கசக்காத மருந்து
கங்காபுரி நாட்டை உதயசிம்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். எப்போதும் அறுசுவை உணவு, ரத்தினங்கள் பதித்த பட்டாடை, மலர்கள் தூவப்பட்ட பட்டுமெத்தை என வாழ்பவர்.
ஒரு நாள், உதயசிம்மனுக்குக் கடுமையான வயிற்று வலி உண்டானது. உடனடியாக அரச வைத்தியர் வரவழைக்கப்பட்டார்.
வைத்தியரை வாசலிலேயே மடக்கிய அமைச்சர், ‘‘வைத்தியரே, அரசரின் வயிற்றுவலி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் குணமாக வேண்டும். அதற்கான மருந்து எங்கே இருந்தாலும் சொல்லுங்கள்.உடனடியாக வரவைக்கிறோம். ஆனால், மருந்து கசக்கக் கூடாது. அவர் முகம் கோணக் கூடாது” என்றார்.

நோய்க்கான மருந்துகூட கசப்பாக இருக்கக் கூடாது என்ற சுகவாசி அரசர் என்பது வைத்தியருக்கும் தெரியும். உதயசிம்மனைச் சந்தித்த அவர், “அரசே! உங்கள் உடலுக்கு எந்தவிதத் துன்பமும் தராத மருத்துவமே செய்யப்போகிறேன். பாலும் தேனும் கலந்த மருந்தையே கொண்டுவந்திருக்கிறேன்” என்றார்.
இதைக் கேட்ட உதயசிம்மன், “அப்புறம் என்ன வெட்டிப் பேச்சு. சீக்கிரம் கொடுங்கள். வலி தாங்க முடியவில்லை” என்றார்.
வைத்தியரும் மருந்தைக் கொடுத்துவிட்டு, எப்படிச் சாப்பிட வேண்டும் எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
சில மணி நேரம் கழிந்தது. அரசரின் வயிற்றுவலி அதிகரித்ததே தவிர, குறையவில்லை.
‘‘ஓய் அமைச்சரே, நல்ல ஆளைத்தான் அரச வைத்தியராக வைத்திருக்கிறீர். அரசனாகிய எனக்கே அரைகுறை வைத்தியம் செய்கிறாரே, மற்றவர்களுக்கு எப்படிச் செய்வார்? இவருக்கு ஒரு சம்பளம், அரண்மனைச் சலுகைகள்... இழுத்து வாருங்கள்” என்று கத்தினார் உதயசிம்மன்.
வைத்தியரை அழைத்து வர, இரண்டு காவலர்கள் விழுந்து அடித்துக்கொண்டு ஓடினார்கள். அப்போது ஒரு காவலாளி, அரசரை நெருங்கி கிசுகிசுத்தான்.
“அரசே! நம் காலாட்படையில் உள்ள வீரன் ஒருவனுக்கும் நேற்று உங்களைப் போலவே வயிற்றுவலி வந்தது. அவனுக்கும் நம் வைத்தியர்தான் மருத்துவம் செய்தார். இரண்டு மணி நேரத்தில் வலி நீங்கிவிட்டது. அவன், துள்ளிக்கொண்டு வாள் பயிற்சியில் ஈடுபட்டான். ஆனால், உங்களுக்கு ஐந்து மணி நேரமாகியும் தீரவில்லையே” என்று இழுத்தான்.
‘‘இப்போது நீ என்ன சொல்ல வருகிறாய்?” எனச் சிடுசிடுத்தார் உதயசிம்மன்.

‘‘அந்தக் காவலருக்குக் குணமானது போலவே உங்களுக்கு சீக்கிரமே குணமாகிவிட்டால் எப்படி? வேறு உயர்ந்த மருந்து கொடுப்பதாக நடித்து, பல முறை வைத்தியம் செய்தால்தானே நிறைய சம்பாதிக்க முடியும்?” என்றான்.
அவனது பேச்சின் பொருள் புரிந்த உதயசிம்மனுக்கு வைத்தியர் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. வலியும் கோபமுமாகக் காத்திருந்தார்.
வைத்தியர் வந்ததும், “என்ன வைத்தியரே, நான் இந்த நாட்டின் அரசன். வயிற்றுவலியால் துடிக்கிறேன். உடனடியாகச் சரிசெய்ய முடியவில்லை. இதற்குத் தண்டனையாக உங்கள் கையை வெட்டலாமா... நாடு கடத்தலாமா?” என்று கேட்டார்.
‘‘அரசே, உங்கள் வலி உடனடியாகக் குணமாகாததற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றார் வைத்தியர் பரிதாபமாக.
‘‘அப்படியானால், காலாட்படை வீரனின் வயிற்றுவலி எப்படி இரண்டு மணி நேரத்தில் குணமானது?’’ எனக் கேட்டார் உதயசிம்மன்.
“அரசே, ஒரு காலாட்படை வீரனுக்கு அளித்த சிகிச்சையை அரசராகிய தங்களுக்கு அளிக்க முடியுமா? அந்தக் கசப்பான மருந்தை அப்படியே கொடுத்திருந்தால், சாப்பிட்டு இருப்பீர்களா? அரண்மனை வாசலில் தொடங்கி உங்கள் அறை வாசலுக்கு வருவதற்குள், நான் எப்படி உங்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்று எவ்வளவு அறிவுரைகள் தெரியுமா?’’ என்றவாறு அருகில் இருந்த அமைச்சரைப் பார்த்தார் வைத்தியர்.
அமைச்சர் சங்கடமாக நெளிய, வைத்தியர் தொடர்ந்தார். ‘‘அதனால், உங்களுக்கு அளித்த மருந்தில் பாதிக்கும் மேலே தேன் கலந்தேன். மருந்து வேலை செய்யத் தாமதம் ஆகிறது. அந்த வீரன் ஒரு நாளில் பல மணி நேரம் உழைப்பவன். ஓடி ஆடித் திரிபவன். ஒரு நோய்க்கு நான் கொடுப்பது பாதி மருந்துதான். மீதி மருந்து அந்த மனிதனின் சுறுசுறுப்பில்தான் இருக்கிறது. வியர்வை சிந்தாமல் இருப்பவர்களுக்கு வரும் நோயானது, அவ்வளவு சுலபத்தில் நீங்காது” என்றார் வைத்தியர்.
இதைக் கேட்ட உதயசிம்மனுக்கு தனது தவறு புரிந்தது. ‘‘வைத்தியரே, தைரியமான உங்கள் கருத்துக்கு நன்றி. மேல் பூச்சு ஏதும் இல்லாமல், ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்த வயிற்றுவலி எனக்குச் சொல்லித்தந்திருக்கிறது. அந்த வீரனுக்குக் கொடுத்தது போல எனக்கும் மருந்து கொடுங்கள்” என்றார், மன்னர் உதயசிம்மன்.
அதற்குப் பிறகு உதயசிம்மன், எளிமையாகவும் உடல் உழைப்போடும் வாழத்தொடங்கினார்.
கீர்த்தி
ராம்கி