மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 7 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம், படம்: எஸ்.சாய்தர்மராஜ்ஓவியங்கள்: ஹாசிப்கான்,கண்ணா

1996ம் ஆண்டு... தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் படுதோல்விக்குப் பிறகு, நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து நேர்காணல் நடத்திக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. சிவகங்கை எம்.பி தொகுதியின் முறை வந்தது. அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு பெண் கையை உயர்த்தி உயர்த்திப் பேச அனுமதி கேட்டார். அதைக் கவனித்துவிட்ட ஜெயலலிதா, 'சிவப்பு சேலை உடுத்தியிருக்கிற அந்தப் பெண்ணிடம் மைக் கொடுங்க...’ எனச் சொல்லியிருக்கிறார். மைக் கையில் கிடைத்ததும் கண்ணீரோடு குபுகுபுக்கத் தொடங்கிவிட்டார் அந்தப் பெண். தொகுதியின் சீனியர் தனக்குக் கொடுக்கும் தொல்லைகள் குறித்து அவர் பேசப் பேச, ஜெயலலிதாவே அதிர்ந்துவிட்டார். அன்று ஜெயலலிதா முன்பு கண்ணீர் சிந்தியவர்தான், இன்று  தமிழ்நாட்டின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா! 

அன்று கவனம் குவித்த அழுகை, அதன் பிறகு அரசியலில் பதவிகளைக் குவித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் கதறினார். பரப்பன அக்ரஹாரா சிறை வாசல் முன்பு குமுறினார். ஓ.பி.எஸ் அமைச்சரவையில் பதவியேற்றபோது அழுகாச்சி பிரமாணம் வாசித்தார். தலைவியின் பிறந்த நாளுக்கு இனிப்பு கேக் வெட்டியபோதும் அழுதார். ஜெயலலிதா விடுதலையானபோது ஆனந்தக் கண்ணீர்விட்டார். 'கண்ணீர்விட்டே பதவியைப் பிடித்தவர், இப்போது வரை அதைவைத்தே தக்கவைத்தும்கொள்கிறார். இதுதான் கோகுல இந்திரா டெக்னிக்’ என அவருக்கு அறிமுகம் கொடுக்கிறார்கள் சிவகங்கை அ.தி.மு.க-வினர்.  

மந்திரி தந்திரி - 7 !

பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டம் தரிகொம்பன் கோகுல இந்திராவின் சொந்த ஊர். 'பாலு வாத்தியார்’ என அழைக்கப்பட்ட கணக்கு வாத்தியார் சுப்பிரமணியன், கோகுல இந்திராவின் தந்தை. பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத தெக்கத்திப் பழக்கத்துக்கு எதிராக, தன் மகளை இஷ்டம்போல படிக்கவைத்தார் சுப்பிரமணியன். யாதவர் சமூகத்தைச் சேர்ந்த கோகுல இந்திரா, மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். அங்கேதான் அவருக்கு அரசியல் ஆர்வம் துளிர்விட்டது. எம்.ஜி.ஆர் மீது இருந்த ஈடுபாடு காரணமாக, அ.தி.மு.க மேல் ஒரு பிரேமையுடன் இருந்தார். அதற்கிடையில் வகுப்புத் தோழர் சந்திரசேகருடனான நட்பு, காதலாக மலர்ந்தது. காதலுக்கு பச்சைக் கொடி விழ, திருமணம். சந்திரசேகரின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர். அதனால் சிவகங்கை, கோகுல இந்திராவுக்குப் புகுந்த ஊராகிவிட்டது. தம்பதி சமேதரராக வழக்குரைஞர் தொழிலில் இறங்கினார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், அப்போது சிவகங்கையில் பிரபல வழக்குரைஞர். அவரிடம் ஜூனியராகச் சேர்ந்தார் கோகுல இந்திரா. 1990-களில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க-வை கட்டுக்குள் வைத்திருந்தவர் கண்ணப்பன். மாவட்டச் செயலாளர், மூன்று முக்கியத் துறைகளின் அமைச்சர் என பவர்ஃபுல்லாக இருந்த கண்ணப்பனும் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த அறிமுக அடையாளத்துடன் கட்சிக்குள் தீவிரமாக காலடி பதித்தார் கோகுல இந்திரா. கண்ணப்பன் மூலம் அரசியல் சதுரங்கத்தின் பால பாடத்தைப் படிக்கத் தொடங்கினார்... வரும்காலத்தில் கண்ணப்பன் மீதே அஸ்திரங்களைப் பிரயோகிக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாமல்!

