மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 கோர்டன் ராம்ஸே - 10

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

ன்றைக்கு உலகின் 'டாப்மோஸ்ட் செஃப்’ (சமையல் கலைஞர்) ஆக அறியப்படும் கோர்டன் ராம்ஸே, தன் இளம் வயதில் ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸர்ட்... போன்ற வார்த்தைகளைக்கூட கேள்விப்பட்டது இல்லை. அடுத்த வேளைப் பசிக்கு உணவு கிடைக்குமா என வறுமை வாழ்க்கை. பள்ளிக்குச் சென்றதே, ஏழைக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு, இலவச உணவு கிடைக்கும் என்பதால்தான். ஆனால், இன்று அவர்தான் உலகின் நம்பர் 1 செஃப்! 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் பாரோ, இரண்டாம் தரப் பொருட்கள் விற்கும் சந்தைப் பகுதி. 1966-ம் ஆண்டு பிறந்து, பாரோ பகுதியில் வளர்ந்த கோர்டன் ராம்ஸேவின் குழந்தைப் பருவமும் இரண்டாம் தரமாகத்தான் இருந்தது. ராம்ஸேவின் தந்தை ஜேம்ஸுக்கு நிலையான வேலை இல்லை. நீச்சல் பயிற்சியாளர், வெல்டர், கடை உதவியாளர்... என அவதாரம் மாறிக்கொண்டே இருக்கும். மாறாதது அவரது குடிப் பழக்கமும் வெவ்வேறு பெண்களுடனான தொடர்பும். தீராதது... மனைவியுடன் சண்டை; குழந்தைகள் மீது காட்டும் வன்முறை. ராம்ஸேவின் தாய் ஹெலனுக்கு நர்ஸ் வேலை. தன் நான்கு குழந்தைகளை வளர்க்க தன்னையே உருக்கிக்கொண்டிருந்தார்.  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் எனக்கூட ராம்ஸே அறிந்தது இல்லை. கூடுதல் பணம் கிடைக்கும் என்பதற்காக, அன்றும் ஹெலன் வேலைக்குச் சென்றுவிடுவார். ஜேம்ஸ்? தந்தை வீட்டில் இல்லாததே, குழந்தைகளுக்கு 'பெல்ட் அடி இல்லாத’ நிஜ கிறிஸ்துமஸ் பரிசு.

நம்பர் 1 கோர்டன் ராம்ஸே - 10

ஜேம்ஸ், வாழ்க்கையில் தோற்றுப்போன இசைக் கலைஞர். அவருக்குப் பிடித்த இன்னொரு விஷயம், கால்பந்து. கிளாஸ்கோவின் ரேஞ்சர்ஸ் கிளப் விளையாடும் கால்பந்து ஆட்டங்களுக்குப் பரம ரசிகர். தன் தந்தைக்குக்கூட உற்சாகமாகச் சிரிக்க, ஆர்ப்பரிக்கத் தெரியும் என ராம்ஸே உணர்ந்துகொண்டது ஒரு போட்டியின்போதுதான். தானும் ஒருநாள் ரேஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுவிட்டால், எப்போதும் சீறும் தந்தை தன்னையும் நேசிக்க ஆரம்பிப்பார் அல்லவா? ராம்ஸே, கால்பந்தில் ஆர்வம் செலுத்தினான்.

ஒரு போட்டியில் கோல் கீப்பரின் கால் முட்டி ராம்ஸேவின் வயிற்றில் பலமாக மோதியது. வயிற்றுவலி தாங்காமல் கழிப்பறைக்குச் சென்றபோது ரத்தமாகக் கொட்டியது. அதற்குப் பின் குடல்வால் அறுவைசிகிச்சை தேவைப்பட்டது. இப்படி அவ்வப்போது 'உடற்தகுதி’ காணாமல்போனது. உலகம் அறிந்த கால்பந்து வீரராக முன்னேறி, நிறைய சம்பாதித்து அம்மாவை வசதியாக வாழவைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாதா என, அடிக்கடி பயம் சூழ்ந்தது.

