதிநிதியான அப்துல் ஹைகாக்கர், ''தாலிபான்களுக்குக் கீழ் வாழும் வாழ்க்கை’ குறித்த நாட்குறிப்புகளை யாராவது எழுதுவார்களா?’ என ஜியாவுதீனிடம் கேட்டார். விஷயம் கேள்விப்பட்ட மலாலா, 'நானே எழுதுகிறேன்’ என முன்வந்தாள். முதல் கட்டுரை, 2009-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி அன்று பி.பி.சி உருது இணையதளத்தில் வெளிவந்தது. மலாலாவின் பாதுகாப்பு கருதி புனைப்பெயரில். குல்மக்காய். சோளமலர் என அர்த்தம். 'ஒவ்வோர் அடிக்கும் பயத்துடன் திரும்பிப் பார்த்துக்கொண்டேதான் பள்ளி செல்கிறேன். யாராவது என் முகத்தில் அமிலம் வீசிவிடுவார்களோ என, பயமாக இருக்கிறது. அன்று ஒருவனைக் கடக்கும்போது, 'உன்னைக் கொல்லப்போகிறேன்’ என்றான். திடுக்கிட்டுத் திரும்பினேன். அவன் போனில் பேசிக்கொண்டிருந்தான்.’ ஸ்வாட்டின் மோசமான சூழலைத் தோலுரித்த மலாலாவின் எழுத்துக்கள், கொஞ்சம் கொஞ்சமாக, சர்வதேசக் கவனம் பெற ஆரம்பித்தன.
அந்த ஜனவரியில் பனிக்கால விடுமுறைக்காக பள்ளியின் இறுதி மணி ஒலித்தது. மார்ச்சில் தேர்வுகளுக்காக மீண்டும் பள்ளி திறக்கப்படுமா? அதுவரை தாலிபான்கள் கட்டடத்தை விட்டுவைத்திருப்பார்களா? நினைக்க நினைக்க, மலாலாவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பாகிஸ்தானின் ராணுவம் அனுப்பப்பட்டும் தாலிபான்களின் கை ஓங்கியது. ஸ்வாட்டைவிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற ஆரம்பித்தனர். மலாலாவின் குடும்பத்தினரும். வீட்டில் வளர்த்த கோழிக்குஞ்சு களை என்ன செய்ய? நிறைய நீரும் கொஞ்சம் சோளமும் வைத்துவிட்டு, மலாலா ஒரு காரில் நெருக்கிப்பிடித்து உட்கார்ந்துகொண்டாள். அவளது புத்தகப் பையைக்கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. வழியெங்கும் கவலை தோய்ந்த முகங்கள். ராணுவச் சோதனைச் சாவடிகள். கடுமையான பயணத்துக்குப் பின் அவளது அம்மாவின் பூர்வீகக் கிராமத்தை அடைந்தனர். அங்கே கொஞ்சம் நாள். பின் பெஷாவர். மூன்று மாதங்கள் நாடோடிப் பயணம்!
2009-ம் ஆண்டு ஜூலை 24. 'ஸ்வாட்டில் தாலிபான்களை அகற்றிவிட்டோம். மக்கள் பள்ளத்தாக்குக்குத் திரும்பலாம்’ என பிரதமர் கிலானி அறிவித்தார். படபடக்கும் நெஞ்சுடன் மலாலா குடும்பத்தினர் மிங்கோராவை அடைந்தனர். வழியெங்கும் போரின் சிதிலங்கள். நல்லவேளை, வீடு தரைமட்டமாகவில்லை. குஷால் பள்ளியும் தப்பியிருந்தது. கோழிக்குஞ்சு களின் எலும்புகள் கிடைத்தன. மிங்கோராவும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் குஷால் பள்ளி மணி ஒலித்தபோது மலாலாவின் முகத்தில் பழைய புன்னகை. தன் தோட்டத்தில் மாங்கொட்டை ஒன்றைப் புதைத்துவைத்தாள். 'எதிர்காலத்தில் இதன் பழங்களை நான் உண்பேன்’!