1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கண்ணப்பன் மீண்டும் போட்டியிட்டபோது, கோகுல இந்திரா வீட்டின் மாடியில்தான் தேர்தல் அலுவலகம் செயல்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைய, கண்ணப்பன் போன்ற சீனியர்கள் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.  சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க-வினரில் பாதிப் பேர் கண்ணப்பனுடன் போய்விட்டார்கள். அப்போதே தனக்கு வளமான வருங்காலம் இருக்கிறது எனக் கணக்குபோட்டார் கோகுல இந்திரா.

மந்திரி தந்திரி - 7 !

அதற்கு ஏற்ப ஜெயலலிதாவுடனான நேர்காணலின்போது கண்ணீர் சிந்தினார். அவர் ஊர் திரும்புவதற்குள், சிவகங்கை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஆக்கப்பட்டார். அப்போது தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது நிறைய வழக்குகள் நடைபெற்றுவந்தன. வழக்கில் ஆஜராக ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம் வழக்குரைஞர்களுடன் பளிச்சென கோகுல இந்திரா நிற்பார். அது ஜெயலலிதாவின் கவனத்தைச் சட்டென ஈர்த்தது. ஆனால், அது மட்டும் போதுமா? மன்னார்குடி சேனலுடன் நெருங்க வேண்டும் எனத் திட்டமிட்டு, 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி தினகரன் போட்டியிட்டபோது, அங்கேயே தங்கி அவருக்காகத் தீவிரமாக தேர்தல் வேலைகளைப் பார்த்தார். தினகரனுடனான அப்போதைய அறிமுகம் மூலம் சசிகலா வட்டாரத்துடன் வலுவான பிணைப்பை உண்டாக்கிக்கொண்டார். 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அடுத்த இரண்டே மாதங்களில் கோகுல இந்திராவை ராஜ்யசபா எம்.பி ஆக்கினார் ஜெயலலிதா.  பின்னணியில்... டி.டி.வி தினகரனின் சிபாரிசு. எம்.பி பதவியோடு மாநில மகளிர் அணிச் செயலாளர் பதவியும் தேடி வந்தது. அடுத்த ஆறு ஆண்டுகள் அந்த இரண்டு பதவிகளிலும் கோலோச்சினார் கோகுல இந்திரா. எம்.பி பதவிக் காலம் முடிந்ததும் கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டார். இடையில் 'ஏ.ஆர்.சி சேம்பர்’ என்ற பெயரில் பெரிய செங்கல் சூளை தொடங்கப்பட்டது. அதை கணவர் சந்திரசேகர் கவனித்துக்கொண்டார்.

ராஜ்யசபா பதவிக் காலம் முடிந்த பிறகு, 'எம்.எல்.ஏ பதவி, அப்படியே அமைச்சர்’ எனத் திட்டமிட்டார் கோகுல இந்திரா. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியது. ஆனால், அப்போது கண்ணப்பன் 'பேக் டு பெவிலியன்’ என அ.தி.மு.க-வில் இணைந்து, திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட ஸீட் வாங்கினார். தனக்கு என அந்தத் தொகுதியைக் குறித்துவைத்திருந்த கோகுல இந்திராவின் ஆசையில் மண் விழுந்தது. ஆனால், சாமர்த்தியமாக யார் யாரையோ பிடித்து அண்ணா நகரில் ஸீட் வாங்கிவிட்டார். ஜெயித்து பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சராக கேபினெட்டிலும் இடம் பிடித்தார்.