கவனம் குவித்து விளையாடினான். அவன் மிகவும் எதிர்பார்த்த ரேஞ்சர்ஸ் கிளப்பில் இருந்து ஒரு வாரப் பயிற்சிக்காக அழைப்பு வந்தது. தன் வாழ்வில் முதன்முதலாக தான் நினைத்தது நடந்திருக்கிறது என்ற மகிழ்ச்சி. ஆனால், கடினமான பயிற்சிகள் கொஞ்சம் கசக்கவே செய்தன. அடுத்தடுத்து விளையாடிய போட்டிகள் சிலவற்றில் மீண்டும் மீண்டும் காயங்கள். விளைவு? 'ரேஞ்சர்ஸ் கிளப்பில் விளையாட நீ தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என்ற செய்தியும் ஒருநாள் கூறப்பட்டது. காலடியில் உலகம் நழுவுவதாகத் தோன்றியது. பூட்டிய அறைக்குள் கண்ணீரில் மிதந்தான் ராம்ஸே.

விம்மல் விலகிய தருணத்தில், அடுத்தது என்ன என்ற கேள்விக்குறியில் தான் தொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான் 16 வயது ராம்ஸே. 'இனி எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் நான் உச்சபட்ச உயரத்தை அடைய வேண்டும்’ என மனதில், ஏதோ ஒரு மூலையில் இருந்து நம்பிக்கைக் குரல் ஒலித்தது. ஆனால், எதைத் தேர்ந்தெடுக்க? போலீஸ் அல்லது ராணுவத்தில் சேர தேவையான கல்வித் தகுதி இல்லை. சமையல் படிப்பு ஒன்றுதான் கைக்கெட்டிய வரமாக இருந்தது. அதுவரை ராம்ஸேவுக்கு சமையலில் ஈர்ப்பு இருந்தது இல்லை. ஒழுங்காக ஒரு வெங்காயத்தைக்கூட நறுக்கத் தெரியாது. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பில் தன்னை விருப்பத்துடன் பொருத்திக்கொண்டான். கிச்சனுக்குள் நின்றபடி, உலகம் மெச்சும் மனிதனாக உயர முடியாதா என்ன?

மகன் கேட்டரிங் படிக்கிறான் என்றதும் ஜேம்ஸ் உதிர்த்த (அச்சிலேற்ற முடியாத) வார்த்தைகள், '$%^#-#$^தான் கேட்டரிங் படிப்பான்’! அதெல்லாம் பழகிப்போனதுதானே. அந்தச் சமயத்தில்தான் ஒருநாள் ஹெலன் மீது கொதிக்கிற பாலை ஊற்றினார் ஜேம்ஸ். துடிதுடித்த ஹெலனை, தரதரவென படிகளில் இழுத்துவந்து தெருவில் கிடத்தி உதைத்தார். தூரத்தில் போலீஸ் சைரன் கேட்க, தப்பி ஓடினார்... அந்த இடத்தைவிட்டு; பின் நாட்டைவிட்டு. அடுத்த சில ஆண்டுகளுக்கு ராம்ஸேவின் வாழ்க்கையில், அவர் வரவே இல்லை. மருத்துவச் சிகிச்சைக்குப் பின் ஹெலன் பிழைத்துக்கொண்டாள்.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட்ஸையரில் ஒரு கல்லூரியில் கேட்டரிங் டிப்ளோமா படித்த ராம்ஸே, வருமானத்துக்காக இரண்டு ரெஸ்ட்டாரன்ட்களில் பாத்திரங்கள் கழுவினார். நொந்துகொள்ளவில்லை. இதுதானே முதல் படி. வெள்ளை நிற செஃப் உடையும் தொப்பியும் அணிந்தபடி, புகைப்படம் எடுத்து அம்மாவுக்கு ஆசையுடன் அனுப்பிவைத்தார். சீனியர்களை உற்றுக் கவனித்து, சமையலின் அடிப்படை இலக்கணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்க ஆரம்பித்தார். படித்து முடித்த ராம்ஸே லண்டனுக்கு இடம்பெயர்ந்தார்.

