மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 10

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

நாளை நடக்கப்போகும் விருது விழாவை நினைத்தபடி, தன் கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்தார் விஞ்ஞானி ராபர்ட்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 10

மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியின் பிலேஸ் செல்கள்தான், மனிதன் உள்பட விலங்குகள் தங்கள் வழிகளை அறிவதற்கான காரணம். அது, மூளையில் இயற்கையாகவே அமைந்திருக்கும் ஜி.பி.எஸ். தன் ஆராய்ச்சிக்கூடத்தில் ஆயிரக்கணக்கான எலிகளின் மூளைகளைத் திறந்து, சென்சார்களைப் பதித்து, அவை எல்லாவற்றையும் ஒரே மானிட்டரில் இணைத்திருந்தார்.

எலிகளின் மூளைகளில் கிரிட் செல்களில் உருவாகும் சிக்னல்களைக்கொண்டு டிஜிட்டல் மேப் ஒன்றை உருவாக்கி, நாளைய நிகழ்வில் உலகத்தை வாயடைக்கச் செய்ய வேண்டும். மானிட்டரில் விரிந்த வரைபடத்தில் வழிகள் துல்லியமாக அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்த ராபர்ட், ஒரு சிவப்பு நிற அம்புக்குறி காட்டிய வாசகத்தை உற்றுப் பார்த்தார். வாய்விட்டுப் படித்தார். 'வே டு ஹெல்’!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 10

மறுகணம் கூடத்தின் மூலைமுடுக்குகள் எல்லாம் ஆயிரக்கணக்கான கீச்சொலிகள் ஒன்றாக எழுந்து காதுகளை அடைத்தன!

'செக்யூரிட்டி ஜாப்கூட ஈஸியா  கிடைக்கும்போல‌. நம்ம ஜாப்புக்குத்தான் செக்யூரிட்டி கிடைக்க மாட்டேங்குது’ என வியந்தான் கார்ப்பரேட் சித்தன்!

'எதுக்கு இப்படி பிச்சை எடுக்கிறானுங்க‌... கை, கால் நல்லாத்தானே இருக்கு. கஷ்டப்படாம சம்பாதிக்கிறானுங்க’ என்றார் பேருந்து நிலையத்தில் ஓர் அம்மா, தன் பக்கத்தில் நிற்கும் பெண்ணிடம். அந்தப் பெண் மையமாக‌ச் சிரித்துவைத்தார். ஒரு ரூபாய்கூடப் போடாமலேதான் இந்தப் பேச்சு. போட்டிருந்தால் எப்படிப் பேசியிருப்பார்? எனக்கு அந்தப் பிச்சைக்காரரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவர் சார்பாக நான் அந்த அம்மாவிடம் கேட்க விரும்பிய ஒரு கேள்வி, என்னையும் மீறி மனதில் சில்லறைபோல குலுங்கியது. 'ஒரு நாள், ஒரே ஒரு நாள்... அரை மணி நேரம் பிறரிடம் கையேந்திப் பார்த்தால்தான் தெரியும்... அது எவ்வளவு கஷ்டம் என’!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 10

நமது மரபில் பிச்சை என்பது அவ்வளவு இழிவானதாகப் பார்க்கப்படவில்லை. துறவிகள், நாடோடிகள் முதல் கலைஞர்கள் வரை பிச்சையெடுத்து பசி போக்கிக்கொள்வது சாதாரணம். பிச்சை போடுவது என்பதே தர்மங்களில் தலையாயது என்கிற‌ கருத்தியலும் இருந்திருக்கிறது. 'பிச்சை புகினும் கற்கை நன்றே’ என, படிப்பதற்காக பிச்சைகூட எடுக்கலாம் என்றாள்‌ ஒளவை. ஊர்விட்டு ஊர் செல்லும் நடைப்பயணிகள்கூட பசிக்கும்போது ஏதாவது ஒரு திண்ணையில் உட்கார்ந்து கேட்டால், உணவும் தண்ணீரும் தாராளமாக வழங்கப்பட்ட கதைகள் நம்மிடையே ஏராளம் உண்டு.

திருவல்லிக்கேணியில் ஒருதடவை ஒரு பிச்சைக்காரருக்கு பழம் வாங்கி நீட்டினேன். அவர் 'காசுதான் வேண்டும்’ என்றார். ஒரு கணம் கோபம் வந்தது. ஒரு ரூபாய் பிச்சை போட்டால்கூட, 'அந்தக் காசை வைத்து டாஸ்மாக்கில் தண்ணி அடிப்பாரோ?’ என சந்தேகப்படும் மனிதர்களாக நாம் ஏன் மாறினோம்? பிச்சை போட்ட பிறகும், அந்தக் காசு நம்முடையதுதான் என்கிற‌ நினைப்பின் நீட்சி அல்லவா அது! 'குடித்தால் என்ன... தின்றால் என்ன? கிடைக்கும் காசில் அவர்களுக்குரிய வழியில் சந்தோஷம் தேடிக்கொள்ள உரிமை இல்லையா?’ என நினைத்தபோது, கோபம் சிதறிப்போனது.

