மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 09

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

சந்தோஷ் நாராயணன்

வில்வித்தையில் சர்வதேச கோல்டு மெடலிஸ்ட் நிஷாத், பத்திரிகையாளர்         தனஞ்செயனிடம், ''நாங்கள் தலைமுறை தலைமுறையாகப் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் அல்ல. வேடுவர்களான எங்கள் முன்னோர்கள், மகத நாட்டில் இருந்து கிளம்பி, தேசம் தேசமாக அலைந்தனர். 'எத்தனை காலங்கள் ஆனாலும் இந்த வித்தையை என்றைக்கும் நாங்கள் கைவிட மாட்டோம்’ என்பதே எங்கள் தந்தையருக்கு நாங்கள் கொடுக்கும் வாக்குறுதி'' என்றபடி ஃபிரிட்ஜைத் திறந்து ஃபிரீஸரில் இருந்து பனி படர்ந்த சிறு குடுவையை எடுத்தான். 

அஞ்ஞானச் சிறுகதைகள் - 09

தனஞ்செயன், பின் கழுத்து ஜில்லிட அதற்குள் நோக்கினான். பல நூற்றாண்டுகளாகச் சுருங்கிய ஒரு கட்டைவிரல். ''என் முதுபாட்டனின் விரல் இது. அதற்குப் பிறகு எங்கள் குலத்தில் யாருக்கும் கட்டைவிரலே இல்லை தெரியுமா?'' - தனஞ்செயன் அப்போதுதான் நிஷாத்தின் கைகளைக் கவனித்தான். ப்ளாஸ்டிக் பெருவிரல்.

''பிறகு எப்படி இவ்வளவு வெற்றிகள்?''

அஞ்ஞானச் சிறுகதைகள் - 09

''பெருவிரல், எங்கள் குலத்துக்குக் கைகளில் இல்லை; மனதுக்குள் இருந்தது'' என்ற நிஷாத், தனஞ்செயனின் கண்களை ஒரு நொடி பார்த்தான்!

''17 மடங்கு ரசாயன உப்பு அதிகம். சாப்பிட்டா ஆயுசு கம்மி'' என்றான் செய்தி படித்த நண்பன்.

''டூ மினிட்ஸ்ல சமைக்கச் சொல்லி ஏன் அவசரப்படுத்தினானுங்கனு இப்போதானே புரியுது'' என்றான் கார்ப்பரேட் சித்தன்!

சேஞ்ச் !

''இங்கிலீஷ் சினிமானு நினைச்சு டிக்கெட் எடுக்கப்போனா, போஸ்டரில் ப்ருத்விராஜ் கோணலாகச் சிரிக்கிறார். ஏதோ மலையாளப் படம்போல. மலையாளப் படங்களுக்கு இப்ப இங்கிலீஷ்லதான் டைட்டில் வெக்கிறாங்க' என்றான் நண்பன்.

அதுவும் சரிதான். 'லண்டன் பிரிட்ஜ்’, 'ஹேப்பி ஜர்னி’, 'ஹேங்ஓவர்’, 'ஆலிஸ் எ ட்ரூ ஸ்டோரி’, 'ப்ரைஸ் தி லார்டு’, 'செவன்த் டே’, 'லா பாயின்ட்’, 'ஹவ் ஓல்டு ஆர் யூ’... இவையெல்லாம் ஆங்கில, பிரெஞ்சு, ஜெர்மன் படங்கள் அல்ல... 'சாட்சாத்’ மலையாளப் பட டைட்டில்கள். 2014-ம் ஆண்டில் வந்த மலையாளப் படங்களின் பெயர்கள் பெரும்பாலும் இங்கிலீஷில்தான்.

இந்த நிலை, தமிழ் சினிமாவுக்கும் இருந்தது. 1990-ம் ஆண்டு கடைசியில் ஆரம்பித்து 2000-ம் ஆண்டு தொடக்கம் வரை, 'ஜீன்ஸ்’, 'ஹலோ’, 'சாக்லேட்’, 'ஸ்டார்’, 'குட்லக்’, 'வின்னர்’, 'லண்டன்’ என, அப்போது நம்ம பிரசாந்த் இங்கிலீஷ் ஹீரோவாகவே உருமாறியிருந்தார். 'மும்பை எக்ஸ்பிரஸ்’-க்காக கமல் சண்டை போட்டது ஞாபகம் இருக்கும்.

தலைப்பு வைப்பது படைப்பாளிகளின் உரிமை என்பது நியாயம்தான். நம் மக்களின் ரத்தத்தில் ஆல்கஹாலுக்கு அப்புறம் அதிகமாகக் கலந்திருப்பது சினிமா என்பதால், இதைச் சற்று சீரியஸான விஷயமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. 'வரிச் சலுகை கிடையாது’ என, இந்த சினிமா பூனைகளுக்கு மணி கட்டியது அரசாங்கம்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 09

'ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் 'சவுண்டு’ நல்லா இருக்கு... ஒரு 'வைபரேஷன்’ இருக்கும்’ என்பது போன்ற காரணங்களை இயக்குநர்கள் அடுக்கலாம். 'பல்லாயிரம் சொற்கள்கொண்ட தமிழ் மொழியில் தலைப்பு வைக்க வார்த்தைகளுக்குப் பஞ்சம்’ என்பவர்களை, சுஜாதா அடிக்கடி சொல்வதுபோல 'பசித்தப் புலி தின்னட்டும்’ என்பேன்.