நம்பர் 1 கோர்டன் ராம்ஸே - 10

மேஃபேர் ஹோட்டல். அங்கே வேலைபார்க்கும் செஃப்களுக்கு எடுபிடியாக, புதிய வேலை. யார் எந்த வேலை சொன்னாலும் செய்ய வேண்டும். கூடுதல் வருமானத்துக்காக ஓய்வு நேரங்களில்  'ரூம் பாய்’ ஆகவும் பணியாற்றினார். அப்போதுதான் அவர் மிச்செலின் ஸ்டார்ஸ் (Michelin stars) பற்றி அறிந்துகொண்டார். அது என்ன?

ஒரு சிட்டிகை வரலாறு இங்கே. பிரான்ஸ் நாட்டின் டயர் தயாரிப்பு நிறுவனமான மிச்செலின், வாகன ஓட்டிகளுக்கான 'சாலைக் கையேடு’ புத்தகத்தை 1900-ம் ஆண்டில் இலவசமாக வெளியிட்டது. அதில் அவர்கள் கொடுத்திருந்த, எங்கெங்கே என்னென்ன ரெஸ்ட்டாரன்ட்கள், ஹோட்டல்கள் இருக்கின்றன என்கிற விவரக் குறிப்புகள், நல்ல வரவேற்பைப் பெற்றன. 1926-ம் ஆண்டு மிச்செலின் நிறுவனம் தனியாக விமர்சகர்களை நியமித்தது. அவர்கள், ரெஸ்ட்டாரன்ட்களுக்குச் சென்று உண்டு பார்த்து, தங்கள் விமர்சனங்களையும் கையேட்டில் வெளியிட்டனர். ஒரு ஸ்டார் வழங்கப்பட்டால் நல்ல, தரமான உணவகம். இரண்டு ஸ்டார்கள் என்றால், அருமையான, அதிகத் தரத்துடன்கூடிய உணவகம். அதிகபட்சமாக மூன்று ஸ்டார்கள் வழங்கப்பட்டால், அதிஅற்புதமான, மிகத் தரமான உணவுகளைக்கொண்ட ஆகச் சிறந்த, தவறவிடக்கூடாத உணவகம்.

காலப்போக்கில் மிச்செலின் நிறுவனத்தினர், மற்ற நாடுகளில் உள்ள ரெஸ்ட்டாரன்ட்களுக்கும் நட்சத்திரமிட ஆரம்பித்தனர். மிச்செலின் நட்சத்திரம் பெறுவது ஐரோப்பிய, அமெரிக்க ரெஸ்ட்டாரன்ட்களின் 'ஆஸ்கர்’ அங்கீகாரமானது. 1988-ம் ஆண்டு, பிரிட்டனில் இருந்த ஆயிரக்கணக்கான ரெஸ்ட்டாரன்ட்களில் மூன்றே மூன்று ரெஸ்ட்டாரன்ட்கள் மட்டுமே மூன்று மிச்செலின் ஸ்டார்களுடன் இருந்தன. அந்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட ரெஸ்ட்டாரன்ட்களில் பணியாற்ற தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என ராம்ஸே ஏங்கினார்.

அப்போது ஒரு பத்திரிகை அட்டையில் செஃப் மார்கோ பியரி ஒயிட்டின் படத்தைக் கண்டார் ராம்ஸே. 25 வயது ஒயிட், பிரிட்டனின் புகழ்பெற்ற செஃப்களிடம் சமையல் பயின்றவர். ராம்ஸே, ஹார்வே எனும் ரெஸ்ட்டாரன்டில் ஒயிட்டைத் தேடிப் பிடித்து வாய்ப்பு கேட்டார். 'என்னிடம் பணியாற்ற வேண்டும் என்றால் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கக் கூடாது; பார்ட்டி கூடாது; கிச்சன் மட்டுமே உலகம்...’ ஆரம்ப வார்த்தைகளிலேயே கடுமை காட்டினார் ஒயிட்.