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த Bampfylde Moore carew எனும் நாடோடியின் கதையை வாசித்தேன்.  ' The life and adventure of  Bampfylde Moore carew எனும் பெயரில், அப்போதே அவர் வாழ்க்கை புத்தகமாக வந்துள்ளது. 'பிச்சைக்காரர்களில் மன்னன்’ என தன்னை சொல்லிக்கொண்டவர். வழக்கமான வீட்டு வாழ்க்கையில் வெறுப்புகொண்டு, சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, தெருவில் நாடோடிகளுடன் சுற்ற ஆரம்பித்த அவர் வாழ்க்கை, வரலாற்றில் இப்படிப் பதிவாகிவிட்டது. பல்லாயிரம் மனிதர்கள் வாழும் இந்தப் பூவுலகில் அவர்களுக்கான இடமும் இருக்க வேண்டும்தானே!  

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’ நாவல், பாலாவின் 'நான் கடவுள்’, 'ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற படைப்புகளில் வருவதுபோல, பிச்சையை இன்று மாஃபியாக்கள் ஒரு அண்டர்வேர்ல்டு தொழிலாக மாற்றிவிட்டார்கள். பெண்கள், குழந்தைகளுடன் பிச்சை எடுக்கவைக்க‌ப்படுகிறார்கள். இந்த இருண்ட பகுதிகளுக்குள் வெளிச்சம் பாய்ச்ச வேண்டியது அதிகாரத்தின் பொறுப்பு. ஆனால், உதிரிகளான பிச்சைக்காரர்களைப் பிடித்து, சில நாட்கள் சிறை வைத்துவிட்டு, வேறு ஒரு ஏரியாவில் இறக்கிவிடும் செய்திகள்தான் அடிக்கடி நம் கண்களில் படுகின்றன. ஒழிக்கவேண்டியது பிச்சைக்காரர்களை அல்ல... அதற்கான

சமூக - பொருளாதாரக் காரணங்களை. நகரமயமாகிவரும் இன்றைய சூழல்களில் மனிதர்கள் உதிரிகளாகிச் சிதறும் அவலத்தைத் தடுக்க முடியுமா?

அஞ்ஞானச் சிறுகதைகள் - 10

இன்றைக்கு டாட்டூ யுகம். ஆனால், அன்றைக்கு பச்சை குத்துவதுதான் ஃபேஷன். பெரும்பாலும் காதலர்களின் பெயர்கள் அல்லது இனிஷியல், பிடித்த தலைவர்கள், நடிகர்கள், மிருகங்கள், பறவைகள், பாம்பு, நட்டுவாக்காலி... போன்ற இன்னபிற ஜீவராசிகள் எனப் பட்டியல் நீளும்.

பாறை ஓவியங்கள்போல மனிதர்களின் ஆதிக் கலைகளில் ஒன்று பச்சை குத்துதல். கற்காலத்தில் இருந்தே இந்தப் பழக்கம் இருக்கிறது என்கிறார்கள். கி.மு.5000-க்கு முந்தைய ஓட்சி பள்ளத்தாக்கு, பனிமனிதனின் கை-கால்களில் பச்சை குத்தியதற்கான தடயங்கள் இருந்ததாக தொல்லியல் அறிஞர்கள் குத்திக்காட்டுகிறார்கள். இன்றைய அக்குபஞ்சர் போன்ற ஒரு மருத்துவ முறையாகவும், கூடவே ஒரு கலையாகவும் பச்சை குத்துவது பழங்குடி இனக்குழுக்களால் பாவிக்கப்பட்டிருக்கலாம்.

நம் ஊரில் பெரும்பாலும் குறவர் இன மக்களே பச்சை குத்துவதைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். நம் மண்ணின் ஆதிக் குடிகளான அந்த மக்கள், இந்தக் கலையை இந்த நூற்றாண்டு வரை அழியாமல் கொண்டுவந்துசேர்த்திருக்கிறார்கள்.

மஞ்சளுடன் அகத்திக் கீரையைச் சேர்த்து, எரித்து, பொடிசெய்து தண்ணீரில் கலந்த பசையைப் பச்சை குத்துவதற்குப் பயன்படுத்துவதாகப் படித்தேன். இன்னும் என்னென்ன இடுபொருட்கள் என்பது ரகசியமாக இருக்கிறதுபோலும்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 10

குத்தும்போது தோல் சிவந்து தீப்புண்போல் ஆகிவிடும். உருவங்கள் சில நாட்களில் தெளிந்து பச்சையாகிவருவது அற்புதம்தான். அழிக்க முடியாத அற்புதம்!

ஆனால், இன்று நிரந்தரமான, மரபு வழியிலான பச்சை குத்துதல் கிட்டத்தட்ட அழிந்துவருகிறது. டாட்டூ என ஆங்கிலத்தில் சொல்வ‌தாலேயே, அதுவும் இறக்குமதியான ஒரு கலைபோல என நம்பவேண்டியிருக்கிற‌து. டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் நூற்றுக்கணக்கான  கடைகள் வரை டாட்டூ குத்துவதற்கு என்றே உள்ளதாகச் சொல்கிறார்கள். 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் வரை கட்டணம் எகிறுகிறது. 'தற்காலிக டாட்டூ’ போடும் பழக்கம் இளைஞர்கள் இடையே பிரபலம். அவசரத் தலைமுறைக்கு அழித்து அழித்து விளையாடுவது பிடித்திருக்கிற‌து போலும்.

முன்பெல்லாம் காதலிகளின் பெயரை நெஞ்சிலோ, கையிலோ நிரந்தரமாக பச்சை குத்திக்கொண்டு திரியும் அண்ணன்களை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். இன்று காதலர்களின் பெயரை நிரந்தரமாக டாட்டூ போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டும் தலைமுறை, இந்தச் சமூகத்துக்கு ஏதோ சொல்லவருகிறது. டாட்டூக்களைபோல எல்லாம் தற்காலிகம்தானா?