இஸ்லாமாபாத் செல்வது, கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவது, ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பது... என மலாலாவின் பணிகள் தொடர்ந்தன. பாகிஸ்தானியர்கள் மத்தியில் மலாலா பிரபலமடைந்தாள். யுனிசெஃப் நடத்திய சிறுவர்களுக்கான சட்டசபைத் தேர்தலில், சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள் மலாலா. 'தாலிபானால் அழிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் கட்டப்பட வேண்டும்’ என தனது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினாள். 2011-ம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானின் முதல் தேசிய அமைதிப் பரிசுக்காக மலாலா தேர்ந்தெடுக்கப்பட்டாள். இனி வருடம்தோறும் மலாலாவின் பெயரிலேயே இந்த விருது வழங்கப்படும் என விழாவில் அறிவிக்கப்பட, ஜியாவுதீனுக்கு முகம் வாடிப்போனது. 'இறந்தவர்களின் பெயரில்தான் விருதுகளை வழங்குவார்கள். என் மகளின் பெயரில் ஏன்?’ ஏதோ ஒன்று உறுத்தியது!
ஆம்... மலாலாவைக் கொல்ல தாலிபான்கள் தீவிரமாகத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். அது குறித்து காவல் நிலையத்தில் இருந்துகூட எச்சரிக்கை வந்தது. தன் நெருங்கிய போராளி நண்பர்கள் கொல்லப்பட்டதற்கோ, அடுத்த குறி தான்தான் என்பதற்கோகூட பதறாத ஜியாவுதீன், இப்போது தைரியம் இழந்தார். 'நாம் தலைமறைவாகிவிடுவோமா?’ மலாலா பதறவில்லை. 'எப்படியும் இறக்கத்தான்போகிறோம். அது போராடி இறப்பதாகவே இருக்கட்டும்.’
2012-ம் ஆண்டு அக்டோபர் 9. பள்ளியில் 'பாகிஸ்தான் சுதந்திர வரலாறு’ பரீட்சையை எழுதிவிட்டு, தன் தோழிகளுடன் பேருந்தில் நெருக்கிப் பிடித்து அமர்ந்து திரும்பிக்கொண்டிருந்தாள். இரண்டு இளைஞர்கள் பேருந்தை மறித்தனர். ஒருவன் உள்ளே ஏறினான். 'உங்களில் யார் மலாலா?’ மிரட்சியில் பதில் சொல்லாத அந்த பர்தா தோழிகள், முகத்தைக் காட்டிக்கொண்டிருந்த மலாலாவைப் பார்த்தனர். அவன் துப்பாக்கி ஒன்றை எடுத்து மூன்று முறை சுட்டான். முதல் தோட்டா மலாலாவின் இடது கண் வழியே பாய்ந்து இடது தோளுக்குச் சென்றது. அதில் அவள் பதறிச் சரிந்ததால், அடுத்த இரண்டு தோட்டாக்கள் மற்ற இரு தோழிகளைத் தாக்கின. தன் நாட்டைக் கடைசியாகப் பார்த்த விழிகளுடன், ரத்த வெள்ளத்தில் மயங்கினாள் மலாலா!