'குருவே சரணம்’ என சிரம் பணிந்தார் ராம்ஸே. ஒயிட் கடைந்தெடுத்த ஒரு சர்வாதிகாரி என்பது, ஓரிரு நாட்களிலேயே புரிந்துபோனது. ஆனாலும், பொறுமையைக் கடைப்பிடித்து ஒயிட்டிடம் இருந்து நிறைய சமையல் வித்தைகளைக் கற்றுக்கொண்டார் ராம்ஸே. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒயிட்டிடம் இருந்து விடுதலை. புதிய சிறகுகளை விரித்தார்.

நம்பர் 1 கோர்டன் ராம்ஸே - 10

சில காலம் சில ரெஸ்ட்டாரன்ட்கள். அடுத்தது? பாரீஸ். பிரெஞ்சு உணவுகளிலும் கலாசாரத்திலும் கரைந்து கலந்து மிதந்து மணக்க வேண்டும் என்பது ராம்ஸேயின் ஆசை. 1992-ம் ஆண்டு ராம்ஸேவுக்கு ஆஸ்திரேலியப் பெரும்புள்ளி ஒருவரது சொகுசுக் கப்பலில் செஃப் ஆகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ராம்ஸே அங்கே அதிகம் சம்பாதித்தார்; சேமிக்கவும் செய்தார். கடலில் மிதந்தாலும் அவரது நினைவு நிலத்தில்தான் உலவியது. என் பெயர் மணக்கும் ஒரு ரெஸ்ட்டாரன்ட் எப்போது அமையும்?

1993-ம் ஆண்டு. லண்டனுக்குத் திரும்பிய ராம்ஸேவுக்கு, குரு ஒயிட்டிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர், இத்தாலிய முதலாளிகள் சிலரை  அறிமுகப்படுத்தினார். அவர்கள் ஆரம்பிக்க இருந்த 'கிuதீமீக்ஷீரீவீஸீமீ’ என்ற புதிய ரெஸ்ட்டாரன்ட்க்கு தலைமை செஃபாக ராம்ஸே நியமிக்கப்பட்டார். வரும் லாபத்தில் 25 சதவிகிதம் ராம்ஸேவுக்கு என ஒப்பந்தம். புதிய ரெஸ்ட்டாரன்ட், தட்டு நிறைய சவால்கள். திறமையான சக பணியாளர்கள் அமைந்தார்கள். 'நானே தலைமை செஃப். இந்த கிச்சன் என் பேரரசு. என் கடன் கமகமவென ஜெயிப்பதே!’

ராம்ஸேவின் கைவண்ணத்தில் புதிய ரெஸ்ட்டாரன்ட்டுக்கான ருசிகர்கள் கடகடவெனப் பெருகினார்கள். 1995-ம் ஆண்டு Auberine தனது முதல் மிச்செலின் ஸ்டாரை வென்றது. 1997-ம் ஆண்டு இரண்டாவது ஸ்டார். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒயிட்டிடம் இருந்து ராம்ஸேவுக்கு அழைப்பு வந்தது; சந்தித்தார்கள். 'மறுபடியும் என்னிடம் வேலைக்கு வா. வருடம் ஒரு மில்லியன் யூரோ உனக்குச் சம்பளம்’  என ஒயிட் அடுத்த தூண்டிலை வீசினார். ராம்ஸே யோசித்து, நிதானமாகப் பதில் சொன்னார். 'அமோகமான வாய்ப்புதான். ஆனால், நீங்கள் ஹார்வே ரெஸ்ட்டாரன்ட்டை மூன்று ஸ்டார் வாங்கச் செய்ததுபோல, நான் எனது ரெஸ்ட்டாரன்ட்டை மூன்று ஸ்டார் வாங்கவைக்க உழைக்கிறேன்!’ ஒயிட்டின் முகம் கருத்தது. சிஷ்யன் தன்னை மிஞ்சிவிடுவானோ என்ற உதறல். 'உன் வேலையைக் காலிசெய்வது எனக்குச் சுலபம்’ என வன்மம் காட்டினார் ஒயிட்.