ஆங்கிலப் படங்கள் மாதிரி சினிமா எடுப்பவர்கள் என நாம் கொண்டாடும் (அல்லது விமர்சிக்கும்) மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோரே அழகான தமிழ்த் தலைப்புகளைத்தான் இதுவரை வைத்துள்ளனர் என்பது அழகிய முரண். ஆனால், சமீபத்தில் மணிரத்னத்தின் 'ஓ.கே கண்மணி’, 'ஓ காதல் கண்மணி’யானது உட்டாலக்கடி. அதில் உச்சக்கட்டமாக 'மாஸ்’, 'மாஸு’வாகி பின் 'மாசு’வானது.

இதில் ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி (சாட்டர்ஜி அல்ல) உள்ளது. ஆங்கிலத்தில் தலைப்புவைத்து விளம்பரங்கள் செய்துவிட்டு, அரசாங்கத்திடம் காட்டும்போது தமிழாக மாற்றிவிட்டால், முதலில் 'ஷார்ட் அண்டு ஸ்வீட்’டாக இங்லீஷில் வைத்த பெயரே, இயல்பாக மக்கள் மனதில் பதிந்துவிடும் என நினைக்கிறார்கள்போலும். ஆனால், ரசிகர்களுக்குக் குழப்பமே மிச்சம்.  

(நல்லவேளை கட்டுரைத் தலைப்புக்கு எல்லாம் வரிச்சலுகைப் பிரச்னை இல்லை. இல்லன்னா 'சேஞ்ச்’ சேஞ்ச் ஆகியிருக்கும்!)

பிளிஸ் !

மேலே இருக்கும் படத்தைப் பார்க்காதவர் யாரேனும் இருக்கிறீர்களா? கிட்டத்தட்ட மோனோலிசா ஓவியத்தை டிஜிட்டலாகப் பார்த்தவர்களைவிட, இந்தப் படத்தைப் பார்த்தவர்கள்தான் அதிகம் என ஒரு பேச்சு இருக்கிறது. காரணம், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கணினியைத் திறந்தாலே தோன்றும் டெஸ்க்டாப் சித்திரம் இதுதானே!

அஞ்ஞானச் சிறுகதைகள் - 09

இந்தப் படத்தின் பெயர் 'பிளிஸ்’ (Bliss). தமிழ்ப்படுத்தினால்... பேரானந்தம். நம்மில் பலர் நினைப்பதுபோல இது ஒரு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் பண்ணப்பட்ட டிஜிட்டல் படம் அல்ல. அக்மார்க் ஒரிஜினல் புகைப்படம். இதை எடுத்தவர் நேஷனல் ஜியாகிரஃபி புகைப்படக் கலைஞர் சார்லஸ் ஓ’ரியர் என்னும் அமெரிக்கர்.

'கனவுக் காட்சிகளில் வருவது போன்ற நிலக்காட்சி’ என, பிரபல புகைப்பட விமர்சகர்களால் புகழப்படும் இந்தப் படம், சார்லஸ் தன் காதலியைப் பார்க்கப்போகும் வழியில் எடுத்ததாம். இந்தப் புகைப்படம் 'கனவுக்காட்சி’போல  ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது என்பது, இப்போது புரிகிறது அல்லவா? காதலால் நிறைந்திருக்கும் மனம், பிறகு எதைத்தான் பதிவுசெய்யும்?!

சரி... விஷயத்துக்கு வருவோம். சார்லஸ் எதேச்சையாக எடுத்த இந்தப் புகைப்படத்தை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி, தங்கள் விண்டோஸ்-2000 மாடல் கணினியின் டெஸ்க்டாப் சித்திரமாக வைத்து வெளியிட்டது. சித்திரத்துக்கு 'பிளிஸ்’ எனப் பெயர் வைத்தனர். உலகம் முழுக்க மில்லியன், பில்லியன் மக்களால் பார்க்கப்படுகிற சித்திரமாக மாறிப்போனது இதன் வரலாறு.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 09

கலிஃபோர்னியாவில் இருந்து சான்ஃபிரான்சிஸ்கோ செல்லும் வழியில் உள்ளதாம் நாபா வாலி. கிட்டத்தட்ட இது ஒரு மலைப்பிரதேசம். இங்கேதான் சார்லஸ் இந்தப் படத்தை எடுத்தார். இது பிரபலமான பிறகு, இதேபோன்று புகைப்படம் எடுக்க பல புகைப்படக் கலைஞர்கள் இந்த ஏரியாவில் சுற்றிவந்திருக்கிறார்கள். சிலருக்கு இந்தக் கோணத்தில் இதே நிலக்காட்சியை எடுப்பதில் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடு இல்லை.

அதுமட்டும் அல்ல, இப்போது இந்த இடம் கிராப்வைன்ஸ் என்னும் தாவரங்கள் வளர்க்கப்பட்டு, தோற்றமே மாறிவிட்டது. டாமி இம்மூஸ் என்கிற புகைப்படக்காரர் எடுத்த படத்தைப் பாருங்கள். வேலிகள் போடப்பட்டு இடமே மாறிவிட்டது. இன்றைய தோற்றத்தை வேறு சில புகைப்படங்களில் பார்த்திருந்தால், 'அழகி’ படத்தில் பிற்கால நந்திதா தாஸைப் பார்க்கும் பார்த்திபன் போல சார்லஸ் ஓ’ரியரே அழுதிருப்பார்!