அ.தி.மு.க ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே வணிக வரி தொடர்பாக அடுக்கடுக்காகப் புகார்கள் கிளம்பின. அமைச்சரவையில் இருந்து தூக்காமல், கோகுல இந்திராவின் துறையை மட்டும் மாற்றினார் ஜெயலலிதா. சுற்றுலாத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகும் கோகுல இந்திரா மீதான புகார் பட்டியல் நீண்டது. இதனால் 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அமைதியாகக் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தவருக்கு, நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் அதிர்ஷ்டம் சேர்த்தது. 2014-ம் ஆண்டு எம்.பி தேர்தலில் மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அண்ணா நகர் சட்டசபைத் தொகுதியில் மட்டும் தி.மு.க-வைவிட 22 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன அ.தி.மு.க-வுக்கு. கோகுல இந்திராவின் களப்பணியைப்  பாராட்டி அவரை மீண்டும் மந்திரி ஆக்கினார் ஜெயலலிதா. தொடர் புகார்களுக்கு ஆளானாலும், இப்படி ஏதோ ஒரு சக்தி அவரைக் காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது!

சகாயத்துடன் சகட்டுமேனி சண்டை!

மந்திரி தந்திரி - 7 !

'மிஸ்டர் நேர்மை’ சகாயத்தோடு சரி மல்லுக்கு நின்றவர் கோகுல இந்திரா. 'கிரானைட் ஊழலால் அரசுக்கு பல்லாயிரம் கோடி நஷ்டம்’ என மதுரை ஆட்சியராக இருந்தபோது  அரசுக்கு சகாயம் கடிதம் அனுப்ப, அவரை கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநராக மாற்றினார்கள். 11.50 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை, ஒரே ஆண்டில் 13.50 கோடி லாபம் ஈட்ட வைத்தார் சகாயம். கைத்தறித் துறைக்கு அமைச்சரான பிறகு கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார் கோகுல இந்திரா. 'எனக்கு இங்கே தனியாக ஒரு ரூம் வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்’ என சகாயத்திடம் கோகுல இந்திரா சொல்ல, 'இங்கே அறை எதுவும் காலியாக இல்லை மேடம்’ என உடனே பதில் கொடுத்தார் சகாயம். கோபத்துடன் கிளம்பிப் போன கோகுல இந்திரா, 'கோ-ஆப்டெக்ஸ் நிறுவன ஊழியர்களை அடிக்கடி சந்தித்து குறைகளைக் கேட்கப்போகிறேன். அதற்காக அங்கே எனக்கு ஓர் அறை வேண்டும். உடனே ஒதுக்கி அறிக்கை அனுப்பவும்’ என கைத்தறித் துறைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார். அவர் அந்தக் கடிதத்தை சகாயத்துக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். 'கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் இடப் பற்றாக்குறை இருக்கிறது. ஊழியர்களைச் சந்தித்துப் பேச அமைச்சர் நினைத்தால், என் அறையைப் பயன்படுத்திக்கொள்ளட்டும். அமைச்சருக்கு என பிரத்யேக அறை ஒதுக்க இடம் இல்லை’ என செயலாளருக்குப் பதில் அனுப்பினார் சகாயம். இது கோகுல இந்திராவின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.

'கோ-ஆப்டெக்ஸில் பணியாற்றும் மண்டல மேலாளர்களுக்கு கார் வழங்க வேண்டும்’ என்றார் கோகுல இந்திரா. 'மண்டல மேலாளர்களுக்கு தீபாவளி நேரத்தில்தான் கார் தேவைப்படுகிறது. அப்போது வாடகைக்கு கார் எடுத்துக்கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸ் தற்போது இருக்கும் நிலையில் கார்கள் அவசியம் இல்லை’ என பொட்டில் அடித்ததுபோல பதில் கொடுத்திருக்கிறார் சகாயம். 'கோ-ஆப்டெக்ஸில் டிரான்ஸ்ஃபர் போடக் கூடாது. எந்த விளம்பரமும் தரக் கூடாது’ என அமைச்சர் அலுவலகத்தில் இருந்து சகாயத்துக்கு உத்தரவு பறந்திருக்கிறது. 'நிர்வாகக் காரணங்களுக்காகச் செய்யப்படும் டிரான்ஸ்ஃபரில் தலையிட அவசியம் இல்லை. விளம்பரம் கொடுப்பதற்கான முழு அதிகாரமும் மேலாண்மை இயக்குநருக்கு உண்டு’ என அதற்கும் சகாயத்திடம் இருந்து அனல் ரிப்ளை. ஆடிப்போனார் கோகுல இந்திரா!