ராம்ஸே பதறவே இல்லை. Auberine அடுத்த சில மாதங்களுக்கு வி.வி.ஐ.பி-க்களின் அட்வான்ஸ் புக்கிங்கால் நிறைந்து வழிந்தது. ஆனால், இத்தாலிய முதலாளிகள் திடீரென ராம்ஸேயிடம் கடுமை காட்ட ஆரம்பித்தனர். தி டைம்ஸ் இதழ் Auberine ரெஸ்ட்டாரன்ட்டில் உணவு சரியில்லை என மட்டமாக விமர்சித்தது. இப்படி பெயரைக் கெடுக்கும் இன்னும் சில நெகட்டிவ் நிகழ்வுகள் அரங்கேறின. இவை அனைத்துக்கும் பின்னணியில் ஒயிட் இருக்கிறார் என ராம்ஸேவுக்குத் தெளிவாகப் புரிந்தது. தவிர, ராம்ஸேவின் வழிகாட்டுதலில் இத்தாலிய முதலாளிகள் ஆரம்பித்த L'Oranger என்ற ரெஸ்ட்டாரன்ட்டும், செஃப் வேரிங்கின் தலைமையில் மிச்செலின் ஸ்டார் வாங்கியது. ஒயிட்டும் இத்தாலிய முதலாளிகளும் இணைந்து இரண்டு ரெஸ்ட்டாரன்ட்களையும், தனக்குத் தெரியாமல் விற்க ஏற்பாடு செய்வதாகவும் கேள்விப்பட்டார் ராம்ஸே.

இனி அற வழி உதவாது. சில நேரங்களில் 'அரசியல்’தான் கைகொடுக்கும். முடிவெடுத்த ராம்ஸே, ஒயிட்டை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினார். அப்போது ரெஸ்ட்டாரன்ட் அட்வான்ஸ் புக்கிங்கில் கணினிப் பயன்பாடு இல்லை. எல்லாம் ஒரு டைரியில்தான் குறித்துவைக்கப்பட்டது. அந்த டைரியை முகம் தெரியாத ஓர் ஆளைக்கொண்டு திருடச் செய்தார். 'ஒயிட்தான் அந்த டைரியை ஆள்வைத்துத் திருடினார்’ என இத்தாலிய முதலாளிகளை நம்பவைத்தார். அவர்களது உறவு உடைந்தது. யார் யார் எப்போது டேபிள் புக் செய்திருக்கிறார்கள் எனத் தெரியாததால், தினமும் குளறுபடிகள் அரங்கேறின.

இத்தாலிய முதலாளிகள், ராம்ஸேவின் சக செஃபான வேரிங்கை ஒரு பிரச்னையில் மிரட்ட, அவர் வேலையைவிட்டு விலகினார். இதுதான் சந்தர்ப்பம் என ராம்ஸேவும் வெளியேறினார். அவரே எதிர்பார்க்காதவிதமாக இரண்டு ரெஸ்ட்டாரன்ட்களில் பணியாற்றிய 40+ பணியாளர்களும் வெளியேறினர். லண்டனின் இரண்டு சிறந்த ரெஸ்ட்டாரன்ட்கள் மூடப்பட்ட விஷயம், பத்திரிகைகளில் பரபரப்புச் செய்திகளாகப் பரபரத்தன.