ஸ்வாட் சென்ட்ரல் மருத்துவமனை. விஷயம் கேள்விப்பட்டு ஜியாவுதீன் வருவதற்கு முன்பாகவே மீடியா அங்கே குவிந்திருந்தது. மகளைக் கண்டு ஏதேதோ புலம்பினார். 'மலாலாவுக்காக துவா செய்யுங்கள்’ என மீடியாவிடம் கெஞ்சினார். ஸ்வாட்டில் சிகிச்சைக்குப் போதிய வசதிகள் இல்லாததால், மலாலாவை ராணுவ ஹெலிகாப்டரில் பெஷாவர் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கே ஐந்து மணி நேரம் அறுவைசிகிச்சை. தோட்டா மூளையைச் சேதப்படுத்தாததால், உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் மூளை வீங்கத் தொடங்கியது. அதன் அழுத்தத்தைக் குறைக்க, மண்டை ஓட்டில் கொஞ்சம் வெட்டியெடுத்து, வயிற்றுப் பகுதியில் பத்திரப்படுத்தினர். இடது தோள்பட்டையில் இருந்து தோட்டாவை நீக்கினர். தற்காலிகமாக ஆபத்து நீங்கியது என்றாலும் எதுவும் சொல்வதற்கு இல்லை எனும் நிலைமை. உலகமே மலாலாவுக்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது. சேனல்கள் எங்கும் மலாலா முகம். ஒபாமா முதல் பான் கீ மூன் வரை கண்டன அறிக்கைவிட, தாலிபனும் அறிக்கைவிட்டது. 'மதச்சார்பின்மையைப் பரப்பியதால், மேற்கத்திய நாகரிகத்தை பாஷ்டூனிய மண்ணில் வளர்த்ததால் மலாலாவுக்குக் குறிவைத்தோம்.’ மலாலா பிழைக்காவிட்டால் பாகிஸ்தானில் மாபெரும் அரசியல் மாற்றம் உண்டாகும் எனப் பயந்த அரசு, சிகிச்சைக்கு என அவளை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு, மலாலா தனி விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டாள். 'பாகிஸ்தானின் மகள் மலாலா’வைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தம். சுடப்பட்டு ஒரு வாரம் கழித்து மலாலா கண் விழித்தாள். அவளுக்காக உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து அட்டைகள் குவிந்தன. அவளது இடதுபக்க முகம் செயல் இழந்திருந்தது. சில அறுவைசிகிச்சைகள் நிகழ்ந்தன. வயிற்றுப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட மண்டை ஓட்டுத்துண்டு அகற்றப்பட்டு, பதிலாக துளையிட்டப்பட்ட இடத்தில் டைட்டானியத் தகடும் பொருத்தப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மலாலாவின் முகத்தில் மறுபிறவிப் புன்னகை.
சிகிச்சைக்காகவும் தாலிபான்களின் மிரட்டல் தொடர்வதாலும் மலாலா குடும்பம் பர்மிங்ஹாமிலேயே தங்கவேண்டிய நிலை. அவள் அங்கேயே பள்ளிக்குச் செல்லத் தொடங்கினாள். எப்போது ஸ்வாட்டுக்குத் திரும்புவோம் என அவளுக்குள் ஏக்கம் நிறைந்திருக்க, மலாலா அமெரிக்காவின் கைக்கூலி, வெளிநாட்டுக்குக் குடும்பத்துடன் தப்பியோட மலாலா நடத்திய நாடகம் என்று எல்லாம் விமர்சனங்களைச் சிலர் கிளப்பினர். ஆனால், மலாலா தன் போராட்டப் பாதையை மாற்றிக்கொள்ளவில்லை. கல்விக்காக ஏங்கும் உலகச் சிறார்களின் ஒட்டுமொத்தக் குரலாக மலாலாவின் குரல், இப்போது ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சபைகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 2014-ம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசு, 17 வயது மலாலாவுக்கும், குழந்தைத் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடிவரும் இந்தியரான கைலாஷ் சத்யார்த்திக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. அங்கு மலாலா பேசிய வார்த்தைகள்... (வீடியோ : www.youtube.com/watch?v=MOqIotJrFVM )
'இது, என் முதல் அடி; இறுதி அடி அல்ல. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்லும் வரை நான் என் போராட்டத்தை நிறுத்தப்போவதாக இல்லை’!

* 2013-ம் ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட 'உலகின் முக்கியமான 100 மனிதர்களில்’ மலாலாவும் இடம்பெற்றிருந்தார்.
பர்கா அவெஞ்சர்!

* மலாலாவை ஆதர்சமாகக்கொண்டு, ஜியா என்ற கார்ட்டூன் சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் கல்விக்காகவும் அநியாயத்துக்கு எதிராகவும் போராடும் Burka Avenger என்ற அந்த சீரியல், பாகிஸ்தானில் செம ஹிட்.
நோபல்!

* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, முதல் பாகிஸ்தானியப் பெண்; முதல் பாஷ்டூன்; மிக இளையவள் என்ற பெருமைகள் மலாலாவுக்கு உண்டு. அவர் பெற்றிருக்கும் சர்வதேச விருதுகளின் பட்டியல் மிக நீளம். 2013-ம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலாவின் 16-வது பிறந்த நாளை 'Malala day 'என ஐ.நா அறிவித்தது.