மந்திரி தந்திரி - 7 !

இப்படி அமைச்சர் தரப்புக்கும் சகாயத்துக்கும் தொடர்ந்து முட்டல் மோதல்கள் அரங்கேறிக்கொண்டிருந்தபோது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. அதில் கலந்துகொண்ட கோகுல இந்திரா, 'கோ- ஆப்டெக்ஸ் என்ன உங்களின் தனி நிறுவனமா? இங்கே எதுக்கு 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’னு சொந்தக் கருத்தை எல்லாம் எழுதுறீங்க. இது அரசின் தாரக மந்திரமா?’ என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறார். அதன் பிறகு என்ன நடந்ததோ, அந்தத் துறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சகாயம், அறிவியல் நகரத்துக்கு மாற்றப்பட்டார். இந்தச் சமயம்தான் கிரானைட் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கிரானைட் ஊழல் விசாரணைக் குழுவின் தலைவராக  நீதிமன்றத்தால் சகாயம் நியமிக்கப்பட்டார். ஆக, ஆளும் கட்சிக்கு ஆப்பு வைக்கும் அந்த முயற்சிக்கு கோகுல இந்திராவும் ஒருவகையில் உதவியிருக்கிறார்.

துறையில் சாதித்தது என்ன?

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்த பெரிய தொழில், கைத்தறி நெசவுத் தொழில்தான். நூல் இழைத்தல், பாவு ஓடுதல், பாவு சுற்றுதல், பாவு பிணைத்தல், தார் சுற்றுதல்... ஆகிய துணைத் தொழில்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நெசவுத் தொழில். இதை நம்பி, தமிழ்நாட்டில் 3.19 லட்சம் நெசவாளர்கள் உள்ளனர். பொருளாதார முன்னேற்றத்தில் ஜவுளித் தொழில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், அதன் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே கசக்கும் உண்மை.

மந்திரி தந்திரி - 7 !

திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகள், சுமார் 17,800 கோடி  ரூபாய் அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதி வணிகம் செய்யும் பகுதிகளாக உள்ளன. ஐந்து லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஆனால், திருப்பூர் மற்றும் அதைச் சுற்றிச் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் நீர்நிலைகள் மாசுபடும் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வே கிடைக்காமல் இருக்கிறது. 'சாயக்கழிவுகளால் நீராதாரங்களும் விளைநிலங்களும் அழிக்கப்பட்டுவருகின்றன. விவசாயம் முற்றிலும் முடங்கிவிட்டது. ஜீவநதியான நொய்யல் ஆறு சாயப் பட்டறைகளால் சாகடிக்கப்பட்டுவிட்டது. பவானி, காவிரி, காளிங்கராயன் ஆறுகளும் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் உத்தரவிட்டும் கழிவுகள் அப்படியே ஆற்றில் விடப்படுகின்றன. ஆறுகள் அழிவதோடு விவசாய நிலமும் பாழ்பட்டுவருகின்றன. சாப்பிட அரிசி கிடைக்காமல், சாயத் துணிகளை தின்னக்கூடிய சூழல் வந்தால்தான் இவர்களுக்கு உரைக்கும்’ என ஆதங்கப்படுகிறார்கள் கொங்கு பிராந்திய விவசாயிகள். ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் உட்பட ஏழு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, சாயக்கழிவை குழாய் மூலம் கரையோரம் வழியாக கடலில் கலக்கும் வகையில் முன்னர் போட்ட திட்டம், கிடப்பில் இருக்கிறது. பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டாலும் போதிய பயன் தரவில்லை.  'சிறு, குறு சாய ஆலைகளின் தொழில் நலிவடையாமல் புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில், 700 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த தொழில் சார்ந்த வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும்’ என 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தார். அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.