1996-ம் ஆண்டு டானா என்கிற பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்ட ராம்ஸே, மேற்படி நாடகங்களை எல்லாம் அரங்கேற்றுவதற்கு முன்பாகவே, தனது மாமனார் கிறிஸ்வுடன் இணைந்து தனியாக, புதிய ரெஸ்ட்டாரன்ட் அமைக்கும் திட்டத்தில் இறங்கியிருந்தார். தன்னை நம்பி வெளியேறிய ஒவ்வொருவருக்கும் தனது புதிய ரெஸ்ட்டாரன்ட்டில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்கினார்.

1998-ம் ஆண்டு லண்டன் ராயல் ஹாஸ்பிட்டல் சாலையில் கோர்டன் ராம்ஸே ரெஸ்ட்டாரன்ட் உதயமானது. ராம்ஸேவின் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால், அவர் சாய்ந்து உட்காரவில்லை. தனது அத்தனை வருட அனுபவத்தில் கற்ற பாடங்களைக்கொண்டு தெளிவான செயல் திட்டத்தை வடிவமைத்திருந்தார். அதுவே அவரது சீக்ரெட் ஆஃப் சக்சஸ்.

நோக்கம் என்ன? புதிய ரெஸ்ட்டாரன்ட் அடுத்த சில வருடங்களில் மூன்று மிச்செலின் ஸ்டார் வாங்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நம்பிக்கையை, முயற்சியைக் கைவிடக் கூடாது. சரி, இது என்ன மாதிரியான ரெஸ்ட்டாரன்ட்? மீன் உணவுகளுக்கானதா... இத்தாலிய அல்லது பிரெஞ்சுப் பதார்த்தங்களுக்கானதா... அல்லது பாரம்பர்ய பிரிட்டிஷ் பதார்த்தங்களுக்கானதா... அனைத்துக்கும் உரியதா? இல்லை, இவற்றில் ஏதோ ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். சரி, இது மீன் உணவுகளுக்கானது என வைத்துக் கொள்வோம். அதற்காக இங்கே 100 வகை மீன் உணவுகள் கிடைக்கும் என மெனு கார்டில் நீட்டி முழங்கக் கூடாது. அதிகபட்சம் 15 முதல் 20 வகை பதார்த்தங்கள் மட்டுமே. அப்போதுதான் சமைக்கின்ற உணவை அதிகக் கவனத்துடன் 'கலையம்சத்துடன்’ தயாரிக்க முடியும். குறைந்த அவகாசத்தில், அதிகத் தரத்தில், சுவையில் குறைவின்றிச் சமைக்கலாம். செலவும் கையைக் கடிக்காது. லாபம் நிச்சயம். சரி, அடுத்தது? இவற்றை மிகச் சரியாக மேற்கொள்ளும் ஓர் அணியை (பணியாளர்களை) உருவாக்குவது, அவர்களது கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்பது, குறைகளைச் சரிசெய்து, குழு உணர்வோடு அவர்களை இயங்கவைப்பது.

கடைசி முக்கியமான விஷயம், வாடிக்கையாளர்களுடனான அணுகுமுறை. புன்னகை நீங்கா முகம், பணிவு தோய்ந்த வார்த்தைகள், உயரிய உபசரிப்பு... இவை நிறைவாக இருந்தால், வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்வார்கள். பில் தொகை கூடும். மீண்டும் மீண்டும் வர விரும்புவார்கள். ஆகவே, எப்போதும் யாரிடமும் இந்த விருந்தோம்பலில் குறை இருக்கவே கூடாது. ரெஸ்ட்டாரன்ட் அலங்காரங்களைவிட, பரிமாறும் உணவில் அழகியல் அதிமுக்கியம்.

