Published:Updated:

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி டு செந்தமிழ் தேசிகர்...! வீரமாமுனிவர் பிறந்ததினப் பகிர்வு

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி டு செந்தமிழ் தேசிகர்...! வீரமாமுனிவர் பிறந்ததினப் பகிர்வு

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி டு செந்தமிழ் தேசிகர்...! வீரமாமுனிவர் பிறந்ததினப் பகிர்வு

Published:Updated:

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி டு செந்தமிழ் தேசிகர்...! வீரமாமுனிவர் பிறந்ததினப் பகிர்வு

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி டு செந்தமிழ் தேசிகர்...! வீரமாமுனிவர் பிறந்ததினப் பகிர்வு

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி டு செந்தமிழ் தேசிகர்...! வீரமாமுனிவர் பிறந்ததினப் பகிர்வு

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக கோவா வந்தார் மதபோதகர் ஒருவர். அங்கிருந்து தமிழகம் வந்த அவர், மதபோதனைகளைப் பற்றிப் பேசுவதற்காக தமிழைக் கற்றார். நாளடைவில் தமிழின்பால் ஈர்க்கப்பட்டு தமிழ்த்தொண்டன் ஆனார். தன் சொந்தப் பெயரான `கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி' என்பதை `தைரியநாத சாமி' என முதலில் மாற்றிக்கொண்டார். பிறகு, அது தூயத் தமிழ்ப்பெயர் அல்ல என்பதால், `வீரமாமுனிவர்' என மாற்றிக்கொண்டார். தான் கற்றுத் தேர்ந்த தமிழ் மொழியின் சிறப்பைப் பிறரும் அறிந்துகொள்ள, திருக்குறள், தேவாரம், ஆத்திசூடி, நன்னூல் போன்ற நூல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்தார்.

தமிழ்த் தொண்டு:

தமிழ் மொழியை முறையாகக் கற்றுக்கொள்ள, சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம் கற்றுத்தேர்ந்தார். பிறகு தமிழ் மொழியின் மீது அவருக்கு ஏற்பட்ட ஈடுபாட்டால் விரைவிலேயே இலக்கியப் பேருரைகள் நடத்தும் அளவுக்குப் புலமைபெற்றார். பிற நாட்டினரும் மொழி கற்க ஏதுவாக, தமிழ் - இலத்தீன் அகராதியை உருவாக்கி, 1,000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் விளக்கம் கொடுத்தார். இதுவே தமிழின் முதல் அகரமுதலி என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு 4,400 தமிழ்ச் சொற்களுக்கு போர்த்துக்கீசிய மொழியில் விளக்கம் கொடுத்து, தமிழ் - போர்த்துக்கீசிய அகராதியை உருவாக்கினார். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருப்பதால், அதை எளிய மக்கள் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும் என எண்ணினார். அதன் காரணமாக சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். நெடில் எழுத்துகளைக் குறிக்க, `ர’ சேர்த்தனர். இதை மாற்றி `ஆ’, `ஏ’, `ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். `கொடுந்தமிழ் இலக்கணம்' என்ற நூலில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரித்தார். `தொன்னூல் விளக்கம்' என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். 

தேம்பாவணி:

இவர் இயற்றிய நூல்களில் முக்கியமான ஒன்றாக இன்று வரை தமிழ் அறிஞர்கள் பலரால் கூறப்படுகிறது `தேம்பாவணி'. இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை மையமாகவைத்து அதைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப இயற்றினார். `தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக்கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது' எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. இந்த நூலை இயற்றியதற்காக இவருக்கு `செந்தமிழ்த் தேசிகர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தேம்பாவணியைத் தவிர, `திருக்காவலூர்க் கலம்பகம்', `கித்தேரியம்மாள் அம்மானை' போன்ற நூல்களையும் இயற்றினார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் எனப் போற்றப்படும் `பரமார்த்த குரு கதைகளை' இயற்றிய பெருமையும் வீரமாமுனிவரையே சேரும். மேலும் உரைநடையில்  வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றை படைத்தார். வெறும் படைப்புகளோடு நில்லாமல், திருக்காவலூரில் தமிழ்க் கல்லூரி ஒன்றை நிறுவி, அதில் தாமே தமிழ் ஆசிரியராகவும் இருந்து இலக்கணம் கற்பித்தார். மொத்தம் 23 நூல்களை தமிழில் இயற்றியுள்ளார்.

முத்துச்சாமி என்பவர், இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி, ஆங்கிலத்திலும் மொழியெர்த்துள்ளார். கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின் முன்  வீரமாமுனிவரின் திருஉருவச்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தின் பல பள்ளிகளிலும், தாய்மொழிக் கல்வி என்பது குறைந்துவிட்டது. தமிழ் மொழி, நிறையப் பள்ளிகளில் பாடமாகக்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று, தன் தாய்மொழி குறித்தான சிறப்புகளைப் பற்றி அறியாமலேயே ஒரு தலைமுறை உருவாகிவரும் சூழல் உள்ளது. ஆனால், இத்தாலியில் பிறந்து தன் இறுதிநாள் வரை தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவர் போற்றுதலுக்குரியவர்.