இலவச வேட்டி-சேலை நெய்யும் தொழிலாளர்களுக்கு வருட ஆரம்பத்திலேயே ஒரு வருடத்துக்கான ஆர்டரை முன்னர் அரசாங்கம் கொடுத்துவிடும். ஆனால், கடந்த இரண்டு வருடமாக கைத்தறித் துறையினர், 'நாங்கள் முன்பணம் கொடுக்க மாட்டோம். நீங்களே ஆர்டர் எடுத்து சேலையை நெய்து கொடுங்கள், பிறகு அதற்கான தொகையைத் தருகிறோம்’ என்கிறார்களாம். இதனால் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

கடந்த தி.மு.க ஆட்சியில் காஞ்சிபுரம் நெசவாளர்களுக்காக பட்டுப் பூங்கா அமைக்க 85 கோடி

மந்திரி தந்திரி - 7 !

ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. கீழ்கதிர்பூரில் அதற்கான நிலத்தை மாநில அரசு கொடுத்தது. கைத்தறித் தொழில் சார்ந்த அனைத்துத் துறைகளும் அந்தப் பூங்காவில் வர இருந்தன. இந்தியாவிலேயே கைத்தறிக்கு என அமைக்கப்பட்ட முதல் பூங்கா இதுதான். ஆனால், அந்தத் திட்டம் ஒரு இன்ச்கூட முன்னேறாமல் முடங்கிக்கிடக்கிறது.  அ.தி.மு.க ஆட்சி வந்ததும் 'அண்ணா பட்டுப் பூங்கா’ என, திட்டத்துக்கான பெயரை மட்டும் மாற்றியதோடு நிறுத்திக்கொண்டார்கள். இத்தனைக்கும் காஞ்சிபுரம் ஏரியாவில் பிரசாரத்துக்கு வரும் ஜெயலலிதா, 'நெசவுத் தொழிலைப் பாதுகாப்போம். பட்டுப் பூங்கா அமைப்போம். பட்டு மற்றும் கச்சா பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவோம்’ என

மந்திரி தந்திரி - 7 !

வாக்குறுதிகளை அள்ளி வீசுவார். ஆனால், தலைவி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தலைவலிக்குமே என நினைத்தோ என்னவோ, அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் கோகுல இந்திரா. ஆக, துறையில் அமைச்சரின் சாதனைதான் என்ன?

' 'அம்மா’ காட்டன்’, 'ஜெயா காட்டன்’ என்ற பெயரில் புடவைகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறாரே... இது போதாதா?!

* அமைச்சர்களில் அதிக சிலிண்டர்களைப் பயன்படுத்தி கோகுல இந்திரா முதல் இடம் பிடித்திருக்கிறார். வணிக வரித் துறை அமைச்சராக இருந்தபோது ஒரே வருடத்தில் கோகுல இந்திரா பெயருக்கு வழங்கப்பட்ட சிலிண்டர்களின் எண்ணிக்கை 46.

செட்டிநாட்டு மட்டன் கிரேவி பார்சல்ல்ல்..!

ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல... கோகுல இந்திராவுக்கும் பச்சை நிறம்தான் ராசி. இதற்கு முன்னர் மூன்று முறை அமைச்சராகப் பதவியேற்றபோதும் கோகுல இந்திரா பச்சை நிறத்தில்தான் சேலை அணிந்திருந்தார். சமீபத்தில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, 'நீங்கள் பச்சை சேலை அணிந்து பதவியேற்க வர வேண்டாம்’ என கோகுல இந்திராவுக்கு உத்தரவு பறந்திருக்கிறது.  காரணம் புரியாமல் வேறு நிறத்தில் சேலை அணிந்து வந்தவருக்கு, 'தலைவியே...’ பச்சை புடவையில் வந்தபோதுதான் உத்தரவுக்கு அர்த்தம் புரிந்தது!

* கோகுல இந்திரா ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தபோது சிவகங்கை மாவட்டத்துக்கு வரும் அ.தி.மு.க புள்ளிகளுக்கு அவர் வீட்டு செட்டிநாட்டு மட்டன் கிரேவிதான் சிறப்பு உபசரிப்பு. 'அண்ணே இது எங்க ஊரு ஸ்பெஷல். சாப்பிட்டுப் பாருங்க’ எனப் பரிமாறுவதோடு, டிபன் பாக்ஸில் பார்சலும் கொடுத்து அனுப்புவாராம் கோகுல இந்திரா. ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் வரை அசைவ உணவை ஒரு பிடி பிடித்து வந்த கோகுல இந்திரா, இப்போது சுத்த சைவம்!