2001-ம் ஆண்டு ராம்ஸேவின் ரெஸ்ட்டாரன்ட் மூன்று மிச்செலின் ஸ்டார்களை வாங்கியது. அதே சமயத்தில் வெவ்வேறு இடங்களில், நகரங்களில், நாடுகளில் தனது ரெஸ்ட்டாரன்ட்களை கிளை பரப்ப ஆரம்பித்தார் ராம்ஸே. சில தோல்விகள் அவ்வப்போது முகம் காட்டின. பின்னுக்கு இழுத்தன. ராம்ஸே கவலைப்படாமல், அடுத்தடுத்து பெரிதாக யோசித்தார். தனது உணவு சாம்ராஜ்ஜியத்தைக் கண்டம்விட்டு கண்டம் பரப்பினார். அமெரிக்காவிலும் ஆழமாகக் கால் பதித்தார்.

2005-ம் ஆண்டு அவருக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் உயரிய மரியாதையான OBE (order of British Empire) வழங்கப்பட்டது. இன்னொரு பக்கம் டி.வி ரியாலிட்டி கிச்சன் ஷோக்களின் மூலமாக, நாடு அறிந்த, உலகம் அறிந்த பிரபலமானார். அவர் எழுதிய சமையல் புத்தகங்கள் கற்பனைக்கு எட்டாத விற்பனை உயரத்தில் சந்தையை ஆள்கின்றன. 2012-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் உலகில் அதிகம் சம்பாதிக்கும் செஃப் ஆக ராம்ஸே உயர்ந்தார். 2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் டாப் 100 பிரபலங்களில் ராம்ஸேவுக்கு 58-வது இடம்.

டி.வி ஷோக்களில் 'மனிதத்தன்மை’ இல்லாமல் நடந்துகொள்கிறார்; விமர்சிக்கிறார் என்றும், அவரது ரெஸ்ட்டாரன்ட் உணவுகளே கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகின்றன என்றும் ராம்ஸேவைச் சுற்றி சர்ச்சை வாசனை எப்போதும் உண்டு. மூன்று மிச்செலின் ஸ்டார் வாங்கிய ராம்ஸேவின் நியூயார்க் ரெஸ்ட்டாரன்ட், 2014-ம் ஆண்டு ஒரு ஸ்டாரை இழந்தது. 'என் கேர்ள் ஃப்ரெண்டை இழந்ததுபோல தவிக்கிறேன்’ என வெளிப்படையாகக் கண்ணீர்விட்டு அழுதார் ராம்ஸே. நிச்சயம் அது தோல்வியின் அழுகை அல்ல. தன் தொழிலை ராம்ஸே எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதன் ஆத்மார்த்த வெளிப்பாடு. சறுக்கல்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, எப்போதும் அடுத்தடுத்த பெரிய இலக்குகளை, வெற்றிகளைக் குறிவைத்து ஓடிக்கொண்டே இருக்கிறார் ராம்ஸே.

'நான் கடந்த காலத்தைப் பார்ப்பதே இல்லை. வருங்காலத்தை மட்டுமே கவனத்துடன் உற்று நோக்குகிறேன். சிந்திப்போன பாலுக்காக உட்கார்ந்து அழுது என்ன பயன்? அடுத்தடுத்து புதிய பசுக்களைக் கண்டடைவதில்தான் எதிர்காலம் இருக்கிறது’!

டயட் மொழி

'ஒரே உணவை 500 விதங்களில் சமைப்பது எப்படி?’ என என்னால் சொல்ல முடியும். ஆனால், ஒரு செஃபாக என்னால் மூன்று வேளையும் உட்கார்ந்து உண்ண முடியாது. சமைக்கும் உணவுகளை சுவை பார்ப்பதே போதுமானது. பசிக்காக அவ்வப்போது கொஞ்சமாக உண்பதே என் வழக்கம்’ என்பது ராம்ஸேவின் டயட் மொழி.

* மீன் உணவுகளைச் சமைப்பதில் ராம்ஸே கில்லாடி. காளான் எண்ணெய் சேர்த்து ராம்ஸே சமைக்கும் உணவுகள் பிரத்யேக சுவை கொண்டவை. பிரிட்டிஷ் பாரம்பர்யத்துடன் கொஞ்சம் பிரெஞ்சு கலாசாரத்தைக் கலந்து சமைப்பது ராம்ஸேவின் ஸ்டைல்.

நம்பர் 1 கோர்டன் ராம்ஸே - 10

* பெண்கள் நலனுக்காக நிதி திரட்டுவது, எய்ட்ஸ் ஒழிப்புக்காக நிதி திரட்டுவது என, ராம்ஸே பல்வேறு சமூக நலக் காரியங்களிலும் ஈடுபட்டுவருகிறார்.

* 1997-ம் ஆண்டு தன் பலம் எல்லாம் இழந்து நொடிந்துபோயிருந்த ஜேம்ஸ், தன் மகன் ராம்ஸேவைத் தேடிவந்தார். தந்தையின் தோற்றம் ராம்ஸேவை உலுக்கியது. அவர் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்து, பணமும் கொடுத்தார். அவர் சில காலத்தில் இறந்துபோனார். 'என் தந்தைபோல இல்லாமல், என் நான்கு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருப்பதே என் வாழ்வின் மிகப் பெரிய கடமை’ என தாயுமானவனாக அப்போது உருகினார் ராம்ஸே!

ஒல்லி பெல்லி செஃப்!

நம்பர் 1 கோர்டன் ராம்ஸே - 10

'ஒரு செஃப் குண்டாக இருக்கக் கூடாது’ என்பார் ராம்ஸே. தன் உடல் பெருக்காமல் இருப்பதற்காகவே பல வருடங்களாக 'மாரத்தானில்’ ஓடிக்கொண்டிருக்கும் அவர், கடந்த சில வருடங்களாக டிரையத்லானிலும் பங்கேற்கிறார்!

 சாம்பார் பிரியர் ராம்ஸே!

நம்பர் 1 கோர்டன் ராம்ஸே - 10

சேனல் 4-ன் 'கிரேட் எஸ்கேப்’ என்ற நிகழ்ச்சிக்காக ராம்ஸே, 2010-ம் ஆண்டு இந்தியா வந்தார். டெல்லி, கொல்கத்தா, மும்பை, வடகிழக்கு மாநிலங்கள் என, பல பகுதிகளுக்குச் சென்று இந்திய உணவுக் கலாசாரத்தைக் கண்டு பிரமித்துப்போனார். தென் இந்திய மாநிலங்களுக்கும் வருகை தந்த ராம்ஸேவை அதிகம் கவர்ந்தது கேரள உணவுகள். அவர் அதிகம் ருசித்துச் சாப்பிட்டது 'சாம்பார்’!

அடுப்படி அலறல்கள்!

நம்பர் 1 கோர்டன் ராம்ஸே - 10

பிரிட்டனில், அமெரிக்காவில் ராம்ஸேவின் டி.வி ரியாலிட்டி ஷோக்கள் சக்கைபோடுபோடுகின்றன. Hell's kitchen, Kitchen nightmares, Masterchef, Masterchefjunior, Hotel hall   ஆகியன ராம்ஸேவின் டி.வி நிகழ்ச்சிகளில் சில. அதில் கிச்சன் நைட்மேர்ஸ் என்பது மூடப்படும் நிலையில் இருக்கும் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டைத் தேர்ந்தெடுத்து ராம்ஸே தன் அனுபவ ஆலோசனைகளால், அசாத்திய ஐடியாக்களால் அதனை 'ஹிட்’ ரெஸ்ட்டாரன்ட்டாக மாற்றும் கான்செப்ட். 'பொய்யான நிகழ்ச்சி. ராம்ஸேவின் ஆலோசனைகளுக்குப் பிறகும் 60 சதவிகித ரெஸ்ட்டாரன்ட்கள் மூடப்பட்டிருக்கின்றன’ என்ற விமர்சனங்கள் உண்டு. அதற்கு ராம்ஸேவின் பதில், 'மீதி 40 சதவிகித ரெஸ்ட்டாரன்ட்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறதே!’