* அ.தி.மு.க நிர்வாகிகளை வயது வித்தியாசம் பார்க்காமல், 'அண்ணே’ என பாச-நேசமாகக் கூப்பிடுவார். 

மந்திரி தந்திரி - 7 !

* திருப்பத்தூர் வந்தால், வைரவன் கோயிலில் சாமி தரிசனம் செய்வார். தீவிர ஆன்மிகவாதியான கோகுல இந்திரா, 'தன் தலைவி விடுதலையாக வேண்டும்’ என ஆன்மிக ஆவேசம்கொண்டு தீச்சட்டி தூக்கினார்; அங்கப்பிரதட்சிணம் செய்தார்; மண் சோறு சாப்பிட்டார்; பால்குடம் எடுத்தார். 'அடேங்கப்பா... அரசியல்ல என்னமா ஸ்டன்ட் அடிக்கிறாங்க!’ என சொந்தக் கட்சியினரையே மெர்சலாக்கிய அதிரடி அது.

 ஆல் இன் ஆல் அண்ணன்!

அமைச்சருக்கு ஆல் இன் ஆல், அவர் அண்ணன் தேவ்பாண்டியன்.  ராமநாதபுரம் அரண்மனை வாயில் அருகே ஆவின் பூத் வைத்திருக்கிறார் தேவ்பாண்டியன். அதுதான் அவரின் பிரதான தொழில். 'காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் தேவ்பாண்டியனின் தலையீடு அதிகமாக இருந்தது. கோகுல இந்திரா சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தபோது, காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் ஒரு விவகாரம் வெடித்தது. பொங்கலுக்கு 250 கிலோ நெய் சுற்றுலா துறை அமைச்சர் பெயரில் கேட் பாஸ் போட்டு மணிமாறன் என்பவர் எடுத்துச் சென்றது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. விவகாரம் தலைமை வரை போன நிலையில், 250 கிலோ என்பதை 2.50 கிலோ என ஆவணத்தில் திருத்தம் செய்தார்கள். அதைக் கண்டுபிடித்த பிலிப் என்கிற கேட்கீப்பர் பணிநீக்கம் செய்யபட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் ஆவினுக்குள் தேவ்பாண்டியனின் தலையீடு குறைந்தது’ என்கிறார்கள் ஆவின் ஊழியர்கள்.

இதனால் சமீபமாக அண்ணன் மீதான பாசத்தை அடக்கிவாசிக்கிறார் கோகுல இந்திரா!

புறக்கணிக்கப்படும் சிவகங்கை!

சென்னையில் நின்று வெற்றி பெற்றாலும் சிவகங்கை மாவட்டத்தில் தன் அதிகாரப்

மந்திரி தந்திரி - 7 !

பிடிமானத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை கோகுல இந்திரா. சிவகங்கை மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் என்ற முறையில் கோகுல இந்திரா பங்கேற்றார். ஆனால், நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் அ.தி.மு.க எம்.எல்.ஏ சோழன் பழனிச்சாமியின் படம் மிஸ்ஸிங். இது உள்கட்சி களேபரமாக வெடிக்க, விவகாரம் விஸ்வரூபம் எடுத்து கார்டன் வரை சென்றது. அதற்குப் பிறகுதான், 'அரசு விளம்பரங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் படங்களைப் பயன்படுத்தக் கூடாது’ எனக் கடுமையாக உத்தரவிட்டார் ஜெயலலிதா. தலைவியின் அறிக்கைக்குப் பிறகு சிவகங்கை மாவட்டத்துக்குள் வருவதையே தவிர்க்கத் தொடங்கினார் கோகுல இந்திரா. நெருக்கமான ஒருவர் வீட்டுத் திருமணத்துக்குக்கூட வரவில்லை. அந்த அளவுக்கு சிவகங்கை மாவட்டத்தின் மீதே ஏக வெறுப்பில் இருக்கிறார். அமைச்சர் அடிக்கடி மாவட்டத்துக்கு வந்தால்தான், திட்டங்கள் நிறைவேறும்; திறப்பு விழாக்கள் நடைபெறும்; நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஆனால், இப்போது சவலைக் குழந்தையாகச் சுணங்கிக் கிடக்கிறது சிவகங்கை!